என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- நடப்பு ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
- ஆர்சிபி அணி 7 போட்டியில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
பெங்களூரு:
நடப்பு ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி அணி 7 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
தொடர்ந்து 18-வது ஆண்டாக பெங்களூரு அணியில் விளையாடி வரும் முன்னாள் கேப்டன் விராட் கோலி நடப்பு சீசனில் 10 போட்டிகளில் 6 அரை சதம் உள்பட 443 ரன்கள் குவித்து அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறார்.
இந்நிலையில், ஆர்.சி.பி.யின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் விராட் கோலி பங்கேற்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் டிரெய்லர் ஷேர் செய்யப்பட்டிருக்கிறது. அந்த டிரெய்லரில் விராட் கோலி பேசியதாவது:
ஆரம்பத்தில் நான் விளையாடிய அனைத்து வீரர்களிலும், மார்க் பவுச்சர் என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.
எனது பலவீனங்கள் என்னவாக இருக்கும் என்பதை அவர் கண்டுபிடித்தார். அடுத்த கட்டத்திற்கு நான் முன்னேற வேண்டும் என்றால், அவரிடம் எதுவும் கேட்காமல் நான் இதைச் செய்யவேண்டும்.
அவர் என்னிடம் ஒருமுறை, 3 அல்லது 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு நான் வர்ணனையாளராக வரும்போது, நீங்கள் (கோலி) இந்தியாவுக்காக விளையாடுவதை நான் பார்க்கவில்லை என்றால், உங்களுக்கு நீங்களே தீங்கு விளைவிப்பீர்கள் என சொன்னார். என்னுடன் நடத்திய உரையாடல்களால் என்னை அவர் மிகவும் திகைக்க வைத்தார்.
ரசிகர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த அன்பை, எந்த வெள்ளிப் பாத்திரமோ அல்லது எந்தக் கோப்பையோ நெருங்க முடியாது என்று நினைக்கிறேன்
எனக்கு எந்த விதத்திலும் நிலைமை மாறிவிட்டதாக நான் நினைக்கவில்லை. புதிய வீரர்கள் குழு தயாராக இருக்கிறது. அவர்களுக்கு நேரம் தேவை. அவர்களுக்கு பரிணமிக்க, அழுத்தத்தைக் கையாள, உலகின் பல்வேறு பகுதிகளில் விளையாட, உலகக் கோப்பை வரும்போது அவர்கள் தயாராக இருப்பதாக உணரும் அளவுக்கு போதுமான ஆட்டங்களை விளையாட 2 வருட சுழற்சி தேவை. இதைப் புரிந்துகொண்டே டி20 போட்டிகளை விட்டு வெளியேறும் முடிவு எடுக்கப்பட்டது என தெரிவித்தார்.
- டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த குஜராத் அணி 224 ரன்கள் குவித்தது.
அகமதாபாத்:
ஐ.பி.எல். சீசனின் 51-வது லீக் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது.
சிறப்பாக ஆடி அரை சதமடித்த சுப்மன் கில் 38 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 76 ரன்கள் விளாசினார். பட்லர் 37 பந்தில் 64 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சாய் சுதர்சன் 23 பந்தில் 9 பவுண்டரியுடன் 48 ரன்கள் குவித்தார்.
ஐதராபாத் சார்பில் உனத்கட் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடினார். அரை சதம் கடந்த அவர் 41 பந்தில் 6 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 74 ரன்கள் குவித்து அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 186 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது. இது குஜராத் அணியின் 7வது வெற்றி ஆகும். புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது.
- பவர் பிளேயில் விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் குவித்தது.
- சுப்மன் கில் 38 பந்தில் 76 ரன்கள் விளாசினார்.
ஐபிஎல் 2025 சீசனின் 51ஆவது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சன், சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினர். 3ஆவது ஓவரை முகமது சமி வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்தை தவிர மற்ற ஐந்து பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார் சாய் சுதர்சன்.
அடுத்த ஓவரை ஹர்ஷல் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் சாய் சுதர்சன் 4 பவுண்டரி விரட்டினார். 12 பந்தில் 9 பவுண்டரிகள் விளாசினார் சாய் சுதர்சன். அடுத்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளை கில் பவுண்டரிக்கு விரட்டினார்.
பவர்பிளேயில் குஜராத் அணி 6 ஓவரில் 82 ரன்கள் குவித்தது. 7ஆவது ஓவரை ஜீசன் அன்சாரி வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தில் சாய் சுதர்சன் ஆட்டமிழந்தார். அவர் 23 பந்தில் 9 பவுண்டரியுடன் 48 ரன்கள் விளாசினார்.
அடுத்து ஜாஸ் பட்லர் களம் இறங்கினார். 8.2 ஓவரில் குஜராத் அணி 100 ரன்னைத் தொட்டது. சுப்மன் கில் 25 பந்தில் 6 பவுண்டரி, 2 கிச்சருடன் அரைசதம் கடந்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 13ஆவது ஓவரின் கடைசி பந்தில் ரன்அவுட் ஆனார். சுப்மன் கில் 38 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 76 ரன்கள் விளாசினார். கில் ஆட்டமிழக்கும்போது குஜராத் அணி 13 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்திருந்தது.
3ஆவது விக்கெட்டுக்கு பட்லருடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். 15 ஓவரில் குஜராத் 162 ரன்கள் அடித்திருந்தது.
17 ஓவர் முடிவில் 188 ரன்கள் குவித்தது. பட்லர் 31 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். 18 ஓவர் முடிவில் 203 ரன் குவித்தது. 19ஆவது ஓவரில் பட்லர் 37 பந்தில் 64 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 9 ரன்கள் மட்டுமே கிடைத்தது.
கடைசி ஓவரை உனத்கட் வீசினார். முதல் பந்தை சிக்சருக்கு தூக்கிய வாஷிங்டன் சுந்தர் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தை டெவாட்டியா சிக்சருக்கு விளாசினார். கடைசி 2 பந்தில் 2 விக்கெட்டை இழக்க 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்துள்ளது. கடைசி ஓவரில உனத்கட் 3 விக்கெட் வீழ்த்தினார்.
- இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவதை நான் விரும்புகிறேன்.
- அது என்னுடைய விருப்பம். அந்த தீ இன்னும் உள்ளே எரிந்து கொண்டே இருக்கிறது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக திகழ்ந்தவர் ரகானா. வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளார்.
ஆனால் சமீபகாலமாக இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. தற்போது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடும் விருப்பத்தை ஒருபோதும் கைவிட மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரகானே கூறியதாவது:-
இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவதை நான் விரும்புகிறேன். அது என்னுடைய விருப்பம். அந்த தீ உள்ளே இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது. உடற்தகுதியை பொறுத்தவரை, நான் அதற்கு தகுதியானவனாக இருக்கிறேன். தற்போது ஐபிஎல் போட்டியை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதன்பின் எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும்.
நான் ஒரு வீரராக ஒருபோதும் இந்திய அணிக்கு திரும்பும் விருப்பத்தை கைவிடமாட்டேன். மைதானத்தில் என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த எப்போதுமே முயற்சிப்பேன். 100 சதவீதத்திற்கு மேலான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். நான் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறேன். தற்போதைய நிலையில் என்னுடைய ஆட்டத்தை மிகவும் ரசிக்கிறேன்.
இவ்வாறு ரகனே தெரிவித்தார்.
- இளம் வீரரான சாய் சுதர்சனை அனைத்து வடிவிலான கிரிக்கெட்டுக்கான வீரராக பார்க்கிறேன்.
- அவர் ஒரு சிறந்த வீரர் போல் தெரிகிறார். என் கண்கள் நிச்சயமாக அவர் மீது இருக்கும்.
2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான (World Test Championship cycle) இந்தியாவின் முதல் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் இருந்து தொடங்குகிறது. இங்கிலாந்துக்கு எதிராக ஜூன் 20ஆம் தேதி முதல் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.
இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 0-3 எனத் தொடரை இழந்திருந்தது. ஆஸ்திரேலியா மண்ணில் 1-3 என தோல்வியடைந்திருந்தது. இதற்குப்பின் இந்திய அணியின் தேர்வு எவ்வாறாக இருக்கும் என எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடி வரும் இடது கை பேட்ஸ்மேனான சாய் சுதர்சன், தற்போதைய அணியில் இருப்பவர்களை தவிர வெளியில் இருந்து எடுப்பவர்களில் என்னுடைய தேர்வில் முதல் நபராக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்து்ளளார்.
இது தொடர்பாக ரவி சாஸ்திரி கூறியதாவது:-
இளம் வீரரான சாய் சுதர்சனை அனைத்து வடிவிலான கிரிக்கெட்டுக்கான வீரராக பார்க்கிறேன். அவர் ஒரு சிறந்த வீரர் போல் தெரிகிறார். என் கண்கள் நிச்சயமாக அவர் மீது இருக்கும். இங்கிலாந்தில் இடது கை பேட்ஸ்மேன் மற்றும் இங்கிலாந்து சூழ்நிலையை நன்றாக தெரிந்தவர். அவருடைய டெக்னிக், அவர் விளையாடும் விதம், தற்போதைய அணிக்கு வெளியில் இருந்து வீரர்கள் தேவை என்று விரும்புபோதும் என்னுடைய முதன்மையான தேர்வு சாய் சுதர்சனாகத்தான் இருக்கும்.
ஷ்ரேயாஸ் அய்யர் அணியில் இடம் பிடிக்க முடியும். ஆனால் அதற்கு போட்டி நிலவும். ஒயிட்பால் கிரிக்கெட்டில் உறுதியாக இடம் உண்டு. டெஸ்ட் கிரிக்கெட் என வரும்போது மற்ற வீரர்கள் யார்? யார்? இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.
இவ்வாறு ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
- புதிய வீரர்கள் வரும்போதெல்லாம் அவர்கள் ஸ்டார் கிடையாது. அவர்கள் ஸ்டாராக உருவாகுகிறார்கள்.
- கடந்த வருடம், எங்களிடம் இருந்த வீரர்கள் அணியில் நுழைந்தபோது ஸ்டார்களாக இல்லை.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மெகா ஏலத்தில் ஏராளமான இளம் வீரர்களை ஏலம் எடுத்தது. இதில் 14 வயதான வைபவ் சூர்வன்ஷியும் ஒருவர். இவர் 35 பந்தில் சதம் விளாசி சாதனைப் படைத்துள்ளார்.
இந்த வருடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்றைய மும்பைக்கு எதிரான போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது 11 போட்டிகளில் 3-ல் மட்டும் வெற்றி பெற்று அதிகாரப்பூர்வமாக பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜோஸ் பட்லர், டிரென்ட் போல்ட் போன்ற சூப்பர் ஸ்டார்களை மெகா ஏலத்தில் எடுக்காததுதான் தோல்விக்கு காரணம் என்ற விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நாங்கள் சூப்பர் ஸ்டார்களை வாங்க மாட்டோம். இளம் வீரர்களிடம் இருந்து சூப்பர் ஸ்டார்களை உருவாக்குவோம் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பீல்டிங் கோச் திஷாந்த் யாக்னிக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திஷாந்த் யாக்னிக் கூறியதாவது:-
ஸ்டார் (வீரர்கள்) பற்றி நீங்கள் கேட்டது சிறப்பான கேள்வி. புதிய வீரர்கள் வரும்போதெல்லாம் அவர்கள் ஸ்டார் கிடையாது. அவர்கள் ஸ்டாராக உருவாகுகிறார்கள்.
கடந்த வருடம், எங்களிடம் இருந்த வீரர்கள் அணியில் நுழைந்தபோது ஸ்டார்களாக இல்லை. ஆனால் அவர்கள் ஸ்டார்களாக மாறினர். இப்போது நாங்கள் அணியில் சேர்த்த வீரர்களை, நாங்கள் ஸ்டார்களாக மாற்றுவோம். நாங்கள் சூப்பர் ஸ்டார்களை வாங்கமாட்டோம். சூப்பர் ஸ்டார்களை உருவாக்குவோம். இதுதான எங்களுடைய வாசகம்.
வைபவ் சூர்யவன்ஷியை பார்க்கும்போது, குஜராத் அணிக்கெதிராக அவரை பேட்டிங்கை பார்த்து எல்லோரும் மகிழ்ச்சியடைந்தனர். ஒட்டுமொத்த ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்தனர். நேரம் வரும்போது, எங்கள் வீரர்கள் ஸ்டாராக மாறுவார்கள். நாங்கள் இதை நம்புகிறோம்.
இவ்வாறு திஷாந்த் யாக்னிக் தெரிவித்துள்ளார்.
- புள்ளிகள் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் 4ஆவது இடத்தில் உள்ளது.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் 9ஆவது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் 2025 சீசனின் 51ஆவது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ்:-
சுப்மன் கில், சாய் சுதர்சன், பட்லர், ஷாருக் கான், வாஷிங்டன் சுந்தர், ராகுல் டெவாட்டியா, ரஷித் கான், முகமது சிராஜ், கோயட்சி, சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்:-
அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதி்ஷ் ரெட்டி, கிளாசன், அனிகெட் வர்மா, கமிந்து மெண்டிஸ், கம்மின்ஸ், ஹர்ஷல் படேல், உனத்கட், ஜீசன் அன்சாரி, முகமது சமி.
- சஞ்சு சாம்சன் விஜய் ஹசாரே தொடரில் விளையாடியிருந்தால் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருப்பார்.
- சஞ்சு சாம்சனுக்கு எனது ஆதரவு, மற்ற கேரள மாநில வீரர்களை பாதுகாப்பேன் என சபதம் எடுத்ததாக ஸ்ரீசந்த் மீது குற்றச்சாட்டு.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன். இவருக்கு பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
கேரள கிரிக்கெட் சங்கம் சஞ்சு சாம்சனை விஜய் ஹசாரே தொடரில் விளையாட வைக்கவில்லை. இதில் விளையாடியிருந்தால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருப்பார் என ஸ்ரீசந்த் தெரிவித்தார்.
மேலும், சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக இருப்பேன், கேரள மாநில வீரர்களை பாதுகாப்பேன் என தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி ஸ்ரீசந்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் நேற்று சிறப்ப பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஸ்ரீசந்துக்கு 3 வருடம் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீசந்த் கேரளா கிரிக்கெட் லீக்கில் கொல்லம் ஏரியஸ் அணியின் துணை உரிமையாளர் ஆவார். லக்கில் கலந்து கொண்ட அனைத்து அணிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அவர்கள் திருப்திகரமான பதில் அளித்திருந்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இருப்பினும், அணி நிர்வாகத்திற்கு உறுப்பினர்களை நியமிக்கும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
- தாம் எதிர்கொண்ட முதல் பந்தலையே ஐபிஎல் தொடரில் சிக்சர் அடித்திருக்கிறார்.
- தற்போது அதிரடி வீரர் என்ற பெயரை வாங்கி விட்டதால், அந்த பெயரை காப்பாற்ற வேண்டும் என்று அவர் நினைக்கக் கூடாது.
மும்பை:
நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தோல்வியடைந்ததன் மூலம் நடப்பு தொடரில் இருந்து வெளியேறியது.
இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வைபவ், டக் அவுட்டில் வெளியேறினார். 14 வயது ஆன வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளின் சதம் விளாசி உலக அளவில் பிரபலமானார். இவருக்கு கிரிக்கெட் வீரர்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனால் வைபோவை ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் வைபவை ரொம்ப தூக்கி கொண்டாடி அவருக்கு தேவையில்லாத அழுத்தத்தை கொடுக்க வேண்டாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
வைபவ் ஏலத்திற்குள் நுழைந்த போது அவர் தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இளையருக்கான டெஸ்ட் போட்டியில் நல்ல வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவே அவர் சதம் அடித்திருந்தார். அதுவும் 13 வயதில் இந்த ரெக்கார்டு அவர் நிகழ்த்தி இருந்தார். அவருடைய திறமை என்னவென்று நம் அனைவருக்கும் புரிந்து இருக்கும்.
அதே சமயம் வைபோவை தேவையில்லாமல் ஒரே நாளில் தூக்கி ரொம்ப கொண்டாடக்கூடாது. மேலும் அவர் இளம் வயது என்பதால் தன்னுடைய விளையாட்டை மென்மேலும் அவர் வளர்த்துக் கொள்வார் என்று நினைக்கின்றேன். அதுவும் இல்லாமல் ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவானுடன் அமர்ந்து இன்னிங்சை எப்படி கட்டமைப்பது என்பதை அவர் கற்றுக் கொள்வார்.
இதன் மூலம் அவர் மென்மேலும் சிறந்த வீரராக மாற வாய்ப்பு இருக்கிறது. தாம் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஐபிஎல் தொடரில் சிக்சர் அடித்திருக்கிறார். தற்போது அதிரடி வீரர் என்ற பெயரை வாங்கி விட்டதால், தொடர்ந்து அனைத்துப் போட்டிகளிலும் அந்த பெயரை காப்பாற்ற வேண்டும் என்று அவர் நினைக்கக் கூடாது.
இதன் மூலம் அனுபவம் வாய்ந்த பவுலர்கள் இந்த வீரர் சிக்ஸர் அடிக்கத்தான் முயற்சி செய்வார். எனவே நாம் அதற்கு தகுந்த மாதிரி பந்து வீசி அவருடைய விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கத் தொடங்கியுள்ளார்கள். இதனால் வைபவ், தனது பேட்டிங் குறித்து கவலைப்பட தொடங்கி விடுவார்.
என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
- ரோகித் 7 ரன்னில் இருக்கும் போது பரூக்கி பந்து வீச்சில் எல்பிடபிள்யூ ஆனார்.
- இதனை கள நடுவர் அவுட் கொடுப்பார்.
ஜெய்ப்பூர்:
நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் நடுவர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சாதகமாகச் செயல்பட்டதாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி என்றாலே நடுவர்கள் அந்த அணிக்குச் சாதகமாகச் செயல்படுவார்கள் என்பது பல ஆண்டுகளாக இருந்து வரும் குற்றச்சாட்டு.
அந்த வகையில் நேற்றைய போட்டியில் ரோகித் 7 ரன்னில் இருக்கும் போது பரூக்கி பந்து வீச்சில் எல்பிடபிள்யூ ஆவார். இதற்கு கள நடுவர் அவுட் கொடுப்பார்.
அதன் பின் ரோகித் சர்மா எதிரில் நின்றிருந்த ரியான் ரிக்கல்டனுடன் டிஆர்எஸ் எடுப்பது பற்றி விவாதித்து, பின்னர் ரிவ்யூ முடிவை எடுத்தார். ஆனால், டிஆர்எஸ் முடிவை எடுப்பதற்கு 15 வினாடிகள் மட்டுமே இருக்கும் நிலையில், சரியாக நேரம் முடிவடைந்து திரையில் பூஜ்யம் (0) எனக் காட்டப்பட்ட பின்னரே ரோகித் சர்மா ரிவ்யூ கேட்டார். இதனால் ரோகித் சர்மா நேரம் முடிந்த பின்பே ரிவ்யூ எடுத்தாக சிலரும், அவர் நேரம் முடியும் முன்னேரே ரிவ்யூ எடுத்ததாக சிலரும் கூறி வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, ரிவ்யூவின் போது மற்றொரு சர்ச்சை எழுந்தது. ரிவ்யூவில், பந்து ரோகித் சர்மாவின் லெக் ஸ்டம்பிற்கு வெளியே பாதி அளவுக்கு பிட்சானது தெரிந்தது. விதிப்படி, பந்து 50 சதவீதத்திற்கும் அதிகமாக லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்சாகியிருந்தால் அவுட் கொடுக்க முடியாது. அந்தக் காரணத்தைச் சுட்டிக்காட்டி, மூன்றாவது நடுவர் நாட் அவுட் என அறிவித்தார்.
ஆனால், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சாதகமாக நடுவர்கள் செயல்பட்டதாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
ரிவ்யூவில், பந்து 50% கோட்டிற்கு உள்ளேயும் 50% வெளியேயும் பிட்சானதாகவே தெரிந்தது. இது குறித்து முடிவெடுப்பது சிக்கலான ஒன்றுதான் என்றாலும், பொதுவாக அம்பயர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சாதகமாகச் செயல்படுவதாக ஒரு கருத்து நிலவும் நிலையில், இந்த விவகாரம் அதை மேலும் அதிகரித்தது.
இந்த ரிவ்யூவில் தப்பிய ரோகித் சர்மா அதன் பின்னர் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நாங்கள் எளிய கிரிக்கெட்டுக்குத் திரும்புகிறோம்.
- எங்கள் பவுலரின் படை அனுபவம் வாய்ந்ததாக இருக்கின்றது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தானை 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது. இதன் மூலம் நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து ஆறாவது வெற்றியை பெற்று அசத்தி இருக்கிறது.
இதன் மூலம் புள்ளி பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இடத்தை பிடித்திருக்கிறது. மும்பை அணி 11 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றியும் நான்கு போட்டிகளில் தோல்வியும் என 14 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
இந்நிலையில் இந்த வெற்றியால் நாங்கள் துள்ளி குதிக்க மாட்டோம் என்றும் அடக்கமாக நடந்து கொள்வோம் என்றும் ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நாங்கள் இன்று பேட்டிங் செய்த விதம் மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. அதுமட்டுமல்லாமல் பந்துவீச்சில் என்று சிறப்பாக செயல்பட்டு இருக்கின்றோம். பேட்டிங்கில் கூடுதலாக ஒரு 15 ரன்கள் அடித்திருக்கலாம். ஆனால் அதை மட்டும் தவற விட்டு இருக்கின்றோம்.
எங்கள் பவுலரின் படை அனுபவம் வாய்ந்ததாக இருக்கின்றது. எனக்கு எந்த பவுலர்கள் பெயரை விடுவது, சொல்வது என்றே தெரியவில்லை. எனவே அவர்களை குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை நாங்கள் தெளிவான மனநிலையில் இருக்கின்றோம்.
நாங்கள் எளிய கிரிக்கெட்டுக்குத் திரும்புகிறோம். அதுதான் எங்களுக்கு கை கொடுக்கின்றது. இந்த வெற்றி தொடரும் என்று நம்புகிறோம். இவ்வளவு வெற்றி பெற்றாலும், நாங்கள் அடக்கமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றேன். நாங்கள் இதே போல் முழு கவனத்துடன் செயல்படுவோம்.
என்று ஹர்திக் கூறியுள்ளார்.
- பவர் பிளேவில் நாங்கள் அதிக அளவு விக்கெட்டுகளை இழந்து விட்டோம்.
- நாங்கள் தொடக்கத்தில் நன்றாக விளையாடினாலும், நடுவரிசையில் சொதப்பி விடுகின்றோம்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் - மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் நாங்கள் பல விஷயங்களில் தவறு செய்து விட்டோம் என தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் கருத்து தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
முதலில் மும்பை அணிக்கு நான் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். மும்பை வீரர்கள் சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். எங்களுடைய பேட்டிங்கை பொறுத்த வரை இன்றைய நாள் எங்களுக்கான நாள் கிடையாது. 190 -200 ரன்கள் என்பது இந்த ஆடுகளத்தில் எளிதாக சேஸ் செய்யக்கூடிய இலக்கு தான்.
நாங்கள் சில விஷயங்களை கொஞ்சம் மாற்றி செய்திருக்க வேண்டும். நாங்கள் தொடக்கத்தில் நன்றாக விளையாடினாலும், நடுவரிசையில் சொதப்பி விடுகின்றோம். நானும் துருவ்வும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும்.
ஆனால் பவர் பிளேவில் நாங்கள் அதிக அளவு விக்கெட்டுகளை இழந்து விட்டோம். நாங்கள் பல விஷயங்களில் தவறு செய்து விட்டோம். எனவே தவறில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அணியின் வளர்ச்சிக்காக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிக்க முடிவு எடுத்து இருக்கின்றோம். இந்த சீசனில் பல போட்டிகளில் அருகே வந்து தோல்வியை தழுவி இருக்கின்றோம்.
என்று ரியான் பராக் கூறினார்.






