என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2025: கில், பட்லர் அபாரம்- ஐதராபாத்துக்கு 225 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது குஜராத்
- பவர் பிளேயில் விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் குவித்தது.
- சுப்மன் கில் 38 பந்தில் 76 ரன்கள் விளாசினார்.
ஐபிஎல் 2025 சீசனின் 51ஆவது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சன், சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினர். 3ஆவது ஓவரை முகமது சமி வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்தை தவிர மற்ற ஐந்து பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார் சாய் சுதர்சன்.
அடுத்த ஓவரை ஹர்ஷல் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் சாய் சுதர்சன் 4 பவுண்டரி விரட்டினார். 12 பந்தில் 9 பவுண்டரிகள் விளாசினார் சாய் சுதர்சன். அடுத்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளை கில் பவுண்டரிக்கு விரட்டினார்.
பவர்பிளேயில் குஜராத் அணி 6 ஓவரில் 82 ரன்கள் குவித்தது. 7ஆவது ஓவரை ஜீசன் அன்சாரி வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தில் சாய் சுதர்சன் ஆட்டமிழந்தார். அவர் 23 பந்தில் 9 பவுண்டரியுடன் 48 ரன்கள் விளாசினார்.
அடுத்து ஜாஸ் பட்லர் களம் இறங்கினார். 8.2 ஓவரில் குஜராத் அணி 100 ரன்னைத் தொட்டது. சுப்மன் கில் 25 பந்தில் 6 பவுண்டரி, 2 கிச்சருடன் அரைசதம் கடந்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 13ஆவது ஓவரின் கடைசி பந்தில் ரன்அவுட் ஆனார். சுப்மன் கில் 38 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 76 ரன்கள் விளாசினார். கில் ஆட்டமிழக்கும்போது குஜராத் அணி 13 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்திருந்தது.
3ஆவது விக்கெட்டுக்கு பட்லருடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். 15 ஓவரில் குஜராத் 162 ரன்கள் அடித்திருந்தது.
17 ஓவர் முடிவில் 188 ரன்கள் குவித்தது. பட்லர் 31 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். 18 ஓவர் முடிவில் 203 ரன் குவித்தது. 19ஆவது ஓவரில் பட்லர் 37 பந்தில் 64 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 9 ரன்கள் மட்டுமே கிடைத்தது.
கடைசி ஓவரை உனத்கட் வீசினார். முதல் பந்தை சிக்சருக்கு தூக்கிய வாஷிங்டன் சுந்தர் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தை டெவாட்டியா சிக்சருக்கு விளாசினார். கடைசி 2 பந்தில் 2 விக்கெட்டை இழக்க 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்துள்ளது. கடைசி ஓவரில உனத்கட் 3 விக்கெட் வீழ்த்தினார்.