என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • கிரேடு ஏ+ பிரிவில் சீனியர் வீரர்களான ரோகித், விராட் கோலி, பும்ரா, ஜடேஜா ஆகியோர் உள்ளனர்.
    • இளம் வீரரான ஜெய்ஸ்வால் கிரேடு பி பிரிவில் இடம் பிடித்துள்ளார்.

    2023- 2024-ம் ஆண்டுக்கான வருடாந்திர ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியீட்டது. இதில் 2 முக்கிய வீரர்களான இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை பிசிசிஐ புறகணித்துள்ளது.

    கிரேடு ஏ+ பிரிவில் சீனியர் வீரர்களான ரோகித், விராட் கோலி, பும்ரா, ஜடேஜா ஆகியோர் உள்ளனர். கிரேடு ஏ பிரிவில் தமிழக வீரர் அஸ்வின், சமி, சிராஜ், கேஎல் ராகுல், சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா இடம் பெற்றுள்ளனர்.

    கூடுதலாக, இந்த இடைப்பட்ட காலத்திற்குள் குறைந்தபட்சம் 3 டெஸ்ட் அல்லது 8 ஒருநாள் போட்டிகள் அல்லது 10 டி20 போட்டிகளில் விளையாடும் வீரர்கள், விகித அடிப்படையில் தானாகவே கிரேடில் சேர்க்கப்படுவார்கள். உதாரணமாக, துருவ் ஜூரல் மற்றும் சர்பராஸ் கான், இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளனர், அவர்கள் இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் 5வது டெஸ்டின் பிளேயிங் 11-ல் இடம்பெற்றால், கிரேடு 'சி'-ல் சேர்க்கப்படுவார்கள்.

    ஆகாஷ் தீப், விஜய்குமார் வைஷாக், உம்ரான் மாலிக், யாஷ் தயாள் மற்றும் வித்வத் கவேரப்பா ஆகிய விளையாட்டு வீரர்களுக்கான வேகப்பந்து வீச்சு ஒப்பந்தங்களையும் தேர்வுக் குழு பரிந்துரைத்துள்ளது.

    அனைத்து வீரர்களும் தேசிய அணியில் விளையாடத காலங்களில் உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. பரிந்துரைத்துள்ளது.

    இளம் வீரரான ஜெய்ஸ்வால் கிரேடு பி பிரிவில் இடம் பிடித்துள்ளார்.

    கிரேடு ஏ+ (ரூ. 7 கோடி)

    ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ஜடேஜா

    கிரேடு ஏ (ரூ.5 கோடி)

    அஸ்வின், முகமது சமி, முகமது சிராஜ், கேஎல் ராகுல், சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா

    கிரேடு பி (ரூ. 3 கோடி)

    சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், அக்ஷர் படேல், ஜெய்ஸ்வால்

    கிரேடு சி (ரூ.1 கோடி)

    ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாகுர், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பரத், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான் மற்றும் ரஜத் படிதார்.

    • ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தில் உள்ளார்.
    • ரோகித் ஒரு இடம் பின் தங்கி 13-வது இடத்தில் இருக்கிறார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதில் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய இளம் வீரர்களான கில், ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜூரெல் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படுவதன் மூலம் ஏற்றம் கண்டுள்ளனர்.

    இந்திய இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேறி 12-வது இடத்திலும் கில் 4 இடங்கள் முன்னேறி 31-வது இடத்திலும் ஜூரெல் 31 இடங்கள் முன்னேறி 69-வது இடத்திலும் உள்ளனர். ரோகித் ஒரு இடம் பின் தங்கி 13-வது இடத்தில் இருக்கிறார்.

    முதலிடத்தில் நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் தொடருகிறார். ரூட் 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். விராட் கோலி 2 இடங்கள் பின் தங்கி 9-வது இடத்தில் இருக்கிறார். இந்திய அணி வீரர்கள் பொறுத்தவரை கோலி மட்டுமே டாப் 10 இடத்திற்குள் உள்ளார்.

    டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா முதலிடத்தில் தொடருகிறார். மற்றொரு இந்திய வீரரான அஸ்வின் 2-வது இடத்தில் உள்ளார். குல்தீப் யாதவ் 10 இடங்கள் முன்னேறி 32-வது இடத்தை பிடித்துள்ளார்.

    டெஸ்ட் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் ஜடேஜா முதலிடத்திலும், அஸ்வின் 2-வது இடத்திலும் உள்ளனர். இதில் ஜோ ரூட் 3 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தில் உள்ளார். மற்ற தரவரிசைகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை.

    • குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • பெங்களூரு அணியின் ரசிகர் ஒருவர் ஆர்சிபி வீராங்கனையான ஸ்ரேயங்கா பாட்டீலுக்காக ஒரு பேனர் வைத்துள்ளார்.

    பெங்களூரு:

    மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2-வது சீசன் கடந்த 23-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. பெங்களூருவில் நேற்று நடந்த ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதனபடி முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய பெங்களூரு அணி 12.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 110 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிபட்டியலில் பெங்களூரு அணி முதல் இடத்தை பிடித்தது.

    இந்நிலையில் இந்த போட்டியில் சுவாரஸ்யமான விசயம் ஒன்று நடந்துள்ளது. பெங்களூரு அணியின் ரசிகர் ஒருவர் ஆர்சிபி வீராங்கனையான ஸ்ரேயங்கா பாட்டீலுக்காக ஒரு பேனர் வைத்துள்ளார். அதில் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா என எழுதியிருந்தது. இது மைதானத்தில் இருக்கும் பெரிய திரையில் காண்பிக்கப்பட்டது. இதனை பார்த்த ஆர்சிபி வீராங்கானைகள் சிரித்தப்படி அதனை பார்த்தனர். அதில் ஸ்ரேயங்காவும் ஒருவர். 

    ஐபிஎல் போட்டியில் விராட் கோலியை திருமணம் செய்ய ஆசை படுவதாக நிறைய ரசிகைகள் பேனர் வைப்பதுண்டு. அந்த வகையில் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
    • முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

    வெல்லிங்டன்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

    இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நாளை வெல்லிங்டனில் தொடங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து நியூசிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டெவான் கான்வே விலகி உள்ளார்.

    நடப்பு தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியின்போது அவர் இடது கை கட்டை விரலில் காயம் அடைந்தார். அவரது காயம் இன்னும் குணமடையாததால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக முதல் டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் ஹென்றி நிக்கோல்ஸ் இடம் பெற்றுள்ளார்.

    • இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது.
    • ஒரு பேட்டர் மற்றும் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு ஓய்வு வழங்கப்படவுள்ளது.

    இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 4 போட்டிகள் முடிவடைந்தன. இதன் முடிவில் 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

    இந்த தொடரில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் அடுத்து நடந்த 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் 5-வது போட்டிக்கான இந்திய அணியில் இருந்து 2 முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஒரு பேட்டர் மற்றும் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு ஓய்வு வழங்கப்படவுள்ளது.

    அந்த வகையில் கேஎல் ராகுல், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.ஏற்கனவே இருவரும் 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • மும்பை அணிக்கு எதிரான அரைஇறுதியில் தமிழகத்தின் முன்னணி சுழற்பந்து வீரரான வாஷிங்டன் சுந்தர் விளையாடுகிறார்.
    • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்ற அவர் அணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

    சென்னை:

    ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியின் கால்இறுதி ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. தமிழக அணி இன்னிங்ஸ் மற்றும் 33 வித்தியாசத்தில் சவுராஸ்டிராவை வீழ்த்தி ஏற்கனவே அரைஇறுதிக்கு முன்னேறி இருந்தது.

    மற்ற கால்இறுதி போட்டிகளில் மத்தியபிரதேசம் 4 ரன்னில் ஆந்திராவையும், விதர்பா 127 ரன் வித்தியாசத்தில் கர்நாடகாவையும் தோற்கடித்தன. பரோடாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் பெற்ற கூடுதல் ரன் மூலம் மும்பை அணி அரைஇறுதிக்கு முன்னேறியது.

    அரைஇறுதி ஆட்டங்கள் வருகிற 2-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை நடக்கிறது. நாக்பூரில் நடைபெறும் முதல் அரைஇறுதி ஆட்டத்தில் விதர்பா-மத்தியபிர தேச அணிகளும், மும்பையில் நடைபெறும் 2-வது அரை இறுதியில் தமிழ்நாடு-மும்பை அணிகளும் மோதுகின்றன.

    மும்பை அணிக்கு எதிரான அரைஇறுதியில் தமிழகத்தின் முன்னணி சுழற்பந்து வீரரான வாஷிங்டன் சுந்தர் விளையாடுகிறார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்ற அவர் அணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இதனால் வாஷிங்டன் சுந்தர் தமிழக அணியோடு இணைந்து கொள்கிறார். அவரது வருகை சாய் கிஷோர் தலைமையிலான தமிழக அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்

    இதேபோல மும்பை அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடுகிறார். அவர் இந்திய அணியில் இருந்து 2-வது டெஸ்டுக்கு பிறகு நீக்கப்பட்டார்.

    • எங்களுக்கு மூன்றாவதாக பிறந்துள்ள இவ்வுலகின் அழகான பெண்ணை நாங்கள் வரவேற்கிறோம்.
    • இவ்வுலகிற்கு பாதுகாப்பாக வருகை வந்து, நீங்கள் அற்புதமான பயணத்தை மேற்கொள்ள இருக்கிறீர்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்

    நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் சாரா ரஹீம் தம்பதிக்கு மூன்றாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் 1 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

    இது தொடர்பாக கேன் வில்லியம்சன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையுடன் கூடிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

    அதில், எங்களுக்கு மூன்றாவதாக பிறந்துள்ள இவ்வுலகின் அழகான பெண்ணை நாங்கள் வரவேற்கிறோம். இவ்வுலகிற்கு பாதுகாப்பாக வருகை வந்து, நீங்கள் அற்புதமான பயணத்தை மேற்கொள்ள இருக்கிறீர்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    தனது குழந்தையின் பிறப்பை ஒட்டி, அண்மையில் நடைபெற்ற நியூசிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான டி20 தொடரில் இருந்து அவர் விலகியிருந்தார்.

    ஆனால் அதற்கு முன்பு நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை கேன் வில்லியம்சன் வெளிப்படுத்தியிருந்தார். இந்த டெஸ்ட் தொடரில் மட்டும் 3 டெஸ்ட் சதங்களை அவர் அடித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் அனுஷ்கா சர்மாக்கும் அண்மையில் தான் ஆகாய் என்ற ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது

    • அஸ்வின் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர்.
    • இங்கிலாந்து அணி தங்களுக்கு கிடைத்த சில தருணங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

    புதுடெல்லி:

    பென்ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    5 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டி முடிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது.

    ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் 106 ரன் வித்தியாசத்திலும், ராஜ்கோட்டில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் 434 ரன் வித்தியாசத்திலும், ராஞ்சியில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

    முதல் டெஸ்டில் வென்று அடுத்தடுத்து 3 போட்டிகளில் தோற்று தொடரை இழந்ததால் இங்கிலாந்து அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அந்நாட்டு ஊடகங்கள் வீரர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்தியாவிடம் தோற்றதில் இங்கிலாந்து அணிக்கு அவமானம் இல்லை என்று அந்நாட்டு முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான நாசர் உசேன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-


    இந்த தொடர் முழுவதும் சில நட்சத்திர வீரர்கள் இல்லாமலேயே வெற்றி பெற்ற விதத்துக்கு இந்திய அணியை பாராட்டுகிறேன். அதற்கு தகுதியான அணியாகும். விராட்கோலி, முகமது ஷமி, கே.எல்.ராகுல், பும்ரா (ஒரு போட்டியில் ஆட வில்லை) ரிஷப் பண்ட் போன்றவர்கள் இந்த தொடரில் பெரும்பாலும் இல்லை. அந்த வகையில் முக்கிய வீரர்கள் இல்லாத பெரிய பட்டியலை கொண்டு இருந்தாலும் இந்தியா சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியது.

    திறமை மட்டுமில்லாமல் மனதளவில் வலிமை இருப்பதால் சொந்த மண்ணில் மற்றொரு தொடரை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுக்கள். சொந்த மண்ணில் அவர்களுடைய வெற்றி விகிதம் அபாரமாக இருக்கிறது. எனவே இந்திய அணியிடம் இங்கிலாந்து தோல்வியை சந்தித்ததில் எந்த அவமானமும் இல்லை. இந்த தொடரில் இங்கிலாந்து அணி கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நிறைய உள்ளது.

    அஸ்வின் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். 2-வது இன்னிங்சில் அவர் மிகவும் அற்புதமாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார். கேப்டன் ரோகித்சர்மா அவரிடம் புதிய பந்தை கொடுத்தபோது கண்களில் நெருப்பு தெரிந்தது. தொடக்கத்திலேயே விக்கெட் கைப்பற்றி நெருக்கடி கொடுத்து விட்டார்.

    துருவ் ஜூரல்-குல்தீப் யாதவ் ஜோடி முதல் இன்னிங்சில் எடுத்த ரன்கள் திருப்பு முனையாகும். சுப்மன்கில் தனது திறமையான ஆட்டத்தை அமைதியாக வெளிப்படுத்தினார். ஜூரல் இரண்டு இன்னிங்சிலும் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பணியில் நன்றாக செயல்பட்டார்.

    இங்கிலாந்து அணி தங்களுக்கு கிடைத்த சில தருணங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

    இவ்வாறு நாசர் உசேன் கூறியுள்ளார்.

    • இந்திய அணியில் ரன் குவிக்க திணறியதால் உள்ளூர் போட்டிகளில் விளையாட வலியுறுத்தல்.
    • காயம் காரணமாக ரஞ்சி போட்டியில் விளையாட முடியாது என ஷ்ரேயாஸ் அய்யர் அறிவித்ததால் சிக்கல் ஏற்பட்டது.

    இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் அய்யர். இவருக்கு பிசிசிஐ-க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. கிரிக்கெட்டில் சிறுசிறு காயம் ஏற்பட்டு அணியில் இருந்து விலகி மீண்டும் அணிக்கு திரும்ப தயாராகும்போது ரஞ்சி டிராபியில் விளையாடி திறமையை நிரூபிக்க வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்துவது உண்டு.

    அதேபோல் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து அதிக ரன்கள் அடிக்க முடியாமல் ஃபார்ம் இன்றி தவிக்கும்போதும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வலியுறுத்துவது உண்டு.

    ஆனால் பிரபல நட்சத்திர வீரர்கள் பெரும்பாலும் ரஞ்சி போட்டிகளில் விளையாடுவதில்லை. நேரடியாக இந்திய அணிக்கு தகுதி பெறுவார்கள். அந்த வகையில் ஷ்ரேயாஸ் அய்யர் ரஞ்சி டிராபியில் விளையாட ஆர்வம் காட்டவில்லை. இதனால் பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது.

    இதற்கிடையே காயம் காரணமாகத்தான் ரஞ்சி டிராபியில் விளையாடவில்லை என ஷ்ரேயாஸ் தெரிவித்ததாகவும், அதேவேளையில் அவருக்கு காயம் இல்லை பயிற்சியாளர் தெரிவிததாகவும் தகவல் வெளியானது.

    இந்த நிலையில் ரஞ்சி கோப்பைக்கான மும்பை அணியில் ஷ்ரேயாஸ் அய்யர் சேர்க்கப்பட்டுள்ளார்.

    மார்ச் 2-ந்தேதி தொடங்கும் அரையிறுதி போட்டியில் மும்பை- தமிழ் நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ரஞ்சி டிராபி காலிறுதியில் தமிழ்நாடு அணி சவுராஷ்டிராவை இன்னிங்ஸ் மற்றும் 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    மும்பை- பரோடா இடையிலான போட்டி டிராவில் முடிவடைந்தது. முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் மும்பை அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

    மற்றொரு அரையிறுதி போட்டியில் விதர்பா- மத்திய பிரதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. காலிறுதியில் மத்திய பிரதேசம் ஆந்திராவை வீழ்த்தியிருந்தது. கர்நாடகாவை விதர்பா வீழ்த்தியிருந்தது.

    • இங்கிலாந்து எதிரான தொடரை ரோகித் தலைமையிலான இந்திய அணி வீழ்த்தியுள்ளது.
    • டோனியை போலவே இளம் வீரர்கள் பலருக்கும் ரோகித் வாய்ப்புகளை அளிக்கிறார்.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ரோகித் தலைமையிலான இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. முன்னணி வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களை வைத்து பலம் வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்தியது ரசிகர்களை மத்தியில் பெரும் வரவேற்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் டோனி போலவே இளம் வீரர்கள் பலருக்கும் வாய்ப்புகளை அளிக்கிறார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டோனியை போலவே இளம் வீரர்கள் பலருக்கும் ரோகித் சர்மா வாய்ப்புகளை அளிக்கிறார். டோனி தலைமையில் நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். கங்குலி தனது அணிக்கு எப்போதும் ஆதரவாக இருப்பார். டோனி தன்னை முன் நிறுத்தி அணியை வழி நடத்தினார். ரோகித் நன்றாக கேப்டன்சி செய்கிறார். அவர் சரியான பாதையில் சென்றுக்கொண்டு இருக்கிறார்.

    இவ்வாறு ரெய்னா கூறினார்.

    • நேபாள் நாட்டில் முத்தரப்பு தொடர் நடைபெற்று வருகிறது.
    • இந்த தொடரில் நேபாள், நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதுகிறது.

    நேபாள் நாட்டில் முத்தரப்பு தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேபாள், நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதுகிறது. இதன் முதல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் நமீபியா - நேபாள் மோதின. இதில் டாஸ் வென்ற நமீபியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய நமீபியா 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக லோஃப்டி ஈடன் 101 ரன்கள் குவித்தார். இதனையடுத்து களமிறங்கிய நேபாள் அணி 18.5 ஓவர்களில் 186 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக லோஃப்டி ஈடன் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த போட்டியில் அதிவேக சதம் அடித்து லோஃப்டி ஈடன் வரலாற்று சாதனை படைத்துள்ளார். அவர் 33 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார். இதில் 11 பவுண்டரி, 8 சிக்சர்கள் அடங்கும்.

    இதற்கு முன்னதாக 34 பந்துகளில் சதம் அடித்து கௌசல் மல்லா அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இவரைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் (35 பந்துகள்) 2-வது இடத்திலும், ரோகித் சர்மா (35 பந்துகள்) 3-வது இடத்திலும் இடம் பெற்றிருந்தனர்.

    இவர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளி, அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியலில் நம்பர் 1 இடத்தை ஈடன் பிடித்துள்ளார்.

    • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி விலகினார்.
    • சில நாட்களுக்கு முன்னர் விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுபயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. முன்னணி வீரர்கள் இன்றி இளம் வீரர்களுடன் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது.

    இந்த தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்திருந்த விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார். அவர் எதற்காக விலகினார் என்பது கேள்வி கூறியாக இருந்தது. இது குறித்து பல வதந்திகள் பரவிய நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது தெரிய வந்தது. இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வதந்திக்கு விராட் கோலி முற்றுப்புள்ளி வைத்தார்.

    இந்நிலையில் ஐபிஎல் தொடரிலும் இருந்தும் விராட் கோலி விலகலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகியது போல, ஐபிஎல் 2024 தொடரிலும் விராட் கோலி விலகலாம்.

    ரோகித் சர்மா குறித்து அவர் பேசியது, மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்தது சரி. இதனால் ரோகித் எந்தவித பதற்றம் இன்றி விளையாடலாம்.

    துருவ் குறித்து பேசியது, இங்கிலாந்து எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ஐபிஎல் தொடரில் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

    ×