என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி விலகினார்.
    • சில நாட்களுக்கு முன்னர் விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுபயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. முன்னணி வீரர்கள் இன்றி இளம் வீரர்களுடன் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது.

    இந்த தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்திருந்த விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார். அவர் எதற்காக விலகினார் என்பது கேள்வி கூறியாக இருந்தது. இது குறித்து பல வதந்திகள் பரவிய நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது தெரிய வந்தது. இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வதந்திக்கு விராட் கோலி முற்றுப்புள்ளி வைத்தார்.

    இந்நிலையில் ஐபிஎல் தொடரிலும் இருந்தும் விராட் கோலி விலகலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகியது போல, ஐபிஎல் 2024 தொடரிலும் விராட் கோலி விலகலாம்.

    ரோகித் சர்மா குறித்து அவர் பேசியது, மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்தது சரி. இதனால் ரோகித் எந்தவித பதற்றம் இன்றி விளையாடலாம்.

    துருவ் குறித்து பேசியது, இங்கிலாந்து எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ஐபிஎல் தொடரில் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

    • 5 ஆட்டங்களின் முடிவில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து அணி 5 வெற்றியுடன் 10 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளது.
    • ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலிய அணி 5 ஆட்டங்களில் 4 வெற்றி ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது.

    சென்னை:

    60 வயதுக்கு மேற்பட்டோருக்கான மூத்தோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.

    5 ஆட்டங்களின் முடிவில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து அணி 5 வெற்றியுடன் 10 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளது. இதே பிரிவில் உள்ள நியூசிலாந்து, அமெரிக்கா தலா 6 புள்ளிகள் பெற்றுள்ளன.

    'பி' பிரிவில் ஆஸ்திரேலிய அணி 5 ஆட்டங்களில் 4 வெற்றி ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. இலங்கை 7 புள்ளிகளுடனும், வெஸ்ட் இண்டீஸ் 6 புள்ளிகளுடனும் உள்ளன.

    • அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார்.
    • விரைவில் சொந்த காலில் நிற்க ஆசை என முகமது சமி தெரிவித்தார்.

    கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய டெஸ்ட் அணியில் முகமது சமி இடம் பெற்றிருந்தது. ஆனால் காயம் காரணமாக அந்த தொடரிலிருந்து விலகினார்.

    அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி 3 போட்டிகளில் அவர் விளையாடுவார் என கூறப்பட்டது. ஆனால் காயம் குணமடையாததால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்தும் முகமது சமி விலகினார். இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்வதற்காக சமி ஜனவரி மாதம் லண்டன் சென்றார்.

    இந்நிலையில் கணுக்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் சரியாக சில நாட்கள் ஆகும். விரைவில் சொந்த காலில் நிற்க ஆசைபடுவடுவதாகவும் சமி தெரிவித்தார்.

    இதனால் அவர் ஐபிஎல் தொடரை இலக்க நேரிடும். மேலும் டி20 உலகக் கோப்பை தொடருக்குள் அவர் களமிறங்க வாய்ப்பு இருக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

    கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி முகமது சமி சாதனை படைத்தார். 

    • மும்பை அணி முதல் இன்னிங்சில் 384 ரன்கள் எடுத்தது.
    • முதல் இன்னிங்சில் பரோடா அணி 348 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியின் 2-வது காலிறுதி ஆட்டத்தில் மும்பை மற்றும் பரோடா ஆகிய அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி முதல் இன்னிங்சில் 384 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக முஷிர் கான் 203 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடர்ந்த பரோடா 348 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சொலங்கி, ராவத் ஆகியோர் சதம் அடித்தனர். 36 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்ங்சியை ஆடிய மும்பை அணி 569 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    ஒரு கட்டத்தில் மும்பை அணி 337 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்திருந்தது. இந்நிலையில் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தனுஷ் கோட்யான்- துஷார் தேஷ்பாண்டே ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினர். இதன் மூலம் இந்த ஜோடி புதிய வரலாற்று சாதனையை படைத்து.

    78 ஆண்டு கால முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் 10-வது மற்றும் 11-வது பேட்டர் இருவரும் சதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும். தனுஷ் 120 (நாட் அவுட்) ரன்களுடன் தேஷ்பாண்டே 123 (அவுட்) ரன்களும் குவித்தனர். இதன் மூலம் பரோடா அணிக்கு 606 ரன்கள் இலக்காக மும்பை அணி நிர்ணயித்தது. இன்று கடைசி நாள் என்பதால் மும்பை அணியே வெற்றி பெரும் நிலையில் உள்ளது. 

    • முதல் டெஸ்டில் தோற்ற இந்தியா 0-1 என்று பின்தங்கி அதன் பிறகு அந்த தொடரை வெல்வது இது 7-வது முறையாகும்.
    • முதல் இன்னிங்சில் எதிரணி முன்னிலை பெற்ற போதிலும் இந்தியா 2-வது பேட்டிங்கில் வெற்றி காண்பது இது 13-வது நிகழ்வாகும்.

    இந்திய மண்ணில் 200 ரன்னுக்கு குறைவாக இலக்கை நோக்கி ஆடிய டெஸ்டுகளில் இந்தியா ஒரு போதும் தோற்றதில்லை என்ற வரலாறு தொடருகிறது. இத்தகைய இலக்கை எதிர்கொண்ட 33 டெஸ்டுகளில் 30-ல் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது. மீதமுள்ள 3 போட்டி டிராவில் முடிந்துள்ளது.

    உள்நாட்டில் இந்தியா தொடர்ச்சியாக கைப்பற்றிய 17-வது டெஸ்ட் தொடர் இதுவாகும். வேறு எந்த அணியும் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 தொடருக்கு மேல் (ஆஸ்திரேலியா 10 முறை) வென்றதில்லை. 2012-ம் ஆண்டில் 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தொடரை பறிகொடுத்த இந்தியா அதில் இருந்து எழுச்சி பெற்று தொடர்ந்து வீறுநடை போட்டு வருகிறது. இந்த 12 ஆண்டுகாலக் கட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 தடவை தொடரை வசப்படுத்தியதும் அடங்கும்.

    முதல் டெஸ்டில் தோற்ற இந்தியா 0-1 என்று பின்தங்கி அதன் பிறகு அந்த தொடரை வெல்வது இது 7-வது முறையாகும்.

    முதல் இன்னிங்சில் எதிரணி முன்னிலை பெற்ற போதிலும் இந்தியா 2-வது பேட்டிங்கில் வெற்றி காண்பது இது 13-வது நிகழ்வாகும்.

    இந்திய விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெலின் வயது 23 ஆண்டு 33 நாட்கள். டெஸ்டில் ஆட்டநாயகன் விருதை பெற்ற 5-வது இளம் வீரர், இந்திய அளவில் 2-வது இளம் வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

    இந்த தொடரில் இரண்டு இரட்டை சதம் விளாசிய இந்திய பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் இதுவரை 8 டெஸ்டுகளில் விளையாடி 971 ரன்கள் சேர்த்துள்ளார். முதல் 8 டெஸ்டுகளில் ஆடிய வீரர்களில் அதிக ரன் குவித்த இந்தியர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இந்த வகையில் கவாஸ்கர் 938 ரன்கள் எடுத்ததே முந்தைய அதிகபட்சமாக இருந்தது.

    • 37 வயதான வாக்னர் நியுசிலாந்து அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
    • வாக்னர் 260 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

    ஆஸ்திரேலிய அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் நடந்த டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் நடக்க உள்ளது.

    இந்நிலையில் நியூசிலாந்து அணியின் மிரட்டல் பந்து வீச்சாளரான நீல் வாக்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வாக்னர் தேர்வு செய்யப்பட மாட்டார் என்று நியூசிலாந்து தேர்வாளர்கள் கூறியதை அடுத்து உடனடியாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    கண்ணீருடன் கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவதாக அவர் தெரிவித்தார். இடதுகை வேகப்பந்து வீச்சாளரான இவர் பவுன்சர் வீசி பேட்ஸ்மேன்களை திணறடிப்பதில் வல்லவர். நியூசிலாந்து அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் வாக்னர் 5-வது இடத்தில் உள்ளார்.

    37 வயதான வாக்னர் நியுசிலாந்து அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அவர் வெறும் 52.7 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 27.57 சராசரியில் 260 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

    • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இந்த முறை விராட்கோலியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
    • விராட்கோலி உண்மையிலேயே கடுமையாக உழைத்துள்ளார். அவர் இந்த முறை கோப்பையை வெல்ல தகுதியானவர் என்று கருதுகிறேன்.

    நொய்டா:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நொய்டாவில் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    ராஞ்சி டெஸ்டில் துருவ் ஜூரெலின் விக்கெட் கீப்பிங் என்னை கவர்ந்தது. இந்த நிலையை எட்ட அவர் கடுமையாக உழைத்து இருக்கிறார். அவர் ராணுவ குடும்பத்தில் இருந்து வந்தவர். எனவே எங்கும், எப்போதும் எதையும் இழக்க விரும்பாத அச்சமற்ற மனப்பான்மை அவரிடம் உண்டு. ஜூரெல் அற்புதமான வீரர். நான் அவருடன் இணைந்து உத்தரபிரதேச அணிக்காக ஓரிரு போட்டிகளில் விளையாடி இருக்கிறேன்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இந்த முறை விராட்கோலியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்கள் நீண்டகாலமாக கோப்பையை வெல்லாமல் உள்ளனர். கடந்த சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வென்றது. ஆனால் இந்த ஆண்டு கோப்பையை ஒருமுறையும் கைப்பற்றாத பெங்களூரு அணி மகுடம் சூடும் என்று நம்புகிறேன். விராட்கோலி உண்மையிலேயே கடுமையாக உழைத்துள்ளார். அவர் இந்த முறை கோப்பையை வெல்ல தகுதியானவர் என்று கருதுகிறேன்.


    அமெரிக்கா மற்றும் வெஸ்ட்இண்டீசில் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களின் கலவை முக்கியமானது. இன்னிங்சை கட்டுப்படுத்த விராட்கோலி போன்ற ஒருவர் அணிக்கு தேவையாகும். கோலி இலக்கை வெற்றிகரமாக விரட்டுவதில் மாஸ்டர். அத்துடன் நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பது அவருக்கு தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரஞ்சி கிரிக்கெட் கால்இறுதியில் மத்தியபிரதேச அணி 4 ரன் வித்தியாசத்தில் ஆந்திராவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.
    • மத்தியபிரதேசம் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் அனுபவ் அகர்வால் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

    இந்தூர்:

    89வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் ஆந்திரா மத்தியபிரதேசம் அணிகள் இடையிலான கால்இறுதி ஆட்டம் இந்தூரில் கடந்த 23ந் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் மத்தியபிரதேசம் 234 ரன்னும், ஆந்திரா 172 ரன்னும் எடுத்தன.

    62 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய மத்தியபிரதேசம் 107 ரன்னில் சுருண்டது. இதைத்தொடர்ந்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆந்திரா 3வது நாள் முடிவில் 44 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 95 ரன்கள் எடுத்து இருந்தது. ஹனுமா விஹாரி 43 ரன்களுடனும், கரண் ஷிண்டே 5 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    4வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஆந்திர அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. 69.2 ஓவர்களில் ஆந்திரா 165 ரன்னில் சரண் அடைந்தது. இதனால் மத்தியபிரதேச அணி 4 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. அதிகபட்சமாக ஹனுமா விஹாரி 55 ரன்கள் சேர்த்தார். மத்தியபிரதேசம் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் அனுபவ் அகர்வால் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

    மும்பையில் நடைபெறும் பரோடாவுக்கு எதிரான கால்இறுதியில் முதல் இன்னிங்சில் மும்பை 384 ரன்னும், பரோடா 348 ரன்னும் எடுத்தன. 36 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய மும்பை 3வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 21 ரன் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய மும்பை அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 102 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 379 ரன்கள் குவித்து மொத்தம் 415 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையை எட்டியுள்ளது.

    தொடக்க ஆட்டக்காரர் ஹர்திக் தமோர் 114 ரன்னும், பிரித்வி ஷா 87 ரன்னும், ஷம்ஸ் முலானி 54 ரன்னும் எடுத்தனர். தனுஷ் கோடியன் 32 ரன்னுடனும், துஷார் தேஷ்பாண்டே 23 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். பரோடா சுழற்பந்து வீச்சாளர் பார்கவ் பாத் 7 விக்கெட்டுகளை சாய்த்தார்.

    நாக்பூரில் நடைபெறும் விதர்பாகர்நாடகா அணிகள் இடையிலான ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் விதர்பா 460 ரன்னும், கர்நாடகா 286 ரன்னும் எடுத்தன. 174 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய விதர்பா 196 ரன்னில் ஆல்அவுட் ஆனது. கர்நாடகா தரப்பில் வேகப்பது வீச்சாளர்கள் வித்வாத் கவீரப்பா 6 விக்கெட்டும், வைசாக் விஜய்குமார் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 371 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை ஆடிய கர்நாடகா ஆட்ட நேரம் முடிவில் 26 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது. ரவிகுமார் சமார்த் 40 ரன்னில் அவுட் ஆனார். கேப்டன் மயங்க் அகர்வால் (61 ரன்), அனீஷ் (1 ரன்) களத்தில் உள்ளனர். அந்த அணியின் வெற்றிக்கு இன்னும் 268 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளது.

    இன்று 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெறும்.

    • இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இந்த வெற்றி மூலம் தற்போது பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் சாதனையை ரோகித்சர்மா முறியடித்தார்.

    ராஞ்சி:

    இங்கிலாந்துக்கு எதிராக ராஞ்சியில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    192 ரன் இலக்கை எடுக்க இந்திய அணி 5 விக்கெட்டை இழந்தது. இதனால் இந்த டெஸ்டில் பரபரப்பு ஏற்பட் டது. 6-வது விக்கெட்டுக்கு சுப்மன்கில் (52 ரன்)-ஜூரல் (39 ரன்) ஜோடி பொறுப்புடன் விளையாடி வெற்றியை தேடி தந்தது.

    இந்த வெற்றி மூலம் ரோகித் தலைமையிலான இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்டில் 106 ரன் வித்தியாசத்திலும், 3-வது டெஸ்டில் 434 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று இருந்தது.

    இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 7-ந்தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது.

    ரோகித் தலைமையில் இந்திய அணிக்கு டெஸ்டில் கிடைத்த 9-வது வெற்றியாகும். 4 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. 2 டெஸ்ட் 'டிரா' ஆனது. வெற்றி சதவீதம் 60.00 ஆகும்.

    இந்த வெற்றி மூலம் தற்போது பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டை ரோகித்சர்மா முந்தினார். டிராவிட் தலைமையில் 25 டெஸ்டில் 8-ல் வெற்றி கிடைத்தது. 6 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. 11 டெஸ்ட் 'டிரா' ஆனது.

    மேலும் பட்டோடி, கவாஸ்கர் ஆகியோரை ரோகித்சர்மா சமன் செய்தார். இருவரது தலைமையிலும் 9 டெஸ்டில் வெற்றி கிடைத்து இருந்தது.

    விராட்கோலி 40 வெற்றியுடன் (68 டெஸ்ட்) முதல் இடத்திலும், டோனி 27 வெற்றியுடன் (60 டெஸ்ட்) 2-வது இடத்திலும், கங்குலி 21 வெற்றியுடன் (49 டெஸ்ட்) 3-வது இடத்திலும், அசாருதீன் 14 வெற்றியுடன் (47 டெஸ்ட்) 4-வது இடத்திலும் உள்ளனர். அவர்களுக்கு அடுத்தப்படியாக ரோகித் உள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான ரோகித் பெற்ற 3-வது வெற்றியாகும். இதன்மூலம் அவர் டோனி, அசாருதீன், அஜீத் வடேகர் ஆகியோரை சமன் செய்தார். விராட் கோலி 10 வெற்றியுடன் (18 டெஸ்ட்) முதல் இடத்தில் உள்ளார்.

    • இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
    • இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 2-வது இடத்தை இந்தியா தக்கவைத்துக் கொண்டது.

    துபாய்:

    இந்தியா, இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 3-1 என தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், ராஞ்சி டெஸ்டில் பெற்ற இந்தியாவின் வெற்றிக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.

    அதில், 2-வது இடத்தில் இருந்த இந்திய அணி தற்போது 64.58 சதவீதம் பெற்று அதே இடத்தில் நீடித்து வருகிறது. முதல் இடத்தில் நியூசிலாந்து உள்ளது. 3வது இடத்தில் ஆஸ்திரேலியாவும், 4வது இடத்தில் வங்காளதேசமும் உள்ளது.

    5 முதல் 9 இடங்களில் முறையே பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட அணிகள் உள்ளன.

    • முதலில் ஆடிய உ.பி. வாரியர்ஸ் 119 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • டெல்லி அணியின் ராதா யாதவ் 4 விக்கெட்டும், மேரிஜான் காப் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பெங்களூரு:

    மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் பெங்களூருவில் நடந்துவருகிறது. இதில் மும்பை, டெல்லி, பெங்களூரு, குஜராத், உ.பி. வாரியர்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

    இந்நிலையில், நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய உ.பி. வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஸ்வேதா ஷிவ்ராட் 45 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 14.3 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து, அபார வெற்றிபெற்றது. ஷிபாலி வர்மா 64 ரன்னும், மேக் லேனிங் 51 ரன்னும் குவித்தனர்.

    சிறப்பாக பந்துவீசிய டெல்லி அணியின் மேரிஜான் காப் ஆட்ட நாயகி விருது பெற்றார்.

    • ஆந்திர அணிக்காக விளையாட மாட்டேன் என்று ஹனுமா விஹாரி தெரிவித்தார்.
    • சமூக வலைதளத்தில் தன் தரப்பு விளக்கத்தையும் பதிவிட்டிருந்தார்.

    ரஞ்சி கோப்பையின் காலிறுதி போட்டியில் ஆந்திர பிரதேசம் அணி மத்திய பிரதேசம் அணியுடன் மோதி தோல்வியை தழுவி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இதைத் தொடர்ந்து ரஞ்சி கோப்பை தொடரில் இனி எப்போதும் ஆந்திர பிரதேசம் அணிக்காக விளையாட மாட்டேன் என்று அந்த அணியை சேர்ந்த ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார்.

    அரசியல் காரணங்களுக்காகவே தான் அணியில் இருந்து விலகியதாக ஹனுமா விஹாரி தெரிவித்து இருந்தார். ஹனுமா விஹாரி குற்றச்சாட்டை முழுமையாக மறுத்த, ஆந்திரா அணியின் விக்கெட் கீப்பர், பேட்டர் கே.ன். ப்ருத்விராஜ், தனது சமூக வலைதளத்தில் தன் தரப்பு விளக்கத்தையும் பதிவிட்டிருந்தார்.

     

    அதில், "நீங்கள் கமென்ட்களில் தேடிக்கொண்டிருக்கும் நபர் நான் தான். ஆனால் நீங்கள் கேள்வியுற்ற தகவல் முற்றிலும் பொய்யான ஒன்று. போட்டி மற்றும் ஒருவரின் சுய மரியாதையை விட பெரியது எதுவும் கிடையாது. தனிநபர் தாக்குதல் மற்றும் ஆபாச மொழியை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அணியில் உள்ள அனைவருக்கும், அன்று என்ன நடந்தது என நன்றாகவே தெரியும். இந்த அனுதாப விளையாட்டை எப்படி வேண்டுமானாலும் விளையாடி கொள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பாக ஹனுமா விஹாரி வெளியிட்டுள்ள பதிவில், "ஒட்டுமொத்த அணிக்கும் தெரியும்" என்ற தலைப்பில் கடிதம் ஒன்றின் புகைப்படத்தை இணைத்துள்ளார்.

    அந்த கடிதத்தில், "ரஞ்சி கோப்பையில் அணியை சேர்ந்த வீரர் நான் தவறான மொழியை பயன்படுத்தியதாகவும், அவரை மோசமாக நடத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் உண்மை என்னவென்றால், நான் பயன்படுத்திய வார்த்தைகள் நம் அணிக்குள் வழக்கமாக பயன்படுத்தும் வார்த்தை தான். அணியின் டிரெசிங் அறையில் இந்த வார்த்தைகள் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது."



    "ஆனாலும், ஒருவர் இதனை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டுள்ளார். நாம் அனைவரும் ஒரே அணியை சேர்ந்தவர்கள், சமயங்களில் அணியில் உள்ள உதவியாளர் குழுவும் இது போன்ற சூழலை எதிர்கொண்ட சம்பவங்கள் உள்ளன. அந்த வகையில், விஹாரியே எங்களது அணியின் கேப்டனாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களுக்கு அவரிடம் எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. அவர் எப்போதும் எங்களிடம் இருக்கும் திறமையை சிறப்பாக வெளிக்கொண்டு வந்துள்ளார்."

    "அவரது தலைமையில் நாங்கள் ஏழு முறைக்கும் அதிகாக தகுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறோம். இந்த ரஞ்சி தொடர், வீரர்களாக எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஆந்திரா ரஞ்சி வீரர்களாக எங்களுக்கு விஹாரி அணியில் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறோம்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் அதில் அணி வீரர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.



    ×