என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 175 ரன்கள் எடுத்தது.

    திருவனந்தபுரம்:

    இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. நான்கு போட்டிகள் முடிவில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரில் 4-0 என கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகள் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. முன்னணி வீராங்கனைகள் விரைவில் அவுட்டாகினர். 77 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இந்திய அணி தத்தளித்தது.

    கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தனி ஆளாகப் போராடி அரை சதம் கடந்தார். அவர் 43 பந்தில் 68 ரன்கள் குவித்தார். அமன்ஜோத் கவுர் 21 ரன்கள் எடுத்தார்.

    கடைசி கட்டத்தில் அருந்ததி ரெட்டி அதிரடியில் மிரட்டி 11 பந்தில் 27 ரன்கள் எடுத்தார்.

    இலங்கை சார்பில் சமாரி கவிஷா திஹாரி, ராஷ்மிகா, சமாரி அட்டபட்டு ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

    • துபாயில் குளோப் சாக்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
    • மத்திய கிழக்கு நாடுகளின் சிறந்த வீரராக ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டார்.

    துபாய்:

    துபாயில் நடந்த குளோப் சாக்கர் விருது விழாவில் மத்திய கிழக்கு நாடுகளின் சிறந்த வீரராக ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டார். அப்போது பேசிய அவர், 1000 கோல் இலக்கை எட்டும் வரை ஓய்வு பெறப் போவதில்லை என்பதை சூசகமாக தெரிவித்தார்.

    மான்செஸ்டர் யுனைடெட், யுவன்டஸ் உள்பட அனைத்து கிளப் அணிக்காக 813 மற்றும் போர்ச்சுகல் அணிக்கு 143 கோல்கள் சேர்த்து 1,297 போட்டிகளில் 956 கோல் அடித்து முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் மெஸ்ஸி (896 கோல்) உள்ளார்.

    ரொனால்டோவுக்கு 1000 கோல் எட்ட இன்னும் 44 கோல் தான் தேவை. வரும் 2026-ல் நடக்கும் உலகக் கோப்பை தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளார்.

    இந்நிலையில், துபாயில் நடந்த 2025 குளோப் சாக்கர் விருது விழாவில் முதல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட குளோப் ஸ்போர்ட்ஸ் விருதை டென்னிஸ் ஜாம்பவான் நோவாக் ஜோகோவிச் வென்றார்.

    கால்பந்துக்கு அப்பாற்பட்ட சாதனைகளை மதிப்பிடும் இந்த விருதை கிரிஸ்டியானோ ரொனால்டோ அவருக்கு வழங்கினார். அவரது அசாதாரணமான அர்ப்பணிப்பு, நீண்ட கால வெற்றி மற்றும் பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும் விளையாட்டு வீரர் என்ற அடிப்படையில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

    விருதை வழங்கி பேசிய ரொனால்டோ, எனக்கு அவர் ஒரு உதாரணம். அவர் தன்னிடமிருந்து வரும் வார்த்தைகளைப் பேசுகிறார். எனவே அவர் இதற்கு தகுதியானவர் என நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவர் இந்த தலைமுறைக்கு, அனைத்து தலைமுறைகளுக்கும், வரவிருக்கும் தலைமுறைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என தெரிவித்தார்.

    • எலிஸ் பெர்ரி ஆர்சிபி அணியில் இடம் பிடித்திருந்தார்.
    • சதர்லேண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார்.

    4-வது பெண்கள் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நவி மும்பை மற்றும் வதோதராவில் ஜனவரி 9-ந்தேதி முதல் பிப்ரவரி 5-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

    இத்தொடர் தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பிடித்திருந்த ஆஸ்திரேலியா வீராங்கனை எலிஸ் பெர்ரி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்திரந்த மற்றொரு ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னாபெல் சதர்லெண்டு ஆகியோர் சொந்த வேலை காரணமாக விலகியுள்ளனர்.

    எலிஸ் பெர்ரிக்குப் பதிலாக இந்திய வீராங்கனை சயாலி சத்காரே ஆர்.சி.பி. அணியில் இணைவார் என்றும், சதர்லேண்டுக்குப் பதிலாக ஆஸ்திரேலியா லெக் ஸ்பினனர் அலானா கிங் டெல்லி அணியில் இணைவார் என்று பெண்கள் பிரீமியர் லீக் அறிவித்துள்ளது.

    ஆர்.சி.பி. அணி ரூ. 30 லட்சத்திற்கு சயாலி சத்காரேவையும், டெல்லி அணி ரூ. 60 லட்சத்திற்கு அலானா கிங்கையும் ஒப்பந்தம் செய்துள்ளன.

    உ.பி. வாரியார்ஸ் அணியில் சார்லி நாட்டிற்குப் பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் தாரா நோரிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இவர் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை குவாலிபையருக்கான ஆஸ்திரேலியா அணியில் இடம் பிடித்துள்ளார்.

    • ஐபிஎல் தொடரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே சூர்யவன்ஷி சிக்ஸர் விளாசினார்.
    • மிக இளம் வயதில் ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய வீரர் என்கிற பெயரை சூரியவன்ஷி பெற்றார்.

    வைபவ் சூர்யவன்ஷி மார்ச் 27, 2011-ம் ஆண்டு பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். இடது கை துவக்க ஆட்டக்காரராக விளையாடும் இவர், 2025 ஆம் ஆண்டில் பல உலக சாதனைகளை படைத்து கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்தார்.

    இந்த ஆண்டில் அவர் நிகழ்த்திய சாதனைகள் குறித்து இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம்.

    2025 ஏப்ரலில் 14 வயது 23 நாட்களில் ஐபிஎல் அறிமுகமான இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்தார். தனது முதல் ஐபிஎல் போட்டியிலேயே மூன்று சாதனைகளை படைத்தார்.

    முதல் போட்டியில் செய்த மூன்று சாதனைகள்:

    1. 2008-ல் தொடங்கிய ஐபிஎல் தொடரிலிருந்து தற்போது வரை, மிக இளம் வயதில் ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய வீரர் என்கிற பெயரை சூரியவன்ஷி பெற்றார். அவருக்கு வயது 14 மட்டுமே (14 வயது 23 நாட்கள்).இதன் மூலம் 2019-ல் 16 வயது 157 நாட்களில் ஐபிஎல்லில் அறிமுகமான பிரயாஸ் ரே பர்மனின் சாதனையை சூரியவன்ஷி முறியடித்தார்.

    2. ஐபிஎல்லில் சிக்ஸர் அடித்த இளைய வீரர் என்ற பெருமையையும் சூரியவன்ஷி பெற்றார். இந்த சாதனையை ஆர்ஆர் அணிக்காக விளையாடும் ரியான் பராக் வைத்திருந்தார். பராக் ஐபிஎல் போட்டியில் சிக்ஸர் அடித்த போது, அவருக்கு 17 வயது 161 நாட்கள்

    3. ஐபிஎல்லில் பவுண்டரி அடித்த இளைய வீரர் என்ற பெருமையையும் சூரியவன்ஷி பெற்றுள்ளார். பிரயாஸ் ரே பர்மன் இந்த சாதனையை ஆறு ஆண்டுகளாக தக்க வைத்திருந்தார்.

    மேலும் ஐபிஎல் தொடரில் வைபவ் செய்த சாதனைகள்:

    1. டி20 வரலாற்றில் சதமடித்த இளம் வீரர் (வயது: 14 வருடம், 32 நாட்கள்)

    2. ஐபில் தொடரில் விரைவாக சதமடித்த இரண்டாவது வீரர் (35 பந்துகள்)

    3. ஐபில் தொடரில் விரைவாக சதமடித்த இந்திய வீரர் (35 பந்துகள்)

    4. ஐபில் தொடரில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர் (11 சிக்ஸர்)

    5. அடித்த ரன்களில் அதிகப்பட்ச பவுண்டரி சதவீதம் (93 %)

    6. ஐபிஎல் தொடரில் ஆட்டநாயகன் விருது வென்ற இளம் வீரர்

    அதனை தொடர்ந்து யூத் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா U19-க்கு எதிராக 58 பந்துகளில் சதம் விளாசினார். இதன்மூலம் இந்திய U19 வீரர்களில் இதுதான் அதிவேக சதமாக பார்க்கப்படுகிறது. உலக U19 டெஸ்ட்டில் இரண்டாவது அதிவேக சதம் இதுவாகும்.

    2025 அண்டர் 19 ஆசிய கோப்பை தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் 95 பந்துகளில் 171 ரன்கள் குவித்து, அண்டர்-19 ஆசியக் கோப்பையில் அதிக ரன் அடித்த இந்தியர் என்ற சாதனையை வைபவ் படைத்தார்.

    இந்தப் போட்டியில் வைபவ் அடித்த 171 ரன்கள், அண்டர்-19 ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர் ஒருவரால் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். முதலிடத்தில் அம்பத்தி ராயுடு - 177 ரன்களுடன் இருக்கிறார். அவர் 2002 ஆம் ஆண்டில் அந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார். மேலும், ஒரு இன்னிங்ஸில் 14 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனையையும் வைபவ் படைத்தார்.

    அதனை தொடர்ந்து விஜய் ஹசாரே தொடரில் சதம் அடித்ததன்மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்துள்ளார்.

    லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சதம் அடித்த இளம் வீரர்கள்:-

    வைபவ் சூர்யவன்ஷி - 14 ஆண்டுகள் 272 நாட்கள் (2025)

    ஜஹூர் இலாஹி - 15 ஆண்டுகள் 209 நாட்கள் (1986)

    ரியாஸ் ஹாசன் - 16 ஆண்டுகள் 9 நாட்கள் (2018)

    மேலும் 36 பந்தில் சதம் விளாசியதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைந்த பந்தில் சதம் விளாசிய 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்துள்ளார். முதல் இடத்தில் அன்மோல்ப்ரீத் சிங் 35 பந்தில் அருணாச்சல பிரதேசம் அணிக்கு எதிராக கடந்த 2024-ம் ஆண்டில் அடித்திருந்தார்.

    இந்தியர்களின் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதத்தின் பட்டியல்:

    35 - அன்மோல்ப்ரீத் சிங், பஞ்சாப் vs அருணாச்சல பிரதேசம், 2024

    36 - வைபவ் சூரியவன்ஷி, பீகார் vs அருணாச்சல பிரதேசம், இன்று

    40 - யூசுப் பதான், பரோடா vs மகாராஷ்டிரா, 2010

    41 - உர்வில் படேல், குஜராத் vs அருணாச்சல பிரதேசம், 2023

    42 - அபிஷேக் சர்மா, பஞ்சாப் vs மத்திய பிரதேசம், 2021

    ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் குறைந்த பந்தில் சதம் விளாசிய பாகிஸ்தான் வீரர் அப்ரிடியின் சாதனையை வைபவ் முறியடித்துள்ளார். 1996-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 37 பந்துகளில் ஷாஹித் அப்ரிடி சதம் அடித்திருந்தார்.

    லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம்

    29 பந்துகள் - ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க்

    31 பந்துகள் - ஏபி டி வில்லியர்ஸ்

    35 பந்துகள் - அன்மோல்பிரீத் சிங்

    36 பந்துகள் - கோரி ஆண்டர்சன்

    36 பந்துகள் - வைபவ் சூர்யவன்ஷி

    37 பந்துகள் - ஷாஹித் அப்ரிடி

    குறைந்த பந்தில் அதிவேக 150 ரன்கள் குவித்த தென் ஆப்பிரிக்கா வீரர் ஏபிடி வில்லியர்ஸ் சாதனையை வைபவ் முறியடித்துள்ளார்.

    லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக 150 ரன்கள் அடித்த வீரர்கள்:-

    59 பந்துகள் - வைபவ் சூர்யவன்ஷி vs அருணாச்சல பிரதேசம் (2025)

    64 பந்துகள் - ஏபி டிவில்லியர்ஸ் vs மேற்கிந்திய தீவுகள் (2015)

    65 பந்துகள் - ஜோஸ் பட்லர் vs நெதர்லாந்து (2022)

    பல சாதனைகளை படைத்த வைபவ் சூர்யவன்ஷிக்கு குழந்தைகளுக்கான இந்தியாவின் உயரிய விருது பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்பட்டு. அதனை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.

    • இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 11-ம் தேதி நடக்கவுள்ளது.
    • ஜனவரி 14 மற்றும் 18 ஆம் தேதிகளில் முறையே 2-வது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 5 டி20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது.

    இதில் முதலில் ஒருநாள் தொடரும் அதனை தொடர்ந்து டி20 தொடரும் நடைபெற உள்ளது. இதற்கான முதல் ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 11-ம் தேதி தொடங்க உள்ளது. ஜனவரி 14 மற்றும் 18 ஆம் தேதிகளில் முறையே 2-வது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

    இந்த நிலையில் 3 ஒருநாள் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் ஒருநாள் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை டிசம்பர் 31-ந் தேதி காலை 11 மணி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2-வது மற்றும் 3-வது ஒருநாள் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை ஜனவரி 1-ந் தேதி காலை 11 மணி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 10-வது ஐ.சி.சி. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி தொடங்குகிறது.
    • இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    20 அணிகள் இடையிலான 10-வது ஐ.சி.சி. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவுடன் இடம் பெற்றுள்ளது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான 16 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஹாரி ப்ரூக் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் அதிரடி வீரர்களாக லியாம் லிவிங்ஸ்டன், ஜேமி ஸ்மித் ஆகியோருக்கு இடம் இல்லை.

    ஹாரி புரூக் (கேப்டன்), ரேஹான் அகமது, ஜோப்ரா ஆர்ச்சர், டாம் பேன்டன், ஜேக்கப் பெதெல், ஜாஸ் பட்லர், பிரைடன் கார்ஸ், சாம் கரண், லியாம் டாசன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷித், ஃபில் சால்ட், ஜோஷ் டங், மற்றும் லூக் வுட்.

    • ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் அடுத்த வருடம் நடைபெற உள்ளது.
    • அடுத்த ஐ.பி.எல். தொடர் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 18 சீசன்களை வெற்றிகரமாக கடந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் டி20 கிரிக்கெட்டை வளர்க்கும் நோக்கில் கடந்த 2008-ம் ஆண்டு இந்த தொடங்கப்பட்ட இந்த தொடர் உலகளாவிய லீக் தொடர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    இந்திய வீரர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு முன்னணி வீரர்களும் இணைந்து விளையாடுவதால் இந்த சரவெடி கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு. இதன் 18-வது சீசன் கடந்த வருடம் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    இதனையடுத்து இந்த தொடரின் 19-வது சீசன் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. அதன்படி, அடுத்த ஐ.பி.எல். தொடர் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் இந்த தொடரின் பிளேஆப் சுற்றுகள் பஞ்சாப் நகரில் முல்லான்பூர் ஸ்டேடியத்தில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ஐபிஎல் 2025-ல் குவாலிஃபையர் 1 & எலிமினேட்டர் ஆகிய போட்டிகள் முல்லன்பூரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    • டெஸ்ட் போட்டிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்ததாக தகவல் வெளியானது.
    • இதற்காக முன்னாள் வீரர் வி.வி.எஸ். லட்சுமணனை பி.சி.சி.ஐ. அணுகியதாகவும் கூறப்பட்டது.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் கடந்த ஆண்டு ஜூலை 10-ந்தேதி நியமிக்கப்பட்டார். 2027-ல் நடைபெற உள்ள ஐ.சி.சி. ஒருநாள் உலக கோப்பை வரை அவரது பதவிக்காலம் இருக்கிறது.

    கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது.

    ஆனால் டெஸ்டில் இந்திய அணி பெரிய அளவில் வெற்றிகளை பெறவில்லை. சொந்த மண்ணில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவிடம் முழுமையாக டெஸ்ட் தொடரை இழந்தது. இதனால் அவர் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.

    இதனால் டெஸ்ட் போட்டிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க பி.சி.சி.ஐ. (இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம்) முடிவு செய்ததாக தகவல் வெளியானது. இதற்காக முன்னாள் வீரர் வி.வி.எஸ். லட்சுமணனை பி.சி.சி.ஐ. அணுகியதாகவும் கூறப்பட்டது. இதை கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே நிராகரித்து இருந்தது.

    இந்த நிலையில் பயிற்சியாளர் பதவியில் இருந்து கம்பீர் நீக்கம் இல்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக பி.சி.சி.ஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாவது:-

    பயிற்சியாளர் கவுதம் கம்பீர் குறித்து பரவி வரும் யூகங்கள் குறித்து நான் மிக தெளிவாக கூற விரும்புகிறேன். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கம்பீரை நீக்கவோ அல்லது புதிய பயிற்சியாளரை நியமிக்கவோ எந்த திட்டமும் இல்லை என்பதை பி.சி.சி.ஐ செயலாளர் (தேவஜித் சைகியா) மிகத் தெளிவாக தெரிவித்துவிட்டார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • முதல் 4 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
    • தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் 17 வயதான கமலினிக்கு மட்டும் களம் காணும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை.

    திருவனந்தபுரம்:

    இந்தியாவுக்கு வந்துள்ள சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் 4 ஆட்டங்களிலும் இந்திய அணி வரிசையாக வெற்றி பெற்று தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- இலங்கை மோதும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி திருவனந்தபுத்தில் இன்று நடக்கிறது.

    முதல் 3 ஆட்டங்களிலும் இலங்கையை 130 ரன்னுக்குள் சுருட்டிய இந்தியா அந்த இலக்கை 15 ஓவருக்குள் எட்டிப்பிடித்து அசத்தியது. ஆனால் கடந்த ஆட்டம் ஓரளவு சவால் நிறைந்ததாக காணப்பட்டது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி ஸ்மிர்தி மந்தனா, ஷபாலி வர்மா ஆகியோரது அரைசதத்தால் 221 ரன்கள் குவித்தது. 20 ஓவர் போட்டியில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். பதிலுக்கு இலங்கை அணி 191 ரன்கள் எடுத்து நெருங்கியது. இன்றைய ஆட்டத்திலும் அத்தகைய சவாலை எதிர்பார்க்கலாம்.

    இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், 'உலகக் கோப்பையை வென்ற பிறகு எங்களது தரத்தை இன்னும் உயர்த்த வேண்டும். 20 ஓவர் கிரிக்கெட்டில் மேலும் ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என விவாதித்தோம். அந்த வகையில் இது எங்கள் அனைவருக்கும் சிறந்த தொடராக அமைந்துள்ளது.' என்றார். தொடரை முழுமையாக வெல்லும் உத்வேகத்துடன் உள்ள இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் 17 வயதான கமலினிக்கு மட்டும் களம் காணும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. இது சம்பிரதாய ஆட்டம் என்பதால் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.

    இலங்கை அணியை பொறுத்தவரை ஆறுதல் வெற்றியோடு தாயகம் திரும்ப முயற்சிக்கும். அந்த அணியின் கேப்டன் சமாரி அட்டப்பட்டு கூறுகையில், '4-வது ஆட்டத்தில் பேட்டிங்கில் முன்னேற்றம் கண்டிருந்தோம். ஆனாலும் இன்னும் அதிரடியான ஷாட்டுகளை விளாசுவதில் முன்னேற்றம் தேவை. எங்களது பவுலர்கள் நன்றாக வீசவில்லை. ஆனால் அவர்கள் இளம் மற்றும் அனுபவமில்லாதவர்கள். இந்த தொடரில் இருந்து அவர்கள் நிறைய கற்றுக்கொள்வார்கள். கடைசி ஆட்டத்தில் தங்களது மிகச்சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்' என்றார்.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் புதுச்சேரி- ஜார்கண்ட் அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் ஜார்கண்ட் அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் அகமதாபாத்தில் (ஏ பிரிவு) நடந்த புதுச்சேரிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஜார்கண்ட் 7 விக்கெட்டுக்கு 368 ரன்கள் குவித்தது.

    கேப்டன் குமார் குஷாக்ரா 105 ரன்களும், அனுகுல் ராய் 98 ரன்களும் எடுத்தனர். இமாலய இலக்கை நோக்கி ஆடிய புதுச்சேரி அணி 41.4 ஓவர்களில் 235 ரன்னில் அடங்கி தோற்றது.

    முன்னதாக புதுச்சேரி கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான 29 வயதான அமன் கான் 10 ஓவர்களில் 123 ரன்களை வாரி வழங்கி ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் (சர்வதேச மற்றும் உள்ளுர் ஒருநாள் போட்டிகளை சேர்த்து) ஒரு பவுலரின் மோசமான பந்து வீச்சாக இது பதிவாகியுள்ளது.

    இதற்கு முன்பு இதே தொடரில் பீகாருக்கு எதிரான ஆட்டத்தில் அருணாசலபிரதேச பவுலர் மிபோம் மோசு 116 ரன்களை வழங்கியதே மோசமான பவுலிங் சாதனையாக இருந்தது.

    • தமிழகத்தின் குகேஷ் 8½ புள்ளிகளுடன் 26-வது இடத்தை பெற்றார்.
    • பெண்கள் உலகக் கோப்பையை வென்றவரான இந்தியாவின் திவ்யா தேஷ்முக் 35-வது இடத்தில் இருக்கிறார்.

    உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் தொடர் கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் முதலில் ரேபிட் வடிவிலான போட்டி நடந்தது. ஓபன் பிரிவில் நார்வேயின் மாக்னஸ் கார்ல்செனும், பெண்கள் பிரிவில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரா கோர்யாச்கினாவும் சாம்பியன் பட்டத்தை வென்றனர். எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பி 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

    அடுத்ததாக அதிவேகமாக காய்களை நகர்த்தக்கூடிய உலக பிளிட்ஸ் போட்டி அதே இடத்தில் நேற்று தொடங்கியது. இதில் ஓபன் பிரிவு 19 சுற்றுகளையும், பெண்கள் பிரிவு 15 சுற்றுகளையும் கொண்டது. ஒவ்வொரு ஆட்டத்துக்கும் 3 நிமிடம் ஒதுக்கப்படும். அத்துடன் ஒவ்வொரு நகர்வுக்கும் 2 வினாடி வீதம் அதிகரிக்கப்படும்.

    ஓபன் பிரிவில் 252 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். நேற்று 13 சுற்றுகள் நடந்தன. இதன் முடிவில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 10 புள்ளிகளுடன் (8 வெற்றி, ஒரு தோல்வி, 4 டிரா) முன்னிலை வகிக்கிறார். இதில் 9-வது ரவுண்டில் 'நம்பர் ஒன்' வீரரும், நடப்பு சாம்பியனுமான நார்வேயின் மாக்னஸ் கார்ல்செனை 45-வது நகர்த்தலில் வீழ்த்தியதும் அடங்கும். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய கார்ல்சென் தோற்றதும் விரக்தியில் மேஜையில் கையால் குத்தி விட்டு நடையை கட்டினார்.

    பிரான்சின் மேக்சிம் வச்சியர், அமெரிக்காவின் பேபியானா காருனா ஆகியோரும் தலா 10 புள்ளிகளுடன் எரிகைசியுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளனர். கார்ல்சென் 9 புள்ளியுடன் 11-வது இடத்தில் இருக்கிறார். இந்தியாவின் பிரனேஷ், பிரக்ஞானந்தா, கவுதம் கிருஷ்ணா, ராவ்னக் சத்வானி, நாராயணன் சுனில்தத் உள்ளிட்டோரும் 9 புள்ளிகளுடன் உள்ளனர்.

    கிளாசிக்கல் உலக சாம்பியனான தமிழகத்தின் குகேஷ் 8½ புள்ளிகளுடன் (8 வெற்றி, ஒரு டிரா, 4 தோல்வி) 26-வது இடத்தை பெற்றார்.

    இந்த போட்டியில் எஞ்சிய 6 சுற்று ஆட்டகள் இன்று தொடர்ந்து நடக்கின்றன. அதன் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள். தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியும் இன்றே நடக்கும்.

    பெண்கள் பிரிவில் 140 வீராங்கனைகள் களம் கண்டுள்ளனர். இதில் முதல் 10 ரவுண்ட் முடிவில் நெதர்லாந்தின் எலின் ரோபர்ஸ் 8½ புள்ளிகளுடன் (7 வெற்றி, 3 டிரா) முன்னிலை வகிக்கிறார். ரேபிட்டில் வாகை சூடிய ரஷியாவின் கோர்யாச்கினா, உஸ்பெகிஸ்தானின் உமிதா ஒமோனோவா, பல்கேரியாவின் ஸ்டெபனோவா ஆகியோர் தலா 8 புள்ளிகளுடன் அடுத்த நிலையில் உள்ளனர்.

    பெண்கள் உலகக் கோப்பையை வென்றவரான இந்தியாவின் திவ்யா தேஷ்முக் 6 புள்ளிகளுடன் 35-வது இடத்தில் இருக்கிறார். மற்ற இந்தியர்கள் வைஷாலி, ஹரிகா தலா 5½ புள்ளிகளுடனும், கோனெரு ஹம்பி 5 புள்ளிகளுடனும் பின்தங்கியுள்ளனர். மீதமுள்ள 5 சுற்று ஆட்டங்கள் இன்று நடக்கிறது.

    • குறுகிய நாளில் போட்டி முடிந்ததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.60 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
    • இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 4-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது.

    மெல்போர்னில் உள்ள எம்.சி.ஜி. ஸ்டேடியத்தில் நடந்த ஆஷஸ் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. கோடை காலத்தில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் இந்த டெஸ்ட் வெறும் 2 நாளில் முடிந்தது ரசிகர்களை மட்டுமின்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இரு நாளில் மட்டும் ஒரு லட்சத்து 86 ஆயிரம் ரசிகர்கள் போட்டியை நேரில் கண்டுகளித்தனர். குறுகிய நாளில் போட்டி முடிந்ததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.60 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

    இன்னொரு பக்கம் மெல்போர்ன் ஆடுகளம் கடும் விமர்சனத்திற்குள்ளானது. இது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு உகந்த ஆடுகளம் அல்ல என இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சாடினார்.

    பொதுவாக ஒரு டெஸ்ட் போட்டி முடிந்ததும் அந்த ஆடுகளத்தன்மையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) போட்டி நடுவர் மதிப்பிடுவது உண்டு. இதன்படி மெல்போர்ன் ஆடுகளத்தை தரமற்றது என்று ஐ.சி.சி. முத்திரை குத்தியுள்ளது.

    ஐ.சி.சி. போட்டி நடுவர் ஜெப் குரோவ் கூறுகையில், 'மெல்போர்ன் எம்.சி.ஜி. ஆடுகளம் அளவுக்கு அதிவேகமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. முதல் நாளில் 20 விக்கெட்டுகளும், 2-வது நாளில் 16 விக்கெட்டுகளும் சரிந்தன. ஒரு பேட்ஸ்மேன் கூட அரைசதம் அடிக்கவில்லை. ஐ.சி.சி.யின் மைதான பிட்ச் மற்றும் அவுட்பீல்டு கண்காணிப்பு வழிகாட்டுதலின்படி இது ஒரு திருப்தியற்ற ஆடுகளம். அதனால் இந்த மைதானத்திற்கு ஒரு தகுதி இழப்பு விதிக்கப்படுகிறது' என்று கூறியுள்ளார். இதற்கு முன்பு இங்கு நடந்த கடைசி 3 டெஸ்ட் போட்டிகளின் போது இது சிறந்த ஆடுகளம் என்று ஐ.சி.சி. பாராட்டியிருந்தது.

    ஐ.சி.சி. விதிப்படி ஒரு மைதானம் 5 ஆண்டுக்குள் 6 தகுதி இழப்பு புள்ளியை பெற்றால் அந்த மைதானத்தில் ஓராண்டு சர்வதேச போட்டி நடத்த தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி ஜேம்ஸ் அல்சோப் கூறுகையில், '3 மற்றும் 4-வது நாள் போட்டிக்காக டிக்கெட் வாங்கியவர்கள் மற்றும் உலகம் முழுவதும் போட்டியை காண ஆவலுடன் காத்திருந்த கோடிக்கணக்கான ரசிகர்களுக்காக மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானோம். இது வழக்கமான எம்.சி.ஜி.யின் ஆடுகளம் போல் அல்லாமல் பேட்டிங்குக்கும், பந்து வீச்சுக்கும் இடையிலான சமநிலையை வழங்கவில்லை. சமீபத்தில் ஆண்டுகளில் அருமையான டெஸ்ட் போட்டி ஆடுகளங்களை தயாரித்த மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் ஊழியர்களை பாராட்டுகிறோம். அடுத்த ஆண்டு இங்கு நியூசிலாந்துக்கு எதிரான 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டியும், 2027-ம் ஆண்டு மார்ச்சில் டெஸ்ட் போட்டியின் 150-வது ஆண்டை கொண்டாடும் வகையிலான இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டும் நடக்க உள்ளது. இந்த போட்டிகளுக்கு அவர்கள் ஆகச்சிறந்த ஆடுகளங்களை வழங்குவார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்' என்றார்.

    இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 4-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது.

    ×