என் மலர்
விளையாட்டு
- மந்தனாவும் பிரபல இந்தி சினிமா இசையமைப்பாளரான பலாஷ் முச்சலும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.
- இருவரும் சமீபத்தில் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்திருப்பதை உறுதிப்படுத்தினர்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. மும்பையை சேர்ந்த 29 வயதாகும் இடது கை பேட்டரான ஸ்மிருதி மந்தனா இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையாகவும், துணை கேப்டனாகவும் இருந்து வருகிறார். இவருக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
மந்தனாவும் பிரபல இந்தி சினிமா இசையமைப்பாளரான பலாஷ் முச்சலும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர். இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்திருப்பதை உறுதிப்படுத்தினர்.
இதனையடுத்து மந்தனா - பலாஷ் முச்சல் ஜோடியின் திருமணம் மகராஷ்டிராவில் உள்ள அவரது சொந்த ஊரான சாங்லியில் (23-ந்தேதி) நடைபெற இருந்தது. இரு வீட்டாரின் சம்மதத்தோடும் இவர்களது திருமணம் நடைபெற இருந்தது. அதில் பல இந்திய வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ஸ்மிருதி மந்தனா - பலாஷ் முச்சலின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறினர். மந்தனாவின் தந்தைக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக இவர்களது திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பலாஷ் முச்சலுடன் நடைபெற இருந்த தன்னுடைய திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
ஆனால் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டதற்கு தந்தையின் உடல்நலக்குறைவு காரணம் இல்லை என்றும் வேறு காரணம் எனவும் கூறப்பட்டது. அதாவது பலாஷ் முச்சல் வேறு சில பெண்களுடன் பேசிய ஆடியோக்கள், புகைப்படங்கள் வைரலாகின. இதன் காரணமாக திருமணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. திருமணம் ஒத்திவைக்கப்பட்ட பிறகு இது தொடர்பாக இருவரும் ஏதும் பேசவில்லை.

சில நாட்களில் பலாஷ் முச்சலுடன் நடைபெற இருந்த தன்னுடைய திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று ஸ்மிருதி மந்தனா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதில், இந்த விவகாரம் இத்துடன் முடிவடைய விரும்புகிறேன். இதை மேலும் எடுத்துச் செல்ல வேண்டாம் என உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இந்த நேரத்தில் இரண்டு குடும்பங்களின் தனியுரிமையை மதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தச் சூழலைப் புரிந்து கொண்டு எங்கள் வழியில் முன் நகர்ந்து செல்ல அவகாசம் கொடுங்கள் என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பலாஷ் முச்சல் கூறியதாவது:-
வாழ்க்கையில் அடுத்த விஷயங்களை நோக்கி நகர்ந்து தனிப்பட்ட உறவுகளிலிருந்து விலக நிற்க முடிவு செய்துள்ளேன். எனக்கு மிகவும் புனிதமாக இருந்த ஒன்றைப் பற்றி பரவும் ஆதாரமற்ற வதந்திகள் மீது மக்கள் எளிதாக கருத்து தெரிவிப்பது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது. இது எனது வாழ்க்கையின் கடினமான காலகட்டம். எனது நம்பிக்கைகளின் மீது உறுதியாக நின்று அதனை கையாள்வேன். உறுதிசெய்யப்படாத வதந்திகளை அடிப்படையாக வைத்து ஒருவரை மதிப்பிடுவதற்கு முன்பு ஒரு சமூகமாக நாம் நிறுத்தி, யோசிப்போம் என நம்புகிறேன் என கூறினார்.
உண்மையில் பலாஷ் தனது காதலி மந்தனாவை ஏமாற்றியதாக சமூக வலைத்தளத்தில் செய்தி பரவியது. திருமண வேலைகளை செய்து கொண்டிருந்த பெண் நடன இயக்குனருடன் பலாஷிற்கு தொடர்பு இருப்பதாக சில பதிவுகள் கூறுகிறது. மேலும் பலாஷ் அப்பெண்ணுடன் சாட்டிங் செய்த விபரமும் சமூக வலைத்தள பக்கத்தில் பரவியது. அவர்கள் எப்போது இது போன்ற சாட்டிங்கில் ஈடுபட்டனர் என்ற தகவல்களும் உறுதி செய்யப்படவில்லை. திருமணத்திற்கு முந்தைய நாள் இந்த சாட்டிங் விபரம் வெளியில் கசிந்தது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் போது ஷ்ரேயாஸ் காயமடைந்தார்.
- அடுத்த மதம் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
புதுடெல்லி:
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி (24 ரன்) அடித்த பந்தை இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பின்னோக்கி ஓடிச் சென்று பாய்ந்து அருமையாக கேட்ச் செய்தார். அப்போது மைதானத்தில் விழுந்ததில் அவரது இடது விலாப்பகுதி பலமாக இடித்தது. வலியால் அவதிப்பட்ட அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.
'ஸ்கேன்' பரிசோதனை மேற்கொண்ட போது, விலா எலும்பையும் தாண்டி மண்ணீரலில் கீறல் ஏற்பட்டு, அதனால் ரத்தக்கசிவு உருவாகி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அணி டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் சிட்னியில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) ஷ்ரேயாஸ் அய்யர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். உடனடியாக ரத்தக்கசிவை தடுப்பதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தான் நலமாக இருப்பதாகவும் தனது நலனுக்காக வேண்டிய அனைவருக்கும் நன்றி என ஷ்ரேயாஸ் அய்யர் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து ஷ்ரேயாஸ் அய்யர் ஓய்வில் இருந்தார். இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை அவர் தவறவிட்டார்.
இந்த நிலையில், அடுத்த மதம் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் விளையாட உள்ளார்.
அதற்கு முன் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹாசரே கோப்பை தொடரில் விளையாட உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
- விராட் கோலி டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார்
- 3-வது போட்டியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணிக்கு எதிராக விராட் கோலி விளையாடவில்லை.
33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 38 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த தொடரில் முன்னணி வீரர்கள் விளையாடுவதால் ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது. குறிப்பாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போட்டிகளில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்த தொடரில் விராட் கோலி டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். 2 போட்டிகளில் விளையாடிய அவர் இன்று நடக்கும் 3-வது போட்டியில் சவுராஷ்டிரா அணிக்கு எதிராக விளையாடவில்லை.
இந்நிலையில் விராட் கோலி அடுத்த போட்டியில் எப்போது விளையாடுவார் என தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஜனவரி 6-ம் தேதி ஆலூரில் நடைபெறும் ரெயில்வேஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி விளையாடுவார் என்று டிடிசிஏ உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த தொடரில் முதல் 2 போட்டியில் விளையாடிய விராட் கோலி ஒரு அரை சதம் மற்றும் ஒரு சதம் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
- இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 4-ந் தேதி தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றியது.
அதனை தொடர்ந்து 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அசத்தியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 4-ந் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் காயம் காரணமாக விலகி உள்ளார். ஏற்கனவே காயம் காரணமாக ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வுட் ஆகியோர் காயம் காரணமாக ஆஷஸ் தொடரில் இருந்து விலகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- நியூசிலாந்து அணிக்காக 2011 முதல் 2023 வரை விளையாடியுள்ளார்.
- நீண்டகால விலா எலும்பு காயம் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் டக் பிரேஸ்வெல். இவர் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதான இவர், நீண்டகால விலா எலும்பு காயம் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளார்.
இவர் நியூசிலாந்து அணிக்காக 2011 முதல் 2023 வரை விளையாடியுள்ளார். 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 74 விக்கெட்டுகளும், 568 ரன்களும் எடுத்துள்ளார்.
21 போட்டிகளில் ஒருநாள் போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்டுகளும் 20 போட்டிகளில் 20 விக்கெட்டுகள் என மொத்தம் 120 விக்கெட்டுகளும், 915 ரன்களும் எடுத்துள்ளார்.

இவர் 2011-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 60 ரன்களை விட்டுக் கொடுத்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரின் பங்களிப்பால் 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. அதன்பிறகு ஆஸ்திரேலியாவில் நியூசிலாந்து அணி இன்னும் வரை வெற்றி பெற்றதில்லை.
ஓய்வு அறிவித்த டக் பிரேஸ்வெல்லுக்கு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
- அலெக்சாண்ட்ரா கோர்யாச்கினா முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
- இந்தியாவின் சவிதா ஸ்ரீ, வைஷாலி ஆகியோர் தலா 8 புள்ளிகளுடன் 4-வது, 5-வது இடத்தை பெற்றனர்.
தோகா:
உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் தொடர் கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் முதலில் ரேபிட் வடிவிலான போட்டி 3 நாட்கள் நடந்தது.
இதில் 13 சுற்றுகளை கொண்ட ஓபன் பிரிவில் மொத்தம் 247 வீரர்கள் பங்கேற்றனர். 3-வது நாளான நேற்று கடைசி 4 சுற்று ஆட்டங்கள் நடந்தன. முந்தைய நாள் முடிவில் 3-வது இடத்தில் இருந்த 'நம்பர் ஒன்' வீரரான மாக்னஸ் கார்செல்ன் (நார்வே) கடைசி நாளில் வித்தையை காட்டினார். அலெக்சி சரனா (செர்பியா), ஹான்ஸ் நீமேன் (அமெரிக்கா), யஜிஸ் கான் எர்டாக்மஸ் (துருக்கி) ஆகியோரை வரிசையாக பதம் பார்த்தார்.
கடைசி ரவுண்டில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியுடன் 24-வது நகர்த்தலில் டிரா செய்ததுடன் முதலிடத்துக்கும் முன்னேறினார். அதே சமயம் 2-வது நாளில் 7½ புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த ரஷியாவின் விளாடிஸ்லாவ் ஆர்ட்மீவ் தனது கடைசி 4 ரவுண்டுகளிலும் டிரா செய்ததால் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டார்.
13 சுற்று முடிவில் கார்ல்சென் 10½ புள்ளிகளுடன் (9 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வி) முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்ந்தார். ரேபிட்டில் 6-வது முறையாக மகுடம் சூடிய அவருக்கு ரூ.74 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது. ஒட்டுமொத்தத்தில் உலக போட்டியில் அவர் வென்ற 19-வது பட்டம் இதுவாகும்.
விளாடிஸ்லாவ் 9½ புள்ளிகளுடன் 2-வது இடத்தோடு அதற்குரிய ரூ.53 லட்சத்தையும், இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 9½ புள்ளிகளுடன் 3-வது இடத்துடன் ரூ.38 லட்சத்தையும் பரிசாக பெற்றனர். எதிர்பார்க்கப்பட்ட கிளாசிக்கல் உலக சாம்பியனான தமிழகத்தின் குகேஷ் 8½ புள்ளிகளுடன் (6 வெற்றி, 5 டிரா, 2 தோல்வி) 20-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு தமிழக வீரர் பிரக்ஞானந்தா 8½ புள்ளிகளுடன் 28-வது இடத்தை பெற்றார்.
11 சுற்றுகளை கொண்ட இதன் பெண்கள் பிரிவில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரா கோர்யாச்கினா, சீனாவின் ஜூ ஜினெர், நடப்பு சாம்பியனான இந்தியாவின் கோனெரு ஹம்பி ஆகியோர் 6 வெற்றி, 5 டிரா என தலா 8½ புள்ளிகளுடன் சமநிலை வகித்தனர்.
இதில் கடினமான எதிராளியை சந்தித்து புள்ளி எடுத்தது, சராசரி ரேபிட் ரேட்டிங் புள்ளி அடிப்படையில் டாப்-2 இடங்களை உறுதி செய்த கோர்யாச்கினா, ஜூனெர் இடையே டைபிரேக்கர் நடத்தப்பட்டது. டைபிரேக்கரில் கோார்யாச்கினா 1½-½ என்ற புள்ளி கணக்கில் ஜூனெரை தோற்கடித்தார்.
முடிவில் அலெக்சாண்ட்ரா கோர்யாச்கினா முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். அவருக்கு ரூ.42 லட்சம் பரிசாக கிடைத்தது. 2-வது இடத்தை ஜூ ஜினெரும், ஹம்பி 3-வது இடத்தையும் பெற்றனர். இவர்களுக்கு முறையே ரூ.28½ லட்சம், ரூ.20 லட்சம் வீதம் பரிசாக கிடைத்தது. இந்தியாவின் சவிதா ஸ்ரீ, வைஷாலி ஆகியோர் தலா 8 புள்ளிகளுடன் 4-வது, 5-வது இடத்தை பெற்றனர். திவ்ஷா தேஷ்முக் 8-வது இடத்தை (7½ புள்ளி) பிடித்தார்.
ரேபிட் போட்டி முடிந்த நிலையில் உலக பிளிட்ஸ் செஸ் போட்டி இன்றும், நாளையும் அதே இடத்தில் நடக்கிறது. இதில் ஓபன் பிரிவு 19 சுற்றுகளாகவும், பெண்கள் பிரிவு 15 சுற்றுகளாகவும் நடத்தப்படுகிறது. இதன் முடிவில் முதல் 4 இடங்களை பிடிப்பவர்கள் அரைஇறுதிக்கு வருவார்கள். ஒவ்வாரு ஆட்டமும் 3 நிமிடங்களை கொண்டது. அத்துடன் ஒவ்வொரு நகர்வுக்கும் 2 வினாடி வீதம் அதிகரிக்கப்படும்.
- 4-வது எஸ்.ஏ. லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.
- இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோதுகின்றன.
பார்ல்:
4-வது எஸ்.ஏ. லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோதுகின்றன. லீக் முடிவில் டாப்4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் பார்ல் நகரில் நடந்த 3-வது லீக்கில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, பார்ல் ராயல்சை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுக்கு 186 ரன்கள் சேர்த்தது. ஜோர்டான் ஹெர்மேன் 62 ரன்கள் (28 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார்.
அடுத்து களம் இறங்கிய டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணி, எதிரணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 11.5 ஓவர்களில் 49 ரன்னில் சுருண்டது. எஸ்.ஏ. கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணியின் மோசமான ஸ்கோர் இது தான். இதற்கு முன்பு கடந்த ஆண்டில் பிரிட்டோாரியா கேப்பிட்டல்ஸ் அணி, சன்ரைசர்சுக்கு எதிராக 52 ரன்னில் அடங்கியதே குறைந்த ஸ்கோராக இருந்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் அன்ரிச் நோர்டியா 4 விக்கெட்டும், ஆடம் மில்னே, தாரிந்து ரத்னாயகே தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
- பும்ரா ஒருநாள் போட்டியில் விளையாடி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகிறது.
- 32 வயதான ஹர்திக் பாண்ட்யா கடைசியாக மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடினார்.
புதுடெல்லி:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஜனவரி 11-ந்தேதி ஒருநாள் தொடர் தொடங்குகிறது.
இதில் 20 ஓவர் போட் டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஒருநாள் போட்டிக்கான அணி இந்த வாரம் அறிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் வேகப்பந்து வீரர் ஜஸ்பிரீத் பும்ரா, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் 20 ஓவர் அணியில் இடம் பெற்று இருக்கிறார்கள். 20 ஓவர் உலக கோப்பையை கருத்தில் கொண்டு இருவரும் ஒருநாள் தொடரில் ஆடமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
20 ஓவர் உலக கோப்பைக்கு முன்பு இந்திய அணி கடைசியாக நியூசிலாந்துடன் விளையாடுகிறது. பும்ரா ஒருநாள் போட்டியில் விளையாடி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 2023 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆடினார்.
32 வயதான ஹர்திக் பாண்ட்யா கடைசியாக மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடினார். அதன் பிறகு அவர் எந்த ஒருநாள் போட்டியிலும் ஆடவில்லை.
- தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் விஜயவாடாவில் நடந்தது.
- பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் தன்வி பத்ரி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தார்.
விஜயவாடா:
87-வது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்தது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தன்வி பத்ரி, சூர்யா கரிஷ்மா தமிரி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சூர்யா கரிஷ்மா தமிரி 17-21, 21-12, 21-14 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- துபாயில் கண்காட்சி போட்டி நடைபெற்றது.
- இதில் ஆஸ்திரேலியா வீரர் நிக் கிர்கியோஸ் வெற்றி பெற்றார்.
துபாய்:
அடுத்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த மாதம் 12-ம் தேதி முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை மெல்போர்னில் நடைபெற உள்ளது.
இந்தத் தொடருக்காக நம்பர் 1 வீராங்கனையான பெரலாசைச் சேர்ந்த அரினா சபலென்கா தயாராகி வருகிறார். கடந்த 2023, 24-ம் ஆண்டுகளில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற அவர், 2025 இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீசிடம் தோல்வி அடைந்தார். மூன்றாவது முறையாக பட்டம் வெல்லும் இலக்குடன் அவர் ஆஸ்திரேலியா புறப்படுகிறார்.
இந்நிலையில், துபாயில் உள்ள கோகோ-கோலா அரீனா அரங்கில் கண்காட்சி போட்டி நடைபெற்றது. இதில் நமப்ர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசுடன் மோதினார்.
இதில் நிக் கிரிகியோஸ் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
- முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 221 ரன்கள் குவித்தது.
- ஸ்மிருதி மந்தனா 80 ரன்னும், ஷபாலி வர்மா 79 ரன்னும் எடுத்தனர்.
திருவனந்தபுரம்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்துமுடிந்த 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
இரு அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினர். இந்திய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்தது. ஸ்மிருதி மந்தனா 80 ரன்னும், ஷபாலி வர்மா 79 ரன்னும் எடுத்தனர். ரிச்சா கோஷ் 40 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில், இந்தப் போட்டியில் 80 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மிருதி மந்தனா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் ஸ்மிருதி மந்தனா. மேலும் 10,000 ரன்களைக் கடந்த 2-வது இந்திய வீராங்கனை ஆனார். இந்தப் பட்டியலில் மிதாலி ராஜ் 10868 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஒட்டுமொத்தமாக 10,000 ரன்களைக் கடந்த 4வது வீராங்கனை ஆவார்.
- டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 221 ரன்கள் குவித்தது.
திருவனந்தபுரம்:
இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரில் 3-0 என கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகள் இடையிலான நான்காவது டி20 போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனைகள் அதிரடியில் மிரட்டினர். இருவரும் அரை சதம் கடந்தனர்.
ஸ்மிருதி மந்தனா 48 பந்தில் 80 ரன்னும், ஷபாலி வர்மா 46 பந்தில் 79 ரன்னும் குவித்தனர். ரிச்சா கோஷ்16 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து, 222 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. கேப்டன் சமாரி அடப்பட்டு 52 ரன்னும், ஹாசினி பெராரா 33 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், இலங்கை பெண்கள் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் இந்திய அணி 4-0 என கைப்பற்றியது.






