என் மலர்
கிரிக்கெட் (Cricket)

தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்தியா: இலங்கையுடன் கடைசி டி20-யில் இன்று மோதல்
- முதல் 4 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
- தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் 17 வயதான கமலினிக்கு மட்டும் களம் காணும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை.
திருவனந்தபுரம்:
இந்தியாவுக்கு வந்துள்ள சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் 4 ஆட்டங்களிலும் இந்திய அணி வரிசையாக வெற்றி பெற்று தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- இலங்கை மோதும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி திருவனந்தபுத்தில் இன்று நடக்கிறது.
முதல் 3 ஆட்டங்களிலும் இலங்கையை 130 ரன்னுக்குள் சுருட்டிய இந்தியா அந்த இலக்கை 15 ஓவருக்குள் எட்டிப்பிடித்து அசத்தியது. ஆனால் கடந்த ஆட்டம் ஓரளவு சவால் நிறைந்ததாக காணப்பட்டது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி ஸ்மிர்தி மந்தனா, ஷபாலி வர்மா ஆகியோரது அரைசதத்தால் 221 ரன்கள் குவித்தது. 20 ஓவர் போட்டியில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். பதிலுக்கு இலங்கை அணி 191 ரன்கள் எடுத்து நெருங்கியது. இன்றைய ஆட்டத்திலும் அத்தகைய சவாலை எதிர்பார்க்கலாம்.
இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், 'உலகக் கோப்பையை வென்ற பிறகு எங்களது தரத்தை இன்னும் உயர்த்த வேண்டும். 20 ஓவர் கிரிக்கெட்டில் மேலும் ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என விவாதித்தோம். அந்த வகையில் இது எங்கள் அனைவருக்கும் சிறந்த தொடராக அமைந்துள்ளது.' என்றார். தொடரை முழுமையாக வெல்லும் உத்வேகத்துடன் உள்ள இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் 17 வயதான கமலினிக்கு மட்டும் களம் காணும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. இது சம்பிரதாய ஆட்டம் என்பதால் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.
இலங்கை அணியை பொறுத்தவரை ஆறுதல் வெற்றியோடு தாயகம் திரும்ப முயற்சிக்கும். அந்த அணியின் கேப்டன் சமாரி அட்டப்பட்டு கூறுகையில், '4-வது ஆட்டத்தில் பேட்டிங்கில் முன்னேற்றம் கண்டிருந்தோம். ஆனாலும் இன்னும் அதிரடியான ஷாட்டுகளை விளாசுவதில் முன்னேற்றம் தேவை. எங்களது பவுலர்கள் நன்றாக வீசவில்லை. ஆனால் அவர்கள் இளம் மற்றும் அனுபவமில்லாதவர்கள். இந்த தொடரில் இருந்து அவர்கள் நிறைய கற்றுக்கொள்வார்கள். கடைசி ஆட்டத்தில் தங்களது மிகச்சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்' என்றார்.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.






