என் மலர்
விளையாட்டு
- மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன.
- இதில் இந்திய அணி 12-ல் வெற்றி பெற்றுள்ளது. 7-ல் தோல்வியும், 7-ல் டிராவும் கண்டது.
மும்பை:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் எதிர்பாராத திருப்பமாக முதல் இரு டெஸ்டிலும் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்து விட்டது.
இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த டெஸ்டின் முடிவு தொடரில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி (தற்போது 62.82 சதவீத புள்ளி) முதலிடத்தில் நீடிக்க இந்த டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.
பெங்களூருவில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி மேகமூட்டமான சீதோஷ்ண நிலையில் நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்னில் சுருண்டது. உள்நாட்டில் இந்தியாவின் மோசமான ஸ்கோர் இதுவாகும். 2-வது இன்னிங்சில் சர்ப்ராஸ்கானின் சதத்தால் இந்தியா 462 ரன் குவித்து 107 ரன்னை எதிரணிக்கு இலக்காக நிர்ணயித்தது. இதை நியூசிலாந்து எளிதில் எட்டிப்பிடித்து விட்டது.
புனேயில் நடந்த 2-வது டெஸ்டில் ஆடுகளம் முதல்நாளில் இருந்தே சுழலுக்கு சாதகமாக காணப்பட்டது. இதிலும் முதல் இன்னிங்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறியதுடன் 156 ரன்னில் அடங்கினர். பின்னர் நியூசிலாந்து நிர்ணயித்த 359 ரன் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 245 ரன்னில் ஆட்டமிழந்து, 113 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
12 ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை தாரைவார்த்தது. மூத்த வீரர்கள் விராட் கோலியும், கேப்டன் ரோகித் சர்மாவும் தடுமாறுவது இந்தியாவுக்கு பின்னடைவாக உள்ளது. அவர்கள் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறார்கள். இதே போல் மூத்த சுழற்பந்து வீச்சாளர்கள் ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவும் கைகொடுத்தால் தான் ஆறுதல் வெற்றியாவது பெற முடியும்.
வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா அழைக்கப்பட்டிருப்பதால் பும்ரா அல்லது முகமது சிராஜ் ஆகியோரில் ஒருவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம். இந்த ஆடுகளமும் சுழற்பந்து வீச்சுக்கே அதிகம் ஒத்துழைக்கும் என தெரிவதால் முந்தைய டெஸ்டில் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழக சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தரின் பந்து வீச்சு மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'பவுலர்கள் வீசும் பந்துகளில் எந்த பந்து நன்கு சுழன்று திரும்புகிறது, எந்த பந்து பிட்ச் ஆனதும் நேராக வருகிறது என்பதை பேட்ஸ்மேன்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளரின் கையில் இருந்து பந்து விடுபடுவதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
ஆடுகளத்தன்மை எந்த மாதிரி இருக்க வேண்டும் என்று நாங்கள் எதுவும் கேட்பதில்லை. எத்தகைய ஆடுகளத்தை வழங்கினாலும், ஒரு அணியாக அதில் சிறப்பாக விளையாட முயற்சிக்கிறோம். விராட் கோலி, ரோகித்சர்மா உள்ளிட்ட வீரர்கள் கடினமாக உழைக்கிறார்கள்.
சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறார்கள். அவர்களது அணுகுமுறை சிறப்பாக இருக்கிறது. ஆனால் சில நேரம் நீங்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். ஏனெனில் சிறந்த வீரர்களாக இருந்தாலும் கூட அவர்களுக்கும் கடினமான நேரம் வரத்தான் செய்யும். கோலி, ரோகித் சர்மா சீக்கிரம் நல்ல நிலையை எட்டுவார்கள்' என்றார். மொத்தத்தில் முதல் இன்னிங்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் கணிசமாக ரன் குவித்தால், வெற்றிப்பாதைக்கு திரும்புவதற்கு வாய்ப்பு உருவாகும்.
இலங்கையில் இரு டெஸ்டிலும் தோற்று பெரிய அளவில் எதிர்பார்ப்பு இன்றி இந்திய மண்ணில் கால்பதித்த நியூசிலாந்து அணி அடுத்தடுத்து இரு டெஸ்டிலும் வாகை சூடி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து விட்டது. இந்தியாவில் 69 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் நியூசிலாந்து முதல் முறையாக டெஸ்ட் தொடரை சொந்தமாக்கி சரித்திரம் படைத்து விட்டது.
முதலாவது டெஸ்டில் ரச்சின் ரவீந்திராவின் சதமும், 2-வது டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெரின் (13 விக்கெட்) பந்து வீச்சும் வெற்றிக்கு உதவின. தொடரை முழுமையாக வெல்லும் வேட்கையுடன் அவர்கள் வியூகங்களை தீட்டுவதால் இந்த போட்டியிலும் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
போட்டி நடக்கும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி 12-ல் வெற்றி பெற்றுள்ளது. 7-ல் தோல்வியும், 7-ல் டிராவும் கண்டது.
நியூசிலாந்து அணி இங்கு இந்தியாவுடன் 3 டெஸ்டில் மோதி அதில் ஒன்றில் வெற்றியும் (1988-ம் ஆண்டு), 2-ல் தோல்வியும் (1976 மற்றும் 2021-ம் ஆண்டு) கண்டது. 2021-ம் ஆண்டில் இங்கு நடந்த டெஸ்டில் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் கபளீகரம் செய்து சாதனை படைத்தது நினைவிருக்கலாம். ஆனாலும் அந்த டெஸ்டில் நியூசிலாந்து தோல்வியையே தழுவியது.
2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 631 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும். 2021-ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து 62 ரன்னில் ஆல்-அவுட் ஆனது குறைந்தபட்சமாகும்.
- வங்கதேச அணி 416 ரன்கள் பின் தங்கி உள்ளது.
- ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சட்டோகிராம்:
தென்ஆப்பிரிக்கா- வங்காளதேசம் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்திருந்தது. டிரிஸ்டான் ஸ்டப்ஸ் சதம் (106 ரன்) அடித்தார். தொடக்க ஆட்டக்காரர் டோனி சி ஜோர்சி 141 ரன்களுடனும், டேவிட் பெடிங்காம் 18 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த நிலையில் 2-வது நாளான நேற்றும் தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினர். டேவிட் பெடிங்காம் 59 ரன்னிலும், நிலைத்து நின்று ஆடிய டோனி டி ஜோர்சி 177 ரன்னிலும் (269 பந்து, 12 பவுண்டரி, 4 சிக்சர்) தைஜூல் இஸ்லாம் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இதை தொடர்ந்து வந்த வியான் முல்டெர் அவரது முதலாவது சதத்தை எட்டினார். அத்துடன் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 144.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 575 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. வங்காளதேசம் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் தைஜூல் இஸ்லாம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 9 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்திருந்தது. மொமினுல் ஹக் 6 ரன்னுடனும், கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஷன்டோ 9 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த முஷ்பிகுர் ரஹீம் 0, மெஹிதி ஹசன் மிராஸ் 1, மஹிதுல் இஸ்லாம் அன்கான் 0, என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வங்கதேச அணி 48 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதனையடுத்து மொமினுல் ஹக் - தைஜுல் இஸ்லாம் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொமினுல் ஹக் அரை சதம் அடித்து அசத்தினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அவர் 86 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் குவித்தது. அடுத்த சிறிது நேரத்தில் இஸ்லாம் 30 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் வங்கதேசம் அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வங்கதேச அணி 416 ரன்கள் பின் தங்கி உள்ளது.
- 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் டேனில் மெத்வதேவ், அலெக்சி போபிரின்னை எதிர்கொண்டார்.
- இந்த ஆட்டத்தில் இதில் அலேக்சி போபிரின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பாரீஸ்:
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று (ரவுண்ட் ஆப் 32) ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்சி போபிரின்னை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் இதில் அலேக்சி போபிரின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 6-4, 2-6 , 7 (7), 6 (4 ) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் . இதனால் மெத்வதேவ் தொடரில் இருந்து வெளியேறினார்
- ருதுராஜ், நிதிஷ் ரெட்டி, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் டக் அவுட்டில் வெளியேறினர்.
- ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் பிரெண்டன் டோகெட் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்திய ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் தொடராக அமைந்துள்ளது பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் 22-ம் தேதி தொடங்குகிறது.
இந்தத் தொடருக்கு முன்னதாக ருதுராஜ் தலைமையில் இந்திய ஏ அணியும் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. அதிகாரப்பூர்வமற்ற இந்த டெஸ்ட் தொடர் இந்திய வீரர்களுக்கு பயிற்சி போட்டிகளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ்- அபிமன்யூ ஈஸ்வரன் களமிறங்கினர்.
ருதுராஜ் கோல்டன் டக் அவுட் முறையில் வெளியேறினார். அடுத்த சிறிது நேரத்தில் அபிமன்யு 7 ரன்னிலும் சாய் சுதர்சன் 21, இந்திரஜித் 9, இஷான் கிஷன் 4, படிக்கல் 36, நிதிஷ் ரெட்டி 0, மனோவ் சுதர் 1, பிரசித் கிருஷ்ணா 0, சைனி 23 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இதனால் இந்தியா ஏ அணி 47.4 ஓவர்களில் 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக படிக்கல் 36 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் பிரெண்டன் டோகெட் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- தலைவாஸ் அணியில் நரேந்தர் 15 புள்ளிகள் திரட்டினார்.
- குஜராத் அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.
ஐதராபாத்
12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே அற்புதமாக செயல்பட்ட தலைவாஸ் அணி முதல் பாதியில் 18-14 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது.
பிற்பாதியில் 2 முறை எதிரணியை ஆல்-அவுட் செய்து அசத்திய தமிழ் தலைவாஸ் அணி முடிவில் 44-25 என்ற புள்ளி கணக்கில் குஜராத்தை தோற்கடித்து 3-வது வெற்றியை சுவைத்தது. அதிகபட்சமாக தலைவாஸ் அணியில் நரேந்தர் 15 புள்ளிகள் திரட்டினார். குஜராத் அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.
தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற பெற்ற இந்த ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் 30-28 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
- 2017 ஐபிஎல் சீசனில் சேவாக் பஞ்சாப் அணியில் அதிக ஆதிக்கம் செலுத்தினார்.
- எனக்குள் இருந்த உங்களின் ரசிகன் மிகவும் காயமடைந்ததாக கூறினேன்.
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான மெகா வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் அல்லது ஆர்டிஎம் விதிமுறையை பயன்படுத்தி ஏலத்தில் வாங்க முடியும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் தக்க வைத்துள்ள வீரர்கள் விவரங்களை ஒவ்வொரு அணியும் வெளியிட்டு வந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க ஐபிஎல் சீசனில் நடந்த சம்பவத்தை ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் கூறி வருகிறார்.
அந்த வகையில் பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல் இருக்கும் போது சேவாக் உடனான கசப்பான நினைவுகளை மேக்ஸ்வெல் பகிர்ந்துள்ளார்.
அதில், 2017 ஐபிஎல் சீசனில் சேவாக் பஞ்சாப் அணியில் அதிக ஆதிக்கம் செலுத்தினார். பிளே ஆப்-க்கு செல்லவில்லை என்றாலும் எனது தலைமையில் சிறப்பாக செயல்பட்டதாகவேதே நினைத்தேன். கடைசி போட்டியின்போது அந்த அணியின் கேப்டனாக நான் செய்தியாளர்களை சந்திக்க சென்றேன்.
ஆனால் எனக்கு பதில் சேவாக் செய்தியாளர்களை சந்தித்தது மட்டுமன்றி, நான் அவருக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறினார். பின்னா வாட்ஸ்அப் குழுவில் இருந்தும் என்னை நீக்கினார். இதையெல்லாம் பார்க்கும்போது எனக்குள் இருந்த உங்களின் ரசிகன் மிகவும் காயமடைந்ததாக கூறினேன். அதற்கு அவர் "உன்னைபோல் ஒரு ரசிகனே எனக்கு தேவை இல்லை" என கூறினார்.
- லக்னோ அணி கேஎல் ராகுலை கழற்றி விட்டது.
- டெல்லி அணி ரிஷப் பண்ட் மீது ஆர்வம் காட்டவில்லை.
ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் ஒரு அணி தான் தக்க வைக்கும் வீரர்களின் இறுதி பட்டியலை நாளைக்குள் வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்திருக்கும் சூழ்நிலையில் ஒவ்வொரு அணியும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் சிஎஸ்கே நிர்வாகம் தாங்கள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி ருதுராஜ், ஜடேஜா, துபே, பத்திரனா, டோனி ஆகியோரை தக்கவைத்துள்ளது.
லக்னோ அணி கேஎல் ராகுலை கழற்றி விட்டது. அந்த அணியில் பூரன், பிஷ்னோய், மயங்க் யாதவ், பதோனி, மோசின் கான் ஆகியோரை தக்கவைத்துள்ளது.
கொல்கத்தா அணி ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரசலை கழற்றி விட்டது. நரேன், ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி, ஹர்சித் ரானா ஆகியோரை தக்க வைத்துள்ளது.
ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மும்பை அணியில் ரோகித் சர்மா தக்கவைக்கப்பட்டுள்ளார். மேலும் பும்ரா, சூர்யகுமார் யாதவ், பாண்ட்யாவையும் மும்பை தக்கவைத்துள்ளது.
டெல்லி ரிஷப் பண்ட் மீது ஆர்வம் காட்டவில்லை. அந்த அணியில் அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஸ்டப்ஸ், அபிஷேக் போரல் ஆகியோரை தக்கவைத்துள்ளது.
ஆர்சிபி, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய அணிகள் இன்னும் தக்கவைத்த வீரர்கள் பட்டியலை வெளியிடவில்லை.
- மெத்வதேவ் முதல் செட்டை 4-6 என இழந்தார்.
- 2-வது செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 2-வது சுற்றில் 4-ம் தரநிலை வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்சி போபிரின்னை எதிர்கொண்டார்.
இதில் அலேக்சி போபிரின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தனது சர்வீஸ் மூலம் மெத்வதேவ்-ஐ திணறடித்தார். இதனால் முதல் செட்டை அலேக்சி போபிரின் 6-4 என எளிதாக கைப்பற்றினார்.
ஆனால் 2-வது சுற்றில் சுதாரித்துக் கொண்ட டேனில் மெட்வதேவ் 6-2 என எளிதாக கைப்பற்றினார். இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் இருவரும் மல்லுக்கட்டினர்.
ஒரு கட்டத்தில் மெட்வதேவ் 4-1 என பின்தங்கினார். பின்னர் சிறப்பாக விளையாடி கேம்-ஐ கைப்பற்ற, இந்த செட் டை-பிரேக்கர் வரை சென்றது. டை-பிரேக்கரில் 7-4 என அலேக்சி போபிரின் கைப்பற்றினார். இதனால் மெத்வதேவ் 4-6, 6-2, 6 (4)-7 (7) என தோல்வியடைந்தார்.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 வீரர்களை ரீடெய்ன் செய்துள்ளது.
- ரீடெய்ன் செய்த 5 வீரர்களுக்காக சன்ரைசர்ஸ் அணி ரூ.75 கோடி செலவு செய்துள்ளது.
10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடைபெற உள்ளது. மெகா ஏலத்திற்கு முன்பாக ரீடெய்ன் செய்யப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை அனைத்து அணிகளும் நாளைக்குள் வெளியிட வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 வீரர்களை ரீடெய்ன் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், கிளாசன், அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி என 5 வீரர்களை அந்த அணி ரீடெய்ன் செய்துள்ளது. ஒரு ரிடம் கார்டுடன் ஏலத்திற்கு அந்த அணி செல்ல உள்ளது.
ரீடெய்ன் செய்த 5 வீரர்களுக்காக சன்ரைசர்ஸ் அணி ரூ.75 கோடி செலவு செய்துள்ளது. அதில் கிளாசென் ரூ.23 கோடி, பாட் கம்மின்ஸ் 18 கோடி, அபிஷேக் சர்மா ரூ.14 கோடி, டிராவிஸ் ஹெட் ரூ. 14 கோடி, நிதிஷ் ரெட்டி ரூ. 6 கோடிக்கு ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளனர்.
இருப்பினும், ஏலத்தில் சன்ரைசர்ஸ் அணி வசம் ரூ.45 கோடி ரூபாய் மட்டுமே இருக்கும். வெறும் 45 கோடியில் 18-20 வீரர்களை வாங்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.
- காலுறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் அல் நாசர் -அல் தாவூன் அணிகள் மோதின.
- பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ தவறவிட்டார்.
ரியாத்:
கிங் கோப்பை சாம்பியன்ஸ் கால்பந்து,தொடரில் நேற்று நடைபெற்ற காலுறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் அல்-நாசர் - அல் தாவூன் அணிகள் மோதின. ரியாத்தில் நடந்த இந்த போட்டியில் அல் தாவூன் அணியின் வலீத் அகமது 71-வது நிமிடத்தில் கோல் அடித்தார் . இதனால் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது .
பின்னர் அல்-நாசர் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதில் கோல் அடிக்கும் வாய்ப்பை ரொனால்டோ தவற விட்டார். இதனால் அல் தாவூன் அணி ஆட்ட நேர முடிவில் 1-0 என வெற்றி பெற்றது. ரொனால்டோவின் அணி தொடரிலிருந்து வெளியேறியது.
- கடைசியாக இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2008-ல் பாகிஸ்தானில் விளையாடி இருந்தது.
- இங்குள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்களை நேசிக்கிறார்கள்.
ராவல்பிண்டி:
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. பாகிஸ்தான், இந்தியா உட்பட எட்டு அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. இந்த தொடருக்காக இந்தியா அணி பாகிஸ்தான் செல்லுமா என்பது இன்னும் வரை கேள்வி குறியாகவே உள்ளது.
கடைசியாக இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2008-ல் பாகிஸ்தானில் விளையாடி இருந்தது. அதன் பிறகு அங்கு சென்று விளையாடவில்லை. பாகிஸ்தான் அணி நேரடி தொடரில் விளையாட இந்தியாவுக்கு கடந்த 2012-ல் வந்திருந்தது. அதன் பின்னர் இரு அணிகளுக்கு இடையிலான நேரடி தொடர் அரசியல் மற்றும் பாதுகாப்பு ரீதியான காரணங்களால் நடைபெறுவதில்லை. ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் விளையாடி வருகிறது.
பாகிஸ்தான் வந்து விளையாடுமாறு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஆகியோர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட பாகிஸ்தானுக்கு இந்தியா வந்தால் சிறப்பான, அன்பான வரவேற்பு கிடைக்கும் என பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ரிஸ்வான் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இங்குள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்களை நேசிக்கிறார்கள். மேலும், இந்திய அணி பாகிஸ்தான் நாட்டில் விளையாடுவதை பார்த்து அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட பாகிஸ்தானுக்கு இந்தியா வந்தால் சிறப்பான, அன்பான வரவேற்பு கிடைக்கும்.
முகமது ரிஸ்வான் கூறினார்.
- பேட்டிங் தரவரிசையில் ஜெய்ஸ்வால் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
- ரச்சின் ரவீந்திரா 8 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பிடித்துள்ளார்.
டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் டெஸ்ட் பந்து வீச்சாளர்களில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ரபாடா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் டெஸ்ட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் மிகவும் வேகமாக 300 விக்கெட்டுகளை எடுத்தவர் வீரர் என்ற சாதனையையும் ரபாடா படைத்தார்.
2018-ல் ரபாடா ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்திருந்தார். பின்னர் பின்னடைவை சந்தித்த ரபாடா மீண்டும் முதலிடம் பிடித்து மாஸ் காட்டியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சுழற்பந்து வீச்சில் அசத்திய பாகிஸ்தானின் நோமன் அலி டாப் 10-க்குள் நுழைந்துள்ளார்.
3-வது மற்றும் 4-வது இடங்கள் முறையே பும்ரா, அஸ்வின் உள்ளனர்.மிட்செல் சான்ட்னர் 30 இடங்கள் முன்னேறி 44-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்பாக சான்ட்னர் 2017-ம் ஆண்டு 39-வது இடத்தில் இருந்ததே அவரது உச்சபட்ச தரவரிசையாகும்.
பேட்டிங் தரவரிசையில் ஜெய்ஸ்வால் ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். பாகிஸ்தான் வீரர் சவுத் ஷகீல் 20 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்தை சேர்ந்த ரச்சின் ரவீந்திரா 8 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.






