என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் நேரடியாக 2வது சுற்று ஆட்டத்துக்கு தகுதிபெற்றார்.

    இன்று நடந்த 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷியாவின் அனஸ்தசியா பொடபோவா உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய இகா ஸ்வியாடெக் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 11-ம் தேதி நடைபெறும் அடுத்த சுற்றில் இகா ஸ்வியாடெக், உக்ரைன் வீராங்கனை மார்ட்டா கோஸ்டியூக் உடன் மோதுகிறார்.

    • இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முகமது சிராஜ் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
    • முகமது சிராஜை தற்போதைய இந்தியாவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று அவர் வர்ணித்துள்ளார்.

    இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் தொடர் சமனில் முடிந்தது. மேலும் இத்தொடரின் கடைசி போட்டியில் முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதையும், இந்தியாவின் சுப்மன் கில் மற்றும் இங்கிலாந்தின் ஹாரி புரூக் ஆகியோர் தொடர் நாயகன் விருதுகளையும் வென்றனர்.

    இந்த தொடரில் முகமது சிராஜ் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

    இந்நிலையில் இந்த தொடருக்கு பிறகு இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் வசிம் அக்ரம் பாராட்டியுள்ளார்.

    அதிலும் குறிப்பாக பும்ராவைத் தவிர்த்து, முகமது சிராஜை தற்போதைய இந்தியாவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று அவர் வர்ணித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கடைசி நாளில் நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். அது நம்ப முடியாத முயற்சி. 186 ஓவர்கள் பந்து வீசிய பிறகும், கடைசி நாளில் இவ்வளவு கோபத்தை வெளிப்படுத்துவது சிராஜின் உற்சாகம் மற்றும் ஆர்வத்தின் அறிகுறியாகும் என்று பாராட்டியுள்ளார்.

    பணிச்சுமை மேலாண்மை காரணமாக இறுதித் தேர்வில் பும்ரா பங்கேற்கவில்லை என்று பல இடங்களில் விமர்சிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய சிராஜ்-க்கு விராட் கோலி பாராட்டுகளை தெரிவித்தார்.
    • முகமது சிராஜ்-க்கு எப்போதுமே விராட் கோலி மூத்த சகோதரர் போன்றவர்.

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்று முடிந்த ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 5 போட்டிகளிலும் ஓய்வின்றி விளையாடியது மட்டுமின்றி இந்த தொடர் முழுவதுமே 185 ஓவர்களை வீசி 23 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் நல்ல நிலைக்கு காரணமாக திகழ்ந்தார்.

    இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய சிராஜ்-க்கு விராட் கோலி பாராட்டுகளை தெரிவித்தார். சிராஜ்- விராட் கோலி சகோதர்கள் போன்று பழகி வருகிறார்கள்.

    கடந்து 2018-ம் ஆண்டு சிராஜுக்கு மோசமான ஐபிஎல் தொடராக இருந்தது. அதன்பிறகு சிராஜின் திறனை கவனித்த விராட் கோலி அவரை ஆதரித்து ஆர்.சி.பி அணியில் வாய்ப்பு வழங்கியதோடு இந்திய அணிக்கும் கொண்டு வந்தார்.

    எனவே முகமது சிராஜ்-க்கு எப்போதுமே விராட் கோலி மூத்த சகோதரர் போன்றவர். அவரிடம் இருந்து பெற்ற ஆலோசனைகளை தான் சிராஜ் கையாள்கிறார். விராட் கோலியிடம் இருந்து அவர் கோபம் மற்றும் வெற்றிக்கான வெறி ஆகியவற்றை மற்றும் கற்றுக் கொள்ளவில்லை. உடற்தகுதியில் எவ்வாறு இருக்க வேண்டும்? என்பது குறித்த பிட்னஸ் ஆலோசனைகளையும் விராட் கோலியிடம் இருந்து தான் பெற்றுக்கொண்டார்.

    இந்நிலையில் விராட் கோலி கையொப்பமிட்ட அவரது ஜெர்சியை சிராஜ் தனது வீட்டின் சுவற்றில் பிரேம் செய்து மாட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    இந்த ஜெர்சி 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியின் போது சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலியின் கடைசி டெஸ்ட் போட்டியை நினைவுகூரும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரிஷப் பண்ட் 4-வது டெஸ்ட் போட்டியில் போது காயத்துடன் விளையாடினார்.
    • கிறிஸ் வோக்ஸ் 5-வது டெஸ்ட் போட்டியில் காயத்துடன் விளையாடினார்.

    இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் (2-2) கணக்கில் சமநிலை அடைந்தது.

    இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த பல்வேறு வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டனர். அதிலும் குறிப்பாக ரிஷப் பண்டுக்கு 4-வது டெஸ்ட் போட்டியின் போது கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவரால் 5-வது போட்டியில் விளையாட முடியாமல் போனது.

    அதேபோன்று இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான கிரிஸ் வோக்ஸ்சும் இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் போது தோள்பட்டை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டார். இதில் ரிஷப் பண்ட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் அணிக்கு தேவையான நிலையில் உடைந்த காலோடும், உடைந்த கையோடும் களத்திற்கு வந்து விளையாடியது பாராட்டுக்களை பெற்றிருந்தது.

    இந்நிலையில் ரிஷப் பண்ட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோரை தவிர்த்து மேலும் ஒரு இந்திய வீரர் விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவோடு விளையாடியது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியின் போது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கருண் நாயருக்கு விரலில் சிறியளவு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததாகவும் ஆனால் அணியின் சூழலை கணக்கில் கொண்டு அவர் அந்த எலும்பு முறிவுடனே பேட்டிங் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.


    கடந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் வாய்ப்பினை பெற்ற அவர் இந்த தொடரில் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியிருந்த வேளையில் இப்படி அவர் அர்ப்பணிப்புடன் விளையாடியது தெரிய வந்துள்ளது. அவருக்கு ஏற்பட்ட காயம் குணமடைய சில வாரங்கள் ஆகும் என்பதனால் எதிர்வரும் துலீப் டிராபி தொடரை அவர் தவறவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    • பசவரெட்டி 2-வது சுற்றில் ஸ்வெரெவ் உடன் மோத உள்ளார்.
    • கமிலா ஒசோரியோ (கொலம்பியா) 7-5, 1-6, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீரரான நிஷேஷ் பசவரெட்டி, ஆஸ்திரேலியாவின் அலெக்சாண்டர் வுகிக் உடன் மோதினார்.

    இதில் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட பசவரெட்டி 7-6 மற்றும் 7-5 என்ற நெர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இவர் 2-வது சுற்றில் ஸ்வெரெவ் உடன் மோத உள்ளார்.

    மற்ற ஆட்டங்களில் டாமிர் டூம்ஹூர் (போஸ்னியா), வாலண்டைன் ராயர் (பிரெஞ்சு), லெர்னர் டியென் (அமெரிக்கா) ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் கிரேக்க வீராங்கனையான மரியா சக்காரி மற்றும் ரஷ்யா வீராங்கனை கமிலா ரகிமோவா மோதினர். இந்த ஆட்டத்தில் சக்காரி 6-3, 3-6, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் கமிலா ஒசோரியோ (கொலம்பியா) 7-5, 1-6, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

    • அர்ஜென்டினா கால்பந்து அணி கேரளாவுக்கு வருகை தருவதாக இருந்தது.
    • ஒப்பந்தத்தை கேரள அரசு மீறியதாக அந்த அணி தெரிவித்து, வருகையை ரத்து செய்துள்ளது.

    மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி இந்த ஆண்டு அக்டோபர்- நவம்பர் மாதத்தில் கேரளா வருகை தந்து விளையாட இருந்தது. ஆனால், ஒப்பந்தத்தை கேரள அரசு மீறியதாக குற்றம்சாட்டிய அர்ஜென்டினா கால்பந்து சங்கம், வருகையை ரத்து செய்துள்ளது.

    இந்த நிலையில் இது தொடர்பாக இடது சாரி கட்சி விளக்கம் அளிக்க வேண்டும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    இது தொடர்பாக கேரள மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துரஹிமான் கூறுகையில் "கேரள மாநில அரசு இந்த வருடத்தில் அர்ஜென்டினா அணி கேரளா வருவதை மட்டுமே ஆர்வம் காட்டுகிறது. ஸ்பான்சர்களுக்கும், அணிக்கும் இடையில்தான் ஒப்பந்தம் கையெழுத்தானது. அரசு இதில் ஒரு பகுதியாக இருக்கவில்லை.

    அக்டோபர்- நவம்பரில் கேரளாவில் விளையாட பணம் கொடுத்துள்ளோம். இது நடைபெறவில்லை என்றால் குட்பை சொல்ல வேண்டியதுதான். மற்றபடி என்ன செய்ய முடியும்?. இந்த வருடம் அவர்கள் விளையாடவில்லை, மற்றபடி எங்களுக்கு விருப்பம் இல்லை" என்றார்.

    முன்னதாக, கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோஷப், காங்கிரஸ் மக்களவை எம்.பி. ஷஃபி பரம்பில் ஆகியோர் "அர்ஜென்டினா அணி கேரள மாநில அரசு மீது குற்றம்சாட்டியதால், மாநில அரசு கட்டாயம் பதில் அளிக்க வேண்டம். லட்சக்கணக்கான பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. தற்போது, அர்ஜென்டினா அணி, இது தொடர்பாக விளக்கமாக தெரிவித்துவிட்டது. மாநில மக்களுக்கு உண்மை தெரிந்தாக வேண்டும்.

    அர்ஜென்டினா கால்பந்து அணியை கொண்டு வந்து மாநில அரசு ஆதாயம் தேட முயற்சித்தது. அவர்கள் மக்களை ஏமாற்றிவிட்டனர். மாநில அரசு ஒப்பந்த விதிமுறையை மீறி விட்டதாக அர்ஜென்டினா கால்பந்து சங்கம் தெரிவித்துவிட்டது" எனத் தெரிவித்தனர்.

    • 2-வது இன்னிங்சில் 28.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஜிம்பாப்வே 117 ரன்களில் ஆட்டமிழந்தது.
    • கான்வே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    புலவாயோ:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

    இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி புலவாயோவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 125 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி தொடக்க நாளில் ஒரு விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. டிவான் கான்வே 79 ரன்களுடனும், ஜேக்கப் டப்பி 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்த நிலையில் 2-வது நாளான நேற்று நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். கான்வே 153 ரன்னில் ஆட்டமிழந்தார். 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 130 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 601 ரன்கள் குவித்திருந்தது. ஹென்றி நிகோல்ஸ் 150 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 165 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து அணி 476 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது.

    இத்தகைய சூழலில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஆட்டம் தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன் நியூசிலாந்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அதன்படி நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 130 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 601 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது.

    பின்னர் 476 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணியின் பேட்ஸ்மேன்கள் வலுவான நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த அணியில் நிக் வெல்ச் (47 ரன்கள்) மற்றும் கிரெக் எர்வின் (17 ரன்கள்) தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    2-வது இன்னிங்சில் 28.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஜிம்பாப்வே 117 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன் மூலம் 3-வது நாளிலேயே முடிவுக்கு வந்த இந்த போட்டியில் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றி ஜிம்பாப்பே அணியை ஓயிட்வாஷ் ஆக்கியது.

    நியூசிலாந்து தரப்பில் சக்காரி பவுல்க்ஸ் 5 விக்கெட்டுகளும், மேட் ஹென்றி மற்றும் டப்பி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். கான்வே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

    • 80,000 இருக்கைகளுடன் புதிய கிரிக்கெட் மைதானம் அமைகிறது.
    • இது இந்தியாவின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானமாக இருக்கும்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட விழாவில் பங்கேற்க லட்சணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் ரசிகர்கள் திரண்டதால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியா நிலை ஏற்பட்டது. இதனால் சின்னசாமி கிரிக்கெட் மைதான நுழைவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. லட்சணக்கான ரசிகர்கள் திரண்டுள்ள நிலையில் சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததுதான் இந்த விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

    இதனிடையே, பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை நகரின் மையப்பகுதியில் இருந்து அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற பரிசீலனை செய்து வருவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.

    இந்நிலையில், பெங்களூருவின் பொம்மசந்திரா பகுதியில் புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டத்திற்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    சூர்யா சிட்டியில் ரூ.1,650 கோடி செலவில் உருவாக்கப்பட உள்ள பிரமாண்ட விளையாட்டு வளாகத்தின் ஒரு பகுதியாக 80,000 இருக்கைகளுடன் கிரிக்கெட் மைதானம் அமைகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    • செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 10 வரை பிரிஸ்பேன் மற்றும் மெக்கே ஆகிய இடங்களில் போட்டிகள் நடத்தப்படும்.
    • இளம் வீரர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு 2026 உலகக் கோப்பைக்கான இறுதி அணி தேர்ந்தெடுக்கப்படும்

    இந்தியாவுக்கு எதிரான வரவிருக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான தொடருக்கான (U19series) அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

    15 பேர் கொண்ட அணியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு இளம் வீரர்கள் ஆர்யன் சர்மா மற்றும் யாஷ் தேஷ்முக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு நான்கு நாள் போட்டிகள் நடைபெறும்.

    செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 10 வரை பிரிஸ்பேன் மற்றும் மெக்கே ஆகிய இடங்களில் போட்டிகள் நடத்தப்படும்.

    இளம் வீரர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு 2026 உலகக் கோப்பைக்கான இறுதி அணி தேர்ந்தெடுக்கப்படும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா (CA) தெரிவித்துள்ளது.

    ஆஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்டோர் அணி:

    சைமன் பட்ஜ், அலெக்ஸ் டர்னர், ஸ்டீவ் ஹோகன், வில் மலாக்சுக், யாஷ் தேஷ்முக், டாம் ஹோகன், ஆர்யன் சர்மா, ஜான் ஜேம்ஸ், ஹேடன் ஷில்லர், சார்லஸ் லாச்மண்ட், பென் கார்டன், வில் பைரோம், கேசி பார்டன், அலெக்ஸ் லீ யங், ஜெய்டன் டிராப்பர்.

    • சீரான தொடக்கம் கிடைத்த போதிலும் கருண் நாயர் ஒரு அரை சதம் மட்டும் அடித்தார்.
    • இந்தத் தொடரில் சாய் சுதர்சனின் செயல்பாட்டுக்கு 5 மார்க் அளிக்கிறேன்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் தனது யூ டியூப் சேனலில் பேசியதாவது:

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முழுவதும் இந்திய பேட்ஸ்மேன் கருண் நாயர் மோசமாக செயல்பட்டதாக தெரியவில்லை. ஆனால் அவருக்கு தொடர்ந்து சீரான தொடக்கம் கிடைத்த போதிலும், ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ளார். அத்துடன் கிரிக்கெட் அவருக்கு 2-வது வாய்ப்பு கொடுத்துள்ளது. அதனை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

    குறிப்பாக, லண்டன் லார்ட்சில் நடந்த டெஸ்டில் போட்டியை வென்று தர அற்புதமான வாய்ப்பு கிட்டியது. இருப்பினும் அவரால் அதை செய்ய முடியவில்லை. நல்ல அடித்தளம் அமைத்து ஆடும்போது, திடீரென தவறான ஷாட்டை ஆடி ஆட்டமிழந்து விடுகிறார். ஓவலில் நடந்த கடைசி டெஸ்டில் பவுன்சர் பந்து அவருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. அது அவரை பதற்றம் அடைய செய்ததைப் பார்க்க முடிந்தது. அதனால் அவரது செயல்பாட்டுக்கு 10க்கு 4 மார்க் வழங்குகிறேன்.

    இந்தத் தொடரில் சாய் சுதர்சனின் செயல்பாட்டுக்கு 5 மார்க் அளிக்கிறேன். அவர் சில இடங்களில் ஏற்றம் காண வேண்டும் என்றாலும் திறமையான வீரராக தெரிகிறார். அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை இன்னும் சிறப்பாக பயன்படுத்தி இருக்கலாம். என்றாலும் அவர் அனைத்து டெஸ்டிலும் விளையாடி இருந்தால், விஷயம் வேறுவிதமாக இருந்திருக்கும்.

    வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும், உங்களது அணி தோல்வியை தழுவும்போது, அணியில் இருந்து கழற்றிவிடப்படுவீர்கள். மீண்டும் அணிக்கு திரும்புவீர்கள் என அனைத்தும் நடக்கும். ஆனால் அதன் பிறகு ஆடும் லெவனில் இடம் கிடைப்பது கடினம். ஆனால் ஒரு வீரராக தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தால், நம்மால் நிறைய சாதிக்க முடியும் என அவர் நினைப்–பார். எனக்கு எப்போதும் முன்வரிசையில் களம் இறங்கும் இடதுகை பேட்ஸ்மேன்களைப் பிடிக்கும். சிறப்பாக பேட்டிங் செய்வதற்கான திறன் சுதர்சனிடம் இருக்கிறது. அதனால் தான் அவருக்கு 5 மார்க் கொடுத்தேன் என தெரிவித்தார்.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது.
    • இதில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், ஸ்பெயினின் ஜெசிகா மனெய்ரோ உடன் மோதினார்.

    இதில் வீனஸ் வில்லியம்ஸ் 4-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து, தொடரில் முதல் சுற்றோடு வெளியேறினார்.

    • தி ஹண்ட்ரட் தொடரில் ரஷித் கான் இந்த சாதனையை படைத்தார்.
    • லண்டன் அணிக்கு எதிரான போட்டியில் ரஷித் கான் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    லண்டன்:

    தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதலாவது ஆட்டத்தில் லண்டன் ஸ்பிரிட் - ஓவல் இன்விசிபில் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த லண்டன் ஸ்பிரிட் 18.4 ஓவரில் 80 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக டர்னர் 21 ரன்கள் அடித்தார்.

    ஓவல் சார்பில் ரஷித் கான், சாம் கர்ரன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்நிலையில், இந்த 3 விக்கெட்டுகளையும் சேர்த்து டி20 கிரிக்கெட்டில் ரஷித் கான் கைப்பற்றிய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 651 ஆக உயர்ந்தது.

    இதன்மூலம் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் 650 விக்கெட்டுகளைக் கடந்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ரஷித் கான் படைத்துள்ளார். இவர் 478 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்துள்ளார்.

    அதன்பின், இலக்கை நோக்கி ஆடிய ஓவல் அணி 13.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 81 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    ×