search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டிகுவா டெஸ்ட்: இங்கிலாந்து 132 ரன்னில் சுருண்டு படுதோல்வி: தொடரையும் இழந்து பரிதாபம்
    X

    ஆண்டிகுவா டெஸ்ட்: இங்கிலாந்து 132 ரன்னில் சுருண்டு படுதோல்வி: தொடரையும் இழந்து பரிதாபம்

    ஆண்டிகுவா டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 132 ரன்னில் சுருண்டு படுதோல்வியடைந்த இங்கிலாந்து, தொடரையும் 0-2 என இழந்து பரிதாபத்திற்குள்ளானது. #WIvENG
    ஆண்டிகுவா:

    வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மோதிய 2-வது டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நடந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 187 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 272 ரன் எடுத்து இருந்தது.

    நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 306 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. பிராவோ 50 ரன்னும், பிராத்வைட் 49 ரன்னும் எடுத்தனர். ஸ்டூவர்ட் பிராட், மொயீன் அலி தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.


    அவுட்டான விரக்தியில் பென் ஸ்டோக்ஸ்


    119 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை விளையாடியது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் அபாரமான பந்து வீச்சில் அந்த அணி 132 ரன்னில் சுருண்டது. பட்லர் அதிகபட்சமாக 24 ரன் எடுத்தார். ஹோல்டர், கேமர் ரோச் தலா 4 விக்கெட்டும், ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.


    பேர்ஸ்டோவ் க்ளீன் போல்டாகிய காட்சி

    13 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருந்ததால், வெஸ்ட் இண்டீஸ்க்கு 14 ரன் இலக்காக இருந்தது. 14 ரன் இலக்கை வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் இழப்பின்றி 2.1 ஓவர்களில் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மூன்று நாட்களிலேயே இந்த டெஸ்ட் முடிவிற்கு வந்தது.


    கேமர் ரோச்

    இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது. முதல் டெஸ்டில் அந்த அணி 381 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது.


    ஜோசப்பை பாராட்டும் சக வீரர்கள்

    இரண்டு இன்னிங்சில் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய கேமர் ரோச் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
    Next Story
    ×