search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் - காயத்தால் பாதியிலேயே ரபேல் நடால் விலகல்
    X

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் - காயத்தால் பாதியிலேயே ரபேல் நடால் விலகல்

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் காயம் காரணமாக நடப்பு சாம்பியன் ரபேல் நடால் பாதியிலேயே விலகியுள்ளார். #USOpen2018 #RafaelNadal
    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ரபேல் நடால் (ஸ்பெயின்) அரை இறுதியில் 3-ம் நிலை வீரரும், 2009-ம் ஆண்டு சாம்பியனுமான டெல்போட்ரோவை எதிர் கொண்டார்.

    முதல் செட்டில், நடால் மற்றும் டெல்போட்ரோ இடையே கடுமையான போட்டி நிலவியது, எனினும் 6-7 எனும் கணக்கில் நடால் போராடி இழந்தார்.

    இரண்டாவது செட்டின் பாதியில் திடீரென நடாலின் வலது காலில் தசைபிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக வலியால் அவதிப்பட்ட அவர், போட்டியை நிறுத்தி முதலுதவிக்காக பயிற்சியாளரை அழைத்தார். மைதானத்திலேயே பயிற்சியாளர் அவரது தசையில் டேப் சுற்றி இறுகிய தசைநாரை சரிப்படுத்த ஸ்ப்ரே அடித்து மசாஜ் செய்தார். 

    பின்னர் சில நிமிட இடைவேளைக்கு பிறகு இயல்பு நிலை திரும்பியதாக உணர்ந்த நடால், இரண்டாவது செட்டை தொடர்ந்தார். ஆனால் அபாரமாக விளையாடிய டெல்போட்ரோ 2-6 எனும் கணக்கில் எளிதில் கைப்பற்றி முன்னிலை பெற்றார்.



    மூன்றாவது செட் தொடக்கத்திலேயே நடால் வலது காலில் மீண்டும் வலி ஏற்பட்டதால், போட்டியில் இருந்து விலகுவதாக நடுவரிடம் கூறினார். இதனால், டெல் போட்ரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அவர் இறுதிக்கு தகுதிபெற்றார். 

    நடப்பு சாம்பியனான நடால் போட்டியில் இருந்து விலகுவதாக கூறிய அந்த நிமிடம் ஆட்டம் நடைபெற்ற ஆர்த்தர் ஆஷே மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் அனைவரிடமும் மயான அமைதி நிலவியது. 

    ஏற்கெனவே கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிஸ் தொடரின் காலிறுதியின் போதும் காயம் காரணமாக நடால் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. #USOpen2018 #RafaelNadal
    Next Story
    ×