search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  பயிற்சியின் போது இஷாந்த் ஷர்மா வீசிய பந்தை விளாசுகிறார், ஷிகர் தவான்
  X
  பயிற்சியின் போது இஷாந்த் ஷர்மா வீசிய பந்தை விளாசுகிறார், ஷிகர் தவான்

  இந்தியா-தென்ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

  இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுன் நியூலேண்ட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. INDvSA
  கேப்டவுன்:

  விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

  இதன்படி இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

  உள்நாட்டில் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து ‘நம்பர் ஒன்’ அணியாக வலம் வரும் இந்தியா, உண்மையான சோதனை களத்தை இனி தான் பார்க்கப்போகிறது. இதற்கு முன்பு 6 முறை தென்ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் கால்பதித்து இருக்கும் இந்திய அணி ஒரு முறை கூட தொடரை கைப்பற்றியது கிடையாது. ஆனால் இந்த முறை விராட் கோலியின் படை அந்த நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் கடினமான இந்த தொடருக்கு என்று இந்திய அணிக்கு எந்த வித சிறப்பு முகாமும் நடத்தப்படவில்லை. பயிற்சி ஆட்டம் கூட ரத்து செய்யப்பட்டது. இதற்கு பதிலாக கூடுதலாக பயிற்சி எடுத்துக்கொள்வதில கவனம் செலுத்திய இந்திய அணியினர் சவால்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்ற ஆவல் எல்லோரிடமும் காணப்படுகிறது.

  பொதுவாக தென்ஆப்பிரிக்காவில் உள்ள புல்தரை ஆடுகளங்களில் (பிட்ச்), பந்து அதிவேகத்தில் எகிறும். உயிரோட்டமான இத்தகைய ஆடுகளத்தில் பந்தின் நகரும் தன்மைக்கு (ஸ்விங்) ஏற்ப கணித்து செயல்பட வேண்டும். நெஞ்சு அளவுக்கு எழும்பி வரும் பந்துகளையோ அல்லது ஆப்-சைடுக்கு சற்று வெளியே பவுன்ஸ் ஆகும் பந்துகளையோ சரியாக எதிர்கொள்ள தவறினால் அது பேட்டின் விளிம்பில் பட்டு ‘ஸ்லிப்’ பகுதியில் நிற்கும் பீல்டர்களின் கைக்கு சென்று விடும். ஸ்டம்பை விட்டு விலகும் பந்துகளை தொடாமல் விடுவது நல்லது. இது போன்ற விஷயங்களில் வீரர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

  சச்சின் தெண்டுல்கர் கூறியது போன்று புதிய பந்தை இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்தே ஆட்டத்தின் போக்கு அமையும்.

  காயத்தில் இருந்து மீண்ட ஷிகர் தவான் அல்லது லோகேஷ் ராகுல் ஆகியோரில் ஒருவர் முரளிவிஜயுடன் கைகோர்த்து தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்குவர். இந்த ஜோடி மீது தான் முழு சுமையும் விழுந்திருக்கிறது. இவர்கள் புதிய பந்தை திறம்பட எதிர்கொண்டு விட்டால் நல்ல ஸ்கோரை எட்ட வழிவகுக்கும். மிடில் வரிசையில் கேப்டன் விராட் கோலி, புஜாரா, ரஹானே, விருத்திமான் சஹா, ரோகித் சர்மா ஆகியோர் கைகொடுக்க வேண்டும். துணை கேப்டன் ரஹானே இலங்கை தொடரில் சொதப்பினாலும் வெளிநாட்டில் நிறைய ரன்கள் குவித்து இருப்பதால் அவருக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும்.

  வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ், புவனேஷ்வர்குமார், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா ஆகியோர் தங்களது முழு திறமையை வெளிக்காட்ட இந்த ஆடுகளம் அருமையான வாய்ப்பாகும். சூழலை கச்சிதமாக பயன்படுத்தினால், தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு பலமான குடைச்சல் கொடுக்க முடியும். 2013-14-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்கா சென்ற இந்திய வீரர்களில் 13 பேர் இப்போதும் அணியில் இடம் பிடித்திருப்பது நமக்கு சாதகமான அம்சமாகும்.

  பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வலுவாக உள்ளது. அதிரடி மன்னன் டிவில்லியர்ஸ் அணிக்கு திரும்பியிருப்பது பேட்டிங் வரிசைக்கு மேலும் வலு சேர்க்கும். அம்லா, பிளிஸ்சிஸ், டீன் எல்கர், டி காக், மார்க்ராம் உள்ளிட்ட பேட்ஸ்மேன்களும் பார்மில் உள்ளனர்.

  பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டெயின், வெரோன் பிலாண்டர், மோர்னே மோர்கல், ரபடா ஆகியோர் மிரட்ட காத்திருக்கிறார்கள். அதிலும் பிலாண்டர் இங்குள்ள ஆடுகளத்தில் அபாயகரமான பவுலராக திகழக்கூடியவர். எங்களது பந்து வீச்சை இந்தியா தாக்குப்பிடிக்குமா? என்று மறைமுகமாக அவர் கிண்டல் செய்துள்ளார். ஓராண்டாக டெஸ்ட் போட்டியில் விளையாடாத ஸ்டெயினுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைப்பது சந்தேகம் தான்.

  கேப்டவுன் ஆடுகளத்தை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்கும். முதல் நாள் மற்றும் 4-வது நாளில் மேகமூட்டமான சீதோஷ்ண நிலையுடன், காற்றின் தாக்கமும் இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

  போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

  இந்தியா: முரளிவிஜய், ஷிகர் தவான் அல்லது லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, விருத்திமான் சஹா, ரோகித் சர்மா அல்லது ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், புவனேஷ்வர்குமார், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா.

  தென்ஆப்பிரிக்கா: டீன் எல்கர், எய்டன் மார்க்ராம், அம்லா, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), டிவில்லியர்ஸ் அல்லது டெம்பா பவுமா, குயின்டான் டி காக், பெலக்வாயோ அல்லது கிறிஸ் மோரிஸ், கேஷவ் மகராஜ், வெரோன் பிலாண்டர், ரபடா, மோர்னே மோர்கல் அல்லது ஸ்டெயின்.

  இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி டென்1, சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. 
  Next Story
  ×