search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தா அணியின் தோல்விக்கு மோசமான பேட்டிங் காரணம்: கம்பீர் கருத்து
    X

    கொல்கத்தா அணியின் தோல்விக்கு மோசமான பேட்டிங் காரணம்: கம்பீர் கருத்து

    மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு மோசமான பேட்டிங் காரணம் என்று கொல்கத்தா அணி கேப்டன் கம்பீர் தெரிவித்தார்.
    கொல்கத்தா :

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 54-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்தது.

    முதலில் ஆடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 63 ரன்னும், தொடக்க ஆட்டக்காரர் சவுரப் திவாரி 52 ரன்னும் எடுத்தனர். கொல்கத்தா அணி தரப்பில் டிரென்ட் பவுல்ட் 2 விக்கெட்டும், குல்தீப் யாதவ், அங்கித் ராஜ்பூத் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. மனிஷ் பாண்டே 33 ரன்னும், கிரான்ட்ஹோம் 29 ரன்னும், கிறிஸ் லின் 26 ரன்னும் எடுத்தனர். மும்பை அணி தரப்பில் டிம் சவுதி, வினய்குமார், ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டும், ஜான்சன், கரண்ஷர்மா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 10-வது வெற்றியை பெற்ற மும்பை அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. 6 வீரர்களை மாற்றம் செய்தும் மும்பை அணி வெற்றியை தனதாக்கியது.

    6-வது தோல்வியை சந்தித்த கொல்கத்தா அணி அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்தது. மும்பை அணி வீரர் அம்பத்தி ராயுடு ஆட்டநாயகன் விருது பெற்றார். 2012-ம் ஆண்டில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சேசிங் செய்கையில் தோல்வி கண்ட கொல்கத்தா அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 12 ஆட்டங்களில் வெற்றிகரமாக சேசிங் செய்து இருந்தது. அதன் பிறகு கொல்கத்தா அணி ஈடன் கார்டன் மைதானத்தில் சேசிங் செய்கையில் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.



    வெற்றிக்கு பிறகு மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில், ‘உயர்வான நிலையுடன் லீக் ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்று பேசி வந்தோம். அதன்படி நல்ல நிலையுடன் லீக் ஆட்டத்தை நிறைவு செய்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சில ஆட்டங்களில் வெளியில் இருந்தாலும், இந்த ஆட்டத்தில் களம் கண்ட வீரர்கள் தாங்கள் ஆட்டத்தை வெல்லக்கூடிய வீரர்கள் என்று நிரூபித்து உள்ளனர்.

    நல்ல ஒரு ஆட்டத்துக்கு இது ஒரு முன்னுதாரணமாகும். முதல் 10 ஓவர்களில் கொல்கத்தா அணி அதிக ரன் எடுத்தாலும், நாங்கள் விக்கெட் வீழ்த்தியதால் எங்களுக்கு எந்தவித பயமும் ஏற்படவில்லை. பேட்ஸ்மேன்கள் மட்டுமின்றி பந்து வீச்சாளர்களும் திட்டமிட்டபடி செயல்பட்டது எங்களது வெற்றிக்கு காரணமாகும்’ என்று தெரிவித்தார்.

    தோல்வி குறித்து கொல்கத்தா அணி கேப்டன் கம்பீர் கருத்து தெரிவிக்கையில், ‘மும்பை அணியை 174 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது நம்ப முடியாத விஷயமாகும். இந்த ஆடுகளத்தில் 174 ரன்களை சேசிங் செய்வது என்பது எட்டக்கூடியது தான். ஒரு பேட்ஸ்மேனாவது கடைசி வரை நிலைத்து நின்று இருந்தால் சேசிங் செய்து இருக்கலாம்.

    பொறுப்பற்ற முறையில் பேட்ஸ்மேன்கள் ஆடி விக்கெட்டை பறிகொடுத்ததே தோல்விக்கு காரணமாகும். நாங்கள் இலக்கை சேசிங் செய்ய முயற்சி செய்தோம். ஆனால் விக்கெட்டுகளை இழந்ததால் முடியாமல் போய் விட்டது. எங்கள் அணியின் பேட்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்’ என்றார்.
    Next Story
    ×