search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க ஓபன்: செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி - இறுதிப் போட்டியில் கெர்பர்-கரோலினா
    X

    அமெரிக்க ஓபன்: செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி - இறுதிப் போட்டியில் கெர்பர்-கரோலினா

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்கள் அரையிறுதி போட்டியில் செரீனா வில்லியம்ஸ்-கரோலினா பிலிஸ்கோவா மோதினார்கள். இதில் கரோலினா 6-2, 7-6, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று செரீனாவுக்கு அதிர்ச்சி அளித்தார்.
    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை பெண்கள் அரை இறுதி ஆட்டம் நடைபெற்றன. முதலில் நடந்த அரை இறுதியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)- பத்தாவது வரிசையில் இருக்கும் கரோலினா பிலிஸ்கோவா (செக்குடியரசு) மோதினார்கள்.

    இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சிகரமாக தோற்றார். கரோலினா பிலிஸ்கோவா 6-2, 7-6 (7-5) என்ற நேர் செட் கணக்கில் செரீனாவை எளிதில் வீழ்த்தி முதல் முறையாக கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு ஒரு மணி 26 நிமிட நேரம் தேவைப்பட்டது.

    முதல் செட்டில் கரோலினாவின் அதிரடி ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் செரீனா திணறினார். 2-வது செட்டில் சமாளித்து திறமையை வெளிப்படுத்தினார். இதனால் 6-6 என்ற சமநிலை ஏற்பட்டது.

    ஆனால் டை பிரேக்கரில் அவர் வீழ்ந்தார். 6 முறை அமெரிக்க ஓபன் சாம்பியனான செரீனா கடந்த முறையை போலவே தற்போதும் அரை இறுதியிலேயே வெளியேறினார்.

    மற்றொரு அரை இறுதியில் இரண்டாம்நிலை வீராங்கனையான கெர்பர் (ஜெர்மனி)- முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான கரோலினா வோஸ்னியாக்கி (டென்மார்க்) மோதினார்கள்.

    இதில் கெர்பர் 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். அவர் முதல் முறையாக அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் கெர்பர் (ஜெர்மனி)- கரோலினா பிலிஸ்கோவா (செக்குடியரசு) மோதுகிறார்கள்.

    ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் இன்று நள்ளிரவு நடக்கிறது. ஒரு அரை இறுதியில் உலகின் முதல்நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) - பத்தாம் வரிசையில் இருக்கும் மான்பில்ஸ் (பிரான்ஸ்) மோதுகிறார்கள். அதை தொடர்ந்து நடைபெறும் 2-வது அரை இறுதியில் 3-ம் நிலை வீரரான வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) - ஆறாம் நிலை வீரரான நிஷிகோரி (ஜப்பான்) மோதுகிறார்கள்.
    Next Story
    ×