என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- காரைக்குடி காளை இன்று மோதல்
Byமாலை மலர்27 Aug 2016 11:50 PM GMT (Updated: 27 Aug 2016 11:50 PM GMT)
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- காரைக்குடி காளை அணிகள் இன்று பலப்பரீட்சையில் இறங்குகின்றன.
திண்டுக்கல்:
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- காரைக்குடி காளை அணிகள் இன்று பலப்பரீட்சையில் இறங்குகின்றன.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில், திண்டுக்கல் நத்தத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறும் 5-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசும், காரைக்குடி காளையும் மோதுகின்றன.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் 45 ரன்கள் வித்தியாசத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்சிடம் தோல்வியை தழுவியது. இதே போல் காரைக்குடி காளை அணி, திருவள்ளூர் வீரன்சிடம் சாய்ந்தது. இரு அணிகளும் தற்போது முதல் வெற்றியை பெறும் முனைப்புடன் வரிந்து கட்டுவதால் இந்த மோதலில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் அனேகமாக எந்த மாற்றமும் இருக்காது என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே முதல் ஆட்டத்தில் இடம் பெற்ற வீரர்கள் அப்படியே களம் இறங்குவார்கள். தொடக்க ஆட்டத்தில் சேப்பாக் அணியில் தலைவன் சற்குணம் (29 ரன்) தவிர மற்றவர்களின் ஆட்டம் எடுபடவில்லை. கேப்டன் ஆர்.சதீஷ் பந்து வீச்சில் சிக்கனத்தை காட்டினார். ஆனால் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. முந்தைய ஆட்டத்தில் செய்த தவறுகளை களைந்து, பரிகாரம் தேடும் வகையில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நத்தம் மைதானத்தை பார்வையிட்ட பிறகு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் ஆர்.சதீஷ் கூறுகையில், ‘தொடக்க ஆட்டத்தில் கிடைத்த தோல்வியை பின்னடைவாக கருதவில்லை. எங்களிடம் தரமான வீரர்கள் உள்ளனர். எனவே, அடுத்தடுத்த ஆட்டங்களில் வெற்றி பெறுவோம் என நம்புகிறேன். நத்தம் ஆடுகளம் மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. இங்கு நிலவும் சூழல் ஆட்டத்துக்கு உகந்ததாக இருக்கும்.
இந்த மைதானத்தில் ஆட மிகவும் ஆவலுடன் இருக்கிறோம். இதற்கு முன்பு இங்கு ஆடிய அணிகள் கணிசமான ரன்களை குவித்துள்ளன. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்காக பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி கடுமையாக போராடுவோம்’ என்றார்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பயிற்சியாளர் ஹேமங் பதானி கூறுகையில், ‘முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால், எல்லாம் முடிந்துவிட்டதாக கருதிவிட முடியாது. இது நீண்ட தொடர். இன்னும் 6 ஆட்டங்கள் உள்ளன. கடந்த ஆட்டத்தில் மிடில் ஓவர்களில் ஒரு ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இது போன்ற தவறுகள் இனி நடக்காமல் பார்த்துக்கொள்வோம். சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தை விட நத்தம் மைதானம் சிறந்ததாக இருக்கிறது. இங்கு கடந்த ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுக்கப்பட்டு உள்ளன. இது, பேட்டிங்குக்கு சாதகமான மைதானமாக இருக்கும் என்று கருதுகிறேன்’ என்றார்.
பத்ரிநாத் தலைமையிலான காரைக்குடி அணி, தனது தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெறும் நிலையிலேயே இருந்தது. ஆனால் திருவள்ளூர் வீரன்ஸ் கேப்டன் பாபா அபராஜித் தனி வீரராக நிலைத்து நின்று சதம் விளாசி (118 ரன்) அவர்களிடம் இருந்து வெற்றிக்கனியை பறித்து விட்டார். என்றாலும் காரைக்குடி காளை அணியினரின் நம்பிக்கை குறையவில்லை. சேப்பாக் அணிக்கு பலமான சவால் அளிக்க ஆயத்தமாகி வருகிறார்கள்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கோபிநாத், யோமகேஷ், தலைவன் சற்குணம், வசந்த் சரவணன், சசிதேவ், ஆர்.சதீஷ் (கேப்டன்), ராகுல், அந்தோணி தாஸ், வாசுதேவன், சாய் கிஷோர், குமரன்.
காரைக்குடி காளை: அனிருதா, விஜய்குமார், ஸ்ரீனிவாசன், பத்ரிநாத் (கேப்டன்), ராஜ்குமார், கணபதி, சுஜய், கிரண் ஆகாஷ், சுரேஷ்பாபு, லோகேஷ்வர், மோகன் பிரசாத்.
பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, எச்.டி., விஜய் சூப்பர் ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X