என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • 3 தங்க பதக்கத்துடன் இந்தியா 3ஆவது இடம் பிடித்துள்ளது.
    • சீனா 12 தங்கத்துடன் முதல் இடத்தை பிடித்தது.

    எகிப்து நாட்டின் கெய்ரோவில் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் குர்ப்ரீத் சிங் ஆண்களுக்கான 25மீ சென்டர் பையர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார். உக்ரைன் வீரர் தங்கமும், பிரான்ஸ் வீரர் வெண்கல பதக்கமும் வென்றனர்.

    ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் இந்தியா 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியா 3 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலத்துடன் 13 பதக்கங்களை வென்றது.

    சீனா 12 தங்கம், 7 வெள்ளி, 2 வெண்கல பதக்கம் வென்றது. தென்கொரியா 7 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கல பதக்கம் வென்றது.

    சம்ரத் ராணா (10மீ ஏர் பிஸ்டல்), ரவீந்தர் சிங் (50மீ ஸ்டேண்டர்டு பிஸ்டல் மற்றும் 10 மீ ஏர் பிஸ்டல் அணி) ஆகியோர் தங்கம் வென்றனர்.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி அடைந்தனர்.
    • முதல் டெஸ்ட் போட்டியின் போது சுப்மன் கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது.

    தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் தொடர் கடந்த 14-ந் தேதி நடைபெற்றது. இதில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை வகிக்கிறது.

    இதனையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 22-ந் தேதி கவுதாத்தியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.

    முதல் டெஸ்ட் போட்டியின் போது சுப்மன் கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் காயம் காரணமாக அந்த போட்டியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது

    • யார் வெளியில் இருக்கிறார்கள் என்பது விசயம் இல்லை.
    • எங்களால் இன்னும் வெற்றிக்கான வழியை கண்டுபிடிக்க முடியும்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. காயம் காரணமாக தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா கடைசி நேரத்தில் அணியில் இருந்து விலகினார். என்றாலும் யான்சன் வேகப்பந்து வீச்சில் அசத்தினார். ரபாடாவுக்கு பதிலா களம் இறங்கிய போஸ்ச் 2ஆவது இன்னிங்சில் பவுமா உடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார். சுழற்பந்து வீச்சாளர் ஹார்மர் இரண்டு இன்னிங்சிலும் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்த தென்ஆப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்திய மண்ணில் 15 வருடங்களுக்கு மேல் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் யார் வெளியே இருக்கிறார்கள் என்பது முக்கியமான விசயம் அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரபாடா கூறியதாவது:-

    யார் வெளியில் இருக்கிறார்கள் என்பது விசயம் இல்லை. எங்களால் இன்னும் வெற்றிக்கான வழியை கண்டுபிடிக்க முடியும். கேப்டன் பவுமா எங்களுக்கு முக்கியமானவர். ஆனால், அவர் எல்லா போட்டிகளிலும் விளையாடுவதில்லை. நான் கொல்கத்தா போட்டியில் விளையாடவில்லை.

    பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் பவுமா விளையாடவில்லை. அதில் தென்ஆப்பிரிக்கா 1-1 என தொடரை சமன் செய்தது. யார் மைதானத்தில் இருந்து வெளியேறினால் அது பெரிய விசயம் அல்ல. உள்ளே உள்ள மற்ற வீரர்களால் பணியை சிறப்பாக செய்ய முடியும் என நாங்கள் நம்புகிறோம்.

    இவ்வாறு ரபாடா தெரிவித்தார்.

    • இங்கிலாந்தில் நன்றாக விளையாடியதால் அனைவரும் இந்திய அணியை பாராட்டினார்கள்.
    • இரு அணிகளும் பேட்டிங் செய்ய முடியாத அளவுக்கு ஆடுகளம் மோசமாக இருந்தது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் இந்திய அணி 93 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. இரு அணிகளும் பேட்டிங் செய்ய முடியாத அளவுக்கு ஆடுகளம் மோசமாக இருந்தது. 3 தினங்களில் போட்டி முடிவடைந்தது.

    இந்தநிலையில் ஆடுகளம் தொடர்பாக முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங் இந்திய அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    இதுபோன்ற ஆடுகளங்களால் டெஸ்ட் கிரிக்கெட் அழித்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஹர்பஜன்சிங் கூறியதாவது:-

    டெஸ்ட் கிரிக்கெட்டை முற்றிலுமாக அழித்து விட்டார்கள். டெஸ்டுக்கு எந்த மதிப்பும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. சமீபத்தில் இங்கிலாந்தில் நன்றாக விளையாடியதால் அனைவரும் இந்திய அணியை பாராட்டினார்கள்.

    அங்கே பிட்ச்கள் நன்றாக இருந்த காரணத்தாலேயே இந்தியா போராடி வென்றது. ஆனால் இங்கே பந்தை போட்டால் அது எங்கேயோ சுழன்று செல்லும் அளவுக்கு ஆடுகளம் தரமற்றதாக இருக்கிறது. அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது பேட்ஸ்மேன்களுக்கு எளிதாக தெரியவில்லை.

    இந்த நடைமுறை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இது தவறான விளையாட்டு முறை. இது போன்ற ஆடுகளங்கள் வீரர்களை முன்னேற அனுமதிக்காது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சங்ககாரா வழிநடத்தலில் ராஜஸ்தான் அணி கடந்த 4 சீசன்களில் 2 முறை பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது.
    • குமார் சங்ககாராவை தலைமை பயிற்சியாளராக ராஜஸ்தான் ராயல்ஸ் மீண்டும் நியமித்துள்ளது.

    இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககரா மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    2021 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் தனது பயணத்தை தொடங்கிய சங்ககரா வழிநடத்தலில் சஞ்சு சாம்சன் தலைமையிலான அணி கடந்த நான்கு சீசன்களில் இரண்டு முறை பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

    இருப்பினும் 2024 உலகக்கோப்பை வெற்றிக்கு இந்திய அணியை வழிநடத்திய பயிற்சயாளர் ராகுல் டிராவிட் கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளரானார்.

    ஆனால் சஞ்சு சாம்சனுடன் ஏற்பட்ட பகைமை வதந்திகளை தொடர்ந்து அண்மையில் ராகுல் டிராவிட் தனது பயிற்சியாளர் பதவியை துறந்தார்.

    இதனால் 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்த மீண்டும் குமார் சங்ககாராவையே தலைமை பயிற்சியாளராக ராஜஸ்தான் ராயல்ஸ் நியமித்துள்ளது.

    தலைமை பயிற்சியாளராக சங்ககாரா நியமிக்கப்பட்டதற்கு சிறப்பு AI வீடியோவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளியிட்டுள்ளது.

    ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் காரில் இருந்து இறங்கி மாஸாக நடந்து காட்சியை AI மூலமாக சங்ககாரா நடந்து வருவது போல எடிட் செய்துள்ளனர். ஹுகும் பாடலின் இந்தி வெர்சனை இந்த எடிட் வீடியோவிற்கு பயன்படுத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

    • 2021 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் தனது பயணத்தை சங்ககாரா தொடங்கினார்.
    • சங்ககாரா வழிநடத்தலில் ராஜஸ்தான் அணி கடந்த 4 சீசன்களில் 2 முறை பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககரா மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    2021 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் தனது பயணத்தை தொடங்கிய சங்ககாரா வழிநடத்தலில் சஞ்சு சாம்சன் தலைமையிலான அணி கடந்த நான்கு சீசன்களில் இரண்டு முறை பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

    இருப்பினும் 2024 உலகக்கோப்பை வெற்றிக்கு இந்திய அணியை வழிநடத்திய பயிற்சயாளர் ராகுல் டிராவிட் கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளரானார்.

    ஆனால் சஞ்சு சாம்சனுடன் ஏற்பட்ட பகைமை வதந்திகளை தொடர்ந்து அண்மையில் ராகுல் டிராவிட் தனது பயிற்சியாளர் பதவியை துறந்தார்.

    இதனால் 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்த மீண்டும் குமார் சங்ககாராவையே தலைமை பயிற்சியாளராக்க ராஜஸ்தான் ராயல்ஸ் நியமித்துள்ளது. .

    தற்போது குமார் சங்ககாரா ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்தில் கிரிக்கெட் இயக்குநராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும்.
    • ரோமில் நடந்த ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இத்தாலியை நார்வே தோற்கடித்தது.

    உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. இது 2022-ம் ஆண்டு போட்டியைவிட 16 அணிகள் கூடுதலாகும்.

    போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.

    ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான், ஆஸ்திரேலியா, பிரேசில், ஈக்வடார், உருகுவே, கொலம்பியா, பராகுவே, மொராக்கோ, துனி சியா, எகிப்து, அல்ஜீரியா, கானா மற்றும் குட்டி நாடான கேப்வெர்டே, இங்கிலாந்து, கத்தார், தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, ஐவேரி கோஸ்ட், செனகல், பிரான்ஸ் , குரோஷியா ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்று இருந்தன.

    நேற்று நடந்த போட்டி முடிவில் போர்ச்சுக்கல் தகுதி பெற்றது. இதைத் தொடர்ந்து 29-வது நாடாக ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நார்வே தகுதி பெற்றது.

    ரோமில் நடந்த ஆட்டத்தில் அந்த அணி 4-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் இத்தாலியை தோற்கடித்தது. நட்சத்திர வீரர் ஹாலண்ட் 2 கோலும் (77 மற்றும் 79-வது நிமிடம்), நுசா (63), லார்ஸ் லார்சன் (93) ஆகியோர் நார்வே அணிக்காகவும், எஸ்போசிஸ்டோ (11), இத்தாலி அணிக்காகவும் கோல் அடித்தனர்.

    குரூப் 1 தகுதி சுற்றில் நார்வே 8 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தது. அந்த அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை போட்டிக்கு முன்னேறியது. இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு பிரான்சில் நடந்த போட்டியில் தகுதி பெற்றது. ஒட்டு மொத்தத்தில் 4-வது முறையாக உலக கோப்பையில் ஆடுகிறது.

    3 நாடுகள் நேரடி தகுதி மற்றும் தகுதி சுற்றுக்கு செல்லும் 29 அணிகள் என இதுவரை 32 நாடுகள் உலக கோப்பையில் ஆடுவது தெரிய வந்துள்ளது. இன்னும் 16 அணிகள் தகுதி பெற வேண்டும்.

    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
    • RCB அணியின் மதிப்பு சுமார் ரூ.17,762 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    விஜய் மல்லையாவால் உருவாக்கப்பட்ட ஆர்.சி.பி. அணியை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டியாஜியோ நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் வாங்கியது. ஐ.பி.எல். தொடர் அறிமுகமான கடந்த 2008-ம் ஆண்டு முதல் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் ஏக்கமான கோப்பையை நடப்பு தொடரில் கைப்பற்றி அசத்தியது.

    இதனை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அணியின் மதிப்பு சுமார் $2பில்லியனாக (ரூ.17,762 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் அணியை விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கோவிஷீல்டு தடுப்பூசி தயாரித்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனமானமும் அதானி குழுமமும் ஆர்சிபி அணியை வாங்க ஆர்வமாக உள்ளது என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், கே.ஜி.எஃப் பாகம் 1 & 2, சலார், காந்தாரா போன்ற வெற்றி திரைப்படங்களை தயாரித்தது ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனமும் ஆர்சிபி அணியை வாங்க முன்வந்துள்ளது.

    அதாவது பிற நிறுவனங்களுடன் இணைந்து ஆர்சிபி அணியை வாங்கி இணை உரிமையாளராக மாற ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்து வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

    • முதல் இன்னிங்சில் கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக retd hurt ஆகி வெளியேறினார்.
    • சுப்மன் கில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 30 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வீழ்த்தியது. 15 வருடத்திற்குப் பிறகு இந்திய மண்ணில் தென்ஆப்பிரிக்கா இந்தியாவை வீழ்த்தியுள்ளது.

    இப்போட்டியின் முதல் இன்னிங்சில் 3 பந்துகள் விளையாடிய கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக retd hurt ஆகி வெளியேறினார். பின்னர் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால் சுப்மன் கில், முதல் டெஸ்டில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சுப்மன் கில் சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கொல்கத்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த சுப்மன் கில் வீடு திரும்பினாலும் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் விளையாடுவது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது. 

    • கடந்த போட்டியில் ரொனால்டோவுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.
    • அர்மேனியா வுக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ விளையாடவில்லை

    2026 கால்பந்து உலக கோப்பைக்கான தகுதி போட்டியில் ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி அர்மேனியா அணியை எதிர்கொண்டது.

    இப்போட்டியில் போர்ச்சுகல் அணியில் கேப்டன் ரொனால்டோ விளையாடவில்லை. ஏனெனில் கடந்த போட்டியில் ரெட் கார்டு வாங்கியதால் இந்த போட்டியில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    ரொனால்டோ இல்லாமல் களமிறங்கிய போர்ச்சுகல் அணி அர்மேனியாவை 9-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியால் போர்ச்சுகல் அணி உலக கோப்பையில் விளையாட தகுதி பெற்றது இதன் மூலம் 6வது முறையாக கிறிஸ்டியானோ ரொனால்டோ உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளார்.

    • கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது.
    • இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி காலிறுதிக்கு முன்னேறினார்.

    பனாஜி:

    பிடே 11-வது உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் ஹரிகிருஷ்ணா, மெக்சிகோவின் ஜோஸ் மார்ட்டினஸ் ஆகியோர் இடையிலான 5-வது சுற்றின் 2 ஆட்டங்களும் டிரா ஆனது.

    இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க ஆட்டம் டைபிரேக்கருக்கு நகர்ந்தது. அதிவேகமாக காய்களை நகர்த்தக்கூடிய டைபிரேக்கரிலும் முதல் 2 ஆட்டங்கள் டிராவில் முடிந்தது. இதனால் மேலும் இரு வாய்ப்பு வழங்கப்பட்டது.

    இதில் ஒரு ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய ஹரி கிருஷ்ணா 59-வது நகர்த்தலில் தோல்வியை தழுவினார்.

    மற்றொரு ஆட்டத்தில் 30-வது நகர்த்தலில் டிராவுக்கு ஒப்புக்கொண்டார். இறுதியில் ஹரி கிருஷ்ணா 2.5 - 3.5 என்ற புள்ளிக்கணக்கில் தோற்று வெளியேறினார்.

    இன்று தொடங்கும் கால் இறுதியின் முதல் ஆட்டத்தில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி சீனாவின் வெய் யிடம் மோதுகிறார்.

    • முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 159 ரன்னில் சுருண்டது.
    • அடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 189 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    கொல்கத்தா:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்தது.

    முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 159 ரன்னில் சுருண்டது. அடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 189 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 153 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. இதையடுத்து, 124 என்ற எளிய இலக்கை எடுக்க முடியாமல் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

    இந்நிலையில், டெஸ்டில் பவுமா தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி தோற்றதில்லை என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டது.

    அவரது கேப்டன்ஷிப்பில் தென் ஆப்பிரிக்கா 10-ல் வெற்றியும், ஒன்றில் டிராவும் சந்தித்துள்ளது.

    இதன்மூலம் டெஸ்டில் தோல்வியே சந்திக்காமல் அதிவேகமாக 10 வெற்றிகளைத் தேடித்தந்த கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

    ×