search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Harikrishna"

    நடிகர் ஹரிகிருஷ்ணாவின் மறைவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். #NandamuriHarikrishna #NTR
    ஐதராபாத்:

    ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ராமராவின் மகனும், மாநிலத்தின் முன்னாள் மந்திரியுமான நடிகர் ஹரிகிருஷ்ணா நேற்று அதிகாலையில் நடந்த கார் விபத்தில் மரணமடைந்தார்.

    தெலுங்குதேசம் கட்சியின் நிறுவனரும், ஒன்றுபட்ட ஆந்திராவின் முன்னாள் முதல்-மந்திரியுமான என்.டி.ராமராவின் 4-வது மகன் நந்தமுறி ஹரிகிருஷ்ணா (வயது 61). திரைத்துறையிலும், தெலுங்குதேசம் கட்சியிலும் புகழ்பெற்று விளங்கிய இவர் ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் நேற்று நடந்த ரசிகர் ஒருவரின் திருமணத்துக்காக சொகுசு காரில் கிளம்பினார்.

    ஐதராபாத்தில் இருந்து மேலும் இருவருடன் காரில் புறப்பட்ட ஹரிகிருஷ்ணா, அண்டாங்கி-நார்கெட்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டினார்.

    தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டம் அன்னபார்திக்கு அருகே சென்ற போது, முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு வாகனத்தை முந்தி செல்ல முயன்றார் ஹரிகிருஷ்ணா. அப்போது திடீரென கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.

    சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி பலமுறை உருண்டு, ரோட்டின் மறுபுறம் போய் விழுந்தது. அப்போது எதிர் திசையில் வந்த ஒரு மாருதி கார் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது.

    இதில் காருக்குள் இருந்த ஹரிகிருஷ்ணாவுக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் காரில் இருந்த மற்ற இருவரும் காயமடைந்தனர்.



    உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து காருக்குள் இருந்த மூவரையும் மீட்டு நாகர்கெட்பள்ளியில் உள்ள காமினேனி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி ஹரிகிருஷ்ணா, காலை 7.30 மணியளவில் மரணமடைந்தார்.

    திருமணத்துக்கு தாமதமாக கிளம்பியதால் விரைவாக செல்ல வேண்டுமென எண்ணி ஹரிகிருஷ்ணா, காரை வேகமாக ஓட்டியதாக தெரிகிறது. அவர் 150 கி.மீ. வேகத்தில் சென்றிருக்கலாம் எனவும், அதுவே விபத்துக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

    நடிகர் ஹரிகிருஷ்ணா ஒன்றுபட்ட ஆந்திராவின் நிம்மக்குருவில் 1956-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி பிறந்தவர். சிறுவயதிலேயே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தனது தந்தை என்.டி.ராமராவுடனும் இணைந்து நடித்துள்ளார்.

    பின்னர் படிப்படியாக உயர்ந்து தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரானார். ‘டல்லா பெல்லம்மா’, ‘டட்டம்மா கலா’, ‘ராம் ரகீம்’, ‘சீதாராமா ராஜு’, ‘லாகிரி லாகிரி லாகிரிலோ’, ‘சீதய்யா’ உள்ளிட்ட திரைப்படங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன.

    இடையில் தெலுங்குதேசம் கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் குதித்த இவர், 1996-ல் மாநில போக்குவரத்து மந்திரியானார். 2008-ல் மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஆந்திர பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து 2013-ல் அந்த பதவியை ராஜினாமா செய்தார். தற்போது கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராக இருந்து வந்தார்.

    உயிரிழந்த ஹரிகிருஷ்ணாவுக்கு முதல் மனைவி லட்சுமி மூலம் ஜானகிராம், கல்யாண் ராம் என்ற 2 மகன்களும், சுகாசினி என்ற மகளும் இருந்தனர். 2-வது மனைவி ஷாலினி மூலம் தாரகா ராம் என்ற மகன் உள்ளார். ஜூனியர் என்.டி.ஆர். என அழைக்கப்படும் இவரும், கல்யாண் ராமும் தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.

    ஹரிகிருஷ்ணாவின் மற்றொரு மகனான ஜானகி ராம், கடந்த 2014-ம் ஆண்டு நடந்த சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    கார் விபத்தில் நடிகர் ஹரிகிருஷ்ணா உயிரிழந்த தகவல் அறிந்ததும் அவரது சகோதரரும், நடிகருமான பாலகிருஷ்ணா, மகன்கள் ஜூனியர் என்.டி.ஆர்., கல்யாண் ராம் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்தனர். அவர்கள் ஹரிகிருஷ்ணாவின் உடலை ஐதராபாத்தின் மெகதிபட்டணத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு முருதுசகுடாவில் உள்ள நந்தமுறி குடும்ப பண்ணை தோட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) இறுதிச்சடங்கு நடக்கிறது. ஹரிகிருஷ்ணாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார்.

    ஹரிகிருஷ்ணாவின் மறைவு ஆந்திர அரசியல் மற்றும் திரைத்துறையில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மைத்துனரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு தனது மகன் லோகேசுடன் வந்து ஹரிகிருஷ்ணாவின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இதைப்போல பல்வேறு அரசியல், திரையுலக பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    நடிகர் ஹரிகிருஷ்ணாவின் மறைவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.  #NandamuriHarikrishna #NTR
    சாலை விபத்தில் உயிரிழந்த ஹரிகிருஷ்ணாவின் இறுதி யாத்திரை அரசு மரியாதையுடன் நடைபெறும் என தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். #Harikrishna #RIPHariKrishnaGaru
    ஐதராபாத்:

    ஆந்திர முன்னாள் முதல் மந்திரி என்.டி ராமாராவின் மகனும், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நடிகர் நந்தமுரி ஹரிகிருஷ்ணா இன்று சாலை விபத்தில் உயிரிழந்தார். நலகொண்டா மாவட்டத்தில் உள்ள நர்கெட்பள்ளி - அட்டன்கி நெடுஞ்சாலையில் சென்ற போது, ஹரிகிருஷ்ணாவின் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.



    இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஹரிகிருஷ்ணா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஐதராபாத் நகரின் அருகே முருதுழகுடா பகுதியில் உள்ள என்.டி.ஆர். குடும்பத்துக்கு சொந்தமான பண்ணை வீட்டில் நாளை அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும்.

    தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாகவும் ஹரிகிருஷ்ணா பணியாற்றியுள்ள ஹரிகிருஷ்ணாவின் இறுதி யாத்திரை அரசு மரியாதையுடன் நடைபெறும் என தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். #Harikrishna #RIPHariKrishnaGaru

    ×