என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டெஸ்ட் கிரிக்கெட்டை அழித்துவிட்டார்கள்..! இந்திய அணி நிர்வாகம் மீது ஹர்பஜன்சிங் பாய்ச்சல்
- இங்கிலாந்தில் நன்றாக விளையாடியதால் அனைவரும் இந்திய அணியை பாராட்டினார்கள்.
- இரு அணிகளும் பேட்டிங் செய்ய முடியாத அளவுக்கு ஆடுகளம் மோசமாக இருந்தது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் இந்திய அணி 93 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. இரு அணிகளும் பேட்டிங் செய்ய முடியாத அளவுக்கு ஆடுகளம் மோசமாக இருந்தது. 3 தினங்களில் போட்டி முடிவடைந்தது.
இந்தநிலையில் ஆடுகளம் தொடர்பாக முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங் இந்திய அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுபோன்ற ஆடுகளங்களால் டெஸ்ட் கிரிக்கெட் அழித்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன்சிங் கூறியதாவது:-
டெஸ்ட் கிரிக்கெட்டை முற்றிலுமாக அழித்து விட்டார்கள். டெஸ்டுக்கு எந்த மதிப்பும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. சமீபத்தில் இங்கிலாந்தில் நன்றாக விளையாடியதால் அனைவரும் இந்திய அணியை பாராட்டினார்கள்.
அங்கே பிட்ச்கள் நன்றாக இருந்த காரணத்தாலேயே இந்தியா போராடி வென்றது. ஆனால் இங்கே பந்தை போட்டால் அது எங்கேயோ சுழன்று செல்லும் அளவுக்கு ஆடுகளம் தரமற்றதாக இருக்கிறது. அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது பேட்ஸ்மேன்களுக்கு எளிதாக தெரியவில்லை.
இந்த நடைமுறை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இது தவறான விளையாட்டு முறை. இது போன்ற ஆடுகளங்கள் வீரர்களை முன்னேற அனுமதிக்காது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






