search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    வாழ்க்கை ஒரு தொடர் ஓட்டம்!
    X

    வாழ்க்கை ஒரு தொடர் ஓட்டம்!

    • மனித வாழ்க்கையில் நிறைவு என்பதும் முழுமை என்பதும் எப்போதும் கிடையவே கிடையாது.
    • வரலாறு தொடங்கிய காலத்திற்கு முன்பிருந்தே இந்த உலகம் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

    வாழ்க்கையின் அருமை உணர்ந்த வாசகப் பெருமக்களே!

    வணக்கம்.

    வாழ்க்கை ஓர் அழகிய பயணம். 'அத்தனை தூரத்தையும் நாமே ஓடிக் கடந்துவிட வேண்டும்' என்று நாம் நினைத்தாலும் அது நடைமுறை வாழ்வியலில் சாத்தியமில்லை என்பதே சமூகம் கண்டறிந்த உண்மை.

    மனித சமூகத்தில் பிறக்கின்ற ஒவ்வொருவரும் கடக்க வேண்டிய தொலைவும் காலமும் ஏற்கனவே விதிக்கப்பட்டே பூமிக்கு அனுப்பப்படுகின்றனர். காலம் முடிந்ததும் எந்தவிதமான சலுகைகளும் இல்லாமல், பணியை முடித்துவிட்டுத் திரும்பி விட வேண்டியது தான். அப்படியென்றால் விட்டகுறை தொட்டகுறையோடு மனித வாழ்க்கை முழுமையடையாமல் நின்றுபோய் விடுமே? அதை யார் முழுமைக்குள் கொண்டுவருவது?.

    மனித வாழ்க்கையில் நிறைவு என்பதும் முழுமை என்பதும் எப்போதும் கிடையவே கிடையாது; அது வளர்நிலை மட்டுமே!. அறிவியல், அழகியல், ஆன்மீகம், தத்துவம், பொருளியல், அருளியல், இலக்கியம், பண்பாடு, நாகரிகம், தொழில்நுட்பம், உணவு, உடை, இருப்பிடம் என்று சமூகத்தில் எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் அதில் தன்னிறைவு என்பது கிடையவே கிடையாது; மாறாக வளர்ந்துகொண்டே இருப்பதே நிலையானது. வளர்ச்சி என்பதும் ஒருவகையில் பார்த்தால் மாறிக்கொண்டே இருப்பது; மாற்றம் ஒன்றே மாறாதது; அதுவே வளர்ச்சியும் ஆகும்.

    வரலாறு தொடங்கிய காலத்திற்கு முன்பிருந்தே இந்த உலகம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த வளர்ச்சியில் மனிதப் பங்களிப்பு மகத்தானது. எந்த ஒரு தனி மனிதனாலும் தனிப்பட்ட சாதனைகளை இந்தச் சமூகத்தில் நிகழ்த்தி விட முடியாது.

    காலம் காலமாக நிகழ்ந்துவரும் மனிதப் பிறப்பு, இருப்பு, இறப்புச் சுழற்சியில் ஒவ்வொரு மனிதனும் பிறக்கிறான். அவனுக்கான வாழ்க்கையை அவனே புதிதாக உருவாக்கிக் கொண்டு அவன் வாழத் தொடங்குவதில்லை. ஏற்கனவே வாழ்ந்த முன்னோர்களின் வழியில் அவன் வாழ்வதற்குப் பழகிக் கொள்கிறான். ஆணும் பெண்ணுமாக இணையும் குடும்ப வாழ்வை ஏற்படுத்தி அவனுக்கான சந்ததிகளையும் உருவாக்கிக் கொள்கிறான்.

    தனக்கென வாழ்வது, தனக்கென வாழ்ந்து பிறருக்காகவும் வாழ்வது, பிறருக்காக மட்டுமே வாழ்வது என்கிற கோட்பாட்டியல் நெறிகளில் அவனது வாழ்க்கைப்பாடுகள் செல்லுகின்றன. ஒருநாள் அவனது காலம் முடிந்து போகிறது. அவனது காலம் முடிந்தாலும் ஏதோவொரு வகையில் அவனது வாரிசுகளின் வழியே அவனது வாழ்வியல் நோக்கங்கள் தொடரத்தான் செய்கின்றன.

    அப்படிப் பார்க்கும்போது வாழ்க்கை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தொடர் ஓட்டம் தான். முன்னோரிடமிருந்து பெற்றுக்கொண்டு ஓடத் தொடங்கும் நாம், அந்தப் பண்பட்ட வாழ்வியலைச் செழுமைப்படுத்தி, அப்பழுக்கில்லாமல் அடுத்த தலைமுறையின் கைகளில் கொடுத்துவிட்டு விடைபெற வேண்டும். அப்போது தான் நாம் நல்வாழ்வு வாழ்ந்ததற்கான அர்த்தம்.

    தனிமனிதன், குடும்பம், குடி, இனம், சமூகம் எனப் பல்வேறு நிலைகளில் மனித வாழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவே பிற்காலத்தில் சாதி, மதம், இனம், சமூகம் எனவும் ஆனது. எப்படியாயினும், மனிதவாழ்வு தொடர் ஓட்டம் என்றால் குடும்பம் சார்ந்த சந்ததித் தொடரையே நாம் இங்குக் கவனத்தில் கொள்ளவேண்டும். தந்தை, தாய், மகன், மகள், பேரன், பேத்தி என வளரும் வாரிசுமுறை வளர்ச்சியில் ஒவ்வொருவரும் அக்கறை செலுத்த வேண்டும்.

    சுந்தர ஆவுடையப்பன்


    "தக்கார் தகவிலர் என்பது அவரவர்

    எச்சத்தாற் காணப்படும்"

    என்ற திருக்குறளில் திருவள்ளுவர், ஒரு மனிதன் சரியானமுறையில் வாழ்ந்திருக்கிறானா? இல்லையா? என்பதை அவனது சந்ததிகளின் குணநலன்களை வைத்துத் தீர்மானிக்க வேண்டும் என்கிறார் ஒவ்வொரு குடும்ப மனிதனும் தனது செயல்களால் சிறந்து விளங்குகிறான் என்பதை அவனது பிள்ளைகளை அவன் ஒழுங்காக வளர்த்திருக்கிறானா? என்பதை வைத்தும் முடிவுக்கு வரலாம்.

    ஒரு நாட்டில் ஒரு ராஜா நாட்டு மக்களிடம் வரி ஏதும் வாங்காமலேயே ஆட்சி செய்து வந்தான். வரி வாங்குவதற்குப் பதிலாக, நாட்டில் வீடுதோறும் காலையில் ஒரு மரக்கால் நெல்லைக் கொடுத்து விட்டு, மாலையில் அதே ஒரு மரக்கால் அளவு அரிசியை அரசாங்கத்தினர் பெற்று வந்தனர். அரசன் பணமாக வரி வசூல் செய்யவில்லையே ஒழிய, மக்கள் தினமும் ஒரு மரக்கால் அரிசி கொடுப்பதற்குச் சிரமப்பட்டு வந்தனர்.

    ஒருநாள் அரசனுக்குத் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உள்ளூர் பிரமுகர்கள், பக்கத்துநாட்டு ராஜாக்கள் எல்லாரும் திரண்டுவந்து நலம் விசாரித்துச் சென்றார்கள். ஆனால் நாட்டின் பொதுமக்கள் யாருமே ராஜாவை வந்து பார்த்து நலம் விசாரிக்கவில்லை. வருத்தமடைந்த ராஜா அமைச்சரை அழைத்துக் காரணத்தை விசாரித்தார்.

    "காரணம் நீங்கள் வரிவாங்கும் முறைதான் ராஜா!. ஒரு மரக்கால் நெல் கொடுத்துத் தினமும் ஒரு மரக்கால் அரிசி கேட்கிறீர்கள்!; ஒரு மரக்கால் நெல்லை அரைத்தால் அரை மரக்கால் அரிசி தான் கிடைக்கும்; பாவம் ஏழை மக்கள் தினமும் அரை மரக்கால் அரிசியைக் கூடுதலாகக் கொடுப்பதற்கு எங்கே போவார்கள்?. அதனால் தான் உங்கள் மீது அவர்களுக்குப் பரிதாபம் ஏற்படவில்லை!; வந்தும் பார்க்கவில்லை!" என்றார் அமைச்சர்.

    ராஜா, மரணிக்கும் தறுவாயில், தனது அடுத்த வாரிசான இளவரசனை அழைத்தார்," மகனே! மக்களிடம் நான் வரி வாங்கிய வகையில் எனக்கு ஏகப்பட்ட கெட்டபெயர் வந்து விட்டது. நீ உனது ஆட்சித் திறத்தால் எனக்கு நல்ல பெயர் வரும்படியாகப் பார்த்துக்கொள்!" என்று கூறிவிட்டு உயிரை விட்டு விட்டார்.

    ராஜாவின் அடுத்த வாரிசான இளவரசன் ஆட்சிப்பொறுப்புக்கு வந்த ஒரு மாதத்திலேயே, தனது தந்தைக்கு மிக நல்லபெயரை உண்டாக்கிவிட்டான். எப்படி?.

    தந்தை ஒரு மரக்கால் நெல்லைக் கொடுத்து, ஒரு மரக்கால் அரிசி கேட்டார். ஆனால் அவரது மகனோ அவரை நல்லவராக்கும்படிக்கு, ஒரு மரக்கால் தவிட்டைக் கொடுத்துவிட்டு ஒருமரக்கால் அரிசி கேட்கத் தொடங்கிவிட்டான்.

    தந்தை தன்னிற் சிறந்த மகனை உருவாக்குவதே தொடர் ஓட்டத்தில் செய்யவேண்டிய வாழ்வியற் கடமையாகும். ஆனால் இங்கோ தகப்பன் செய்த தீமையே பரவாயில்லை எனும்படிக்கு, மகன் பெருந்தீமைக்காரனாக இருப்பது வளர்ப்புக் கோளாறு; சந்ததிப் பிழை.

    திருவள்ளுவர் சமூக அக்கறையோடு தாம் வார்த்துள்ள திருக்குறளில், தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும் ஆற்றவேண்டிய கடமைகளை வகுத்துக் கூறுகிறார். தன் மகனை அவையத்து முந்தியிருக்கச் செய்ய வேண்டியது தந்தையின் கடமையாகும். தொட்ட தொழில் எல்லாவற்றிலும் முந்தியிருக்கும் மகனைப் பார்த்து, இவனை இந்த அளவுக்குச் சிறந்தவனாக உருவாக்க இவன் தந்தை என்ன பாடுபட்டாரோ! என்று மற்றவர்கள் வியக்கும்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிறார்.

    "மகனறிவு தந்தையறிவு" எனும் பழந்தமிழ் மொழி, தந்தை தன்னைப்போலவே மகனை அறிவு பெற்றவனாக வளர்த்தெடுப்பான் என்கிறது. ஆயினும் தன்னிலும் சிறந்த அறிவுற்ற தலைமுறையாக அடுத்த தலைமுறையை வளர்த்தெடுக்க வேண்டியதே நிகழ்காலத் தலைமுறையின் பொறுப்பு ஆகும்.

    திருவிழாக் காணவந்த தந்தை, நெருக்கியடிக்கும் கூட்டத்தில், தனது தோளில் பிள்ளையைத் தூக்கிவைத்துச் சாமியைக் காட்டுவதுபோல, எதிர்காலத்திற்கான அறிவை அடுத்த தலைமுறைக்கு ஊட்டி வளர்க்க வேண்டியது ஒவ்வொரு தாய் தந்தையரின் கடமையாகும். தாய் தந்தையின் வாழ்வியல் லட்சியங்கள் அவர்கள் காலத்தில் நிறைவேறாமல் போனாலும் அவற்றைத் தமது காலங்களில் நிறைவேற்றிக் காட்ட வேண்டியது அடுத்த தலைமுறையின் ஆத்மார்த்தக் கடமையாகும்.

    சீனப் பெருந்தலைவர் மாசே துங்குக்கி பிடித்த ஒரு கதை. ஒரு சிறிய கிராமம். அதைச் சுற்றி அதைப் போலவே ஏழெட்டு கிராமங்கள். இந்தக் கிராமங்களை ஒட்டினாற்போல ஒரு பெரிய மலை. அந்த மலைக்கு அடுத்த பக்கத்தில் ஒரு பெரிய நகரம். இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கல்வி, மருத்துவம் போன்ற எல்லா வசதிகளுக்கும் அந்த நகரத்தைத் தான் நம்பியி ருந்தனர்.

    ஒருபக்கம் கிராமங்கள்; மறுபக்கம் நகரம்; நடுவில் பெரிய மலை. அன்றாடம் படிக்கச் செல்ல வேண்டுமென்றாலும், அவசரத் தேவையாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென்றாலும் மலையைச் சுற்றிக்கொண்டு பதினைந்து கல் தொலைவு நடந்தே செல்ல வேண்டும். வாகன வசதிகளெல்லாம் அப்போது கிடையாது. உயிருக்குப் போராடும் பல கிராம மனிதர்கள் மலையைச் சுற்றி நகரத்திற்குத் தூக்கிச் செல்லும் வழியிலேயே இறந்து விடுவார்கள்.

    கிராமத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் யோசித்தான். மலையைச் சுற்றிச் சென்றால் பதினைந்து கல் தொலைவு. ஆனால் மலையின் குறுக்கே உள்ள தூரம் வெறும் மூன்று கல் அளவுதான். மலையைச் சுற்றிச் சுற்றி மக்கள் செல்லாமல் இருக்க, பேசாமல் மலையைப் பிளந்து குறுக்கே பாதையை உருவாக்கினால் என்ன?

    கையில் உளியும் கடப்பாறையும் சுத்தியலும் எடுத்துக்கொண்டு மலையடிவாரத்திற்குச் சென்று நின்றான். கிராம மக்கள் திரண்டனர். அவர்கள் முன்னிலையில் உளியை வைத்துச் சுத்தியலால் மலையை உடைக்கத் தொடங்கினான்.

    மலையின் கடவுள் இதைப் பார்த்துவிட்டுத், தேவதேவனிடம் சென்று என்ன நடக்கப் போகிறதோ என்று அஞ்சி நின்றான். அவ்வளவு லேசில் மலையை அவனால் தகர்த்துவிட முடியாது. பொறுமையாய் இரு பார்ப்போம் என்று ஆறுதல் சொன்னார் தேவதேவன்.

    உளிகொண்டு அடுத்த தட்டுத் தட்டும்போது, ஊர்மக்களில் ஒருவன் கேட்டான்,"என்ன செய்யப் போகிறாய்?".

    "நான் மலையை உடைத்துப் பாதையை உருவாக்கப் போகிறேன்!"

    " தனிமனிதனாகிய உன்னால் இந்தச் சின்ன உளியையும் சுத்தியலையும் வைத்துக் கொண்டு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இவ்வளவு பெரிய மலையை உடைக்க முடியாது!".

    "என்னால் முடியாவிட்டால் என்ன? என்காலம் வரை நான் முயல்வேன்!; என்காலத்திற்குப் பின் என் மகன் உடைப்பான்!; அவன் காலத்திற்குப் பின் அவன் மகன் தகர்ப்பான்!; ஆண்டுகள் நூறானாலும் எனது லட்சியம் ஒருநாள் நிறைவேறும். இந்த மலை உடைபடும்; என் மக்களுக்கான பாதை திறக்கப்படும்!" என்று நம்பிக்கையோடு முழக்கமிட்டான் அந்தக் கிராமத்து மனிதன்.

    வானத்தில் இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த தேவதேவனே அஞ்சிவிட்டானாம். மலையின் கடவுளைப் பார்த்து, "அவன் சந்ததி மீது நம்பிக்கைவைத்துப் பேசுவதைப் பார்த்தால் நிச்சயம் ஒருநாள் உடைத்து விடுவான்.எனவே நீயாகவே கொஞ்சம் நகர்ந்து வழிகொடுத்து விடுவது நல்லது" என்றாராம். மலையின் கடவுளும் நகர்ந்து கொண்டானாம்.

    நமது வாழ்வியல் ஓட்டம் சமூகத்தை மேம்படுத்தும் தொடர் ஓட்டமாக இருக்கட்டும். வரும்போது இருந்த பூமியை மேலும் செழுமைப்படுத்தி அடுத்த தலைமுறையிடம் தந்துவிட்டுச் செல்வோம்.

    தொடர்புக்கு: 9443190098

    Next Story
    ×