search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கருணை தெய்வம் காஞ்சி மகான்- 67
    X

    கருணை தெய்வம் காஞ்சி மகான்- 67

    • கருணை தெய்வம் காஞ்சி மகான் குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன் 'மாலைமலர்' வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    • காளஹஸ்தியில் இருந்து திரும்பியவர் நேராகத் தன் இல்லம் செல்லாமல், தியாகராஜனைப் பார்க்க வந்து விட்டார்.

    'ஒரு குழப்பம். அது குழப்பம் என்பது தியாகராஜனுக்குப் பின்னர்தான் தெரிய வந்தது. குழப்பம் என்பது தெரியாத வரையில் எல்லோருமே தெளிவுதான். குழப்பம் என்று தெரிய வந்த பிறகுதான் பதட்டம், தலைசுற்றல் என்று எல்லாமே!

    'காளஹஸ்தியில் பிக்‌ஷை செய்ய வா' என்று தியாகராஜனுக்கு மகா பெரியவா ஏற்கனவே சொல்லி இருந்தார் அல்லவா?

    பெரியவா குறிப்பிட்டுச் சொன்ன தினம் சாம உபாகர்மா. அதாவது, சாம வேதக்காரர்கள் பூணூல் மாற்றிக் கொள்ளும் தினம். அந்த மாதத்து பஞ்சாங்கத்தில் முதலில் ஒரு தேதியும் முடிவில் ஒரு தேதியும் 'சாம உபாகர்மா என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதில் எந்தத் தேதியில் பிக்‌ஷைக்குச் செல்ல வேண்டும் என்று ஸ்ரீமடத்தைக் கலந்தாலோசிக்காமல் தியாகராஜனே இரண்டாவதாக வரும் தினத்தைக் தன் மனதுக்குள் குறித்து வைத்திருந்தார்.

    சாம உபாகர்மா தினமும் வந்தது. அதாவது, மாதத்தில் முதலில் வரும் தினம்!

    இந்தத் தினத்தன்றுதான் தியாகராஜனின் பிக்‌ஷை என்று காளஹஸ்தி ஸ்ரீமட முகாமில் குறித்து வைத்திருக்கிறார்கள். ஆனால், தியாகராஜனின் கணக்கில் அடுத்து வரும் தினமாயிற்றே!

    மாதத்தின் முதலில் வந்த சாம உபாகர்மா தினம். அன்று மாலை 5 மணி இருக்கும். வடசென்னையில் ஸ்ரீராமா இல்லத்தில் இருந்தார் தியாகராஜன்.

    அப்போது காஞ்சி ஸ்ரீமடத்தின் அத்யந்த பக்தரும், பி.ஜி.பால் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான நீலகண்ட ஐயர், தியாகராஜனின் இல்லத்துக்கு வந்தார். இருவருமே நண்பர்கள்.

    வீடு தேடி வந்தவரை வரவேற்று அமரச் சொன்னார் தியாகராஜன். ஆனால், நீலகண்ட ஐயர் அமரவில்லை. காரணம் - அமர்வதற்கும், அரட்டை அடிப்பதற்கும் அவர் வரவில்லை. முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்லிவிட்டுப் போகவே வந்திருக்கிறார். அன்று காளஹஸ்தி போய் விட்டுத் திரும்பி இருக்கிறார்.

    காளஹஸ்தியில் இருந்து திரும்பியவர் நேராகத் தன் இல்லம் செல்லாமல், தியாகராஜனைப் பார்க்க வந்து விட்டார்.

    ''என்ன ஓய் தியாகராஜன்... இன்னிக்குப் பெரியவாளைப் பட்டினி போட்டுட்டேள்... மதியம் மூணு மணிக்குத்தான் பிக்‌ஷை பண்ணார்'' என்றார் நீலகண்டன் உரத்த குரலில். தூக்கி வாரிப் போட்டது தியாகராஜனுக்கு. பசியோடு இருக்கும் எந்த ஒரு ஜீவனையும் பட்டினி போடக் கூடாது. அதற்குரிய ஆகாரத்தைக் கொடுக்க வேண்டும். இதுதான் தர்மம். உலக நீதி. ஆனால், 'பெரியவாளையே பட்டினி போட்டுட்டேளே...' என்று தியாகராஜனை நேரடியாகக் குறிப்பிட்டுச் சொன்னால் எப்படி இருக்கும்?

    துடித்துப் போனார் தியாகராஜன். 'என்ன சொல்கிறார் நீலகண்ட ஐயர்? என்னை ஏன் குறை சொல்ல வேண்டும்?' என்று முதலில் குழம்பினார். 'மிக சொற்பமான உணவை 'பிக்‌ஷை' என்று ஏற்று வாழும் அந்த மகானை நான் எப்படிப் பட்டினி போட்டு விட்டேன்? இது மிகப் பெரிய பாவம் ஆயிற்றே? இதற்கு நான் எப்படிக் காரணமாவேன்?'

    நீலகண்ட ஐயரிடம் எதுவும் பேசத் தோன்றவில்லை தியாகராஜனுக்கு. எவர் ஒருவர் கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல வேண்டும். ஆனால், பதில் என்று ஏதாவது சொல்லத் தெரிந்தால்தானே கேள்வி கேட்டவருக்குச் சொல்ல முடியும்?!

    எதிராளி கேட்கிற கேள்விக்கு எப்போது பதில் சொல்லாமல் இருக்க முடியும்?

    ஒன்று - பதிலாக எந்த வார்த்தைகளும் கிடைக்காதபோது. இன்னொன்று - உண்மையை உணர்ந்து கொண்ட பிறகு! இந்த இரண்டு தருணங்களிலும் கேட்கப்பட்டவர் பதில் சொல்ல முடியாது. இங்கே தியாகராஜன் இரண்டாவது வகை.

    அதாவது, அவருக்கு விஷயம் புரிந்து விட்டது. எனவே, பதில் சொல்லவில்லை. அவ்வளவுதான்... தன்னைத் தேடி வந்த நீலகண்டனிடம் வேறு எந்தப் பேச்சும் இல்லை.

    'பிக்‌ஷை என்று காஞ்சி ஸ்ரீமடத்தில் எனக்குக் குறித்துக் கொடுக்கப்பட்ட நாள் - இன்றைய தினம். ஆனால், இதே மாதத்தில் பின்னால் வருகிற சாம உபாகர்மா தினத்தை அல்லவா நான் என் மனதில் குறித்து வைத்துள்ளேன்... எப்பேர்ப்பட்ட தவறை செய்து விட்டேன். இன்றைக்கு நான் பிக்‌ஷை தருவதற்கு வரப் போகிறேன் என்று மகா பெரியவா எனக்காகக் காத்திருந்து, கால தாமதமாக மூன்று மணிக்கு எடுத்துக் கொண்டாரா?' - இதை யோசித்த தியாகராஜன் நொறுங்கிப் போனார். தனது மூத்த மகன் ரவிசங்கரை அழைத்தார். தந்தையின் முன் மூச்சிரைக்க வந்து நின்றார் ரவிசங்கர். மகனின் முகம் பார்த்து, ''எடுடா வண்டியை'' என்றார் படபடப்புடன்.

    அடுத்த ஒரு சில விநாடிகளில் என்னென்ன எடுத்துக் கொள்ள வேண்டுமோ, அவை அனைத்தையும் எடுத்துக் கொண்டார். தியாகராஜன், அவரது மனைவி ராஜலட்சுமி, இவர்களது மகன் ரவிசங்கர், மனைவியின் தம்பி என்று நான்கு பேர் தயாராகி விட்டார்கள். நம்ப மாட்டீர்கள்... அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் காளஹஸ்தியை நோக்கிப் புறப்பட்டது கார். கார் எங்கும் நிற்கவில்லை.

    'அடடா... லோகத்துக்கே படியளக்கிற பரமாத்மாவை இன்னிக்குப் பட்டினி போட்டுட்டேனே... இந்த மாசத்துல ரெண்டு சாம உபாகர்மா வரும்னு தெரிஞ்ச பிறகு 'எது?'னு ஸ்ரீமடத்துலே கேக்காமல் விட்டுட்டேனே...' என்று மனசுக்குள் மருகிக் கொண்டே வந்தார் தியாகராஜன். காரை ஓட்டுகிற ரவிசங்கரும், தந்தையின் மன உணர்வுகளைப் புரிந்து கொண்டு விரைவாக - அதே சமயம் கட்டுப்பாட்டுடன் ஓட்டிக் கொண்டு போனார்.

    ஆயிற்று! பரபரப்பான பயணத்தில் காளஹஸ்தியை கார் நெருங்கியது. அங்கே பெரியவா முகாமிட்டிருக்கும் இடத்துக்குப் போனது கார்.

    உள்ளே போனால் - பெரியவா அங்கே இல்லை.

    இரவு பூஜையை முடித்து விட்டு வெளியே சென்றிருப்பதாகச் சொன்னார்கள். விசாரித்தபோது அருகே இருக்கிற ஒரு குகைக்குச் சென்றிருப்பதாகவும், அந்தக் குகையில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகளைப் படித்துத் தெரிந்து கொள்ளச் சென்றிருப்பதாகவும் சொன்னார்கள். அந்தக் குகை எங்கு இருக்கிறது என்று விசாரித்துத் தெரிந்து கொண்டு குடும்பத்தோடு நடக்க ஆரம்பித்தார்.

    நடை அல்ல... ஓட்டம் என்றே சொல்ல வேண்டும். 'பெரியவாளைப் பட்டினி போட்டுட்டேனே... முதல்ல அவர் கால்ல விழுந்து மன்னிப்புக் கேக்கணும்' என்று கைகளைக் கூப்பிய வண்ணம் தெருவில் ஓடினார்.

    ஒரு சில நிமிடங்கள் நடந்திருப்பார் தியாகராஜன்.

    அடுத்து - அந்த ஆச்சரியம். ஆம்! நடமாடும் தெய்வம் எதிர்த் திசையில் வந்து கொண்டிருந்தார். அவருடன் ஸ்ரீமடத்துச் சிப்பந்திகள் சிலர். வெளிச்சம் குறைவான பாதையில் வந்து கொண்டிருந்த மகானுக்கு ஒரு சிப்பந்தி டார்ச் லைட் அடித்து காண்பித்துக் கொண்டே வந்தார். மகா பெரியவாளுக்கும் தியாகராஜனுக்குமான தொலைவு மெல்ல மெல்லக் குறைய ஆரம்பித்தது. பெரியவாளை நெருங்கி விட்டோம்... மகானின் அருகில் வந்து விட்டோம் என்பதை உணர்ந்த தியாகராஜன், அந்தக் குறைவான வெளிச்சத்தில் மகானின் திருப்பாதங்களை நோக்கி விழுந்தார்.

    அந்த சாலை எப்படிப்பட்டது... கற்கள் நிறைந்ததா... முட்கள் நிறைந்ததா... யோசிக்கவில்லை தியாகராஜன்.

    காலணிகள் இல்லாமல் நடப்பதற்கே உசிதமில்லாத அந்த சாலையில் சட்டென்று நமஸ்கரித்ததை என்னவென்று சொல்வது.

    இன்றைக்கு ஆலயத்திலோ, ஒரு மகானுக்கோ நமஸ்காரம் செய்கிறபோது, தாங்கள் அணிந்திருக்கிற ஆடைகளைப் பற்றிப் பலரும் யோசிக்கிறார்கள். அதுவும் வெள்ளை வேஷ்டியும் வெள்ளைச் சட்டையும் அணிந்திருந்தாலோ, சரசரக்கும் விலையுயர்ந்த சேலைகள் அணிந்திருந்தாலோ... அழுக்காகி விடுமே என்று கவலைப்படுகிறார்கள் சிலர். எனவே, சம்பிரதாயத்துக்குக் கைகளை மட்டும் உயர்த்திக் கும்பிட்டு 'நமஸ்காரம்' என்று வாயால் சொல்கிறார்கள். பக்தியை விட பகட்டுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். ஆனால், தியாகராஜன் எப்படி பார்த்தீர்களா?

    மகானின் திருமுகத்தை குறைந்த ஒளியில் பார்த்தவுடன், சாலை என்றும் பார்க்காமல்... சாலையின் தன்மை எப்படிப்பட்டது என்றும் யோசிக்காமல், சுற்றி இருப்பவர்கள் யார் என்பதைப் பற்றியும் கவலைப்படாமல் சடாரென்று விழுந்து நமஸ்காரம் செய்தார்.

    வேகமாக நடந்து வந்து கொண்டிருந்த மகான் அப்படியே நின்றார்.

    தனக்கு முன்னால் விழுந்து நமஸ்கரித்த அன்பரைக் கண்களை இடுக்கியபடி பார்த்து, ''யாருடா அது?'' என்று கேட்டார், உடன் வந்த சிப்பந்திகளிடம். மகானுக்குத் தெரியாதா? அண்டசராசரங்களிலும் நடப்பதை அறிந்து கொள்ளக் கூடிய தெய்வத்துக்குக் கண்களுக்கு முன்னால் விழுந்து நமஸ்கரிப்பவரைத் தெரியாதா?

    இதுதான் திருவிளையாடல்...!

    ஊழியம் செய்யும் சிப்பந்தி ஒருவர் பெரியவாளை சற்றே நெருங்கி, ''தியாகராஜன் பெரியவா... பெரியேரி கிராமம்...'' என்றார், பவ்யத்துடன். ''ஓ... தியாகராஜனா?'' - இது பெரியவா. எழுந்து நின்றார் தியாகராஜன். மகானின் திருவுருவம் பார்த்துக் கன்னங்களில் மாறி மாறி அறைந்து கொண்டார். கைகள் நடுங்கின. கண்களில் இருந்து ஜலம் அருவியாகப் பொங்கியது. உணர்ச்சிப்பிழம்பாகக் காணப்பட்டார் தியாகராஜன்.

    (தொடரும்) swami1964@gmail.com

    Next Story
    ×