என் மலர்

  சிறப்புக் கட்டுரைகள்

  கலைஞரை காதலியாக்கி கண்ணதாசன் எழுதிய  சேலம் கவியரங்கத்துக் கவிதை
  X

  கலைஞரை காதலியாக்கி கண்ணதாசன் எழுதிய சேலம் கவியரங்கத்துக் கவிதை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கலைஞரின் வசனத்தில் சொக்கிப் போவார் கண்ணதாசன்.
  • திரை உலகில் இருவருமே வேக வேகமாகவே முன்னேறினார்கள்.

  கலைஞரின் வசனத்தில் சொக்கிப் போவார் கண்ணதாசன். அதே போல கண்ணதாசன் பாடல்களில் மயங்கிப் போவார் கலைஞர். சேலம் மார்டன் தியேட்டர்சில் பணியாற்றும் போது இருவரும் எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்வார்கள். எந்த இடத்திலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட ஆழமான நட்பு அவர்களுடையது.

  திரை உலகில் இருவருமே வேக வேகமாகவே முன்னேறினார்கள். அன்றாட வாழ்வில் நண்பர்களிைடயே நாம் காணுகிற தொழிற்போட்டி கலைஞரிடமும், கவிஞரிடமும் இருந்தது. சில நேரங்களில் அது உரசலாகவும் வளர்ந்தது.

  திரை உலகைப் போலவே இருவருமே அரசியல் உலகத்தில் கால் பதித்தவர்கள். அரசியல் உலகில் கலைஞர் முன்னேறிய அளவுக்கு கண்ணதாசனால் முடியவில்லை. அரசியலில் முன்னேறுவதற்கு சாதுரியமும் வேண்டும். சாமர்த்தியமும் வேண்டும். இவை இரண்டும் கலைஞரிடம் நிறையவே இருந்தது. கூட நிர்வாகத் திறமையும் இருந்ததால் அரசியலில் கொடி கட்டிப் பறந்தார் கலைஞர். அவர் வெற்றி பெறாத தேர்தலே இல்லை.

  1967 தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அண்ணா தலைமையில் அமைச்சரவை அமைந்த போது பொதுப்பணித் துறை அமைச்சராகவே ஆகி விட்டார் கலைஞர். 1957 தேர்தலில் திருக்கோட்டியூர் தேர்தலிலே தி.மு.க. சார்பிலே போட்டியிட்டு கண்ணதாசன் தழுவிய தோல்வி. தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. அதுவும் ஒரு வகையில் நல்லதாகவே போயிற்று. திரை உலகில் கண்ணதாசன் கொடிகட்டிப் பறப்பதற்கும் கூடுதலாக கவனம் செலுத்துவதற்கும் அதுவே காரணமாயிற்று. இல்லாவிடில் இப்படி ஒரு கவியரசர் நமக்கு கிடைத்திருக்க மாட்டார்.

  1967 தேர்தலிலும் தோல்வி ஏற்பட்டதால் காமராஜரோடு நெருக்கமாக இருந்து பின்னர் பிரிந்து இந்திராகாங்கிரசில் சேர்ந்து 1971-க்குப் பிறகு தனது அரசியல் செயற்பாடுகளை குறைத்துக் கொண்டார் கண்ணதாசன்.

  1971 தேர்தலில் இந்திரா காங்கிரசில் கண்ணதாசன் இருந்ததால் கூட்டணி காரணமாக கலைஞரோடு மீண்டும் இணக்கமானார் கண்ணதாசன். அந்த நேரத்தில்தான் முதல்-அமைச்சராக இருந்த கலைஞரின் பிறந்த நாள் கவியரங்கம் சேலத்திலே 1.8.1971 அன்று கண்ணதாசன் தலைமையிலே நடைபெற்றது. ஏற்கனவே சென்னைக் கவியரங்கில் கலைஞரை காதலியாக்கி பாடியது போல, சேலம் கவியரங்கிலும் பாடி பலத்த கையொலியாலே பாராட்டுப் பெற்றார் கண்ணதாசன். இதோ அந்தக் கவிதை...

  "காதலை மதுவைப் பாடி

  கவலையைத் துயரைப் பாடி

  மாதர்கள் அழகைப் பாடி

  மனம்படும் பாட்டைப் பாடி

  போதையில் வெளிக் கிளம்பும்

  போனநாள் நினைவைப் பாடச்

  சேதிகள் கொண்டு வந்தேன்

  சேலத்து சபையை நாடி..." என்று தொடங்குகிறார்.

  அம்பிகாபதி, அமராவதி காதல், ராமன் சீதை காதல், நளன் தமயந்தி காதல், கண்ணனொடு மீரா காதல், முருகனொடு வள்ளி காதல் என்று பல காதல்களை நாம் கேள்வியுற்றுள்ளோம். ஆனால் எனது காதலோ மிகவும் வித்தியாசமான காதல் என்கிறார் கண்ணதாசன். கலைஞரை காதலியாக உருவகப்படுத்தி எழுதியுள்ளார். அக்கவிதை மிகவும் சுவையானது.

  நான் கொண்ட காதல் இந்த

  ரகங்களில் ஒன்றென்றாலும்

  மான்கொண்ட காதல் இந்த

  மாதரில் ஒருத்தி அல்ல...

  தேன் கொண்ட மொழியும், செல்லும்

  திசை கொள்ளும் அன்பும் கொண்டாள்

  வான் கொண்ட மேகம் போல

  வளர்கின்ற புகழ்ப் பெண்ணாவாள்...

  தேன்கொண்ட மொழிையயும், வான் கொண்ட புகழையும் உடையவள் எனது காதலியான கலைஞர் என்று அழகாக வர்ணிக்கிறார்.

  அன்றொரு காலம் இந்த

  அழகிய கொங்கு நாட்டில்

  தென்றல் வந்து ஊஞ்சல் ஆடும்

  சேலத்தில் நானிருந்தேன்

  அன்றில் போல் இளைய மங்கை

  அங்கெங்கோ தனித்திருந்தாள்

  சென்றொரு தூது சொல்லி

  சேர்த்தவர் சக்ரபாணி...!

  அழகான கொங்கு நாடான சேலத்திலே நானும், எனது காதலியான கலைஞரும், அன்றில் பறவை போல தனித்தனியாக தவித்து இருந்தோம். எங்களை இணைத்தவர் சக்ரபாணி (எம்.ஜி.ஆரின் அண்ணன்) என்கிறார் கண்ணதாசன்.

  கண்ணோடு கண்கள் பேசக்

  கதையோடும் வசனம் பேச

  பண்ணொடு இசையும் சேரப்

  பரதமும் ஜதியும் போலப்

  பெண்ணொடுங் கலந்தேன்; சற்றும்

  பிரிவிலா திருந்தேன்... ஆங்கே

  நன்னிய அன்பை மாய்க்க

  ராசியால் சனி புகுந்தான்...

  பண்ணொடு இசையும், கலந்தது போல, பரதமும், ஜதியும் இணைந்தது போல கண்களால் கதை வசனம் பேசிக் கலந்திருந்த எங்கள் காதலைப் பிரிக்க ராசியில் சனி புகுந்தது போல... சூழ்நிலைச் சதியொன்று சுற்றி வளைத்தது என்கிறார் கண்ணதாசன்.

  கோவலன் பிரிந்தா னேனும்

  கோதை கண்ணகியாள் கொண்ட

  ஆவலை மனத்தே வைத்து

  அந்தநாள் வாழ்ந்தது போல

  காவியத் தலைவி தானும்

  கவலையால் வாழ்ந்திருந்தாள்

  பாவியோ அவளை விட்டு

  பத்தாண்டு பிரிந்திருந்தேன்,

  கலைஞரை கண்ணகியாகவும், தன்னை கோவலனாகவும் உருவகப்படுத்தி... பத்தாண்டு காலம் அந்தக் காவிய தலைவியை பிரிந்த பாவியாகி விட்டேன் என்று வருந்துகிறார் கண்ணதாசன்.

  நெஞ்சத்தில் இருந்த நாட்கள்

  நித்தமும் கதைகள் பேசி

  மஞ்சத்தில் கிடந்த நாட்கள்

  மனம் விட்டுக் கலந்து பேசிக்

  கொஞ்சித்தான் காதல் முற்றும்

  குவித்திட்ட நாட்கள் எல்லாம்

  பஞ்சத்தில் ஏழை பார்க்கும்

  பழங்கணக் கானதின்று

  என்று பஞ்சத்தில் அடிபட்ட ஏழை, பழைய கணக்குகளை பார்ப்பது போல நானும் அந்த நிலைக்கு ஆளாகி விட்டேன் என்கிறார்.

  மாதை நான் பிரிந்த பின்பு

  மயக்கமே நலமென்றெண்ணிப்

  போதையை துணையாய்ப் பெற்றேன்.

  புலம்பினேன்...! பாடிப் பாடி

  வாதையில் பிறந்து வந்த

  வார்த்தைகள் கவிதையாகிக்

  கோதையை என்பால் மீண்டும்

  கொடுத்ததை இன்று கண்டேன்...

  எனது காதலியைப் பிரிந்த துயரத்தைப் போக்க போதை தான் துணையாய் வந்தது... அந்த வாதையிலும் கவிதை பாடி எனதன்புக் கோதையிடம் நெருங்கி விட்டேன் என்கிறார் கண்ணதாசன்.

  மருத்துவப் பட்டம் தந்தார்

  மங்கைக்கு நியாயம் தானே...

  வருத்திய நோயை தீர்க்கும்

  வகையினாற் பொருத்தந்தானே...

  திருத்தி என் உறவை அன்னாள்

  சீர் செய்து பட்டம் பெற்றார்

  சரித்திரம் அவளை ஏற்றால்

  தலைவனும் எனையும் ஏற்கும்...

  எனது உடல் நலம் நன்றாக ஆகவேண்டுமென்பதற் காகவே, எனது புதல்வனுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கொடுத்தாள் கலைஞர் என்னும் எனது காதலி என்று நன்றியுடன் குறிப்பிடுகிறார் கண்ணதாசன்...

  இப்படி பல உதவிகளை தக்க நேரத்தில் செய்ததை எல்லாம்... மனமுருகி குறிப்பிடுகிறார்...

  போனதெல்லாம் போகட்டும்... இதோ திரும்பி வந்து விட்டேன். காதலியாம் அவளை நான் ஆசையோடு பார்க்கின்றேன். நன்றியும் சேர்ந்தது போல் நடுவகிடு மட்டும் தெரிகிறது. மலர்கள் சூடுகிற அளவுக்கு இருந்த அந்த கூந்தலைக்காணவில்லை என்று நகைச்சுவையாக குறிப்பிடுகிறார் கண்ணதாசன்.

  "சென்றநாள் சென்று மாயத்

  திரும்பினோம் புதுவாழ்வுக்கு

  இன்றுதான் அவளை மீண்டும்

  ஏறிட்டுப் பார்க்கின்றேன் யான்

  நன்றியும் நேர்மையும் போல்

  நடுவகி டெடுத்து வண்ணக்

  கொன்றைவார் மலர்கள் சூடும்

  கூந்தலைக் காணவில்லை"

  என்று முடிக்கிறார்... அதுமட்டுமல்ல கலைஞரின் தலை வழுக்கை சந்திரனைப் போல் ஒளி வீசியது என்கிறார். அதனாலென்ன எங்கள் காதலில் எந்த வழுக்கலும் இல்லை. தடைகளும் இல்லை என்கிறார்...

  சந்திர வதனம் அன்று

  சந்திரன் தலையில் ஏறி

  இந்திர சபையைக் கூட்டும்

  எழிலான வழுக்கை இன்று

  அந்தியில் பார்க்கும் போது

  அதுவேறு இதுவேறல்ல

  மந்திரந்தானே வேண்டும்

  வழுக்கையா தடைகள் போடும்?

  மேலும்... எனது காதலி ஒரு கேள்வி எனைக்கேட்டு என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டாள். என்னை விட்டுப் பிரிந்து சென்றபின் யார் யாரைப் பார்த்தீர் என்றாள். பல பேரைப் பார்த்தது உண்மைதான். ஆனால் உன்னைப் போல் வருமா? என்றேன் என நகைச்சுவையோடு சொல்கிறார் கண்ணதாசன்.

  "தத்தையாள் ஓர்நாள் என்னைத்

  தனியாக கேட்டு வைத்தாள்.

  அத்தான் நீர்இது வரைக்கும்

  யார் யாரைப் பார்த்தீர் என்றாள்.

  பத்தாண்டு காலத்தில் நான்

  பார்த்தவர் பலபேருண்டு

  அத்தனை பேரில் உன்போல்

  ஆசைதான் எவர்க்கும் இல்லை"

  இந்தக் கவிதையை கண்ணதாசன் படிக்கும் போது அரங்கமே அதிர்ந்ததாக இக்கவியரங்கில் பங்கேற்ற கவிஞர் முத்துலிங்கம் சொல்கிறார்.

  சரி சரி... இனிமேல் இப்படி ஓர் பிரிவு நம்மில் வரக்கூடாது. இன்றைய சந்திப்பில் நாம் எப்படி இன்புற்றிருக்கிறோமோ... அதுபோல் நீ, இன்னும் கூடுதல் மகிழ்ச்சியாக இருப்பதற்காகவே மதுக்கடையைத் திறந்து வைத்துள்ளேன் என்ற வரிகளை கண்ணதாசன் படித்த போது பங்கேற்ற கலைஞர் உட்பட அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். கவியரங்கம் களை கட்டி நின்றது என்கிறார் கவிஞர் முத்துலிங்கம்.

  "இனியஎன் காதல் பெண்ணாள்

  இளையபுன் னகையை வீசி

  சென்றநாள் போதும்...மீண்டும்

  செல்ல நான் ஏலேன் என்றாள்...!

  இன்றுபோல் என்றும் உன்னை

  இன்பத்தில் வைத்திருக்க

  மன்றத்தில் இழுத்துப்போட்டு

  மதுக்கடை திறந்து வைத்தாள்..."

  என்பதே அக்கவிதை....

  காலங்கள் மாறும்; காணும்

  காட்சிகள் மாறும்; போடும்

  கோலங்கள் மாறும், கொண்ட

  கொள்கைகள் மாறும்; இந்த

  ஞாலமே மாறும்போது

  நாம் மாறாதிருந்தால் போதும்

  சேலமே மீண்டும் எம்மைச்

  சேர்த்ததும் நீதான்- நன்றி...!

  என்று... முத்திரை வரிகளால் காதலியான கலைஞருக்கு கவிதையால் முத்த மழை பொழிந்தார் கண்ணதாசன். இப்படித்தமிழகத்தின் முதல்வரை காதலியாக்கிப் பாடுகிற தைரியம் எவருக்கு வரும்? அது கண்ணதாசனுக்கு மட்டுமே உரியது. எனென்னால் அவர்களின் நட்பு அந்த அளவுக்கு ஆழமானதாய் இருந்தது.

  கண்ணதாசா- என் எண்ணமெலாம் இனிக்கும் நேசா...

  கவிதை மலர்த்தோட்டம் நீ.. உன்னைக்

  காலமெனும் பூகம்பம் தகர்த்து...

  தரைமட்டமாக்கி விட்டதே...

  கைநீட்டி கொஞ்சுவோர் பக்கமெலாம்

  கரம்நீட்டி தாவுகிற குழந்தை நீ...

  கல்லறைப் பெண்ணின் மடியினிலும்

  அப்படித்தான் தாவிவிட்டாயோ...?

  என்று கண்ணதாசன் மறைந்த போது கலைஞர் எழுதிய கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

  அடுத்த வாரம் சந்திப்போம்...!

  Next Story
  ×