search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கருணை தெய்வம் காஞ்சி மகான்
    X

    கருணை தெய்வம் காஞ்சி மகான்

    • கருணை தெய்வம் காஞ்சி மகான் குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    • பெரியவாளுடனான பல தரிசனங்களுக்குப் பிறகுதான், பக்தியைப் பற்றித் தன்னால் தெரிந்து கொள்ள முடிந்தது என்பார் கல்யாணராமன்.

    மகா பெரியவாளின் பரிபூரண அருளைப் பெற்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்களில் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.கல்யாணராமனும் ஒருவர்.

    நரம்பியல் தொடர்பான மருத்துவத் துறையில் இவருக்கென்று தனி இடம் உண்டு. எத்தனையோ விருதுகளைப் பெற்றுக் குவித்தவர்.

    பெரியவாளின் அத்யந்த பக்தரான இவருக்கு தனிப்பட்ட அனுபவங்கள் ஏராளம் உண்டு.

    ஒன்றா? இரண்டா? ஏராளம்.

    பூர்வ ஜென்மங்களில் டாக்டர் கல்யாணராமன் செய்த புண்ணியத்தின் விளைவாகவும், பெற்றோரின் ஆசியினாலும் மகா பெரியவாளை அடிக்கடி தரிசிக்க வாய்ப்பு ஏற்பட்டது.

    குருவின் அருகே நெருங்குவதற்கு, சம்பந்தப்பட்ட குருவின் ஆசி வேண்டும். அவரது அழைப்பு இல்லாமல், விருப்பம் இல்லாமல் ஒருவர் அத்தனை சுலபத்தில் நெருங்கி விட முடியாது.

    டாக்டர் கல்யாணராமனுக்குப் பெரியவாளிடம் இருந்து கிடைத்த அழைப்பும் ஆசியும் அமோகம் என்றே சொல்ல வேண்டும்.

    பிரதோஷம் மாமா என்கிற பிரதோஷம் வெங்கட்ராமய்யர் மகா பெரியவாளின் அத்யந்தமான பக்தர் என்பதை நாம் அறிவோம். இவருக்குப் பெரியவாளிடம் இருந்த பக்தியை விவரிப்பதற்கு வார்த்தைகளே இல்லை. ஒவ்வொரு பிரதோஷ தினத்தின்போதும் மகா பெரியவா தரிசனத்துக்குச் சென்று விடுவார். மகான் எங்கே இருந்தாலும் தேடிப் போய் தரிசனம் செய்வார். அப்படிப்பட்ட ஒரு பக்தி இவருக்கு!

    ரெயில்வேயில் பணி புரிந்தவர் பிரதோஷம் மாமா. எனவே, சென்னை எழும்பூரில் ரெயில்வே குடியிருப்பில் வசித்து வந்தார். அப்போது அவரது இல்லம் அருகே வசித்து வந்தவர்தான் டாக்டர் கல்யாணராமன்.

    மகா பெரியவாளுடன் ஏராளமான அனுபவங்கள் கல்யாணராமனுக்குக் கிடைப்பதற்குக் காரணம் - பிரதோஷம் மாமாதான். பெரியவாளைத் தரிசிக்கத் துவங்கிய பின்தான் தன் வாழ்க்கையில் எத்தனையோ நல்ல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக இவரே குறிப்பிட்டிருக்கிறார்.

    பெரியவாளுடனான பல தரிசனங்களுக்குப் பிறகுதான், பக்தியைப் பற்றித் தன்னால் தெரிந்து கொள்ள முடிந்தது என்பார் கல்யாணராமன்.

    மகா பெரியவா பீடாதிபதி ஆனதைக் கொண்டாடும் வகையில் ஒரு விழாவை சிறப்பாக எடுத்து நடத்தினார் பிரதோஷம் மாமா.

    சென்னையில் இந்த விழாவை ஹோமம், பாராயணம், அன்னதானம், ஊர்வலம் என்று பலரும் பரவசப்படும்படி விமரிசையாக நடத்தினார்.

    இதற்கான ஊர்வலத்துக்கு ஒரு ரதம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த ரதத்தில் அலங்கரிக்கப்பட்ட மகா பெரியவாளின் திருவுருவப் படம் பிரதானமாக வைக்கப்பட்டது. ரதம் முழுக்க வண்ண வண்ணப் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    எழும்பூரில் பிரதோஷம் மாமா வசிக்கின்ற இல்லத்தில் இருந்து இந்த ஊர்வலம் புறப்பட்டு, புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் வரை சென்று திரும்பி வருவதாக ஏற்பாடு.

    மேள தாளம், வாணவேடிக்கை, வேத பாராயணம், திருமுறை பாராயணம் என்று இந்த ஊர்வலம் திரளான பக்தர்களோடு புறப்பட்டது. பெரியவா ரதத்தோடு வந்த பக்தர்கள் எழுப்பிய 'ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர' கோஷம் விண்ணையே முட்டியது.

    ஊர்வலம் என்றால் அதற்கு யானை, குதிரை போன்றவை அழகு. அதுவும் ஆன்மிகம் சார்ந்து நடக்கின்ற ஊர்வலங்களில் இவற்றை நாம் அதிகம் பார்த்திருக்கிறோம். அதுபோல் இந்த மகா பெரியவா ரத யாத்திரையிலும் யானை, குதிரை இடம் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டார் பெரியவா பக்தரான முக்கூர் ஸ்ரீநிவாச்சார்யர். இதற்காக சென்னையில் அமைந்துள்ள ஒரு மகாலட்சுமி திருக்கோயிலில் இருந்து இவற்றை ஏற்பாடு செய்து ஊர்வலத்துக்கு அனுப்பி இருந்தார்.

    வெகு சிறப்பாக ஊர்வலம் நடந்து முடிந்தது. விழாக் காட்சிகளைப் படம் பிடிக்க ஒரு புகைப்படக்காரர் பிரத்தியேகமாக அமர்த்தப்பட்டிருந்தார். இந்த ஊர்வலக் காட்சிகளை படம் எடுத்துத் தள்ளினார் அவர்.

    பொதுவாக பெரியவா தொடர்பான ஏதேனும் வைபவம் பூர்த்தியான பின், அடுத்த நாள் இந்தப் பிரசாதத்தைக் கொண்டு போய் பெரியவாளிடம் சமர்ப்பிப்பார் பிரதோஷம் மாமா. அதன்படி அடுத்த நாள் பிரசாதங்களைக் கொண்டு போய் பெரியவாளிடம் சேர்த்து நமஸ்கரித்தார் பிரதோஷம் மாமா. அவற்றை ஏற்றுக் கொண்டு ஆசிர்வதித்தார் மகான்.

    இதை அடுத்த ஒரு சில நாட்கள் கழித்து, இந்த வைபவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒரு ஆல்பத்தில் போட்டு பிரதோஷம் மாமாவிடம் கொண்டு வந்து சேர்ப்பித்தார் புகைப்படக்காரர்.

    ஆல்பத்தைப் புரட்டிப் பார்த்த பிரதோஷம் மாமா பெரிதும் மகிழ்ந்தார். இந்த ஆல்பத்தை உடனடியாக பெரியவாளிடம் கொண்டு போய்க் காண்பிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார். யாரிடம் கொடுத்து அனுப்பலாம் என்று யோசித்த பிரதோஷம் மாமாவுக்கு டாக்டர் கல்யாணராமன் நினைவுக்கு வந்தார்.

    உடனே அவரை வரவழைத்து ஆல்பத்தைக் கொடுத்தார். பெரியவாளிடம் இதைக் காண்பித்து விட்டு வருமாறு கல்யாணராமனிடம் சொன்னார் பிரதோஷம் மாமா.

    ஆல்பத்தைக் கையில் வாங்கிய கல்யாணராமனுக்கு சந்தோஷமான சந்தோஷம். காரணம் மகா பெரியவாளின் அருகே செல்வதற்கும், அந்த மகானுடன் சம்பாஷணை நிகழ்த்துவதற்கும் தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறதே என்கிற பூரிப்புதான்!

    பெரியவா திருச்சந்நிதிக்கு ஒருவரை அனுப்ப நேர்கிறது என்றால், அதற்குத் தகுதியான ஒருவரைத்தானே பிரதோஷம் மாமா தேர்வு செய்து அனுப்புவார்! அந்த வகையில் டாக்டர் கல்யாணராமன் தேர்வானார்.

    பெறற்கரிய பொக்கிஷமான அந்த ஆல்பத்தை எடுத்துக் கொண்டு பெரியவா திருச்சந்நிதிக்குப் புறப்பட்டார்.

    'பிரதோஷம் மாமாவிடம் இருந்து வருகிறார்... சென்னையில் நடந்த விழா ஆல்பத்தைப் பெரியவாளிடம் காண்பிப்பதற்கு வருகிறார்' என்ற காரணத்தால், நேராக மகானிடம் அழைத்துச் செல்லப்பட்டார் டாக்டர் கல்யாணராமன்.

    பெரியவா தரிசனத்துக்குத் திரளான பக்தர்கள் காத்துக் கொண்டிருந்தனர். மகானின் பார்வை தங்கள் பக்கம் திரும்பாதா என்று ஏங்கிக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

    'பிரதோஷம் மாமாவிடம் இருந்து டாக்டர் கல்யாணராமன் மூலமாக புகைப்பட ஆல்பம் வந்துள்ளது' என்கிற தகவல் தொண்டர்கள் மூலமாக பெரியவாளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

    புன்னகையுடன் கல்யாணராமனை அருகே அழைத்து அவரிடம் இருந்த ஆல்பத்தை வாங்கிக் கொண்டார் மகான்.

    அதில் இருக்கின்ற புகைப்படங்களை ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிப் பார்த்தார் பெரியவா. பார்த்து முடித்ததும், ஆல்பத்தைத் திரும்பக் கொடுத்தார் கல்யாணராமனிடம்.

    அதைப் பெற்றுக் கொண்ட டாக்டர், சென்னை திரும்புவதற்கு உத்தரவு கேட்டார்.

    டாக்டர் கல்யாணராமனை தன் விழிகளால் ஊடுருவிப் பார்த்தார் பெரியவா. பிறகு, ''இந்த ஆல்பத்துல இருக்கிற படங்களை எல்லாம் நீ பாத்தியா?'' என்று கேட்டார்.

    ''பார்த்தேன் பெரியவா...'' - பவ்யமாகச் சொன்னார் கல்யாணராமன்.

    ''ஊர்வலத்துல ஒரு யானை போனதே... அந்த யானையோட நெற்றியில நாமம் இருந்ததா?''

    ''நாமம் இருந்தது பெரியவா...'' - பதற்றத்தின் காரணமாக சற்றுத் தயங்கியபடி பதில் வந்தது டாக்டர் கல்யாணராமனிடம் இருந்து.

    ''அந்த ஆல்பத்தை நீ இன்னும் ஒரு தடவை வேணா பாத்துட்டு சரியா சொல்லு...'' என்றார் பெரியவா புன்னகையுடன்.

    ஆல்பத்தைப் புரட்டிப் பார்த்தார் கல்யாணராமன். யானையின் நெற்றியில் நாமம் காணப்பட்டது (காரணம் - சென்னையில் அமைந்துள்ள மகாலட்சுமி ஆலயத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை இது).

    ''யானைக்கு நாமம் இருக்கு பெரியவா'' என்றார் கல்யாணராமன்.

    ''அந்த ஆல்பத்துல குதிரையைப் பாத்தியோ?'' - பெரியவாளின் அடுத்த கேள்வி இது.

    ''பாத்தேன் பெரியவா... அன்னிக்கு யானையோடு குதிரையும் வந்திருந்தது.''

    ''குதிரையைப் பாத்தியோல்யோ... அதுல ஏதாவது விசேஷம் தெரிஞ்சுதா உனக்கு?'' என்று டாக்டர் கல்யாணராமனிடம் கேட்டார் பெரியவா. என்ன பதில் சொல்வதென்று சட்டென்று தெரியவில்லை கல்யாணராமனுக்கு.

    'என்ன பதில் சொல்லப் போகிறார்' என்று இவரையே தீர்க்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் பெரியவா.

    (தொடரும்)

    swami1964@gmail.com

    Next Story
    ×