search icon
என் மலர்tooltip icon

  சிறப்புக் கட்டுரைகள்

  மாற்றுவதற்கு முயற்சிப்போம்!
  X

  மாற்றுவதற்கு முயற்சிப்போம்!

  • மறைத்தும் ஒளித்தும் செல்போனை பயன்படுத்தி வேண்டாத பல குப்பைகளை மண்டையில் இறக்கி வாழ்க்கையை அழித்துக் கொள்ளும் இளம் பிராயத்தினர் ஏராளம்.
  • செல்போனைவிட சிறந்த வழிகள் உறவு, நட்பு, புத்தகம் என்பதால் இவற்றின் முக்கியத்து வத்தினை உணரச் செய்ய வேண்டும்.

  அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்வினை பலர் அறிந்திருக்கலாம். இருப்பினும் அதனை மீண்டும் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  ஒரு இளம்பெண் போலீஸ் அவசரப் பிரிவிற்கு போன் செய்கிறாள். எனக்கு ஒரு பீட்சா வேண்டும் எனக் கூறுகின்றாள். மறுபுறத்தில் இருந்த ஆபீசர் தவறான போன் என்று நினைத்து 'ராங்க் நம்பர்' என்று கூறி வைத்து விடுகின்றார். அப்பெண் மீண்டும் போன் செய்கின்றாள். நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. எனக்கு ஒரு 'பீட்சா' வேண்டும் என்கின்றாள்.

  ஆபீசர் ஒரு சில நொடிகளில் நிலைமையை புரிந்து கொண்டார். உடனே அவர் "நான் கேட்பதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்" என்றார்.

  உங்கள் வீட்டில் மர்ம நபர்கள் உள்ளார்களா?'

  ஆமாம். எனக்கு பெப்பர் தூள் போட வேண்டும்

  உங்களை உடல் ரீதியாக காயப்படுத்தி உள்ளானா?

  இல்லை. எனக்கு கொடை மிளகாய் வேண்டாம்

  இப்படி பல கேள்விளை அவர் கேட்க அந்த இளம்பெண் கெட்டிக்காரத்தனமாக பதில் கூறினாள்.

  சிறிது நேரத்தில் அவள் வீட்டில் அழைப்பு மணி ஒலித்தது. கதவை திறந்தவுடன் 'பீட்சா' கொண்டு வருபவர் போல் உடை அணிந்த போலீஸ் 'பீட்சா'வுடன் வாசலில் இருந்தனர். நொடிப் ெபாழுதில் ஒளிந்திருந்த மற்ற போலீசார் உள்ளே நுழைந்தனர். மர்ம நபர்களை சுற்றிப் பிடித்தனர். அப்பெண்ணை காப்பாற்றினார்கள். அப்பெண் பாராட்டப்பட வேண்டியவள்.

  நம் குழந்தைகளுக்கு நாம் இது போல் சில ரகசிய தற்காப்பு முறைகளை சொல்லிக் கொடுத்துள்ளோமா? சிறு குழந்தைகளுக்குக் கூட சொல்லிக் கொடுக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் உள்ளோம். இதனை உணர்ந்து செயல்படு வோமாக...

  இதே போன்று மற்றொரு நிகழ்வினையும் பார்ப்போம். இதுவும் வெளிநாட்டில் நடந்தது தான்.

  வெளிநாடுகளில் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவியரின் ஸ்கூல் பஸ் என்பதற்கு அரசாங்கம் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பள்ளி பஸ் என்றால் முன்னும், பின்னும் பக்கவாட்டில் மிக தள்ளியே மற்ற வாகனங்கள் செல்லும். பஸ் நின்றால் பின்னால் வெகு தொலைவில் தள்ளி மற்ற வாகனங்கள் நிற்கும். குழந்தைகளின் பாதுகாப்பு என்பதில் மிக கண்டிப்பாய் இருப்பர்.

  இந்த நிலையில் ஒரு ஸ்கூல் பஸ்சினை ஒரு டிரைவர் ஓட்டி செல்கிறார். திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு விட்டது. அவரும் குழந்தைகள் நலன் கருதி பஸ்சை நிறுத்த முயலுகிறார். அவரால் முடியவில்லை. இதை கவனித்த பஸ்சில் இருந்த 7-ம் வகுப்பு சிறுவன் ஒருவன் ஓடி வந்து அவருக்கு உதவி பஸ்சை ஓரமாக நிறுத்துகிறார். வண்டியில் யாருக்கும் பாதிப்பில்லை. வெளியில் எந்த வண்டியுடனும் மோதவில்லை. அதற்குள் போலீஸ் ஆம்புலன்ஸ் வந்து நிைலமை கட்டுக்குள் வந்தது.

  டி.வி., பேப்பர், உலகம் அந்த சிறுவனை பாராட்டியது. பஸ்சில் இத்தனை பேர் இருக்க இந்த பையன் மட்டும் டிரைவரை எப்படி கவனித்தார்? எப்படி உதவினார்? என்று கேட்ட போது கிடைத்த பதில் என்ன தெரியுமா? வண்டியில் அனைத்து சிறுவர்களும் செல்போனில் மூழ்கி இருந்தனர். இச்சிறுவனின் பெற்றோர் கடும் முயற்சி எடுத்து இப்பையன் செல்போனுக்கு அடிமை ஆகாமல் வைத்துள்ளனர். இதனால் இச்சிறுவன் வெளிஉலகை, தன்னை சுற்றி நிகழ்பவனவற்றை பார்க்கிறான். இதனால் தான் பல உயிர்களை அச்சிறுவனால் காப்பாற்ற முடிந்தது. மற்றவர்கள் தன் உயிரை காத்துக் கொள்ள கூடிய விழிப்புணர்வு கூட இல்லாமல் இருந்துள்ளனர்.

  நம் ஊரில் இந்த நிலை மிக அதிகமாக உள்ளது. மறைத்தும் ஒளித்தும் செல்போனை பயன்படுத்தி வேண்டாத பல குப்பைகளை மண்டையில் இறக்கி வாழ்க்கையை அழித்துக் கொள்ளும் இளம் பிராயத்தினர் ஏராளம்.

  பெற்றோர்கள் இதனை கடுமையாக போராடி ஜெயிக்கத் தான் வேண்டும்.

  நல்ல முன் மாதிரிகள் தேவை. பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் விட சிறந்த முன் மாதிரிகள் யார் இருக்க முடியும். எனவே அவசியமின்றி செல்போனில் மூழ்குவ தனை பெற்றோர்கள் தவிர்த்தாலே போதும். பிள்ளைகளை கட்டுப்பாட்டிற்குள் நம்மால் கொண்டு வர முடியும்.

  இவ்வளவு நேரம் விளையாட்டு, இவ்வளவு நேரம் செல்போன் என எதனையும் முறையாக வரையறுத்து அதனை பழக்கப்படுத்த வேண்டும்.

  * செல்போனைவிட சிறந்த வழிகள் உறவு, நட்பு, புத்தகம் என்பதால் இவற்றின் முக்கியத்து வத்தினை உணரச் செய்ய வேண்டும்.

  * இதைச் செய்யாதே எனக் கூறும் பொழுது இதனைச் செய் என்ற மாற்று வழியையும் காட்ட வேண்டும்.

  * சாப்பிடும் பொழுது இதனை பயன்படுத்தக் கூடாது. உணவில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

  * அடிக்கடி சில நிமிடங்கள் ஆழ்ந்து மூச்சை இழுத்து விடுவது செய்யும் வேலையில் கவனத்தைக் கூட்டும்.

  * இந்த நொடியில் இருக்க வேண்டும். கடந்த காலம், எதிர்காலம் என்ற நினைப்புகள் வேண்டாம்.

  * அன்றாடம் குறித்த நேரத்தில் தியானம் செய்யுங்கள்.

  * சில நிமிடங்கள் என ஆரம்பித்து உங்களால் முடியும் நேரம் வரை தொடரலாம்.

  * யோகா கண்டிப்பாய் 'ஸ்ட்ரெஸ்' பாதிப்பினை குறைக்கும்.

  தூக்கம் நன்கு இருக்கும். உயர் ரத்த அழுத்தம் குறையும். இவைகளைச் செய்யும் பொழுது மனம் கட்டுப்படுவதால் செல்போனில் மூழ்க மாட்டார்கள்.

  நல்ல முன் மாதிரிகள் கண் எதிரே குழந்தைகளுக்கு அன்றாடம் தேவை. நல்ல பழக்க வழக்கங்கள் தேவை. இவைகள் இல்லாத பொழுது மனிதன் மனம் போன போக்கில் போய் கொடூர தவறுகள் செய்பவனாகிறான். தேவையா? சிந்திப்போம் முயன்று வருங்கால சந்ததியினரை நல்வழி படுத்துவோம்.

  காலையில் உங்கள் பிள்ளைகளுக்கு உங்களால் கீழ்க்கண்ட பழக்கங்களை ஏற்படுத்த முடிகிறதா? உங்களை கண்டிப்பாக சமுதாயம் பாராட்டும்.

  மற்றொரு செய்தியினை நான் காண நேர்ந்தது. ஒரு கல்யாண விருந்தில் 11-ம் வகுப்பு படிக்கும் பையனுக்கு பாட்டி ஊட்டி விட்டுக் கொண்டிருந்தார். பையனோ செல் போனில் மூழ்கி இருந்தார்.

  நம் நாட்டில் தாய், தந்தை பாசம், தாத்தா, பாட்டி பாசம் இதற்கு வானம் தான் அளவு. செய்தி உண்மையோ, பொய்யோ தெரியாது. ஆனால் நான் பார்த்த பல வீடுகளில் இவ்வாறு நிகழ்கின்றது. இந்த இடத்தில் நாம் வலியுறுத்த விரும்புவ தெல்லாம் செல்போன் வேண்டாமே என்பதுதான்.

  இன்றைய இளம் பெண்கள் தங்களின் போட்டோக்களை பகிரும் பொழுது அவர்களை அறியாமலேயே அவர்களுக்கு ஆபத்து ஏற்படுகின்றது. ஒரு இளம் பெண் காலர் டியூனாக ஒரு கவர்ச்சியான பாட்டினை வைக்க அதன் மூலம் அப்பெண் வரவழைத்துக் கொண்ட பிரச்சினைகள் ஏராளம், ஏராளம்.

  இன்று அனைவரின் வாழ்விலும் தவிர்க்க முடியாத ஒன்றாக செல்போன் ஆகிவிட்டது. இதன் நன்மைகளும் ஏராளம்தான். கூடவே இளைய தலைமுைறக்கான கடுமையான பாதிப்புகளையும் நாம் பார்க்க வேண்டி உள்ளது.

  முக்கியமாக எந்நேரமும் செல்போனில் மூழ்குபவர்கள் கோபம், படபடப்பு, மனச்சோர்வு இவற்றிற்கு ஆளாகின்றனர். கண் சோர்வு, முதுகுவலி, கழுத்து வலி, கதிர்வீச்சு என ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

  ஒருவரின் திறமையை வளர்த்துக் கொள்வதில் பாதிப்பு, உறவுகளுடன் கலந்து பழகாத பாதிப்பு, தனிமை என ஒருவரை நரகத்திற்குள் தள்ளி விடுகின்றன.

  இதனை எப்படி சரி செய்வது?

  எந்த விதத்தில் பெற்றோர்களும், ஆசிரியர்களும் இப்பிரச்சினையை கையாளலாம்? ஆம், நாம் தானே இதனை சரி செய்தாக வேண்டும். கீழ்கண்ட முறைகளை முயற்சி செய்து பார்ப்போம்.

  முதலில் குழந்தைகள் திருந்த வேண்டும் என்றால் அவர்களுக்கு காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் நீர் அருந்துகின்றார்களா?

  * செல்போனை பார்க்காமல் இருக்கின்றார்களா?

  * 20 நிமிடம் உடற்பயிற்சி செய்கின்றார்களா?

  * 20 நிமிடம் மூச்சுப் பயிற்சி செய்கின்றார்களா?

  * அன்றைய நாளின் வேலைகளை குறிப்பெடுத்து செய்கின்றார்களா?

  * காலையில் குளிக்கின்றார்களா?

  * காலை உணவினை தவறாது எடுத்துக் கொள்கின்றார்களா?

  * உண்மையில் நீங்கள் சிறந்த பெற்றோர்தான். வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி என்று சொல்லிக் கொடுத்திருக்கிறீர்களா?

  * குறிக்கோள் இருக்க வேண்டும்.

  * உயர்வான, பண்பான குறிக்கோள்கள் வேண்டும்.

  * கடினமாய் உழைக்க வேண்டும்.

  * செய்யும் வேலையினை, படிக்கும் படிப்பினை விரும்பி செய்ய வேண்டும்.

  * படிப்பு, விளையாட்டு, பொழுது போக்கு, நண்பர்கள் இவைகளை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

  * தகுதியானவர்களிடம் இருந்து அறிவுரை பெற வேண்டும்.

  * உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

  * அவர்களின் மூலதனம் அவர்களின் மூளைதான். இது தெரிந்தால் அவர்கள் மனம் கண்ட கேளிக்கைகளில் மூழ்காது.

  * ரத்த உறவுகளை கொல்லும் குடும்ப உறுப்பினர்கள், பாலியல் தொல்லையால் சிறுமிகளை நாசமாக்கும் சிறுவர்கள் என பயங்கரமான செய்திகளை அன்றாடம் கேள்வி படுகின்றோமே இவை அனைத்துமே மனம், புத்தி இவைகளின் கோணல்கள்தான் காரணமாகின்றன.

  இப்படி ஒரு வாழ்க்கை தேவையா? இது கண்டிப்பாய் ஒரு மனிதனுக்கு நிம்மதி தராது. மாற்றுவோம். அவரவரால் ஆன முயற்சியினை செய்து மாற்றுவோம்.

  இளைய சமுதாயத்தினரின் மன நலத்தினை ஆரோக்கியமாக மாற்றுவோம். இது இல்லாமல் உடல் நலம் மட்டுமே என்பது ஓட்டை பானையில் அமிர்தம் ஊற்றுவதற்கு சமம். எனவே முயற்சிப்போம்! மாற்றுவோம்!!

  Next Story
  ×