search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    முதுமைக்கு அவசியமாகும் வெளிப்புற சிகிச்சை முறைகள்
    X

    முதுமைக்கு அவசியமாகும் வெளிப்புற சிகிச்சை முறைகள்

    • நொச்சி இலைக்கு வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உள்ளது.
    • வர்ம மருத்துவ முறைகளை நாடுவதால் முதுமையில் வலி நிவாரணி மருந்துகளை ஓரங்கட்ட முடியும்.

    முதுமையில் வயது அதிகரிக்க அதிகரிக்க மாத்திரைகளின் பயன்பாடும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. ஒருகட்டத்தில் மருந்து மாத்திரைகள் இல்லாமல், முதுமை நகராது என்ற சூழலும் உண்டாகிவிடுகிறது. அத்தகைய சூழல் முதுமைக்கு மிகவும் சவாலான ஒன்று தான்.

    ஏனெனில் அதிக மருந்துகள் பயன்பாடு உடலுக்கு பல்வேறு பின்விளைவுகளை தருவதாக நவீன ஆய்வுகள் சுட்டிக்காட்டு கின்றன. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் இந்நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்காவில் அதிக இறப்புகளை உண்டாக்கும் நோய்நிலைகள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பது மருந்துகளின் எதிர்பாராத பின்விளைவுகள் என்கின்றன ஆய்வுத்தகவல்கள். இது மிகவும் அதிர்ச்சிகரமான ஒன்று தான்.

    அமெரிக்காவுக்கே அத்தகைய நிலை என்றால் வளர்ந்து வரும் நாடான நமக்கு சொல்லவே வேண்டாம். எண்ணிப்பார்க்கவே கவலையாக உள்ளது. ஏனெனில் வணிக ரீதியாக மாறிவிட்ட மருத்துவம், அடுக்கடுக்கான மருந்துகளை எழுதி பழக்கப்படுத்தி விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் முதியோர்கள் தான்.

    ஆயுளை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் வேறு வழியின்றி அத்தகைய மருந்துகளை நாடும் முதியவர்கள் கொஞ்சம் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளை பின்பற்றத் துவங்குவது அவசியமான ஒன்று.

    எதற்கெடுத்தாலும் மருந்து மாத்திரைகள் என்ற நிலையை புறந்தள்ளி கொஞ்சம் பாரம்பரியமாக பழகி வந்த வெளிப்புற சித்த மருத்துவ முறைகளை கையாளத் துவங்க வேண்டும். இதன் மூலம் பல்வேறு நோய்நிலைகளுக்கு உள் மருந்துகள் இல்லாமலே, நல்லதொரு பலனை எட்ட முடியும். சித்த மருத்துவத்தில் வெளிப்புற சிகிச்சை முறைகளைப் பற்றி உள் மருத்துவ முறைகளுக்கு இணையாக சொல்லப்பட்டுள்ளது. சித்த மருத்துவம் மருத்துவ முறைகளை அக மருத்துவம், புற மருத்துவம் எனறு இரண்டாக பிரித்து கூறுகின்றது.

    அதன்படி உள் (அக) மருந்துகள் மொத்தம்-32. வெளி (புற) மருந்துகள் மொத்தம்-32. இத்தகைய புற மருந்துகளை முதுமையில் பயன்படுத்த துவங்குவது உள்பிரயோக மருந்துகளை குறைக்க உதவும். வெளி சிகிச்சையிலே தீர்வினை எட்ட முடியும்.

    சித்த மருத்துவ வெளிப்புற சிகிச்சை முறைகளான கட்டு, பற்று, ஒற்றடம், பூச்சு, வேது, வர்மம், தொக்கணம் ஆகிய சிகிச்சை முறைகள் முதுமையில் நல்ல பலன் தரக்கூடியதாக உள்ளன. சித்த மருத்துவ தைலங்கள் பற்றி பெரும்பாலான முதியவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் மருந்து மாத்திரைகளை எடுத்து சளைத்துப் போன மூட்டுவலிக்கு ஒரே நம்பிக்கை இந்த தைலங்கள் தான்.

    வீக்கம் இருப்பின் பிண்ட தைலம் எனும் மருந்தும், வேதனை இருப்பின் வலியைக் குறைக்கும் வாத கேசரி தைலம் எனும் மருந்தும் பேருதவி புரியும். வலுவிழந்த மூட்டுக்களை வலிமையாக்க உளுந்து தைலம் எனும் சித்த மருந்து உதவும். இவ்வாறு நோய்நிலைகளுக்கு தகுந்தாற் போல் தைலங்களைப் பயன்படுத்தி மூட்டுநோய்களை வெளிப்புற சிகிச்சையால் வெல்ல முடியும். இத்தகைய தைலங்களை நோய்நிலைமை அறிந்து மருத்துவர் ஆலோசனையுடன் பயன்படுத்துவது நல்ல பலன் தரக்கூடும்.

    சித்த மருந்தான சிற்றாமுட்டி தைலம் மூட்டு நோய்நிலைகளில் பெரும்பயன் தரக்கூடியது. சிற்றாமுட்டியின் (சிற்று+ஆம்+முட்டி) பெயர்க்காரணத்தை ஆராய்ந்தால் மூட்டுகளில் தங்கிய ஆமத்தை நீக்கும் என்று பொருள்படுவதாக உள்ளது சிறப்பு. மூட்டுகளில் தங்கும் 'ஆமம்' அவ்விடத்தில் வீக்கத்தையும், தேய்மானத்தையும் உண்டாக்கும் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகின்றது. ஆக, இந்த தைலம் முதுமையில் உண்டாகும் மூட்டுக்களின் தேய்மானத்தைக் குறைத்து மூட்டுகளை பாதுகாக்கும்.

    மூட்டுக்கள் சார்ந்த வலி மற்றும் வேதனையில் சித்த மருத்துவ தைலங்களை வெளிப்புறமாக தடவி ஒற்றடமிட கூடுதல் பலன் கிடைக்கும். மூட்டுக்களில் வீக்கம் உள்ள நிலையில் எளிமையாக மஞ்சள் பொடி மற்றும் கல்லுப்பு சேர்த்து வறுத்து துணியில் முடிந்து ஒற்றடமிடலாம். உப்புக்கும், மஞ்சளுக்கும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உள்ளது.

    அதே போல் நொச்சி இலையும் பல்வேறு மருத்துவ நன்மைகளை தரவல்லது. நொச்சி இலைகளை வெந்நீரில் போட்டு காய்ச்சி மூட்டுக்களில் ஒற்றடமிட நற்பலன் கிடைக்கும். வீக்கம், வேதனை குறையும்.

    நொச்சி இலைக்கும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உள்ளது. தழுதாழை எனும் வாதமடக்கி இலையை காய்ச்சிய ஆமணக்கு எண்ணெயில் தொட்டு ஒற்றடமிட்டு வருவதும் மூட்டுவலியை குறைக்க உதவும். குதிகால் வலியில் எருக்கிலை, எலுமிச்சை இவற்றை சேர்த்து துணியில் முடிந்து நல்லெண்ணெயில் சூடாக்கி தொடர்ந்து ஒற்றடம் கொடுத்து வர மருந்தில்லாமலே நல்ல குணம் காண முடியும்.

    பல்வேறு மூட்டு (ஆர்த்ரைட்டீஸ்) நோய்நிலைகளில் வீக்கம் குறைக்கும் மூலிகைகளான நொச்சி இலை, தழுதாழை, வாத நாராயண இலை, மஞ்சணத்தி ஆகிய இலைகளை உலர வைத்து அத்துடன் மஞ்சள் சேர்த்து பொட்டலமாக கட்டி வைத்துக் கொண்டு அவ்வப்போது ஒற்றடமிட பயன்படுத்தலாம்.

    பற்று போடும் பழக்கம் பாட்டி வைத்தியமாக நம்முடன் பயணித்து வருவது நாம் அறிந்ததே. நோய்நிலைக்கு ஏற்றார் போல் மூலிகைகளை அல்லது சித்த மருந்துகளை பற்றாக்கி போடுவதும் அதிக நன்மைகளை தரவல்லது. மூட்டுக்கள் வீக்க நிலையில் 'அமுக்கரா சூரணம்' எனும் சித்த மருந்தை முட்டை வெண்கருவுடன் குழைத்து பற்றுபோடுவது வீக்கம் குறைத்து பயனளிக்கும். இது தவிர மூசாம்பர பற்று, முட்டை பற்று போன்றவைகளும் பலன் தருவதாக உள்ளன.

    'உளுந்து பற்று' மூட்டு வலி, முதுகு வலி போன்ற பல நிலைகளில் பயன்தர வல்லது. கருப்பு உளுந்துடன், முருங்கை இலை, ஆவாரை இலை சேர்த்து பொடித்து முட்டை வெண்கருவுடன் பற்றாக்கி மூட்டு வலி, முதுகு வலி உள்ள இடங்களில் போட்டு வர நற்பலன் தரும். இது மூட்டுகளுக்கு வன்மையைத் தரக்கூடியது.

    ஆஸ்துமாவில் மருந்து மாத்திரைகளோடு மார்பில் வெற்றிலை ஒற்றடம் கொடுக்க விரைவில் நிவாரணம் கிடைக்கும். கற்பூராதி தைலம் எனும் சித்த மருந்தை மார்பில் தடவி கோதுமை தவிட்டினை வறுத்து லேசான சூட்டில் ஒற்றடம் கொடுக்க நோய்நிலை யில் முன்னேற்றம் கிடைக்கும். மேலும் ஆஸ்துமாவில் வேது பிடிப்பதும் நற்பலன் தரும். இருமல் அதிகம் இல்லாத போது நொச்சி இலை, மிளகு சேர்த்து காய்ச்சி வேது பிடிக்க குறிகுணம் குறையும்.

    அதே போல் மேல் சுவாசப்பாதை ஒவ்வாமையால் உண்டாகும் (பீனிசம்) மூக்கடைப்பு நிலையில் மஞ்சள் கொம்பினை சுட்டு முகர்தல் பலன் தரும். இந்நிலையில் நொச்சி இலை, மஞ்சள், தைல இலைகளை போட்டு வேது பிடிப்பது மூக்கடைப்பைக் குறைத்து நிம்மதியான தூக்கம் வர உதவி புரியும். மூக்கில் ஏற்படும் சளிச்சவ்வு வீக்க நிலையில் சித்த மருந்தான 'நாசிரோக நாசி தைலத்தை' வாரம் ஒருமுறை மூக்கில் நசியம் விடுவது பலன் தரக்கூடும். இதற்கு 'சுக்கு தைலம்' எனும் சித்த மருந்தையும் மருத்துவர் ஆலோசனைப்படி பயன்படுத்துவது நல்லது.

    பீனிசம், ஆஸ்துமா, ஆசனவாய் நோய்கள் ஆகியவற்றில் புகை போடும் பழக்கமும் சித்த மருத்துவத்தில் உண்டு. உதாரணமாக மஞ்சள் புகையை குறிப்பிடலாம். இத்தகைய புகை போடும் மருத்துவத்தை நோய்நிலைக்கு ஏற்ப முதுமையில் பயன்படுத்துவது நற்பலன் தரும்.

    நாட்பட்ட வலி நோய்நிலைகளில் சித்த மருத்துவத்தின் 'வர்மச் சிகிச்சை' நல்ல பலன் தரக்கூடியது. வர்மப் புள்ளிகள் தூண்டுதலால் வலி நிவாரணி தன்மையுள்ள இயற்கை ஹார்மோன்கள் உடலில் தூண்டப்படுவதாக உள்ளது. வர்ம மருத்துவ முறைகளை நாடுவதால் முதுமையில் வலி நிவாரணி மருந்துகளை ஓரங்கட்ட முடியும்.

    வேப்பிலை மற்றும் வேப்பம்பட்டை புகை அல்லது நொச்சி இலை மற்றும் மஞ்சள் சேர்த்து புகை போடுவது முதியோர்கள் குடியிருக்கும் வீட்டில் தொற்றுக்கிருமிகள் வராமல் தடுக்க உதவும். இவ்வாறு நோய்நிலைக்கு தகுந்தாற்போல் புகை சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம்.

    மருத்துவர் சோ.தில்லைவாணன்

    தலைவலி, நீர்க்கோவை (சைனுசைடிஸ்) ஆகிய நிலைகளில் நீர்க்கோவை மாத்திரை எனும் சித்த மருந்தை பயன்படுத்த நல்ல பலன் அளிக்கும், குறிகுணங்கள் குறைந்து நல்ல தூக்கம் வரும். நீரிழிவு நோய்நிலையில் உண்டாகும் கை கால் எரிச்சலுக்கு பிண்ட தைலம் போன்ற மருந்துகளை காலில் தடவி வர எரிச்சல் குறையும்.

    முதுமையில் உண்டாகும் தோல் வறட்சியில் சித்த மருந்துகளான அருகம்புல் தைலம், புங்கன் தைலம், வெட்பாலை தைலம் ஆகியவற்றை மேல்பூச்சாக பயன்படுத்தலாம். மேலும் தோலில் உண்டாகும் அரிப்பினைத் தடுக்கும் மருந்து மாத்திரைகளுக்கு பதிலாக மேற்கூறிய அருகன் தைலத்துடன், மத்தன் தைலம் சேர்த்து பயன்படுத்து அரிப்பு, நமைச்சல் குறைக்க உதவும்.

    புள்ளி விவரங்களின் படி, கிட்டத்தட்ட 36 சதவீதம் முதியோர்கள் மருத்துவர் பரிந்து ரைப்படி தினசரி 5 மருந்துகளையும், மேலும் 80 சதவீதம் முதியோர்கள் தினசரி இரண்டு மருந்துகளையும், மருத்துவர் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்கின்றனர். ஆக முதுமையில் மேலும் மருந்து மாத்திரைகளை கூட்டாமல் இருக்க, வெளிப்புற சிகிச்சை முறைகளை நாடுவது நல்லது.

    சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள வெளிப்புற சிகிச்சை முறைகள் முதுமைக்கு அவசியமாகும் மாபெரும் புதையல்கள். இத்தகைய சிறப்புமிக்க மருத்துவ முறைகளை நாடுவது உள்மருந்துகளின் பயன்பாட்டைக் குறைத்து, உள்மருந்துகளின் பின்விளைவுகளைக் தடுத்து, ஆரோக்கியமான நாட்களை நோக்கி முதுமையை நகர்த்தும்.

    தொடர்புக்கு:

    drthillai.mdsiddha@gmail.கம

    8056040768

    Next Story
    ×