search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஏற்றமிகு ஏகாதசி- இரா.இரகுநாதன்
    X

    ஏற்றமிகு ஏகாதசி- இரா.இரகுநாதன்

    • ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து திருமாலைத் துதித்தால் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றோடு, வைகுண்டவாசமும் வழங்குவாரென புராணங்களில் கூறப்படுகிறது
    • உலகில் பிறந்தவர் வைகுந்தத்தில் இருந்து அருளும் நாராயணன் திருவடியை இறுதியில் அடைவர் என்பது உலக இயல்பு.

    மாதத்தில் ஏகாதசி திதி 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும். 30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்து வரும் 11ம் நாள் சுக்கில பட்ச ஏகாதசி. பவுர்ணமி அடுத்த 11ம் நாள் கிருஷ்ணபட்ச ஏகாதசி ஆகும். சில ஆண்டில் இருபத்தைந்து ஏகாதசிகள் வரும். பத்ம புராணத்தில் உத்தர காண்டத்தில் இவற்றுக்குத் தனித்தனிப் பெயர்களும், பயனடைந்தவர்கள் வரலாறும் உள்ளது.

    ஏகாதசி வரலாறு

    முரன் என்னும் அசுரன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை தந்தான். அவனிடமிருந்து காக்க ஈசனை வேண்ட மகாவிஷ்ணுவிடம் சரணடைய கூறினார் சிவன். நம்பியோரைக் காக்கும் நாராயணன், அசுரனோடு 1000 ஆண்டுகள் போர் புரிந்து களைத்து பத்ரி காஸ்ரமத்தில் ஒரு குகையில் சிறிது படுத்து ஓய்வெடுத்தார். அந்நேரம் திருமாலை 'முரன்' கொல்ல முனைந்தபோது, அவரின் சக்தி ஒரு பெண் வடிவில் உடலிலிருந்து வெளிப்பட்டது. அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது. விழித்தெழுந்த நாராயணன், அந்த சக்திக்கு "ஏகாதசி" எனப் பெயரிட்டு "உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன்" என வரமளித்து அச்சக்தியை உள்வாங்கிக் கொண்டார்.

    முக்கோடி ஏகாதசி

    ராவணனின் கொடுமைகளால் முக்கோடி தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழி மாத சுக்லபட்ச (வளர்பிறை) ஏகாதசியன்று திருமாலை வணங்கித் தங்கள் துன்பங்களைக் கூறினர். திருமாலும் காட்சி தந்து அவர்களைக்காத்து துன்பத்தை போக்கி காத்ததால் வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி எனப்பட்டது.

    ஏகாதசி விரத பலன்

    தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற இரவும், பகலும் விரதம் இருந்து பாற்கடலை கடைய அமுதம் வெளிப்பட்டது . துவாதசியன்று மகாலட்சுமி சமுத்திரத்தில் இருந்து வெளிப்பட்டு திருக்காட்சி தந்தாள். அதிலிருந்து ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து திருமாலைத் துதித்தால் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றோடு, வைகுண்டவாசமும் வழங்குவாரென புராணங்களில் கூறப்படுகிறது.

    வைணவ ஆகமங்களில் மகாவிஷ்ணு ஆனி மாத சுக்ல ஏகாதசி முதல் ஐப்பசி மாத சுக்ல ஏகாதசி வரை உள்ள நாட்களில் யோகநித்திரை செய்கிறார். ஆனி சுக்ல ஏகாதசிக்கு சயனி ஏகாதசி என்றும் ஆவணி சுக்ல ஏகாதசி திருமால் வலப்பக்கம் திரும்பி படுப்பதை பரிவர்த்தன ஏகாதசி என்பர். கார்த்திகை மாத சுக்ல ஏகாதசியன்று எழுந்திருப்பதால் உத்தான ஏகாதசி என்றும் பிரபோத ஏகாதசி என்றும் பெயர் பெற்றன. கார்த்திகை ஏகாதசிக்கு கைசிக ஏகாதசி என்றும் பெயர். மார்கழி மாதம் வளர்பிறையில் வருவது 'மோட்ச ஏகாதசி'. இதையே வைகுண்ட ஏகாதசியாகக் கொண்டாடுகிறோம். வைகுண்ட ஏகாதசி தனிமனிதனுக்கும் சமுதாய விரதமாய் இருப்பதால் தனி மனித உடல்நலமும் மனநலமும் அதிகரிக்கின்றன.

    முன்னோருக்கும் அருளும் ஏகாதசி

    கம்பம் நகர மன்னர் வைகானசர் வேதத்தில் கரை கண்டவர்களை அழைத்தார். நேற்று வந்த கனவில் என் முன்னோர்கள் நரகத்தில் இருந்து தங்களை விடுவிக்க ஏதாவது வழி செய்யக் கேட்டனர்? என்று கதறி அழுதார்கள். இதற்கு என்ன செய்ய வேண்டும் எனக்கேட்க, பர்வதர் என்னும் முனிவர் உன் தந்தை, அரச பதவி போதையில் மனைவியை அலட்சியம் செய்து மறைந்தான். அதனால் அவனுக்கு நரகம் கிடைத்திருக்கிறது.

    உன் மனைவி மக்களுடன், மோட்ச ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து, நாராயணனை பூஜை செய்து பலனை உன் முன்னோர்களுக்கு அர்ப்பணம் செய்வாயெனக் கூற, அவ்வாறே செய்ய, முன்னோர்கள் நரகத்தில் இருந்து விடுதலை பெற்று, மகனை ஆசிர்வதித்தனர். விதர்ப்ப மன்னன் ருக்மாங்கதன் நந்தவனத்தில் தேவலோகப் பெண்கள் மணமிகு பூக்கள் மீது ஆசை கொண்டு தினமும் பறித்துக் கொண்டு போனார்கள். மன்னன் திருடனைப் பிடிக்க குமட்டி விதைகளை விதைத்தான். ஒருநாள் தேவலோகப் பெண்காலில், வளர்ந்த கொடியொன்று சிக்கிட அவள் பூமியில் இருக்க வேண்டியதாயிற்று. மன்னனிடம் தேவலோகப்பெண் தேவலோகம் போக வழி செய்யும்படி கேட்டாள். மன்னன் உபாயம் கேட்க அவள் ஏகாதசியின் பெருமையை கூறி, ஏகாதசி விரதப்பலனை தானமாகத் தந்தால் தான் போக முடியும் என்றாள். மன்னன் யாராவது அதுபோல் இருந்தால் தெரிவிக்கக் கூறினான். அரண்மனையில் இருக்கும் துணி வெளுக்கும் பெண் ஏகாதசி விரதம் இருப்பவள் . அவள் ஏகாதசி பலனை தேவலோக மங்கைக்குத்தர அவள் தேவலோகம் போய் சேர்ந்தாள். ஏகாதசி விரத மகிமையை அறிந்த மன்னன் நாட்டு மக்கள் அனைவரையும் ஏகாதசி விரதம் கடைபிடிக்கக் கூறி அவனும் கடைபிடித்து நடந்தான்.

    திருக்கோவில்களில்…

    தனுர் மாதமான மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை பிரம்ம முகூர்த்தம். இனிமையாகவும் இருப்பதால் ஸ்ரீமன் நாராயணனை பூசை செய்ய மிகச்சிறந்த காலமாக விளங்குகிறது. மார்கழி மாதத்தில் சுக்ல பட்ச பிரதமை தொடங்கி 20 நாட்கள் பெருமாளுக்கு அத்யயன உற்சவம் நடக்கும். இதனை திருமொழித் திருநாள் திருவாய்மொழித் திருநாள் என்றும் குறிப்பிடுவார்கள் . பகல் பொழுதில் பத்து நாட்களும் இரவுப் பொழுதில் 10 நாட்களும் நடைபெறும். இதை "அத்யயன உற்சவம்" என்று குறிப்பிடுவார்கள். நடுநாயகமாய் அமையும் ஏகாதசிக்கு முந்தய 10 நாட்கள் நடக்கும் வைபவம் மோட்ச உற்சவம் எனப்படுகிறது.

    அப்போது நடுநாயகமாக பெருமாள் வீற்றிருக்க அவருக்கு எதிரில் அனைத்து ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் வரிசைக் கிரமப்படி எழுந்தருளியிருப்பார்

    பகல்பத்து ராப்பத்து வரலாறு

    திருமங்கையாழ்வாரால் திருவரங்கன் ஆணைப்படி வைகுண்ட ஏகாதசி் உற்சவம் திருவரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வருகிறது. தனது திவ்யதேச யாத்திரைகளை முடித்த திருமங்கையாழ்வார் திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் போது திருக்கார்த்திகை மகோற்சவத்தன்று திருவரங்கன் எதிரில் திருநெடுந்தாண்டகத்தை தேவகானமாக பாடி அபிநயம் பிடித்தார்.

    திருவரங்கன் ஆழ்வாரிடம் "உமது கானத்தில் மகிழ்ந்தோம். உமக்கு என்ன வேண்டும்?" எனக்கேட்க அவரும் அரங்கனிடம் வேதத்தைவிட பொருள் செறிந்த நம்மாழ்வாரின் திருவாய்மொழியை மார்கழி சுக்ல ஏகாதசி முதல் வேதங்களோடு கேட்டு அருள வேண்டும் என்றார். அரங்கனும் ஏற்றார். உடன் ஆழ்வார் திருநகரியில் உள்ள நம்மாழ்வாருக்கு ஸ்ரீமுகம் அனுப்பி மதுரகவி ஆழ்வார் அவருடைய சடகோபரையும் எழுந்தருளச் செய்து அதற்கு நம்மாழ்வார் என்ற திருநாமம் சார்த்தி ஏகாதசி அன்று வேதங்கள் தொடங்கியதும் இரவில் மதுரகவியாழ்வார் கானம் செய்த நம்மாழ்வாரின் திருவாய்மொழியை கேட்டருளினார். பத்தாம் நாள் வேதங்களை பூர்த்தி செய்து ஆழ்வாரின் திருவாய்மொழி நிறைவுடன் நம்மாழ்வாரைத் தன் திருவடியில் சேர்த்துக் கொண்டு அவருக்கு தம்முடைய மாலை பரிவட்டம் முதலியவற்றை அளித்து ஆழ்வார் திருநகரிக்கு அனுப்பி வைத்தார் என்பது வரலாறு.

    பகல்பத்து பொதுவாக திருக்கோயில்களில் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இருபது நாட்களிலும் பெருமாளுக்கு விசேஷ அலங்காரங்கள், அவதார லீலைகள், பரமபதநாதன், அன்று ஓதப்படும் திவ்யதேச பெருமாள் ஆகிய திருக்கோலங்களில் அருள்வார். பத்தாம் நாள் பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தில் காட்சி நல்குவார். சொர்க்கவாசல் பள்ளி கொண்ட பெருமாள் நாபிக் கமலத்தில் உருவான பிரம்மனுக்கு அகந்தை உண்டானது. பகவானின் காதுகளில் இருந்து இரண்டு அசுரர்கள் வெளிப்பட்டு பிரும்மாவைக் கொல்ல முயல பெருமாள் அவர்களைத் தடுத்து 'அவரைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கு வேண்டும் வரம் தருவேன்' என்றார். அசுரர்களோ அலட்சியமாக, "நாங்கள் உனக்கே வரம் தருவோம்" என்றார்கள்.

    பகவான் அவர்களிடம் "அகங்காரம் அதிகமான நீங்கள் என்னால் வதம் செய்யப்படுவீர்கள். பிறகு ராட்சசர்களாகவே பிறப்பிர்கள்" எனக் கூறினார். அசுரர்கள் திகைத்து "தங்களோடு ஒரு மாத காலம் நாங்கள் சண்டையிட்டு சித்தி அடைய வேண்டும்" என வேண்டினர். அவர்கள் விரும்பியபடி போரிட்டு, வதைத்தார். மாலவனின் குணமுணர்ந்த அசுரர்கள், "தெய்வமே! நாங்களினி பரமபதத்தில் நித்திய வாசம் செய்ய வேண்டும்" என வேண்டினர். ஒரு மார்கழி மாதம், வளர்பிறை ஏகாதசியன்று (பரமபதத்தின்) வடக்கு நுழைவாயிலைத் திறந்து, அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் சேர்த்தார்.

    அவர்களும் மகிழ்ந்து "மார்கழி சுக்ல ஏகாதசியன்று எங்களுக்கென சொர்க்க வாசல் திறந்த திருநாளை பூவுலகில் உள்ள திருக்கோவில்களில் திருவிழாவாகக் கொண்டாடப்பட வேண்டும்" என வேண்டினர். அதுமுதல் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது.

    வைகுண்ட ஏகாதசி தினத்தில் இல்லத்தில் உபவாசமோ குறை உணவு உண்டோ விரதம் இருந்து வழிபடுவதுடன் பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு வைபவத்தில் கலந்துகொள்வதாலும், பெருமாளைத் தரிசித்து வழிபடுவதாலும் மறுநாள் துவாதசி உணவு கொண்டு விரதம் முடித்தால் இம்மை செழிக்கும்; மறுமை சிறக்கும். சகலசவுபாக்கியங்களும் கிடைக்கும்.

    சொர்க்கவாயில் அமைவிடம்

    கோவில்களின் நாற்புறவாயிலில் வடக்குப்புறவாயில் சொர்க்கவாசலுக்காகவே பயன்படுகிறது. கோவிலுக்குள் அமைந்திருக்கும் சொர்க்கவாசல் அனேகமாக வடதிசையில் அமைந்திருக்கிறது. பகல்பத்தில் இந்த வாயில் திறக்கப்படுவதில்லை. வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை அல்லது வழக்கப்படி பெருமாள் உட்புறம் இருக்க வெளியில் நம்மாழ்வார் நிற்க சுப நேரத்தில் கதவுகள் திறக்கப்பட்டு எதிர்சேவையுடன் தீபாராதனை நடந்து வாயிற்படி கடந்து வெளிவர நம்மாழ்வாருடன் பக்தர்களும் தரிசனம் செய்வர். ராப்பத்தின் 10 நாட்களும் சொர்க்கவாயில் திறந்து இருக்கும். தொண்டைநாட்டில் சொர்க்கவாசல் பகல்பத்து இறுதியன்று திறக்கப்பட்டு தரிசனம் நடைபெறும். காஞ்சிபுரத்தில் அஷ்டபுஜப்பெருமாள் கோவிலில் மட்டும் சொர்க்கவாசல் உள்ளது.

    பகல்பத்து அன்று அனைத்து நவதிருப்பதி கோவில்களிலும் சயனக்கோல தரிசனம் நடைபெறும். இரவில் ராப்பத்து தொடங்கும் முன் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் இரவு 8 மணிக்கு மேல், தென் திருப்பேரை மகர நெடுங்குழைநாதர் கோவிலில் இரவு 1 மணி சுமாருக்கும் ஆழ்வார்திருநகர் ஆதிநாத ஆழ்வார் திருக்கோவிலில் இரவு இரண்டு மணிக்கு மேலும் சொர்க்கவாசல் திறந்து சேவையாகும்.

    உலகில் பிறந்தவர் வைகுந்தத்தில் இருந்து அருளும் நாராயணன் திருவடியை இறுதியில் அடைவர் என்பது உலக இயல்பு. அதன்படி ஜீவாத்மா தன்னை தயார் செய்து கொள்ள ஏகாதசி விரதங்களும் சேவை சாற்றுமுறை போன்றவை பயன்படுகின்றன.

    Next Story
    ×