என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • வாய்க்காலுக்கு மறுபக்கம் நின்றிருந்த 10 பேர் உயிர் தப்பினர்.
    • சம்பவம் நடைபெற்றவுடன் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி தேங்காய்திட்டு வசந்த் நகர் என்ற பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    வசந்த் நகர் 3-வது குறுக்கு தெருவில் நடந்த இந்த பணியில் இன்று காலை அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 16 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    மரப்பாலம் துணைமின் நிலையம் பின்புறம் சுற்று சுவரையொட்டி தூர்வாரி வாய்காலில் இருந்த சேற்றை வெளியேற்றி கொண்டிருந்னர்.

    அப்போது மின் துறையின் 33 ஆண்டுகள் பழைமையான சுற்று சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்கு இடையே தொழிலாளர்கள் சிக்கினர்.

    இதனையடுத்து முதலியார்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்டனர். இதில் 3 தொழிலாளர்கள் இடுபாடுகளில் சிக்கியும் கால்வாய் தண்ணீரில் மூழ்கியும் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் 3 பேரும் அரியலூர் நெட்டகுறிச்சியை சேர்ந்த பாக்கியராஜ், பால முருகன், ஆரோக்கியராஜ் என்பது தெரியவந்தது.

    மீதமுள்ள 3 பேர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வாய்க்காலுக்கு மறுபக்கம் நின்றிருந்த 10 பேர் உயிர் தப்பினர்.

    சம்பவம் நடைபெற்றவுடன் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வராததால் மினி லாரியில் வைத்து தொழிலாளர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பறக்கும் படையினர், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பாகூர் தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

    புதுச்சேரியையொட்டிய மாநில எல்லைப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பறக்கும் படையினர், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்கவும், மேற்பார்வையிடவும் தேர்தல் பொது பார்வையாளராக பியூஷ் சிங்லாவும், தேர்தல் காவல் பார்வையாளராக அமன்தீப் சிங்ராய் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் தேர்தல் காவல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அமன்தீப் சிங் ராய் புதுச்சேரி எல்லைப் பகுதியான திருக்கனூரில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது வாகன சோதனையின் போது எந்தவித பாரபட்சமும் இன்றி அவ்வழியாக செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சித ரெட்டி, திருக்கனூர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் தேர்தல் துறையின் சோதனைச் சாவடி ஊழியர்கள், துணை ராணுவ படையினர் உடனிருந்தனர்.

    தொடர்ந்து எல்லைப் பகுதிகளான முள்ளோடை, சோரியாங்குப்பம், மணமேடு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளுக்கு சென்று அவர் ஆய்வு செய்தார்.

    இதேபோல் தேர்தல் பொதுப்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள பியூஷ் சிங்லா ஏம்பலம், பாகூர் தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.

    • அதிகபட்சமாக நேற்று முன்தினம் 95.72 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.
    • பாராளுமன்ற தேர்தலையொட்டி புதுச்சேரியில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    தமிழகம்-புதுச்சேரியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து ஜூன் மாதம் வரை கோடை காலமாகும்.

    அந்த வகையில் தற்போது புதுச்சேரியில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    தினமும் 93 முதல் 94 டிகிரி வெயில் பதிவாகி வருகிறது. இதில் அதிகபட்சமாக நேற்று முன்தினம் 95.72 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.

    நேற்று 94.64 டிகிரி வெயில் பாதிவாகியுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

    இதனால் பொதுமக்களும் பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். மேலும், கோடை வெயிலை சமாளிக்க மக்கள் இளநீர், தர்பூசணி, நுங்கு மற்றும் பழச்சாறுகளை வாங்கி பருகி வருகின்றனர். இதனால் அவற்றின் விற்பனையும் ஜரூராக நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலையொட்டி புதுச்சேரியில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வெயிலின் தாக்கத்தால் வேட்பாளர்கள் திணறி வருகின்றனர். மேலும் தொண்டர்கள் சோர்வடைந்து விடுவதால் காலை 8 மணிக்கே பிரசாரத்தை தொடங்கும் வேட்பாளர்கள் மதியம் 12 மணிக்குள் முடித்துக் கொள்கின்றனர்.

    அதன் பிறகு வெயில் தாழ்ந்தவுடன் மாலை 6 மணிக்கு மீண்டும் பிரசாரத்தை தொடங்குகின்றனர்.

    • ஜெயில் வளாகத்தின் உட்பகுதி மதில் சுவர் அருகே ஜெயில் வார்டன்கள் மற்றும் ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
    • ஜெயிலில் உள்ள பிரபல ரவுடிகளுக்கு கஞ்சா, செல்போன்கள் வீசப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காலாப்பட்டு மத்திய ஜெயிலில் 200-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களில் பிரபல ரவுடிகளும் அடங்குவார்கள். ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடிகள், தங்களின் வழக்கு செலவு, குடும்ப செலவுக்கு சிறைக்குள் இருந்தபடி, செல்போன் மூலம் தொழிலதிபர்களை மிரட்டி மாத, மாதம் மாமூல் வசூலித்து வருகின்றனர்.

    இந்த வசூல் பணிகளை 2-ம் கட்ட ரவுடிகள் வசூலித்து ரவுடியின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கின்றனர்.

    இதனை தடுப்பதற்காக ஜெயிலில் அடிக்கடி ரவுடிகள் அறைகள் சோதனை நடத்தப்பட்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஜெயில் வளாகத்தின் உட்பகுதி மதில் சுவர் அருகே ஜெயில் வார்டன்கள் மற்றும் ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு பார்சல் கிடந்தது. அதனை எடுத்து ஜெயில் வார்டன்கள் பிரித்து பார்த்தபோது, ஒரு ஆண்ட்ராய்டு செல்போன் உட்பட 5 செல்போன்கள், ஒய் பை மோடம், பீடி கட்டுகள், கஞ்சா பொட்டலங்கள், 2 சார்ஜர், குட்கா பாக்கெட்டுகள் இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிறை காவலர்கள் அதனை பறிமுதல் செய்து காலாப்பட்டு போலீசில் ஒப்படைத்தனர்.

    ஜெயிலில் உள்ள பிரபல ரவுடிகளுக்கு கஞ்சா, செல்போன்கள் வீசப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நமச்சிவாயம் வெற்றி பெற்றால், மத்திய அரசு பிரதமருடன் ஒத்த கருத்துடன் இருப்பார்.
    • உங்கள் பிரச்சனையை தீர்க்கும் நமச்சிவாயத்திற்கு ஓட்டு அளிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    தேசிய ஜனநாயக கூட்டணியில் புதுச்சேரி தொகுதியில் பா.ஜனதா சார்பில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.

    அவரை ஆதரித்து லாஸ்பேட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    புதுச்சேரியில் காமராஜர் எண்ணங்களை பிரதிபலிக்கும் முதலமைச்சராக ரங்கசாமி திகழ்கிறார். மாணவர்கள் படிப்படியாக உயர்ந்து, நல்ல நிலையை அடைய வேண்டும் என்பதற்காக, மத்திய அரசுடன் இணைந்து புதுச்சேரி அரசு செயலாற்றி வருகிறது. கொரோனாவில் இருந்து இந்தியாவை மீட்டவர் பிரதமர் மோடி.

    கொரோனா காலத்தில் அண்டை நாடுகள் பசி பட்டினியால் தவித்தபோது, இந்தியாவில் பசி பட்டினி கிடையாது. நாட்டின் பொருளாதாரத்தையும் மிக சிறப்பாக கையாண்டார். உள்நாட்டிலே கொரோனா தடுப்பூசி தயாரித்து மக்களுக்கு வழங்கினார்.

    நமச்சிவாயம் மண்ணின் மைந்தர். காங்கிரசில் பணியாற்றிய அவருக்கு முறையான அங்கீகாரம் இல்லாததால், பா.ஜனதா அவரை அடையாளம் கண்டு அமைச்சராக்கியது. தற்போது அவரது குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.

    நமச்சிவாயம் வெற்றி பெற்றால், மத்திய அரசு பிரதமருடன் ஒத்த கருத்துடன் இருப்பார். காங்கிரஸ் வெற்றி பெற்றால் மத்திய பா.ஜனதாவுடனும், மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசுடனும் ஒத்தகருத்து இருக்காது.

    அ.தி.மு.க. வெற்றி பெற்றாலும் இதே நிலை தான். அதனால் உங்கள் ஓட்டுக்களை வீணாக்காதீர்கள். எதிர்க்கட்சிகளுக்கு நீங்கள் அளிக்கும் ஓட்டு குப்பை தொட்டியில் போடுவதிற்கு சமம்.

    உங்கள் ஓட்டுக்கு உரிமை, மரியாதை உள்ளது. அதை நிலைநாட்ட, உங்கள் பிரச்சனையை தீர்க்கும் நமச்சிவாயத்திற்கு ஓட்டு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமி உட்பட கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.

    • புதுச்சேரியில் மொத்தம் 967 வாக்குச்சாவடிகளில் 232 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை.
    • அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தி கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு மொத்தம் 967 வாக்குச்சாவடிகளை இந்திய தேர்தல் ஆணையம் இறுதி செய்துள்ளது.

    புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலுக்காக மொத்தம் 967 வாக்குச்சாவடிகளை தேர்தல் துறை இறுதி செய்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி இருந்தது.

    இந்த 967 வாக்குச்சாவடிகளை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்று இறுதி செய்துள்ளது. இதன்படி புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் புதுவை 739, மாகி 31,ஏனாம் 22, காரைக்காலில் 163 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன.

    சில வாக்குச்சாவடிகளை இணைத்து ஒரே இடத்தில் வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி 967 வாக்குச் சாவடிகளும் 618 இடங்களில் அமைந்துள்ளன.

    நகர பகுதியை பொருத்தவரை 534 வாக்குச்சாவடிகள் 344 இடங்களில் அமைந்துள்ளன. கிராமப்புறங்களை பொறுத்தவரை 427 வாக்குச்சாவடிகள் 274 இடங் களில் அமைந்துள்ளன. புதுச்சேரியில் மொத்தம் 967 வாக்குச்சாவடிகளில் 232 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை.

    அதில் புதுவையில் 180ம், காரைக்காலில் 35-ம் உள்ளன. மாகியில்7, ஏனாமில் 10 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கேமரா மூலம் கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர்.

    கடந்த தேர்தல்களில் 90 சதவீதத்திற்கு மேல் ஓட்டு பதிவு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகள் ஆபத்தான வாக்குச்சாவடிகளாக தேர்தல் துறையின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    இதன்படி புதுச்சேரி 3, ஏனாமில் 7 வாக்குச்சாவடிகள் ஆபத்தான வாக்குச்சாவடிகளாக கண்காணிக்கப்பட்ட உள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தி கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    • அன்றைய தினம் காலையில் சிதம்பரம், கடலூரில் பிரசாரம் செய்யும் உதயநிதி, மாலை 4.30 மணிக்கு புதுவைக்கு வருகிறார்.
    • வில்லியனூர் கிழக்கு மாட வீதி சந்திப்பில் பிரசாரத்தை தொடங்குகிறார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வைத்திலிங்கம் எம்.பி. மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். தமிழகம், புதுவையில் வேட்பு மனு தாக்கல் முடிந்துள்ளதால் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    புதுவை காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 31-ந்தேதி புதுச்சேரியில் பிரசாரம் செய்ய உள்ளார்.

    அன்றைய தினம் காலையில் சிதம்பரம், கடலூரில் பிரசாரம் செய்யும் உதயநிதி, மாலை 4.30 மணிக்கு புதுவைக்கு வருகிறார்.

    வில்லியனூர் கிழக்கு மாட வீதி சந்திப்பில் அவர் பிரசாரத்தை தொடங்குகிறார். மாலை 5.30 மணிக்கு மரப்பாலம் சந்திப்பிலும், 6.30 மணிக்கு அண்ணா சதுக்கத்திலும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்து இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    • தற்போது புதுச்சேரியில் தேர்தல் பிரசாரகளம் விறுவிறுப்பை எட்டியுள்ளது.
    • அ.தி.மு.க.வும் தனி அணியாக களமிறங்கி இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வாக்குபதிவு ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா வேட்பாளராக அமைச்சர் நமச்சிவாயம், இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம் எம்.பி., அ.தி.மு.க. சார்பில் தமிழ்வேந்தன், மற்றும் நாம் தமிழர் கட்சி உள்பட சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.

    தற்போது புதுச்சேரியில் தேர்தல் பிரசாரகளம் விறுவிறுப்பை எட்டியுள்ளது. தேர்தல் களத்தில் உள்ள அரசியல் கட்சிகள் சிறிய சிறிய அமைப்புகளின் ஆதரவை திரட்டும் நடவடிக்கையில் அந்தந்த அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் தொகுதி வாரியாக இறங்கியுள்ளனர்.

    பிரதான 2 தேசிய கட்சிகள் இடையே நேரடி போட்டி மட்டுமின்றி அ.தி.மு.க.வும் தனி அணியாக களமிறங்கி இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது.

    தேசிய கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது கூட்டணி கட்சிகளின் தலைவர்களை மட்டுமின்றி மாநிலத்தின் முன்னணி நிர்வாகிகளையும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    தற்போது கட்சி நிர்வாகிகளை தொகுதி வாரியாக அனுப்பி சிறிய சிறிய அமைப்புகள், இயக்கங்களின் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    வாக்கு வங்கியை அதிகப்படுத்தும் நோக்கில் குறிப்பாக தொழிற்சங்க நிர்வாகிகள், மகளிர் சுயஉதவி குழுக்கள், குடியிருப்போர் நலச்சங்க பொறுப்பாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்து பாராளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளரை ஆதரிக்குமாறு கேட்டு வருகின்றனர்.

    அப்போது குடியிருப்போர் நலசங்க அமைப்புகளிடம் இருந்து வரும் கோரிக்கைகளை கேட்கும் வேட்பாளர்கள், வெற்றிபெற்றதும் உடனே கோரிக்கையை நிறைவேற் றித் தருவதாக வாக்குறுதி அளித்து வருகின்றனர்.

    இதேபோல் அரசு ஊழியர்கள் சங்கங்கள், கூட்டமைப்புகள், மாணவர்-இளைஞர் அமைப்புகள் உள்ளிட்டோரையும் சந்தித்து வருகின்றனர்.

    முதல்கட்டமாக இந்நடவடிக்கையில் இறங்கியுள்ள பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அடுத்ததாக சட்டமன்ற தொகுதி வாரியாக பொதுமக்களை சந்தித்து வாக்குசேகரிப்பில் ஈடுபடுகின்றனர்.

    • 15 பாராளுமன்ற தேர்தல்களில் 11 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது
    • புதுவை காங்கிரசின் கோட்டையாகவே திகழ்ந்தது.

    புதுச்சேரி:

    பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட யூனியன் பிரதேசமான புதுவையில் 1963-ம் ஆண்டு முதல் சட்டமன்றத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் தேர்தல் நடந்து வருகிறது.

    ஆரம்பகால தேர்தல்களில் சுதந்திரத்துக்கு போராடிய கட்சி காங்கிரஸ் என்பதால் மக்களிடம் பெரியளவில் மதிப்பு இருந்தது. ஆனால் தமிழகத்தில் தி.மு.க.வும், அதிலிருந்து பிளவுபட்டு அ.தி.மு.க.வும் தொடங்கியபோது புதுவையிலும் அந்த கட்சிகளின் ஆதிக்கம் தொடங்கியது.

    பெரும்பாலும் சட்டமன்றத்தில் காங்கிரஸ்தான் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அ.தி.மு.க. 2 முறையும், தி.மு.க. 4 முறையும், என்.ஆர். காங்கிரஸ் 2 முறையும் ஆட்சி அமைத்தனர். 1963-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின்றி தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றது.

    அதன்பிறகு நடந்த பல தேர்தல்களில் தி.மு.க., அ.தி.மு.க., த.மா.கா.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தனர்.

    அதேநேரத்தில் இதுவரை நடந்த 15 பாராளுமன்ற தேர்தல்களில் 11 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 1963, 1967, 1971 ஆகிய 3 தேர்தல்களில் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி பெற்றது. அதன்பின் 1980, 1984, 1989, 1991, 1996 என 5 முறை தொடர்ச்சியாக காங்கிரஸ் வெற்றி பெற்றது. பின்னர் 1999, 2009, 2019 ஆகிய தேர்தல்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. இதனால் புதுவை காங்கிரசின் கோட்டையாகவே திகழ்ந்தது.

    யூனியன் பிரதேசமான புதுவை மக்களும், மத்தியில் உள்ள ஆட்சியில் இருப்பவர்களுக்கு வாக்களித்தால் புதுவைக்கு நன்மை கிடைக்கும் என வாக்களித்தனர்.

    வ.சுப்பையா, ப.கண்ணன் ஆகியோர் புதுவைக்கென தனி கட்சி தொடங்கினர். ஆனால் அவர்களால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை, பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் 2011-ல் காங்கிரசில் பிளவை ஏற்படுத்தி ரங்கசாமி, என்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கி ஆட்சியையும் பிடித்தார்.


    தொடர்ந்து 2014-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு என்.ஆர்.காங்கிரஸ் வெற்றியும் பெற்றது. 2019-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம், பதவியை ராஜினாமா செய்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    அவர் தற்போது சிட்டிங் எம்.பி.யாக உள்ளார். அவர் மீண்டும் 2-வது முறையாக பாராளுமன்ற தேர்தலில் களத்தில் இறங்கியுள்ளார்.

    அதேநேரத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் காங்கிரசில் பெரும் பிளவு ஏற்பட்டது. அமைச்சராக இருந்த நமச்சிவாயம், கட்சியிலிருந்து வெளியேறி பா.ஜனதாவில் இணைந்தார்.

    அவருடன் சேர்ந்து காங்கிரசில் இருந்த பல்வேறு பிரிவுகள், அணிகளை சேர்ந்த நிர்வாகிகளும் வெளியேறினர். 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. தற்போது காங்கிரசுக்கு புதுவை லாஸ்பேட்டை தொகுதி, மாகி தொகுதி ஆகியவற்றில் மட்டுமே 2 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    ஆனால் காங்கிரஸ் கட்சியில் அடித்தளம் வரை கட்டமைப்பு உள்ளது. தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனைத்து தொகுதியிலும் உள்ளனர். கூட்டணி கட்சியான தி.மு.க.வுக்கு 6 எம்.எல்.ஏ.க்கள் பலமும் உள்ளது. இதோடு இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.

    2021 சட்டமன்ற தேர்தலில் இழந்த செல்வாக்கை மீட்டெடுத்து புதுவை மீண்டும் காங்கிரசின் கோட்டை என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. தங்களுக்கு சாதகமாக சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் வாக்களிப்பார்கள் என காங்கிரஸ் நம்புகிறது.

    ஏனெனில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரைவிட சுமார் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வைத்திலிங்கம் வெற்றி பெற்றார். 22 எம்.எல்.ஏ.க்கள் பலத்தோடு பா.ஜனதா போட்டியிட்டாலும் மக்கள் ஆதரவோடு மீண்டும் வெற்றி பெறுவது உறுதி என காங்கிரசார் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இதற்காக அனுபவத்தின் மூலம் பிரசார வியூகம் அமைத்து தலைவர்கள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.

    புதுவை தொகுதி காங்கிரசுக்கு மீண்டும் 'கை' கொடுக்குமா? என்பது ஜூன் 4-ந்தேதி தெரிந்து விடும்.

    • வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்பு வரை தேர்தலில் போட்டியிட நமச்சிவாயம் தயக்கம் காட்டி வந்தார்.
    • கடந்த 2 நாட்களாக அமைச்சர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளை வீடு தேடிச்சென்று சந்தித்து, ஆதரவு திரட்டி வருகிறார்.

    புதுச்சேரி:

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா வேட்பாளராக புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.

    வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்பு வரை தேர்தலில் போட்டியிட அமைச்சர் நமச்சிவாயம் தயக்கம் காட்டி வந்தார். பா.ஜனதா மேலிடத்தின் உத்தரவை ஏற்று வேட்பாளராக களம் இறங்கியவுடன் தேர்தல் பணிகளில் அசுர வேகம் காட்டி வருகிறார்.

    கடந்த 2 நாட்களாக புதுச்சேரி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், தொகுதி பிரமுகர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளை வீடு தேடிச்சென்று சந்தித்து, ஆதரவு திரட்டி வருகிறார்.

    சென்னைக்கு சென்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்தார்.


    திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசையும் சந்தித்து நலம் விசாரித்து, ஆசி பெற்றார். தொடர்ந்து தனக்காக புதுச்சேரிக்கு வந்து பிரசாரம் செய்ய வேண்டும் என டாக்டர் ராமதாசிடம் கேட்டுக் கொண்டார்.

    அதற்கு ராமதாஸ் பதிலளிக்காவிட்டாலும், கடலூர், விழுப்புரம் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இதனால் புதுச்சேரியிலும் அவர் பிரசாரம் செய்ய வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேநேரத்தில் புதுவை மாநில பா.ம.க. தலைவர் கணபதியிடம், நமச்சிவாயத்தை வெற்றி பெறச் செய்து எம்.பி.யாக பாராளுமன்றத்துக்கு அனுப்ப தீவிரமாக பணியாற்றும்படி உத்தரவிட்டுள்ளார்.

    • சாலை வசதியும் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
    • செல்லம்பாப்பு நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி உழவர்கரை தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்பாளையம் செல்லம்பாப்பு நகரில் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை முழுமையாக முடிக்காமல் அரை குறை பணியுடன் நடைமுறைக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அந்த பகுதியில் சாக்கடை கழிவுநீர் தெருவில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு அடைந்துள்ளதோடு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சாலை வசதியும் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் செல்லம்பாப்பு நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

    கூட்டத்தில் செல்லம் பாப்பு நகர் குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணியை முழுமையாக முடிக்காததை கண்டித்தும், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க தீர்மானம் செய்துள்ளனர்.

    மேலும் இதுதொடர்பாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை பொதுப்பணித்துறைக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

    • வேட்புமனுவோடு வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்பு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளனர்.
    • அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு அசையும் சொத்து ரூ.39 லட்சத்து 92 ஆயிரத்து 877. அசையா சொத்து ஏதும் இல்லை.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் அமைச்சர் நமச்சிவாயம், அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா ஆகியோர் நேற்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

    வேட்புமனுவோடு வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்பு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளனர். இதன்படி வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விபரம் வருமாறு:-

    பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயத்தின் அசையும் சொத்து ரூ.28 லட்சத்து 12 ஆயிரத்து 52. சுயமாக வாங்கிய அசையா சொத்து ரூ.6 கோடியே 87 லட்சத்து ஆயிரத்து 147. பூர்வீக சொத்து ரூ.3 கோடியே 7 லட்சத்து 460. மொத்த மதிப்பு ரூ.10 கோடியே 22 லட்சம். கடன் ரூ.6.94 கோடி.

    மனைவி வசந்தி பெயரில் அசையும் சொத்து ரூ.1 கோடியே 40 லட்சத்து 44 ஆயிரத்து 624. சுயமாக வாங்கிய அசையா சொத்து ரூ.11 கோடியே 30 லட்சத்து 97 ஆயிரத்து 371. பூர்வீக சொத்து ரூ.1 கோடியே 25 லட்சத்து 46 ஆயிரம். கடன் ரூ.8.99 கோடி. இருவரும் கூட்டாக வாங்கிய சொத்து ரூ.1.58 கோடி.

    நமச்சிவாயம் மற்றும் அவரது மனைவி பெயரில் உள்ள சொத்துக்களின் மதிப்பு ரூ.25 கோடி ஆகும்.

    அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு அசையும் சொத்து ரூ.39 லட்சத்து 92 ஆயிரத்து 877. அசையா சொத்து ஏதும் இல்லை. கடன் ரூ.1.24 கோடி. மனைவி நிவேதித்யா பெயரில் அசையும் சொத்து ரூ.67 லட்சத்து 37 ஆயிரத்து 230. அசையா சொத்து ரூ.1 கோடியே 23 லட்சத்து 2 ஆயிரம். வீட்டு கடன் ரூ.28 லட்சம்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு அசையும் சொத்தாக ரூ.2.86 லட்சம், தனி நபர் கடன் ரூ.40 ஆயிரம் உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×