என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுச்சேரி தொகுதியில் இதுவரை அரசியல் கட்சியினர் யாரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.
    • ராமதாஸ் முள்ளோடையில் உள்ள தனியார் மதுபாரில் சப்ளையராக வேலை செய்து வருகிறார்.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான சான்றிதழ்களை பெறவும், நல்லநேரம் பார்த்து வருகின்றனர்.

    புதுச்சேரி தொகுதியில் இதுவரை அரசியல் கட்சியினர் யாரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. கிராமப் பகுதிகளில் தேர்தல் சம்மந்தமான எந்த அறிகுறியும் இல்லாமல் உள்ளது.

    இந்நிலையில் 2 முறை சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட கிருமாம்பாக்கம் பனங்காட்டு தெருவை சேர்ந்த ராமதாஸ் (வயது 59). 10 ரூபாய் நாணயங்கள் அடங்கிய மூட்டையுடன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய மாவட்ட கலெக்டர் அலுவலத்துக்கு வந்தார்.

    ராமதாஸ் முள்ளோடையில் உள்ள தனியார் மதுபாரில் சப்ளையராக வேலை செய்து வருகிறார்.

    ஏற்கனவே கடந்த 2014 மற்றும் 2019-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டார். இதே போன்று சட்டசபை தேர்தல்களிலும் 3 முறை போட்டியிட்டு உள்ளார்.

    10 ரூபாய் நாணயம் செல்லாது என்று பலர் கூறி வருகின்றனர். சில கடைகளில் வாங்கவும் மறுக்கின்றனர். அரசு விநியோகித்த இந்த 10 ரூபாய் நாணயத்தை அரசாங்கத்திடமே ஒப்படைக்க போகிறேன் என்று அவர் கூறி உள்ளார்.

    இந்த நாணயங்களை அவர் கடந்த 5 ஆண்டுகளாக சேமித்து வைத்துள்ளார்.

    • சட்டமன்றத்தில் 38 ஆண்டுக்கு பிறகு 2001-ல் முதல்முறையாக பா.ஜனதா நுழைந்தது.
    • தமிழகத்தின் நுழைவு வாயிலாக புதுச்சேரியை பா.ஜனதா கருதுகிறது.

    புதுச்சேரி:

    பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட புதுச்சேரி யூனியன் பிரதேசமாக உருவெடுத்தது.

    1962-ல்தான் அதிகாரப்பூர்வமாக இந்தியாவுடன் இணைந்தது. அதன்பிறகு 1963-ம் ஆண்டு முதல் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும், சட்டசபைக்கும் தேர்தல் நடந்து வருகிறது.

    சட்டமன்றத்தில் 38 ஆண்டுக்கு பிறகு 2001-ல் முதல்முறையாக பா.ஜனதா நுழைந்தது. தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ஜனதா தேர்தலை சந்தித்தது. ரெட்டியார்பாளையம் தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார்.

    இதன்பிறகு 2006, 2011 சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜனதா வெற்றி பெறவில்லை. 2014-ல் புதுவை சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டனர். அதில் பா.ஜனதா மாநில தலைவராக இருந்த விஸ்வேஸ்வரன் புதுவை சட்டசபையில் நியமன எம்.எல்.ஏ.வாக நுழைந்தார்.


    அதன்பிறகு 2016 தேர்தலில் பா.ஜனதா எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. அதே நேரத்தில் மத்தியிலிருந்த பா.ஜனதா புதுச்சேரி சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தது. அப்போது இருந்த கவர்னர் கிரண்பேடி உறுதுணையோடு பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், தற்போதைய பா.ஜனதா தலைவரான செல்வகணபதி மற்றும் கட்சியின் பொருளாராக இருந்த சங்கர் ஆகியோர் புதுச்சேரி சட்டசபைக்குள் நுழைந்தனர். இதன்பின் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க. என்ற கூட்டணி உருவானது. இதில் 9 தொகுதியில் போட்டியிட்டு 6 தொகுதியில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றனர். புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தது. இந்த ஆட்சியில் பா.ஜனதாவில் இருந்து சபாநாயகர், 2 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இதுதவிர மத்திய அரசு நேரடியாக 3 பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்களையும் புதுச்சேரிக்கு நியமித்தது. இதனால் புதுச்சேரி சட்டசபையில் தற்போது 9 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    இருப்பினும் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் இதுவரை பா.ஜனதாவின் தாமரை மலர்ந்ததே இல்லை.

    ஆரம்பகால கட்டத்தில் எந்த கூட்டணியிலும் இடம்பெறாமல், பா.ஜனதா தனித்து போட்டியிட்டது. அப்போதெல்லாம் சொற்ப எண்ணிக்கையிலான வாக்குகளை மட்டும்தான் பெற்றது. 1999-ல் தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இடம் பெற்றது. அப்போது கூட்டணியில் பா.ம.க. வேட்பாளர் புதுச்சேரியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    2004-ல் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி உருவானது. இந்த கூட்டணி சார்பில் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக லலிதா குமாரமங்கலம் போட்டியிட்டார். அவர்தான் கணிசமான வாக்குகளை பெற்று டெபாசிட் பெற்றார்.



    இதன்பிறகு 2009ல் பா.ஜனதா கூட்டணியின்றி தனித்து போட்டியிட்டது. பா.ஜனதா வேட்பாளர் விஸ்வேஸ்வரன் 13 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றார். 2014ல் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க.வுடன் பாஜனதா கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணியில் புதுவை தொகுதியில் பா.ம.க. போட்டியிட்டு, தோல்வியடைந்தது. 2019 பாராளுமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் என்ஆர்.காங்கிரஸ் போட்டியிட்டது. என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

    காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வைத்திலிங்கம் 4,44,981 வாக்குகள் வாங்கினார். என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நாராயணசாமி கேசவன் 2,47,956 ஓட்டுகள் பெற்றார். 1,97,025 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

    தமிழகத்தின் நுழைவு வாயிலாக புதுச்சேரியை பா.ஜனதா கருதுகிறது. இதனால்தான் தற்போது புதுவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு கட்சியை அடிமட்டம் வரை கொண்டு செல்ல வேண்டும் என முடிவெடுத்துள்ளது. இதற்கு சரியான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதில் பா.ஜனதா தலைமை உறுதியாக இருந்தது.

    உள்துறை அமைச்சராக உள்ள நமச்சிவாயம் போட்டியிட மறுப்பு தெரிவித்தாலும், வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற எண்ணத்தோடு, பா.ஜனதா மேலிடம் நேரடியாக தலையிட்டு அவரை தேர்தல் களத்தில் இறக்கியுள்ளது.

    தற்போது பா.ஜனதாவுக்கு கூட்டணி ஆட்சியும், பா.ஜனதாவுக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்து 22 எம்.எல்.ஏ.க்கள் பலமும் உள்ளது.

    அதோடு பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த நமச்சிவாயம் போட்டியிடுகிறார். ஆட்சியின் செல்வாக்கை நிரூபிக்க முதலமைச்சர் ரங்கசாமியும், தீவிரமாக களப்பணியாற்றுவார். இதனால் பா.ஜனதாவின் நீண்ட கால போராட்டத்துக்கு வெற்றி கிடைத்து, தாமரை புதுவையில் மலரும் என்று பா.ஜனதாவினர் எதிர்பார்க்கின்றனர். புதுவை பாராளுமன்ற தொகுதிக்கு 1963-ம் ஆண்டு முதல் இதுவரை 15 தேர்தல்கள் நடந்துள்ளது.

    1996-ம் ஆண்டு நடந்த தமிழகம், புதுவை சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வும், த.மா.கா.வும் இணைந்து தேர்தலை சந்தித்தன.

    தமிழகத்தில் வெற்றி பெற்ற இந்த கூட்டணியில் கருணாநிதி தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தது. புதுவையில் தி.மு.க., த.மா.கா. கூட்டணி ஆட்சி முதலமைச்சர் ஜானகிராமன் தலைமையில் அமைந்தது. அமைச்சரவையில் உள்துறை பொறுப்பை ப.கண்ணன் வகித்து வந்தார்.

    1999-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது, தி.மு.க., பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தது. இதனால் தமிழகத்தில், தி.மு.க. கூட்டணியிலிருந்து த.மா.கா. வெளியேறியது. அதே நேரத்தில் புதுவையில் கூட்டணி ஆட்சி இருந்தது. உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ப.கண்ணன் த.மா.கா. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்பு 2000-ம் ஆண்டில் த.மா.கா., தி.மு.க.வுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றதால் புதுவை தி.மு.க. அரசு கவிழ்ந்தது.

    இதன்பின் 25 ஆண்டுக்கு பிறகு உள்துறை அமைச்சராக இருக்கும் நமச்சிவாயம் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாராளுன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் களம் இறங்கியுள்ளார். 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சரித்திரம் திரும்பியுள்ளது.

    • கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே புதுச்சேரியில் வெயில் அதிகரித்து வந்தது.
    • இந்த சூழ்நிலையில் பிரசாரம் தொடங்கினால் என்ன ஆகிறது என அனைத்து கட்சியின் தொண்டர்களும் சோர்வில் உள்ளனர்.

    புதுச்சேரி:

    தமிழகம், புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. கடந்த 20-ந் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிவிட்டது.

    பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.

    தேர்தல் பணியில் இந்தியா கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் அ.தி.மு.க.,வினர் தேர்தல் பணியை தொடங்கி கூட்டணி கட்சி தலைவர்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    இதனால் புதுச்சேரியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    புதுச்சேரியில் வழக்கமாக ஏப்ரல், மே மாதம் கோடை வெயில் அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே புதுச்சேரியில் வெயில் அதிகரித்து வந்தது.

    தற்போது வெயில் அதிக அளவில் வாட்டி வதைத்து வருகிறது. காலை 10 மணிக்கே வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது.

    போக்குவரத்து சிக்னலில் கூட 5 நிமிடம் நிற்க முடியாத அளவுக்கு வெயில் உள்ளது. பிரசாரம் செய்யும் காலமும் குறைவாக உள்ளது. இந்த சூழ்நிலையில் பிரசாரம் தொடங்கினால் என்ன ஆகிறது என அனைத்து கட்சியின் தொண்டர்களும் சோர்வில் உள்ளனர்.

    • சுயேட்சையாக சிலர் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
    • இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்படாது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் முதல் கட்டமாக வருகிற 19-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

    இதையொட்டி கடந்த 20-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் எம்.பி., அ.தி.மு.க. சார்பில் தமிழ்வேந்தன், நாம் தமிழர் கட்சி சார்பில் மேகனா ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் சுயேட்சையாக சிலர் போட்டியிட முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 20-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் முன்வரவில்லை. 2-வது நாளான நேற்று முன்தினம் சுயேட்சையாக போட்டியிட கூத்தன் என்ற தெய்வநீதி என்பவர் மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து, 3-வது நாளான நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தாக்கல் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டது.


    ஆனால் கடைசி நேரத்தில் அவர் வேட்பு மனுவை வருகிற 25-ந் தேதி தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர். இதுதவிர, நேற்று சுயேட்சையாக கூட யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டவில்லை. புதுச்சேரியில் 3 நாள் முடிவில் ஒருவர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளார். இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்படாது.

    மனு தாக்கல் பெறுவதற்கு 25, 26, 27 என 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் வருகிற 25-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் முகூர்த்த நாளில் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என எண்ணி உள்ளனர்.

    அதன்படி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான வருகிற 27-ந் தேதி அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என கூறப்படுகிறது.

    • தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பணம் பறிமுதல் செய்யப்பட்டு கணக்கு கருவூலகத்தில் வைக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    பாராளுமன்றத் தேர்தலையொட்டி புதுச்சேரி-தமிழக எல்லை பகுதிகளில் காவல் துறையினர் உதவியுடன் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதுபோல் புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் ஜிப்மர் எல்லையில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி யஷ்வந்தையா தலைமையில் தேர்தல் துறை பறக்கும் படையினரும் காவல் துறையினரும் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஏ.டி.எம்.மிற்கு பணம் நிரப்பும் தனியார் வாகனம் வந்தது. அந்த வாகனத்தை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். சோதனையில் கோடி கணக்கில் கட்டுக்கட்டாக ரூ. 500 புதிய நோட்டுகளும் பழைய நோட்டுகளும் இருந்தன.

    இவற்றிற்கு உரிய ஆவணங்களை வாகனத்தில் இருந்தவர்களிடம் இல்லை. அவர்கள் வைத்திருந்த ரசீதில் ஜனவரி 21-ந் தேதி பணம் எடுத்ததற்கான ஆதாரம் இருந்தது.

    ஆனால் இன்று வரை பணத்தை ஏ.டி.எமில் நிரப்பாமல் வாகனத்தில் வைத்து சுற்றியது ஏன் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

    இதனையடுத்து அதிகாரிகள் வாகனத்தையும், அதில் இருந்த 2 நபர்களையும் புதுச்சேரி கணக்கு மற்றும் கருவுலாக அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு பணத்தை எண்ணி பார்த்ததில் ரூ 3 கோடியே 47 லட்சம் இருப்பது தெரிய வந்தது. மேலும் ரூ 98 லட்சத்தை ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்பியதாகவும் ரூ.1 கோடி வங்கி அலுவலகத்தில் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனால் ஒட்டு மொத்தமாக ரூ.5 கோடிக்கு மேல் பண பரிமாற்றம் செய்ய இருந்த நிலையில் ஆவணங்கள் ஏதும் இல்லாத காரணத்தால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கணக்கு கருவூலகத்தில் வைக்கப்பட்டது.

    வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு பிறகு உரிய ஆவணங்கள் காண்பித்தால் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என தேர்தல் நடத்தும் அதிகாரி யஷ்வந்தய்யா தெரிவித்தார்.

    • நாடு முழுவதும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் கெஜ்ரிவாலை விடுதலை செய்யக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.
    • செல்போன் டவரில் ஏறியிருந்தவர்களையும் கீழே இறங்க செய்தனர்.

    புதுச்சேரி:

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆத் ஆத்மி கட்சியின் தேசிய தலைவரும், டெல்லி மாநில முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கெஜ்ரிவால் கைதுக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

    நாடு முழுவதும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் கெஜ்ரிவாலை விடுதலை செய்யக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.

    இதேபோல் புதுச்சேரி மாநில ஆம் ஆத்மி கட்சி சார்பில் காமராஜர் சாலையில் போராட்டம் நடந்தது. மாநில செயலாளர் ஆலடி கணேசன் தலைமையில் பிருந்தாவனத்தில் உள்ள தனியார் கட்டிடத்தில் உள்ள செல்போன் டவரில் ஏறி 3 பேர் நின்று கோஷம் எழுப்பினர். அதேநேரத்தில் செல்போன் டவரின் கீழே சாலையில் ஆம் ஆத்மி கட்சியினர் தரையில் படுத்து, கெஜ்ரிவாலை விடுதலை செய்யக்கோரி போராட்டம் நடத்தினர்.

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். செல்போன் டவரில் ஏறியிருந்தவர்களையும் கீழே இறங்க செய்தனர். இதனால் காமராஜர் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • தேர்தல் விதிமுறைகள் நடை முறைக்கு வந்துள்ளதால், புதுவை சட்டசபைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
    • தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் மந்தமாக இருப்பது அந்த கூட்டணி கட்சிகளின் தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலையொட்டி சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் சட்டசபை வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது. தேர்தல் விதிமுறைகள் நடை முறைக்கு வந்துள்ளதால், புதுவை சட்டசபைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மட்டும் வந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடன் வெளிநபர்கள், கட்சி நபர்கள், தொகுதி மக்கள் வர அனுமதி கிடையாது.

    இதையடுத்து சட்டசபை நுழைவு வாயிலை மூடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுமாறு சட்டசபை செயலாளர் தயாளன் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் சட்டசபை காவலர்கள், நுழைவு வாயிலை மூடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்டசபை ஊழியர்கள் அடையாள அட்டை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

    தேர்தல் முடியும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என சட்டசபை அலுவலகம் அறிவித்துள்ளது.

    அதேநேரத்தில் சட்ட சபையில் அமைச்சர்கள், சில எம்.எல்.ஏ.க்கள் ரிலாக்சாக அமர்ந்து அரசியல் குறித்த கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    அதுபோல் முதல்-அமைச்சர் ரங்கசாமி நேற்று காலை வீட்டிலிருந்து சட்டசபைக்கு வரும் முன்பு, நேரு வீதியில் காரை நிறுத்தி விட்டு தனது நண்பரின் வாட்ச் கடைக்கு சென்றார். அங்கு சுமார் 1 மணி நேரம் வாட்ச் கடையில் ரிலாக்ஸாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். பாதுகாவலர்களும் தங்களின் வாகனங்களுடன் அங்கு நின்றிருந்தனர்.

    இதுகுறித்து முதல்-அமைச்சரின் ஆதரவாளர்கள் கூறும்போது,

    சட்டசபைக்கு சென்றாலும் மக்களை சந்திக்க முடியாது. அதனால் வழக்கமாக வரும் தனது நண்பர் கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி தரப்பில் கூறுகையில், புதுச்சேரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுகிறது. இம்முடிவு அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன நிலையிலும் வேட்பாளர் அறிவிப்பதில் தாமதம் நிலவி வருகிறது. பா.ஜனதாவினர் வேட்பாளர் அறிவிப்பில் மும்முரமான முயற்சியில் இருக்கின்றனர்.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் பொதுமக்கள் சட்டசபைக்கு வர அனுமதி இல்லை. இதனால் முதல்-அமைச்சர் ரங்கசாமி தற்போது ரிலாக்ஸாக உள்ளார்" என்று தெரிவித்தனர்.

    மற்ற மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தல் சூடுபிடித்த நிலையில் அரசியல்வாதிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்றி வருகின்ற வேளையில் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் மந்தமாக இருப்பது அந்த கூட்டணி கட்சிகளின் தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

    • கோடிக்கணக்கான பணத்துடன் வந்த லாரி, காரின் பின் பக்கத்தில் எதிர்பாராத விதமாக மோதியது.
    • மரப்பாலம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேகரிக்கப்பட்ட பணக்கட்டுகள் கண்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு, ரிசர்வ் வங்கியின் சென்னை கிளைக்கு சென்றது. கண்டெய்னர் லாரியில் கோடிக்கணக்கில் பணம் இருந்ததாக கூறப்படுகிறது.

    அந்த கண்டெய்னர் லாரிக்கு முன்னும் பின்னும் 2 வாடகை கார்களில் கடலூர் போலீசார் துப்பாக்கியுடன் பாதுகாப்புக்கு சென்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் பாதுகாப்பு வாகனங்களுடன் கண்டெய்னர் லாரி புதுச்சேரி மரப்பாலம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படவே முன்னால் பாதுகாப்புக்கு போலீசார் சென்ற காரின் டிரைவர் திடீர் பிரேக் பிடித்தார்.

    இதனால் பின்னால் கோடிக்கணக்கான பணத்துடன் வந்த லாரி, காரின் பின் பக்கத்தில் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காரின் பின்பக்கம் சேதமடைந்தது.

    இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக காரில் இருந்த போலீசார் உயிர்தப்பினர். அதே நேரத்தில் கோடிக்கணக்கான ரூபாயுடன் விபத்து ஏற்பட்டதால் பாதுகாப்புக்கு வந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

    பொதுமக்களும் போலீசார் நடுரோட்டில் துப்பாக்கியுடன் நிற்பதை கண்டு என்ன ஏதேன்று விசாரிக்க தொடங்கினார்கள்.

    சுதாரித்துக்கொண்ட போலீசார் உடனடியாக மாற்று வாகனம் ஏற்பாடு செய்து அதில் ஏறி, கண்டெய்னர் லாரியுடன் பாதுகாப்புக்கு சென்றனர். இந்த சம்பவம் காரணமாக மரப்பாலம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • சத்து மாத்திரையை சாப்பிட்ட கர்ப்பிணிகள், குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.
    • மொத்தம் ரூ.2½ கோடி அளவுக்கு தரமற்ற மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு மோசடி நடந்தது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2019-ம் ஆண்டு வழங்கிய சத்து மாத்திரையை சாப்பிட்ட கர்ப்பிணிகள், குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.

    இதனால் உடனடியாக மருந்துகள் திரும்பப் பெறப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அதில் தரமற்ற மருந்து சப்ளை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    2023-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து, சுகாதாரத்துறையில் பணியாற்றிய நடராஜன், அவரது மனைவி பெயரில் நடத்திய நிறுவனம், அவரது நண்பரின் நிறுவனம் மூலம் மருந்து கொள்முதல் மோசடி செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து நடராஜன் கைது செய்யப்பட்டார். மொத்தம் ரூ.2½ கோடி அளவுக்கு தரமற்ற மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு மோசடி நடந்தது தெரியவந்தது.

    வழக்கு விசாரணைக்காக மருந்துகளை மற்ற மருந்துகளுடன் இருப்பு வைக்காமல் தனியாக வைத்து சீல் வைக்க லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி, சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தினார்.

    இதையடுத்து தரமற்ற மருந்துகள் திப்புராயப் பேட்டையில் உள்ள குடோவுனுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சீல் வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டது.

    • கட்சியின் பெரும்பாலானவர்கள் கைகாட்டும் அமைச்சர் நமச்சிவாயம், தேர்தலில் போட்டியிடுவதில்லை என உறுதியாக மறுத்து வருகிறார்.
    • தொடர்ந்து வேட்பாளர் தேர்வில் நடைபெறும் இழுபறி, குளறுபடியால் தொண்டர்கள் மிகவும் சோர்ந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    வடமாநிலங்களில் செல்வாக்கோடு இருக்கும் பா.ஜனதாவை தென் மாநிலங்களில் கால் பதிக்க வைக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளது.

    தமிழகம், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களில் பா.ஜனதாவை வளர்க்க தீவிரம் காட்டி வருகின்றனர். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரசோடு கூட்டணி அமைத்து ஆட்சியையும் பிடித்தனர்.

    தொடர்ந்து கட்சியை அடிமட்டம் வரை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் முடிவை ஓராண்டுக்கு முன்பே எடுத்தனர். இதற்காக மத்திய மந்திரி எல்.முருகன் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் மாதம் 2 முறை புதுச்சேரிக்கு வந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து வந்தார்.

    ஓராண்டுக்கு முன்பிருந்தே தேர்தல் பணியை பா.ஜனதாவினர் தொடங்கினர். ஆனால் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் இதுவரை வேட்பாளரை இறுதி செய்ய முடியாமல், பா.ஜனதா தவிக்கிறது.

    கட்சியின் பெரும்பாலானவர்கள் கைகாட்டும் அமைச்சர் நமச்சிவாயம், தேர்தலில் போட்டியிடுவதில்லை என உறுதியாக மறுத்து வருகிறார்.

    அதே நேரத்தில் புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயத்தை நிறுத்தினால் தான் வெற்றி கிடைக்கும் என கூறி வருகிறார்.

    இதற்கிடையே பா.ஜனதாவினர் கிராமங்கள்தோறும் சுவர்களில் தாமரை சின்னத்தை வரைந்து மீண்டும் மோடி, வேண்டும் மோடி, வாக்களிப்பீர் தாமரைக்கு என பிரசாரத்தையும் தொடங்கினர். வேட்பாளர் அறிவிப்பு வந்து விடும் என்ற ஆர்வத்தோடு தொண்டர்களும் உற்சாகமடைந்தனர்.

    ஆனால் தொடர்ந்து வேட்பாளர் தேர்வில் நடைபெறும் இழுபறி, குளறுபடியால் தொண்டர்கள் மிகவும் சோர்ந்துள்ளனர். அமைச்சர் நமச்சிவாயத்தை தவிர்த்து வேறு வேட்பாளர்களை நிறுத்தினால் வெற்றி கிடைக்காது என்ற மனநிலைக்கு பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினர் தள்ளப்பட்டுள்ளனர்.

    இதனால் பா.ஜனதா தேர்தல் பணிகள் முற்றிலுமாக ஸ்தம்பித்து போயுள்ளது.

    • ஜனநாயகத்தை முழுமையாக அழித்த கட்சி பா.ஜனதா தான்.
    • தென்னிந்தியாவை ஆள வேண்டும் என பா.ஜனதாவினர் நினைக்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் தி.மு.க.- காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:-

    கடந்த 5 ஆண்டுகளில் மோசமான பாராளுமன்றத்தை சந்தித்துள்ளேன். மறுபடியும் போக வேண்டும் என்று நினைப்பது கஷ்டமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் மோடியை எப்படியாவது அழிக்க வேண்டும் என்பதற்காவே திரும்பவும் போக வேண்டும் என்று நினைக்கின்றேன்.

    ஜனநாயகத்தை முழுமையாக அழித்த கட்சி பா.ஜனதா தான். இன்றைய தினம் நாட்டை காக்க வேண்டும் என்றால் பா.ஜனதா இருக்கக்கூடாது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்து விட்டால், மீண்டும் தேர்தல் நடக்குமா என்பதே பெரிய விஷயமாகி விடும்.

    சட்டம் உள்ளிட்ட அனைத்தையும் மாற்றும் அளவுக்கு அவர்களுக்கு மன தைரியமும், பண தைரியமும் இருக்கிறது. இதனை மாற்ற வேண்டும் என்றால் ஒரு சுதந்திர போராட்டத்தை போன்று போராட வேண்டும்.

    தென்னிந்தியாவை ஆள வேண்டும் என பா.ஜனதாவினர் நினைக்கின்றனர். நிச்சயமாக தமிழகம், புதுவை அதனை ஏற்காது. தென்னிந்தியாவும் முழுமையாக ஏற்றுக்கொள்ளாது.

    ஏனென்றால் இங்கு அதிகம் படித்தவர்கள், உழைப்பவர்கள், சிந்திக்கக்கூடியவர்கள் இருக்கின்றனர்.

    ஆகவே நாம் இந்தியா முழுவதும் துடைத்தெறிய வேண்டிய கட்சியாக பா.ஜனதா உள்ளது. அதனை நாம் இந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்றார்.

    புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம் தான் மீண்டும் போட்டியிட போகிறார். கட்சி தலைமையும் அவரைத்தான் வேட்பாளராக அறிவிக்கும் என்று உள்ள நிலையில் தொண்டர்கள் அவரை முன்னிறுத்தி தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் அவரது இந்தந பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மத்தியில் பா.ஜனதா ஆட்சி, மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்தால் பாலாரும், தேனாறும் ஓடும் என்று வாக்குறுதி கொடுத்தார்.
    • கருத்து வேறுபாடுகளை களைந்து இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக புதுச்சேரி தி.மு.க. நிர்வாகிகளுடன் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா ஆட்சியில் புதுச்சேரி மாநில மக்கள் அவதிபடுகின்றனர். சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கஞ்சா பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். நிலம், வீடு அபகரிப்பு நடக்கிறது.

    பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது இரட்டை எஞ்சின் ஆட்சி இருக்க வேண்டும்.

    மத்தியில் பா.ஜனதா ஆட்சி, மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்தால் பாலாரும், தேனாறும் ஓடும் என்று வாக்குறுதி கொடுத்தார்.

    ஆனால் அவரால் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியவில்லை. அவர்களின் தேர்தல் அறிக்கையை எடுத்து பார்த்தால், 5 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை.

    புதுச்சேரி மாநிலத்தில் ரெஸ்டோ பார்களை திறந்து மதுகுடிக்கும் மாநிலமாக மாற்றிவிட்டனர். கஞ்சா மாநிலமாக ஆக்கி விட்டனர். இவர்கள் ஆட்சியில் நீடித்தால் புதுச்சேரியின் வளர்ச்சி மட்டுமின்றி, இளைஞர் சமுதாயம் வீணாகிவிடும். அதற்கு முன்னோட்டமாக இந்த மக்களவை தேர்தல் இருக்கிறது.

    இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒற்றுமையாக இருந்து வெற்றிக்கனியை பறிக்க வேண்டும். நாம் தொகுதிகளில் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்.

    கருத்து வேறுபாடுகளை களைந்து இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். வேட்பாளரை கண்டுபிடிக்க முடியாமல் 4 மாதங்களாக தடுமாறிக் கொண்டிருக்கின்ற என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×