என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்ட தமிழிசைக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
    • இந்திய நாடு வளர்ச்சியடைந்து வருகிறது. வேண்டும் மோடி, மீண்டும் மோடி என்ற வாசகத்தை கொடுத்தது நான்தான்.

    புதுச்சேரி:

    புதுவையின் பொறுப்பு கவர்னராக இருந்த தமிழிசை நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதைத்தொடர்ந்து நேற்று புதுவைக்கு வந்த தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரி மக்கள் என் மீது அபரீதமான அன்பை பொழிந்தார்கள். இந்த அன்பு என்றும் தொடரும். புதுச்சேரிக்கும், எனக்கும் உள்ள தொடர்பு தொடரும். வாழ்க்கையில் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.

    பிரதமர், உள்துறை அமைச்சர், ஜனாதிபதி ஆகியோருக்கு நன்றி. புதுச்சேரிக்கு வந்தது மறக்க முடியாத நிகழ்வு. தமிழில் பதவிப்பிரமாணம் எடுக்க முடிந்தது.

    தமிழில் கவர்னர் உரையாற்றியுள்ளேன். கவர்னராக பல திட்டங்களை செயல்படுத்த முடிந்தது. 3 மாதம் பொறுப்பு என கூறினார்கள். ஆனால் 3 ஆண்டுகளாகி விட்டது. அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. இதைவிட மக்களுக்கு அதிகமாக சேவை செய்ய வேண்டும் என்ற உள்ளுணர்வோடு செல்கிறேன். ராஜினாமா செய்தது நானே எடுத்த முடிவு. தெலுங்கானாவில் கவர்னர் மாளிகை ஊழியர்கள் அழுது கொண்டே வழியனுப்பினர். 300 பேர் அங்கு கவர்னருக்காக பணியாற்றுகின்றனர். அந்த வாழ்க்கையை விட்டு விட்டு பொது வாழ்க்கைக்கு வருவதற்கான அன்பை புரிந்து கொள்ள வேண்டும். சுயநலத்துக்காக எடுக்கப்பட்ட முடிவு அல்ல.


    கவர்னர் மாளிகை மக்கள் பவனமாகத்தான் இருந்தது. இன்னும் மக்களுக்கு நேரடி தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற ஆதங்கத்தில் ராஜினாமா செய்தேன்.

    நான் தமிழகத்தை சேர்ந்த தமிழ் மகள். என்னை அந்நிய மாநிலமாக பார்க்காதீர்கள் என கோரிக்கை வைத்தேன். நாளை பா.ஜனதா கட்சி அலுவலகம் செல்கிறேன். அவர்கள் முடிவை ஏற்பேன்.

    புதுச்சேரி மக்கள் என்னை புறக்கணிக்கவில்லை, அவர்கள் என் மீது அதிக அன்பு வைத்துள்ளனர். வரும் காலத்தில் புதுச்சேரி முதலமைச்சர், கவர்னரிடம் பல்வேறு ஆலோசனைகளை தொடர்ந்து கூறுவேன். பெண்கள் பாதுகாப்பாக என் குரல் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும்.

    எனது பலம் மக்கள் அன்பு, பாசம், என் மீது உள்ள நம்பிக்கை, கடவுள் மீது உள்ள நம்பிக்கை. எதிர் வினைகளை, விமர்சனங்களை தூசிபோல தட்டி விட்டு செல்வது என் பலம்.

    இந்த பலம் எனக்கு கைகொடுக்கும். எனது விருப்பம் மக்கள் தொடர்பு தான். நான் மிகுந்த மகிழ்ச்சியோடு இங்கிருந்து செல்கிறேன். மக்கள் பணியிலிருந்து என்னை பிரிக்க முடியாது.

    எனது மக்கள் பணி தொடரும். மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதே என் எண்ணம். அவரால்தான் இந்திய நாடு வளர்ச்சியடைந்து வருகிறது. வேண்டும் மோடி, மீண்டும் மோடி என்ற வாசகத்தை கொடுத்தது நான்தான்.

    அதுதான் என் முழு முதல் கவனமாக இருக்கும். மக்களுக்கான எனது கவர்னர் பணிக்கு எந்த உள்ளர்த்தமும் கற்பிக்க வேண்டாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து தமிழக அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் கருத்து உட்பட பல்வேறு கேள்விகளுக்கு சிரிப்பை மட்டுமே தமிழிசை பதிலாக அளித்தார்.

    கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்ட தமிழிசைக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து தலைமை செயலர் சரத்சவுகான், காவல் துறை தலைவர் ஸ்ரீநிவாஸ் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், கவர்னர் மாளிகை அதிகாரிகள், ஊழியர்கள் அவரை வழி அனுப்பி வைத்தனர்.

    • நமச்சிவாயத்தை தேர்தலில் போட்டியிட தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
    • பட்டியலில் அமைச்சர் நமச்சிவாயத்தின் பெயர் முதலிடத்தில் இருந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் யார்? என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

    எல்லோரும் ஒருமித்த குரலில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை தேர்தலில் போட்டியிட தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர் தொடர்ந்து மறுத்து வந்தார்.

    மாநில அரசியல்தான் முக்கியம் என கருதுவதால் இதனை தவிர்த்து வந்தார்.

    இதனால் காரைக்கால் தொழிலதிபர் ஜி.என்.எஸ். ராஜசேகரனை களமிறக்கலாம் என பா.ஜனதாவின் முக்கிய நிர்வாகிகள் கட்சி தலைமையிடம் முன்மொழிந்தனர்.

    இதற்கிடையே புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட 4 பேரின் பெயர்களை டெல்லி கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த பட்டியலில் அமைச்சர் நமச்சிவாயத்தின் பெயர் முதலிடத்தில் இருந்தது. இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பா.ஜனதாவின் புதுவை மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா அவசர அழைப்பின் பெயரில் அமைச்சர் நமச்சிவாயம் பெங்களூர் சென்று அவரை சந்தித்து பேசினார்.

    அப்போது அவரிடம் நிர்மல்குமார்சுரானா பா.ஜனதா வெற்றி வாய்ப்புக்காக தாங்களே போட்டியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

    அதே கருத்தையே முதலமைச்சர் ரங்கசாமியும் பா.ஜனதா கட்சி தலைமைக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதே வேளையில் கவர்னர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை தீவிர அரசியலில் ஈடுபட போவதாகவும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் தெரிவித்தார்.

    மேலும் புதுச்சேரியில் போட்டியிடவில்லை என்றும் தமிழகத்தில் போட்டியிட போவதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து பெங்களூரில் இருந்து புதுவை திரும்பிய அமைச்சர் நமச்சிவாயம் நேற்று மதியம் சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    அப்போதும் முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற அமைச்சர் நமச்சிவாயத்தை போட்டியிட அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அமைச்சர் நமச்சிவாயத்திடம் நிருபர்கள் கேட்டபோது என்.ஆர். காங்கிரஸ் தலைவர் முதலமைச்சர் ரங்கசாமி ஆசியோடு புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் யார் போட்டியிட்டாலும் அவரை வெற்றி பெற செய்வோம் அதே வேளையில் கட்சி தலைமை உத்தரவிட்டால் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட தயாராக இருப்பதாக அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

    எனவே புதுச்சேரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுவது உறுதியாகி விட்டதாக தெரிகிறது.

    • கைரேகை , ரத்த மாதிரிகள் சேகரித்து கிருமாம்பாக்கத்தில் உள்ள தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • கொலையாளிகள் விவேகானந்தன், கருணாஸ் ஆகிய 2 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால் பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டாள்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த விவேகானந்தன் (வயது 57), கருணாஸ் (19) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே புதுச்சேரி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கலைவாணன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் காலாப்பட்டு மத்திய சிறைக்கு சென்று சிறுமி கொலையாளிகளான விவேகானந்தன், கருணாஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    மேலும் அவர்களின் கைரேகை, ரத்த மாதிரிகள் சேகரித்து கிருமாம்பாக்கத்தில் உள்ள தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் கைதான 2 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், புதுச்சேரி போக்சோ விரைவு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி சோபனா தேவி, கொலையாளிகள் விவேகானந்தன், கருணாஸ் ஆகிய 2 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.

    இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் பல்வேறு தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. சிறுமியை எப்படி அழைத்து சென்றனர். அவளை கொன்று கால்வாயில் வீசியதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை அவர்களிடம் போலீசார் கேட்டனர். விசாரணை முடிவில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    • ஆளுங்கட்சியாக பா.ஜனதா இருப்பதால் வெற்றி பெறுவது எளிது என தமிழிசை கணக்கிட்டார்.
    • அண்ணன் என அழைத்த தங்கையை வேட்பாளராக்க முதல்-அமைச்சர் ரங்கசாமியும் முன்வரவில்லை.

    புதுச்சேரி:

    தமிழ்நாடு பா.ஜனதா மாநில தலைவராக திறம்பட செயலாற்றிய தால் தமிழிசைக்கு தெலுங்கானா கவர்னர் பதவி அளிக்கப்பட்டது.

    தெலுங்கானா கவர்னராக இருந்த தமிழிசை, 2021 பிப்ரவரியில் புதுச்சேரியின் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார். வாரத்துக்கு 3 நாள் தெலுங்கானா, 3 நாள் புதுவை என பம்பரமாக சுழன்று தமிழிசை பணியாற்றி வந்தார்.

    புதுச்சேரியின் மீது அதீத கவனம் செலுத்தி வந்த அவர் அரசு பள்ளிகளில் புத்தக பை இல்லாத தினம், வாட்டர் பெல் நேரம், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு, பெண் அரசு ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை நேர சலுகை என பல்வேறு வகையிலும் அரசுக்கு உறுதுணையாக செயல்பட்டார்.

    புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியை, அரசு விழாக்களில் அண்ணன் என அழைத்தார். அமைச்சர்கள் தமிழிசையை அக்கா என்றே அழைத்து வந்தனர். பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவே தமிழிசையின் செயல்பாடுகள் அமைந்தது.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை, ஆண்டவனும், ஆண்டு கொண்டிருப்பவரும் முடிவு செய்வார்கள் என தெரிவித்து வந்தார். புதுச்சேரியில் ஆளுங்கட்சியாக பா.ஜனதா இருப்பதால் வெற்றி பெறுவது எளிது என தமிழிசை கணக்கிட்டார்.

    முதல்- அமைச்சர் ரங்கசாமியும் தமிழிசையின் எண்ணத்துக்கு தடை போடவில்லை.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்க, நெருங்க புதுச்சேரி அரசியல் கட்சியினர் தமிழிசையை வெளிமாநிலத்தை சேர்ந்தவர் என முத்திரை குத்தினர். தமிழிசை புதுவையில் போட்டியிட பா.ஜனதா மேலிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அணுகிய போது கிரீன் சிக்னல் அளிக்கவில்லை.

    இருப்பினும் கட்சி தலைமை மீது மிகுந்த நம்பிக்கையோடு தமிழிசை காத்திருந்தார். புதுச்சேரியில் 3 ஆண்டாக செயல்படுத்தியுள்ள திட்டங்களை புத்தகமாக மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து வழங்கினார். பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்தார்.

    ஆனால், புதுச்சேரியில் பா.ஜனதாவினர் கவர்னர் தமிழிசையை வேட்பாளராக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். புதுச்சேரியை சேராதவரை வேட்பாளராக நிறுத்தினால் எதிர்கட்சிகள் இதனை பிரசாரமாக செய்யும் என பா.ஜனதாவினர் எதிர்த்தனர்.

    மேலும், புதுச்சேரியை சேர்ந்த பெரும்பான்மை சமூகத்தினர், சிறுபான்மையினர், பட்டியலினத் தவர் ஓட்டுகள் பா.ஜனதாவுக்கு கிடைக்காது என புள்ளி விபரங்களை தெரிவித்தனர்.

    இதற்கு பதில் அளித்த தமிழிசை, தமிழ்நாடு வேறு, புதுவை வேறு அல்ல, மக்களிடையே வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்ற பிரிவினை வாதத்தை ஏற்படுத்தாதீர்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

    இருப்பி னும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர் வேட்பாளராகக் கூடாது என உள்ளூர் பா.ஜனதாவினர் உறுதியாக இருந்தனர்.

    அண்ணன் என அழைத்த தங்கையை வேட்பாளராக்க முதல்-அமைச்சர் ரங்கசாமியும் முன்வரவில்லை. இதனால் தமிழிசையை வேட்பாளராக்க கட்சித்தலைமை தயங்கியது.

    இதனிடையே புதிய் சட்டமன்ற கட்டிடம் கட்ட கவர்னர் தமிழிசை முட்டுக்கட்டையிடுவதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பகிரங்கமாக தெரிவித்தார்.

    இது ஆளுங்கட்சியின் ஒட்டு மொத்த எதிர்ப்பாக பார்க்கப்பட்டது.

    இதனால் தமிழ்நாட்டில் போட்டியிடும்படி தமிழிசையை பா.ஜனதா தலைமை கேட்டுக் கொண்டது. இதையேற்று புதுச்சேரியை கைகழுவி தமிழிசை, தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்து தமிழ்நாட்டில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

    • டாக்டர் தமிழசை தமிழக பா.ஜனதா தலைவராக கடந்த 2019-ம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
    • தேர்தலில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    தெலுங்கானா மற்றும் புதுவை மாநில ஆளுநராக பதவி வகித்தவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்.

    தமிழிசை சவுந்தரராஜன் பாராளுமன்ற தேர்தலில் களம் இறக்கப்படலாம் என்று கடந்த சில மாதங்களாக பேசப்பட்டது.

    இதுபற்றி அவரிடம் கேட்டபோதெல்லாம் 'ஆண்டவரும், ஆண்டு கொண்டிருப்பவரும் முடிவு செய்வார்கள்' என்று தெரிவித்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலையில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். இதுபற்றி இன்று காலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அவர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். ஜனாதிபதி முர்முவும் அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டார்.

    டாக்டர் தமிழசை தமிழக பா.ஜனதா தலைவராக கடந்த 2019-ம் ஆண்டு வரை பதவி வகித்தார். பின்னர் 2019 பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. எம்.பி. கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

    அதன் பிறகு 1.9.2019 அன்று தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

    2021-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந்தேதி புதுவை மாநில துணைநிலை ஆளுனர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. இரு மாநில ஆளுநராகவும் பதவி வகித்த தமிழிசை தொடர்ந்து 3 ஆண்டாக இரு மாநிலங்களிலும் தேசிய கொடி ஏற்றிய பெருமை பெற்றார்.

    டாக்டர் தமிழிசை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததற்கு காரணம் வருகிற தேர்தலில் அவரை களம் இறக்க டெல்லி மேலிடம் விரும்புவதாக கூறப்படுகிறது.

    இந்த தேர்தலில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    தென்சென்னை அல்லது தென் மாவட்டங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

    தமிழிசை மீண்டும் அரசியலுக்கு திரும்பி இருப்பது பா.ஜனதாவினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் மாநில தலைவராக இருந்தபோதுதான் கடுமையான விமர்சனங்களையும் தாண்டி கட்சியை பற்றி பேச வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
    • தேர்தல் முடியும் வரையிலும் போலீசார் உஷாராக இருக்க வேண்டும் என சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களை கவர மது பானங்களை பயன்படுத்துவதை தடுக்க மற்றும் அண்டை மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக மது பானங்களை கடத்துவதை தடுக்கவும், புதுவை பிராந்திய எல்லை பகுதிகளில் 10 இடங்களில் கலால்துறையால் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    கனகசெட்டிகுளம், தவளக்குப்பம், முள்ளோடை, சோரியாங் குப்பம், மடுகரை, மதகடிப்பட்டு, திருக்கனூர், சேதராப்பட்டு, அய்யங் குட்டிபாளையம், கோரிமேடு ஆகிய சோதனை சாவடிகள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தக் குழுக்கள் புதுச்சேரியில் இருந்து அண்டை மாநிலத்துக்கும், அண்டை மாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கும் வாக்காளர்களுக்கு வழங்க பணம், மதுபானங்கள், பரிசு பொருட்கள் ஆகியவற்றை சட்ட விரோதமாக கடத்துவதை, தவிர்க்க வாகன சோதனையில் தேர்தல் நடக்கும் நாள் வரை ஈடுபட உள்ளது.

    மேலும் இந்த சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

    இதற்கிடையே புதுச்சேரி சட்டம்- ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. சட்டம்- ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ் பெக்டர்கள் பங்கேற்றனர்.

    அந்த ஆலோசனை கூட்டத்தின் போது பாராளுமன்ற தேர்தலையொட்டி நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் போலீசார் வாகன சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை கண்காணித்து தடுக்க வேண்டும். தேர்தல் முடியும் வரையிலும் போலீசார் உஷாராக இருக்க வேண்டும் என சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

    • ஒரு வேட்பாளர் பெயர் அடிபடுவதால் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
    • 2 பேர் உள்ளூர் பிரபலங்கள், 2 பேர் வெளி மாநில அதிகார பிரபலங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    தேசிய கட்சிகளான காங்கிரஸ்- பா.ஜனதா இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. தனித்து களமிறங்கும் பட்சத்தில் மும்முனை போட்டி சூழல் உருவாகும். அ.தி.மு.க.வில் போட்டியிட 21 பேர் விருப்ப மனு அளித்தனர்.

    வேட்பாளரையும் அக்கட்சி தேர்வு செய்து விட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கூட்டணி பேச்சு வார்த்தையில் அ.தி.மு.க. தலைமை ஈடுபட்டுள்ளதால் அதிகாரப் பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

    அதே வேளையில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி வேட்பாளரை தேர்வு செய்து பட்டியலை தேசிய தலைமைக்கு அனுப்பிவிட்டது. 3-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் போது புதுச்சேரி வேட்பாளரின் பெயர் இடம்பெறும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.


    ஆனால் ஆளுங்கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் களமிறங்கும் பா.ஜனதாவில் இதுவரை வேட்பாளர் யார்? என்பது தெரியவில்லை. தினசரி ஒரு வேட்பாளர் பெயர் அடிபடுவதால் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அக்கட்சி நிர்வாகிகளிடம் கட்சி தலைமை வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தியது.

    அதில் காரைக்காலை சேர்ந்த தொழிலதிபரை வேட்பாளராக நிறுத்த கருத்து கேட்கப்பட்டது. அதில் எம்.எல்.ஏ.க்கள் காரைக்கால் தொழிலதிபரை தேர்தலில் நிறுத்த சம்மதம் தெரிவித்தனர். இதனால் பா.ஜனதா வேட்பாளர் தேர்வில் இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கருதப்பட்டது.

    இதனிடையே நேற்று பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி. நிருபர்களை சந்தித்து பேசிய போது, புதுச்சேரி வேட்பாளர் தேர்வுக்கான பட்டியலில் 4 பேர் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார். அந்த பட்டியலை டெல்லி கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அதில் ஒருவரை கட்சியின் தேசிய தலைமை இறுதி செய்து அறிவிக்கும் என்றார்.


    அதில் 2 பேர் உள்ளூர் பிரபலங்கள், 2 பேர் வெளி மாநில அதிகார பிரபலங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

    இதில் ஒருவரை அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் முடிவு செய்து விரைவில் அறிவிக்க உள்ளனர்.

    இதற்கிடையே புதுச்சேரி மக்களின் மனநிலை, தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்தினால் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு என்பது தொடர்பான ரகசிய சர்வேயை மத்திய உளவுத்துறை மூலமாக பா.ஜனதா மேலிடம் நடத்தியுள்ளது.

    அதில் புதுச்சேரியில் மக்களின் ஆதரவை பெற்ற பிரபலமான ஒருவரின் பெயர் வெற்றி வேட்பாளர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாகவும், வெளிமாநிலத்தவர் 2, 3-ம் இடத்திலும், காரைக்கால் தொழிலதிபர் பெயர் கடைசி இடத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.

    இவர்களில் ஒருவரை கட்சி மேலிடம் ஏற்கனவே முடிவு செய்து வைத்து விட்டதால், ஓரிரு நாளில் பா.ஜனதா வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக கட்சி தலைமை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கட்சி நிர்வாகிகள் கூறினர்.

    • காரைக்காலை சேர்ந்த தொழிலதிபர் ஜி.என்.எஸ்.ராஜசேகரனை வேட்பாளராக கட்சி மேலிடத்திற்கு பரிந்துரை செய்ய முடிவானது.
    • கடந்த சட்டமன்ற தேர்தலில் காரைக்கால் திருநள்ளாறு தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜனதா போட்டியிடுகிறது.

    புதுச்சேரி பா.ஜனதா சார்பில் போட்டியிட கவர்னர், மத்திய மந்திரி, புதுவை எம்.எல்.ஏ.க்கள், காரைக்கால் தொழிலதிபர் என பலரின் பெயர்கள் பேசப்பட்டது.

    வேட்பாளரை இறுதி செய்ய பா.ஜனதா மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து பேசினார்.

    இதில் காரைக்காலை சேர்ந்த தொழிலதிபர் ஜி.என்.எஸ்.ராஜசேகரனை வேட்பாளராக கட்சி மேலிடத்திற்கு பரிந்துரை செய்ய முடிவானது.

    இவர் ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலில் காரைக்கால் திருநள்ளாறு தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். இந்த நிலையில் பா.ஜனதா ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.வும், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு வரும் சிவசங்கரன் கூறியதாவது:-


    பா.ஜனதா ஆலோசனை கூட்டத்தில் புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட காரைக்காலை சேர்ந்த ராஜசேகர் தேர்வானார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    பா.ஜனதாவில் மாநில தலைமைக்கு பணம் தந்தால்தான் வாய்ப்பு என்ற நிலையை உருவாக்கி விட்டனர். மக்கள் செல்வாக்கை பார்ப்பதில்லை. ரூ.50 கோடி பணம் இருந்தால்தான் சீட் என்கிறார்கள்.

    நல்ல வேட்பாளரை நிறுத்தினால் வெல்லலாம். கட்சித்தலைமை தெளிவாக இருக்கிறார்கள். உள்ளூர் தலைமை தான் சரியில்லை.

    உள்ளூர் தலைமை பணத்தை பார்க்கிறார்கள். இது தவறு என்று கட்சி தலைமையிடம் தெரிவித்துள்ளோம். உள்துறை அமைச்சர் நின்றால் வெற்றி கிடைக்கும் என்று சொல்லி விட்டோம். இறுதி முடிவு கட்சி தலைமை தான் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு சிவசங்கரன் எம்.எல்.ஏ கூறினார்.

    • விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    • அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வம்பா கீரப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மயான கொள்ளை உற்சவம் மிக சிறப்பாக நடைபெறும்.

    அதுபோல் இந்த ஆண்டு மயான கொள்ளை உற்சவம் கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான மயான கொள்ளை விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் அங்குள்ள சன்னியாசி தோப்பு சுடுகாட்டில் மயான கொள்ளை முடிந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. அப்போது சாமி சப்பரம் எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் உரசியது. இதனால் சாமியை தூக்கிவந்த இளைஞர்களை மின்சாரம் தாக்கியது.

    இதனால் சுதாரித்துக் கொண்ட இளைஞர்கள் சாமியை கீழே வைத்தனர். உடனடியாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

    இந்த தகவல் பரவியதும் அங்கிருந்த பக்தர்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • 5 தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியின்றி தனித்து விடப்பட்டுள்ளது.
    • கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றால் அந்த கட்சிக்கான வாக்குகள் அ.தி.மு.க. வுக்கு கூடுதலாக கிடைக்கும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி என மும்முனைப்போட்டி உருவாகியுள்ளது.

    தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமை தே.மு.தி.க, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சிறிய கட்சிகள் ஆதரவு அளித்திருந்தாலும், குறிப்பிட்ட வாக்கு சதவீதம் உள்ள கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறவில்லை. இந்நிலையில் பா.ம.க. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் 5 தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியின்றி தனித்து விடப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து இடம் பெற்ற கட்சிகளுக்கு புதுச்சேரியில் செல்வாக்கும், வாக்கு சதவீதமும் அவ்வளவாக இல்லை.

    கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றால் அந்த கட்சிக்கான வாக்குகள் அ.தி.மு.க. வுக்கு கூடுதலாக கிடைக்கும்.

    ஆனால் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெறுவது கேள்விக்குறியாகி உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பெறும் ஓட்டுகள், வரும் காலத்தில் கூட்டணி அமைந்தால் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூடுதல் சீட் பெற உதவும்.

    இதனால் கூட்டணியின்றி தனித்து விடப்பட்ட புதுச்சேரி அ.தி.மு.க.வினர் தவித்து வருகின்றனர்.

    • கழிவுநீர் வாய்க்காலில் சிறுமி உடல் மீட்கப்பட்டதால் அழுகிய நிலையில் இருந்தது.
    • சிறுமியின் உடலை ஜிப்மர் டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால் பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த கருணாஸ் (வயது19), விவேகானந்தன்(59) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கழிவுநீர் வாய்க்காலில் சிறுமி உடல் மீட்கப்பட்டதால் அழுகிய நிலையில் இருந்தது.

    சிறுமியின் உடலை ஜிப்மர் டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். இறந்த சிறுமியின் உடலை உறுதிப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதனால் சிறுமியின் பெற்றோரிடம் முத்தியால் பேட்டை போலீசார், கதிர்காமம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழுவின் மூலம் ரத்த மாதிரிகளை சேகரித்துள்ளனர்.

    இந்த ரத்த மாதிரிகள் கிருமாம்பாக்கத்தில் உள்ள தடவியல் துறைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

    • தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமை தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
    • பா.ம.க. இடம் பெற்றிருந்தால் அந்த கட்சிக்கான வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு கிடைத்திருக்கும்.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி என மும்முனைப்போட்டி உருவாகியுள்ளது.

    தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமை தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சிறிய கட்சிகள் ஆதரவு அளித்திருந்தாலும், குறிப்பிட்ட வாக்கு சதவீதம் உள்ள கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறவில்லை.

    இந்த நிலையில் பா.ம.க. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே புதுவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் உட்பட 23 பேர் கட்சித்தலைமையிடம் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.

    விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் சமீபத்தில் தொகுதிவாரியாக அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடந்தது. புதுவையில் 23 பேரும் நேர்காணலில் பங்கேற்றனர். ஆனால் இதில் அ.தி.மு.க. அவைத்தலைவர் அன்பானந்தம், அன்பழகன் உடையார், இளைஞர் பாசறை தலைவர் தமிழ்வேந்தன் ஆகியோரிடம் மட்டும் நேர்காணல் நடத்தப்பட்டது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் 5 தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியின்றி தனித்து விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து இடம்பெற்ற கட்சிகளுக்கு புதுவையில் வாக்கு சதவீதம் கிடையாது.

    பா.ம.க. இடம் பெற்றிருந்தால் அந்த கட்சிக்கான வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு கிடைத்திருக்கும். ஆனால் அதுவும் தற்போது கானல்நீராகிவிட்டது. பாராளுமன்ற தேர்தலில் பெரும் ஓட்டுகள், வரும் காலத்தில் கூட்டணி அமைந்தால் அ.தி.மு.க.வுக்கு கூடுதல் சீட் பெற உதவும்.

    இதனால் கணிசமான சதவீத வாக்குகளை பெற்றே தீர வேண்டும் என்ற நிலையில் புதுவை அ.தி.மு.க.வினர் உள்ளனர். 

    ×