search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தேர்தலில் போட்டியிட ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை
    X

    தேர்தலில் போட்டியிட ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை

    • டாக்டர் தமிழசை தமிழக பா.ஜனதா தலைவராக கடந்த 2019-ம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
    • தேர்தலில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    தெலுங்கானா மற்றும் புதுவை மாநில ஆளுநராக பதவி வகித்தவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்.

    தமிழிசை சவுந்தரராஜன் பாராளுமன்ற தேர்தலில் களம் இறக்கப்படலாம் என்று கடந்த சில மாதங்களாக பேசப்பட்டது.

    இதுபற்றி அவரிடம் கேட்டபோதெல்லாம் 'ஆண்டவரும், ஆண்டு கொண்டிருப்பவரும் முடிவு செய்வார்கள்' என்று தெரிவித்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலையில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். இதுபற்றி இன்று காலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அவர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். ஜனாதிபதி முர்முவும் அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டார்.

    டாக்டர் தமிழசை தமிழக பா.ஜனதா தலைவராக கடந்த 2019-ம் ஆண்டு வரை பதவி வகித்தார். பின்னர் 2019 பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. எம்.பி. கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

    அதன் பிறகு 1.9.2019 அன்று தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

    2021-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந்தேதி புதுவை மாநில துணைநிலை ஆளுனர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. இரு மாநில ஆளுநராகவும் பதவி வகித்த தமிழிசை தொடர்ந்து 3 ஆண்டாக இரு மாநிலங்களிலும் தேசிய கொடி ஏற்றிய பெருமை பெற்றார்.

    டாக்டர் தமிழிசை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததற்கு காரணம் வருகிற தேர்தலில் அவரை களம் இறக்க டெல்லி மேலிடம் விரும்புவதாக கூறப்படுகிறது.

    இந்த தேர்தலில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    தென்சென்னை அல்லது தென் மாவட்டங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

    தமிழிசை மீண்டும் அரசியலுக்கு திரும்பி இருப்பது பா.ஜனதாவினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் மாநில தலைவராக இருந்தபோதுதான் கடுமையான விமர்சனங்களையும் தாண்டி கட்சியை பற்றி பேச வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×