search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பா.ஜனதா வேட்பாளர் தேர்வில் மீண்டும் குழப்பம்
    X

    பா.ஜனதா வேட்பாளர் தேர்வில் மீண்டும் குழப்பம்

    • ஒரு வேட்பாளர் பெயர் அடிபடுவதால் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
    • 2 பேர் உள்ளூர் பிரபலங்கள், 2 பேர் வெளி மாநில அதிகார பிரபலங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    தேசிய கட்சிகளான காங்கிரஸ்- பா.ஜனதா இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. தனித்து களமிறங்கும் பட்சத்தில் மும்முனை போட்டி சூழல் உருவாகும். அ.தி.மு.க.வில் போட்டியிட 21 பேர் விருப்ப மனு அளித்தனர்.

    வேட்பாளரையும் அக்கட்சி தேர்வு செய்து விட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கூட்டணி பேச்சு வார்த்தையில் அ.தி.மு.க. தலைமை ஈடுபட்டுள்ளதால் அதிகாரப் பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

    அதே வேளையில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி வேட்பாளரை தேர்வு செய்து பட்டியலை தேசிய தலைமைக்கு அனுப்பிவிட்டது. 3-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் போது புதுச்சேரி வேட்பாளரின் பெயர் இடம்பெறும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.


    ஆனால் ஆளுங்கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் களமிறங்கும் பா.ஜனதாவில் இதுவரை வேட்பாளர் யார்? என்பது தெரியவில்லை. தினசரி ஒரு வேட்பாளர் பெயர் அடிபடுவதால் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அக்கட்சி நிர்வாகிகளிடம் கட்சி தலைமை வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தியது.

    அதில் காரைக்காலை சேர்ந்த தொழிலதிபரை வேட்பாளராக நிறுத்த கருத்து கேட்கப்பட்டது. அதில் எம்.எல்.ஏ.க்கள் காரைக்கால் தொழிலதிபரை தேர்தலில் நிறுத்த சம்மதம் தெரிவித்தனர். இதனால் பா.ஜனதா வேட்பாளர் தேர்வில் இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கருதப்பட்டது.

    இதனிடையே நேற்று பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி. நிருபர்களை சந்தித்து பேசிய போது, புதுச்சேரி வேட்பாளர் தேர்வுக்கான பட்டியலில் 4 பேர் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார். அந்த பட்டியலை டெல்லி கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அதில் ஒருவரை கட்சியின் தேசிய தலைமை இறுதி செய்து அறிவிக்கும் என்றார்.


    அதில் 2 பேர் உள்ளூர் பிரபலங்கள், 2 பேர் வெளி மாநில அதிகார பிரபலங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

    இதில் ஒருவரை அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் முடிவு செய்து விரைவில் அறிவிக்க உள்ளனர்.

    இதற்கிடையே புதுச்சேரி மக்களின் மனநிலை, தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்தினால் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு என்பது தொடர்பான ரகசிய சர்வேயை மத்திய உளவுத்துறை மூலமாக பா.ஜனதா மேலிடம் நடத்தியுள்ளது.

    அதில் புதுச்சேரியில் மக்களின் ஆதரவை பெற்ற பிரபலமான ஒருவரின் பெயர் வெற்றி வேட்பாளர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாகவும், வெளிமாநிலத்தவர் 2, 3-ம் இடத்திலும், காரைக்கால் தொழிலதிபர் பெயர் கடைசி இடத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.

    இவர்களில் ஒருவரை கட்சி மேலிடம் ஏற்கனவே முடிவு செய்து வைத்து விட்டதால், ஓரிரு நாளில் பா.ஜனதா வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக கட்சி தலைமை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கட்சி நிர்வாகிகள் கூறினர்.

    Next Story
    ×