search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மக்கள் பணியில் இருந்து என்னை பிரிக்க முடியாது- தமிழிசை உருக்கம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மக்கள் பணியில் இருந்து என்னை பிரிக்க முடியாது- தமிழிசை உருக்கம்

    • கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்ட தமிழிசைக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
    • இந்திய நாடு வளர்ச்சியடைந்து வருகிறது. வேண்டும் மோடி, மீண்டும் மோடி என்ற வாசகத்தை கொடுத்தது நான்தான்.

    புதுச்சேரி:

    புதுவையின் பொறுப்பு கவர்னராக இருந்த தமிழிசை நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதைத்தொடர்ந்து நேற்று புதுவைக்கு வந்த தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரி மக்கள் என் மீது அபரீதமான அன்பை பொழிந்தார்கள். இந்த அன்பு என்றும் தொடரும். புதுச்சேரிக்கும், எனக்கும் உள்ள தொடர்பு தொடரும். வாழ்க்கையில் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.

    பிரதமர், உள்துறை அமைச்சர், ஜனாதிபதி ஆகியோருக்கு நன்றி. புதுச்சேரிக்கு வந்தது மறக்க முடியாத நிகழ்வு. தமிழில் பதவிப்பிரமாணம் எடுக்க முடிந்தது.

    தமிழில் கவர்னர் உரையாற்றியுள்ளேன். கவர்னராக பல திட்டங்களை செயல்படுத்த முடிந்தது. 3 மாதம் பொறுப்பு என கூறினார்கள். ஆனால் 3 ஆண்டுகளாகி விட்டது. அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. இதைவிட மக்களுக்கு அதிகமாக சேவை செய்ய வேண்டும் என்ற உள்ளுணர்வோடு செல்கிறேன். ராஜினாமா செய்தது நானே எடுத்த முடிவு. தெலுங்கானாவில் கவர்னர் மாளிகை ஊழியர்கள் அழுது கொண்டே வழியனுப்பினர். 300 பேர் அங்கு கவர்னருக்காக பணியாற்றுகின்றனர். அந்த வாழ்க்கையை விட்டு விட்டு பொது வாழ்க்கைக்கு வருவதற்கான அன்பை புரிந்து கொள்ள வேண்டும். சுயநலத்துக்காக எடுக்கப்பட்ட முடிவு அல்ல.


    கவர்னர் மாளிகை மக்கள் பவனமாகத்தான் இருந்தது. இன்னும் மக்களுக்கு நேரடி தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற ஆதங்கத்தில் ராஜினாமா செய்தேன்.

    நான் தமிழகத்தை சேர்ந்த தமிழ் மகள். என்னை அந்நிய மாநிலமாக பார்க்காதீர்கள் என கோரிக்கை வைத்தேன். நாளை பா.ஜனதா கட்சி அலுவலகம் செல்கிறேன். அவர்கள் முடிவை ஏற்பேன்.

    புதுச்சேரி மக்கள் என்னை புறக்கணிக்கவில்லை, அவர்கள் என் மீது அதிக அன்பு வைத்துள்ளனர். வரும் காலத்தில் புதுச்சேரி முதலமைச்சர், கவர்னரிடம் பல்வேறு ஆலோசனைகளை தொடர்ந்து கூறுவேன். பெண்கள் பாதுகாப்பாக என் குரல் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும்.

    எனது பலம் மக்கள் அன்பு, பாசம், என் மீது உள்ள நம்பிக்கை, கடவுள் மீது உள்ள நம்பிக்கை. எதிர் வினைகளை, விமர்சனங்களை தூசிபோல தட்டி விட்டு செல்வது என் பலம்.

    இந்த பலம் எனக்கு கைகொடுக்கும். எனது விருப்பம் மக்கள் தொடர்பு தான். நான் மிகுந்த மகிழ்ச்சியோடு இங்கிருந்து செல்கிறேன். மக்கள் பணியிலிருந்து என்னை பிரிக்க முடியாது.

    எனது மக்கள் பணி தொடரும். மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதே என் எண்ணம். அவரால்தான் இந்திய நாடு வளர்ச்சியடைந்து வருகிறது. வேண்டும் மோடி, மீண்டும் மோடி என்ற வாசகத்தை கொடுத்தது நான்தான்.

    அதுதான் என் முழு முதல் கவனமாக இருக்கும். மக்களுக்கான எனது கவர்னர் பணிக்கு எந்த உள்ளர்த்தமும் கற்பிக்க வேண்டாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து தமிழக அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் கருத்து உட்பட பல்வேறு கேள்விகளுக்கு சிரிப்பை மட்டுமே தமிழிசை பதிலாக அளித்தார்.

    கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்ட தமிழிசைக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து தலைமை செயலர் சரத்சவுகான், காவல் துறை தலைவர் ஸ்ரீநிவாஸ் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், கவர்னர் மாளிகை அதிகாரிகள், ஊழியர்கள் அவரை வழி அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×