search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Graveyard Robbery Festival"

    • விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    • அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வம்பா கீரப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மயான கொள்ளை உற்சவம் மிக சிறப்பாக நடைபெறும்.

    அதுபோல் இந்த ஆண்டு மயான கொள்ளை உற்சவம் கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான மயான கொள்ளை விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் அங்குள்ள சன்னியாசி தோப்பு சுடுகாட்டில் மயான கொள்ளை முடிந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. அப்போது சாமி சப்பரம் எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் உரசியது. இதனால் சாமியை தூக்கிவந்த இளைஞர்களை மின்சாரம் தாக்கியது.

    இதனால் சுதாரித்துக் கொண்ட இளைஞர்கள் சாமியை கீழே வைத்தனர். உடனடியாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

    இந்த தகவல் பரவியதும் அங்கிருந்த பக்தர்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • சாமி வேடமணிந்த பக்தர்கள் பரவசம்
    • பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

    வேலூர்:

    வேலூரில் நேற்று மயானக் கொள்ளை திருவிழா நடந்தது.விழாவையொட்டி வேலூர் சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், சத்துவாச்சாரி, விருதம்பட்டு மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அங்காளபரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்றனர். பல இடங்களில் சாமியை சப்பரத்தில் வைத்து எடுத்து சென்றனர்.

    ஊர்வலத்தின் முன்னே பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் கடவுள் போன்று வேடமிட்டு சென்றனர்.

    அவர்களில் பலர் காளியம்மன் போல வேடமிட்டு சென்றதும், கையில் சூலாயுதம் ஏந்திச்சென்றதும் தத்ரூபமாக இருந்தது.

    மேலும் ஊர்வலத்தில் சில பெண்கள் சாமி ஆடியபடி கோழி, ஆடுகளை வாயில் கவ்வியபடி சென்றனர். சில பக்தர்கள் எலும்பு துண்டுகளை கவ்வியபடியும், ஆட்டுக்குடலை மாலையாக அணிந்த படியும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

    ஒரு சில இடங்களில் நடந்த ஊர்வலத்தை வெளிநாட்டினர் புகைப்படம் எடுத்தனர். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச்சென்று ஆங்காங்குள்ள மயானத்தை அடைந்தது. வேலூர்- காட்பாடியை சேர்ந்த பக்தர்கள் முத்துமண்டபம் அருகே உள்ள பாலாற்றங்கரைக்கு சாமியுடன் ஊர்வலமாக சென்றனர்.

    அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையும், வழிபாடும் நடந்தது. பக்தர்கள் தங்கள் முன்னோர் சமாதிகளுக்கு சென்று கும்பிட்டனர். அம்மனை தரிசனம் செய்த பக்தர்கள் பின்னர் உப்பு, மிளகு, சுண்டல், கொழுக்கட்டை போன்றவற்றை சூறையிட்டு நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். வழக்கத்தை விட இந்த ஆண்டு மயான கொள்ளை திருவிழாவில் அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று மதியம் முதல் இன்று அதிகாலை வரை பாலாற்றங்கரையில் மயான கொள்ளை திருவிழா தொடர்ந்து நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி வேலூரில் விடிய விடிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ×