search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வேட்பாளர் தேர்வு குளறுபடியால் புதுச்சேரியில் பா.ஜனதா தேர்தல் பணி ஸ்தம்பிப்பு
    X

    வேட்பாளர் தேர்வு குளறுபடியால் புதுச்சேரியில் பா.ஜனதா தேர்தல் பணி ஸ்தம்பிப்பு

    • கட்சியின் பெரும்பாலானவர்கள் கைகாட்டும் அமைச்சர் நமச்சிவாயம், தேர்தலில் போட்டியிடுவதில்லை என உறுதியாக மறுத்து வருகிறார்.
    • தொடர்ந்து வேட்பாளர் தேர்வில் நடைபெறும் இழுபறி, குளறுபடியால் தொண்டர்கள் மிகவும் சோர்ந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    வடமாநிலங்களில் செல்வாக்கோடு இருக்கும் பா.ஜனதாவை தென் மாநிலங்களில் கால் பதிக்க வைக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளது.

    தமிழகம், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களில் பா.ஜனதாவை வளர்க்க தீவிரம் காட்டி வருகின்றனர். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரசோடு கூட்டணி அமைத்து ஆட்சியையும் பிடித்தனர்.

    தொடர்ந்து கட்சியை அடிமட்டம் வரை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் முடிவை ஓராண்டுக்கு முன்பே எடுத்தனர். இதற்காக மத்திய மந்திரி எல்.முருகன் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் மாதம் 2 முறை புதுச்சேரிக்கு வந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து வந்தார்.

    ஓராண்டுக்கு முன்பிருந்தே தேர்தல் பணியை பா.ஜனதாவினர் தொடங்கினர். ஆனால் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் இதுவரை வேட்பாளரை இறுதி செய்ய முடியாமல், பா.ஜனதா தவிக்கிறது.

    கட்சியின் பெரும்பாலானவர்கள் கைகாட்டும் அமைச்சர் நமச்சிவாயம், தேர்தலில் போட்டியிடுவதில்லை என உறுதியாக மறுத்து வருகிறார்.

    அதே நேரத்தில் புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயத்தை நிறுத்தினால் தான் வெற்றி கிடைக்கும் என கூறி வருகிறார்.

    இதற்கிடையே பா.ஜனதாவினர் கிராமங்கள்தோறும் சுவர்களில் தாமரை சின்னத்தை வரைந்து மீண்டும் மோடி, வேண்டும் மோடி, வாக்களிப்பீர் தாமரைக்கு என பிரசாரத்தையும் தொடங்கினர். வேட்பாளர் அறிவிப்பு வந்து விடும் என்ற ஆர்வத்தோடு தொண்டர்களும் உற்சாகமடைந்தனர்.

    ஆனால் தொடர்ந்து வேட்பாளர் தேர்வில் நடைபெறும் இழுபறி, குளறுபடியால் தொண்டர்கள் மிகவும் சோர்ந்துள்ளனர். அமைச்சர் நமச்சிவாயத்தை தவிர்த்து வேறு வேட்பாளர்களை நிறுத்தினால் வெற்றி கிடைக்காது என்ற மனநிலைக்கு பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினர் தள்ளப்பட்டுள்ளனர்.

    இதனால் பா.ஜனதா தேர்தல் பணிகள் முற்றிலுமாக ஸ்தம்பித்து போயுள்ளது.

    Next Story
    ×