என் மலர்
புதுச்சேரி
- தேர்தலில் கண்டெய்னர் மூலம் பா.ஜனதா வேட்பாளருக்கு பணம் வந்து சேர்ந்துள்ளதாக பேசப்படுகிறது.
- உலக அளவில் நம் நாடு ஜனநாயக நாடு என பேசப்படுவதற்கே இந்திய தேர்தல் ஆணையத்தினுடைய பாகுபாடற்ற செயல்பாடு முதல் காரணமாக இருக்கிறது.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகள் நேர்மையாக, வெளிப்படையாக, சமநிலையோடு நடக்கவில்லை. மாநில உள்துறை அமைச்சராக போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளருக்கு அரசு எந்திரங்கள் முழுமையாக தேர்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக துணை நிற்கின்றன.
அவரது பிரசாரத்தின் போது காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு பிரசாரத்தின் போதும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து வருகின்றன. ஆனால் இதை தேர்தல் துறை கண்டு கொள்ளவில்லை.
தற்போது வயது முதிர்ந்தவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் வீட்டில் இருந்தே தபால் ஓட்டு போடப்படுகிறது. இது சம்பந்தமான அரசு துறை ஊழியர்களை தன்வசப்படுத்திக் கொண்டு அவர்களது விலாசப்பட்டியலை பா.ஜனதாவினர் கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு ஓட்டுக்கும் நேரிடையாக வீட்டிற்கே சென்று ரூ.500 பணம் கொடுக்கின்றனர்.
இது சர்வ சாதாரணமாக வெளிப்படையாக நடக்கிறது. இந்த தேர்தலில் கண்டெய்னர் மூலம் பா.ஜனதா வேட்பாளருக்கு பணம் வந்து சேர்ந்துள்ளதாக பேசப்படுகிறது. அந்த பணம் முக்கிய நிர்வாகிகளிடம் பிரித்து கொடுக்கப்பட்டு ஒவ்வொரு ஓட்டுக்கும் சுமார் ரூ.1000 வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது.
உலக அளவில் நம் நாடு ஜனநாயக நாடு என பேசப்படுவதற்கே இந்திய தேர்தல் ஆணையத்தினுடைய பாகுபாடற்ற செயல்பாடு முதல் காரணமாக இருக்கிறது. ஆனால் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியை பொருத்தமட்டில் இந்த தேர்தலில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டு வருகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து மத்திய ரிசர்வ் காவல் படையினரின் கண்காணிப்பிலும், புதுவை மாநிலத்திற்கு நேர்மையான தேர்தல் நடத்தும் அதிகாரிகளை கூடுதலாக நியமனம் செய்து நடைபெற இருக்கும் இந்த பாராளுமன்ற தேர்தலில் அதிகார பலம், பணம் பலம், மிரட்டல்கள் இவற்றை தடுத்த நிறுத்த வேண்டும்.
புதுவை அரசு நிர்வாகமே ஒருதலைப்பட்சமாக பா.ஜனதா வேட்பாளருக்கு தேர்தல் பணி ஆற்றுவதால் நடைபெற இருக்கும் புதுவை பாராளுமன்ற தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இளைஞர்கள் சிலர் கடலில் இறங்கி குளித்தனர்.
- போலீசாரின் இந்த நூதன தண்டனையை கடற்கரைக்கு வந்தவர்கள் வியந்து பார்த்து சென்றனர்.
புதுச்சேரி:
புதுவை கடல் மிகவும் ஆபத்தானது ஆகும். இதை அறியாமல் சுற்றுலா பயணிகள் உள்பட பலரும் கடலில் இறங்கி குளிக்கின்றனர்.
புத்தாண்டு தினத்தன்று கடலில் குளித்த மாணவ-மாணவிகள் 4 பேர் அலையில் சிக்கி பலியானார்கள். அதைத் தொடர்ந்து கடலில் இறங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நாள்தோறும் காலை முதல் மாலை வரை போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து சென்று கடலில் இறங்குவதை கட்டுப்படுத்தி வருகின்றனர்.
பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடற்கரையில் பல இடங்களில் விழிப்புணர்வு வாசகங்களுடன் அறிவிப்பு பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் நேற்று இளைஞர்கள் சிலர் கடலில் இறங்கி குளித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை எச்சரிக்கை செய்து வெளியே அழைத்து வந்தனர்.
அதோடு நிற்காமல், கொளுத்தும் வெயிலில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடற்கரை பகுதியில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பதாகைகளில் எழுதியுள்ள வாசகங்களை வாசிக்க செய்தனர்.
சுமார் 1½ கி.மீ. தூரத்துக்கு அவர்களை நடத்தியே அழைத்து சென்று அனைத்து விழிப்புணர்வு பதாகைகளிலும் எழுதியுள்ள வாசகங்களை படித்த பின்னரே அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் இந்த நூதன தண்டனையை கடற்கரைக்கு வந்தவர்கள் வியந்து பார்த்து சென்றனர்.
- கேரளத்தில் காங்கிரஸ் கம்யூனிஸ்டு இடையே அரசியல் மோதல் போக்கு நிலவுகிறது.
- கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் நாங்கள் வைத்திலிங்கதிற்கு ஆதரவு தரவில்லை.
புதுச்சேரி:
யூனியன் பிரதேசமான புதுவையில் 4 பிராந்தியங்கள் உள்ளன.
இதில் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அருகே மாகி பிராந்தியம் உள்ளது. கேரளத்தில் காங்கிரஸ் கம்யூனிஸ்டு இடையே அரசியல் மோதல் போக்கு நிலவுகிறது. இது மாகி பிராந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா கூட்டணியில் போட்டியிடும் புதுவை காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு கம்யூனிஸ்ட்டு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மாகியில் உள்ள இந்தியா கூட்டணிக்கு கம்யூனிஸ்டுகள் ஆதரவு அளிக்காமல் பிரசாரமும் செய்யாமல் சுயேட்சைக்கு வாக்களிக்க முடிவு எடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாகி கம்யூனிஸ்டு நிர்வாகிகள் கூறியதாவது:-
புதுவை இந்தியா கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு பிரசாரம் செய்யவும் வாக்களிக்கவும் இங்குள்ள தொழிலாளர்கள் விரும்ப மாட்டார்கள். இதை புதுவையில் உள்ள கட்சி தலைமைக்கு தெரிவித்து விட்டோம் நாங்கள் கேரளம் கண்ணூர் மாவட்ட செயலகத்தில் இணைந்துள்ளோம்.
கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் நாங்கள் வைத்திலிங்கதிற்கு ஆதரவு தரவில்லை. மக்கள் நீதி மையம் வேட்பாளரைதான் ஆதரித்தோம். இந்த முறையும் காங்கிரசுக்கு வாக்களிக்க முடியாது பிரசாரமும் செய்ய முடியாது. ஏனெனில் இது கேரளாவில் உள்ள காங்கிரசுடன் எங்கள் மோதலை நீர்த்துப் போக செய்யும். அதனால் நாங்கள் சுயேட்சை வேட்பாளருக்கு வாக்களிப்போம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில செயலாளர் ராஜாங்கம் கூறுகையில்:-
மாகி நிலவரத்தை கட்சி தலைமை அறிந்துள்ளது. பா.ஜனதாவுக்கு எதிரான வாக்குகள் பிளவு படாமல் இருக்க கட்சி தலைமை வழிவகை செய்து வருகிறது என்று தெரிவித்தார்.
இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில செயலாளர் சலீம் கூறுகையில்:-
கூட்டணியின் ஒற்றுமையை பாதிக்கும் வகையில் எதுவும் செய்ய கூடாது. வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்க மாகியில் முயற்சிகள் எடுப்போம் என்றார்.
- சொத்து விபரங்களை அவர் கூறினால் நன்றாக இருக்கும்.
- நம்ம புதுச்சேரியிலும் இவ்வளவு பெரிய பணக்காரர் இருக்கிறார் என்ற பெருமை கிடைக்கும்.
புதுச்சேரி:
புதுச்சேரி பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயம் ரூ.1000 கோடி அளவுக்கு சொத்து வைத்துள்ளார் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பிரசாரத்தில் திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறினார்.
இந்த நிலையில் உப்பளம் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து வாக்கு சேகரித்த முதலமைச்சர் ரங்கசாமி, நாராயணசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்து பிரசாரம் செய்தார்.
பா.ஜனதா வேட்பாளரும், உள்துறை அமைச்சருமான நமச்சிவாயத்துக்கு ரூ.1000 கோடி சொத்து உள்ளதாக நாராயணசாமி கூறியுள்ளார். இவருக்கு ரூ.1000 கோடி சொத்துன்னா, அவருக்கு எத்தனை ஆயிரம் கோடி சொத்து இருக்கும்?

அவர் முதலமைச்சர், மத்திய அமைச்சர், பிரதமர் அலுவலக இணை அமைச்சர், 15 ஆண்டு ராஜ்யசபா எம்.பி.யாக இருந்துள்ளார். அப்படியென்றால் அவரிடம் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும்? அவரிடம் உள்ள சொத்து விபரங்களை அவர் கூறினால் நன்றாக இருக்கும்.
நம்ம புதுச்சேரியிலும் இவ்வளவு பெரிய பணக்காரர் இருக்கிறார் என்ற பெருமை கிடைக்கும், எங்களுக்கும் சந்தோஷமாக இருக்கும். அவர் எதையாவது சொல்லனும் என போகிற போக்கில் சொல்லிக் கொண்டே போகிறார்.
இவ்வாறு ரங்கசாமி பேசினார்.
- போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கடத்தல் நாடகமாடியது தெரியவந்தது.
- பாராளுமன்ற தேர்தலில் 7 அரசியல் கட்சி வேட்பாளர்கள், 19 சுயேட்சை வேட்பாளர்கள் என 26 பேர் போட்டியிடுகின்றனர்.
புதுச்சேரி:
ஏனாம் பிராந்திய பா.ஜனதா தலைவர் தெம்மாடி துர்காபிரசாத் கடந்த சட்டசபை தேர்தலின்போது ஏனாம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டார்.
ஏனாமில் பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் முதலமைச்சர் ரங்கசாமி போட்டியிட்டார். இதனால் அதிருப்தியடைந்த துர்காபிரசாத் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கினார். பா.ஜனதா அவரை கட்சியிலிருந்து நீக்கியது.
இந்த நிலையில் அவர் மாயமாகி 5 நாட்களுக்கு பிறகு வந்தார். அவரை சிலர் கடத்தி மனுவை வாபஸ்பெற மிரட்டியதாக தெரிவித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கடத்தல் நாடகமாடியது தெரியவந்தது. இதனால் போலீசார் 5 நாட்கள் கடும் அலைச்சலுக்கு ஆளாகினர்.

இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க டி.ஜி.பி. உத்தரவிட்டார்.
புதுச்சேரியில் தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 7 அரசியல் கட்சி வேட்பாளர்கள், 19 சுயேட்சை வேட்பாளர்கள் என 26 பேர் போட்டியிடுகின்றனர்.
அனைவருக்கும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் நாள் முழுவதும் பாதுகாப்புக்கு இருக்கு வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
போலீஸ்துறையில் சிக்மா, நுண்ணறிவு, குற்றம், கடலோர காவல், பயிற்சி பள்ளி என பிற பணிகளில் உள்ளவர்கள் நியமிக்கப்பட்டு வேட்பாளர்களுடன் வலம் வருகின்றனர்.
வேட்பாளர் எங்கு செல்கிறார் என தொடர்ந்து கண்காணிக்கின்றனர். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் பலர் பிரசாரம் ஏதும் செய்யாமல் தங்கள் வீடுகளில்தான் உள்ளனர். அவர்கள் வீடுகளில் போலீசார் காவல் காத்து வருகின்றனர்.
- 24 மணி நேரமும் செயல்படும் பறக்கும் படை மற்றும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
- தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான குலோத்துங்கன் நள்ளிரவில் திடீர் ஆய்வு செய்தார்.
புதுச்சேரி:
பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதுச்சேரியில் தேர்தல் மாதிரி நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் பறக்கும் படை மற்றும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கனக செட்டிக்குளம், சிவாஜி சிலை, அய்யங் குட்டிப்பாளையம், கோரிமேடு, பத்துக்கண்ணு மற்றும் திருக்கானூர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான குலோத்துங்கன் நள்ளிரவில் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது அங்கிருந்த வாகன சோதனை பதிவேட்டை பார்வையிட்டு, சோதனைச் சாவடிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களின் எண்ணிக்கை மற்றும் வருகை, பறக்கும் படையினர் மேற்கொண்டு வரும் தொடர் ஆய்வுகளின் விவரம் குறித்து கேட்டறிந்தார்.
அனைத்து வாகனங்களையும் கட்டாயம் சோதனை செய்ய வேண்டும் மற்றும் சோதனைச் சாவடி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து உரிய அறிவுரைகளையும் வழங்கினார்.
- அகரம் கிராமத்தில் வேனில் இருந்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.
- மூதாட்டியை பாராட்டி அ.தி.மு.க. சார்பில் அவருக்கு சால்வை அணிவித்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியின் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் மங்கலம் தொகுதியில் வாக்கு சேகரித்தார்.
திருக்காஞ்சி அகரம் கிராமத்தில் வேனில் இருந்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது கீழே நின்றிருந்த மூதாட்டி ஒருவர் தான் மேலே வந்து பேச வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
உடனடியாக அந்த மூதாட்டியை அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பிரசார வாகனத்திற்கு வர செய்து மைக்கை கொடுத்தார். மைக்கில் மூதாட்டி எம்.ஜி.ஆரின் பாடலை பாடினார். "நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடி தானுங்க" என்ற பாடலை அவர் பாட கூடியிருந்த மக்கள் ஆர்வத்துடன் கைத்தட்டி வரவேற்றனர்.
மூதாட்டியை பாராட்டி அ.தி.மு.க. சார்பில் அவருக்கு சால்வை அணிவித்தனர்.
- ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் மத்தியில் உள்ளது.
- வேட்பாளர்கள் 15 நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்ய முடியும்.
புதுச்சேரி:
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி 4 பிராந்தியங்களாக உள்ளது.
தமிழகம், கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்கள் உள்ளன. காரைக்கால் மாவட்டம் தலைநகரான புதுச்சேரியில் இருந்து 132 கி.மீ. தூரத்தில் தமிழகத்தின் நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு மத்தியில் உள்ளது.
மாகி பிராந்தியம் 614 கி.மீ. தூரத்தில் கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தின் அருகே அரபிக்கடலோரம் உள்ளது. மற்றொரு பிராந்தியமான ஏனாம் 822 கி.மீ. தூரத்தில் ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் மத்தியில் உள்ளது.
புதுச்சேரியில் இருந்து மாகி செல்ல 15 மணி நேரமும், ஏனாம் செல்ல 18 மணி நேரமும் சாலையில் பயணிக்க வேண்டும். பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் இங்கு சென்று பிரசாரம் செய்ய பல்வேறு சிரமம் உள்ளது. கால விரயமும் ஏற்படும்.

தமிழகம், புதுச்சேரியில் முதல்கட்டமாக வருகிற 19-ந் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது. இதனால் குறைந்த நாட்களே பிரசாரத்துக்கு அவகாசம் உள்ளது. வேட்பாளர்கள் 15 நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்ய முடியும்.
இந்த விஷயங்களை கருத்தில் கொண்டு 3 மாநிலங்களில் பரவியுள்ள புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயத்தின் சிரமத்தை கவனத்தில் கொண்டு கட்சி தலைமை உதவிக்கரம் நீட்டியுள்ளது.
ஏனாம், மாகி, காரைக்கால் பிராந்தியங்களுக்கு பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயம் விரைவாக சென்று பிரசாரம் செய்ய கட்சி தலைமை ஹெலிகாப்டர் வழங்கியுள்ளது. புதுச்சேரிக்கு நாளை (புதன்கிழமை) தனியார் நிறுவன ஹெலிகாப்டர் லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது.
அங்கிருந்து தேவைப்படும் நேரத்தில் ஹெலிகாப்டரை நமச்சிவாயம் பயன்படுத்தி மற்ற பிராந்தியங்களுக்கு சென்று பிரசாரம் செய்ய கட்சித்தலைமை ஏற்பாடு செய்துள்ளது. கட்சித் தலைமையின் இந்த நடவடிக்கையால் பா.ஜனதாவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
- மனிதர்களை மோப்பம் பிடித்து சுவாசத்தின் மூலம் இதனை நாய்கள் கண்டுபிடிக்கிறது.
- இரண்டு நாய்களும் மன அழுத்தத்தை கண்டுபிடிப்பதில் 90 சதவீதம் சிறப்பாக செயல்பட்டது.
புதுச்சேரி:
வீடுகளில் வளர்க்கும் செல்ல பிராணிகளில் நாய்களுக்கு முதலிடம் எப்போதும் உண்டு. மனிதர்களின் நண்பன் போல் எப்போதும் நாய்கள் சுற்றி சுற்றியே வரும்.
மனிதர்களிடம் விசுவாசமாக இருக்கும். மோப்ப சக்தி நாய்களுக்கு அதிகளவில் உண்டு. குற்றங்களை கண்டுபிடிப்பதில் நாய்கள் போலீசாருக்கு கைகொடுக்கும்.
இப்போது ஆய்வு அதைவிட அதிகமாகவும் மனிதர்களுக்கு உதவ முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. நாய்கள் மனிதர்களுக்கு வரவிருக்கும் மன அழுத்தத்தை மோப்பம் பிடித்து கண்டுபிடிக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த எச்சரிக்கையின் மூலம் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் நபருக்கு முன் கூட்டியே மருத்துவ சிகிச்சைகளை அளிக்கலாம். மனிதர்களை மோப்பம் பிடித்து சுவாசத்தின் மூலம் இதனை நாய்கள் கண்டுபிடிக்கிறது.
இதற்காக நாய்களுக்கு பிரத்தியேக பயிற்சி அளிக்கப்படுகிறது என்று டல்ஹவுசி பல்கலைக்கழகத்தின் ஆய்வு அறிக்கை பேராசிரியர் லாராகிரோஜா கூறியுள்ளார்.
மோப்ப சுவாச பயிற்சி 25 நாய்களுக்கு அளிக்கப்பட்டது. இதில் ஐவி மற்றும் கால்லி ஆகிய இரண்டு நாய்கள் இயல்பாகவே மோப்ப சக்தியில் திறம்பட இருந்தது.
இரண்டு நாய்களும் மன அழுத்தத்தை கண்டுபிடிப்பதில் 90 சதவீதம் சிறப்பாக செயல்பட்டது.
தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனை பயிற்சிகள் மூலம் ஐவி 74 சதவீதமும், கால்லி 81 சதவீதமும் துல்லியமாக முடிவுகளை காட்டியது. மேலும் இது போல் ஆய்வு தொடர்ந்து நடத்த உள்ளனர்.
- அனைத்து கொடியையும் இறக்கிவிட்டு உதயநிதி பேச்சை கேட்டனர்.
- எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோவை எடுத்து காட்டினார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் தமிழக அமைச்சர் உதயநிதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்தி லிங்கத்தை ஆதரித்து வில்லியனூர், மரப்பாலம் மற்றும் அண்ணாசிலை சதுக்கம் ஆகிய இடங்களில் பேசினார்.
உதயநிதி பேச தொடங்கிய போது, எல்லாரும் நல்லா இருக்கீங்களா, நீங்க திரும்ப கேட்க மாட்டீங்களா என கேட்டார். அப்போது தொண்டர்கள் நல்லா இருக்கீங்களா? என கோஷ மிட்டனர். அதற்கு பதிலளித்த உதயநிதி, ஏதோ சுமாரா இருக்கேன். நீங்க இருக்கும்போது எனக்கு என்ன கவலை? என்றார்.
உதயநிதி பேச தொடங்கிய போது, தி.மு.க.-காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரிய கொடியை ஆட்டிக் கொண்டே இருந்தனர். தான் பேசி முடிக்கும் வரை கட்சி கொடியை கீழே இறக்கும்படி உதயநிதி கேட்டுக் கொண்டார். இதனால் கூட்டணி கட்சியினர் அப்செட் ஆகினர். இருப்பினும் அனைத்து கொடியையும் இறக்கிவிட்டு உதயநிதி பேச்சை கேட்டனர்.
பிரசாரத்தில் வழக்கம் போல உதயநிதி எய்ம்ஸ் செங்கல்லை எடுத்து காட்டுவார். அதுபோல் புதுச்சேரி பிரசாரத்தில் எய்ம்ஸ் கல்லை காட்டுவார் என்று தொண்டர்கள் எதிர்பார்த்து கேள்வி எழுப்பினர். இதையடுத்து எய்ம்ஸ் செங்கல் புதுச்சேரி வரை பேமஸ் ஆகிவிட்டதா? எனக்கேட்டு செங்கல்லை எடுத்துக்காட்டிய உதயநிதி நீங்கள் காட்ட சொன்னதால்தான் கல்லை காட்டுகிறேன். இந்த கல்லுக்கு அவ்வளவு டிமாண்ட். நான் காட்டினது கல்லு, அவர் காட்டினது என பிரதமர் மோடியுடன் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோவை எடுத்து காட்டினார்.
மரப்பாலத்தில் பேசும் போது, தொண்டர் ஒருவர் ஆபாசமாக பேசினார். அப்போது உதயநிதி, நீ கெட்ட வார்த்தையில் பேசிட்டு போய்விடுவாய், போலீஸ் என்மீது வழக்கு போடும். ஆனால் அதற்காக நான் பயப்பட மாட்டேன் என்றார்.
- 2 வாரத்துக்கு முன்பே பாடபுத்தகம் வாங்கும் நடவடிக்கையை கல்வித்துறை மேற்கொண்டது.
- இன்று திறக்கப்படும் அரசு பள்ளிகள் வருகிற 30-ந் தேதி வரை இயங்கும்.
புதுச்சேரி:
புதுச்சேரில் நடப்பு கல்வியாண்டு முதல் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமலாகிறது.
கடந்த 23-ந் தேதியுடன் முழு ஆண்டு தேர்வு முடிந்து, சி.பி.எஸ்.இ. வழிகாட்டுதலின்படி இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. 2 வாரத்துக்கு முன்பே பாடபுத்தகம் வாங்கும் நடவடிக்கையை கல்வித்துறை மேற்கொண்டது.
இதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பெங்களூருவில் இருந்து என்.சி.ஆர்.டி. பாடபுத்தகம் வாங்கப்பட்டது. இந்த பாடபுத்தகங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் வாகனம் மூலம் தங்கள் பள்ளிகளுக்கு எடுத்துச் சென்று வருகின்றனர். மிக குறைவாகவும், ஒரு சில பாடங்களுக்கு பாடபுத்தகம் வராமலும் உள்ளது. 3,4,6-ம் வகுப்புகளுக்கு ஒரு பாடங்களுக்கு கூட புத்தகங்கள் வரவில்லை.
இவற்றையும் உடனடியாக வாங்கி பள்ளி மாணவர்களுக்கு வழங்க கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. இன்று திறக்கப்படும் அரசு பள்ளிகள் வருகிற 30-ந் தேதி வரை இயங்கும். மே 1-ந் தேதி முதல் ஜூன் 2-ந் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் 3-ந் தேதிமுதல் மீண்டும் பள்ளிகள் திறந்து செயல்படும்.
- போலீசார் கல் வீசிய மர்ம நபரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் பாராளுமன்ற பா.ஜனதா வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி கடந்த 27-ந் தேதி முதல் தொகுதி வாரியாக சென்று திறந்த ஜீப்பில் பொது மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.
அதன்படி புதுவை முத்தியால்பேட்டை சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி நேற்று போலீஸ் நிலையம் எதிரே உள்ள பொன்னுமாரியம்மன் கோவிலில் இருந்து திறந்த வாகனத்தில் நின்றபடி தேர்தல் பிரசாரம் செய்தார்.
இந்தநிலையில் முத்தியால்பேட்டை மந்தை வெளி மாரியம்மன் கோவில் அருகே அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி பேசிக்கொண்டிருந்த போது திடீரென பிரசார வாகனத்தின் மீது எங்கிருந்தோ வீசப்பட்ட கல் ஒன்று வந்து விழுந்தது. இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இருப்பினும் தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி தனது பேச்சை தொடர்ந்தார். அதன்பின் பிரசாரத்தை முடித்துவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதுதொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் சென்று சோதனை நடத்தினார்கள். மேலும் வீட்டின் மாடிகளில் யாரும் உள்ளார்களா? எனவும் டார்ச் லைட் மூலமாக அடித்து பார்வையிட்டனர்.
இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
முத்தியால்பேட்டை பகுதியில் கடந்த மாதம் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் அதிருப்தியில் இருந்த மர்ம நபர் யாரேனும் முதலமைச்சர் பிரசார வாகனம் மீது கல் வீசி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் கல் வீசிய மர்ம நபரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.






