என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுச்சேரி போலீசார்"

    • அண்மையில் புதுச்சேரி காவல்துறையில் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
    • உயர் அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசார் ஜீப்பில் புதுச்சேரிக்கு கோர்ட்டு விசாரணைக்கு வந்தனர்.

    பின்னர் வழக்கு விசாரணை முடித்து மாலை மீண்டும் ஏனாம் புறப்பட்டனர். அப்போது அவர்கள் ஏனாமில் தடை செய்யப்பட்ட மதுவகையான கள்ளை ஆந்திர மாநிலம் நெல்லூரில் பாட்டில் பாட்டிலாக வாங்கினர்.

    ஓடும் ஜீப்பிலேயே அவர்கள் கள்ளு குடிக்க தொடங்கினர். போதை தலைக்கேறியதால் பாடல்களை போட்டு நடனமாடினர். ஏனாம் வரை குடித்து செல்வதற்கு போதுமான அளவிற்கு 'கள்' பாட்டில் வைத்திருந்தனர்.

    பணியில் இருந்து கொண்டு 'கள்' குடித்து அட்டகாசம் செய்ததுடன் அதனை தைரியமாக அவர்களது வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டுள்ளனர்.

    போலீசார் 'கள்' குடித்து ஆட்டம் போடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

    அண்மையில் புதுச்சேரி காவல்துறையில் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அந்த பட்டியலில் ஏனாம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இடம்பெறுவதாக கூறப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை.

    இதனை "ஜஸ்ட் மிஸ்டு" என்று அவர் தனது குழுவில் கோடிட்டு காண்பித்துள்ளார். அதற்காக ஜீப்பில் பார்ட்டி வைப்பதாக அவர் கூறியுள்ளார். சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளே 'கள்' குடித்து ஆட்டம் போட்டு அதை சமூக வலைதளத்தில் பரப்பி இருப்பது புதுச்சேரி காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர். 

    • ரவுடிகளின் வீடுகளில் நடத்திய அதிரடி சோதனையில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • 78 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், ரவுடிகளை கட்டுப்படுத்தவும் ஆபரேஷன் திரிசூலம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் மூலம் ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பது அவர்களின் வீடுகளில் அவ்வப்போது சோதனை செய்து ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் பதுக்கி வைத்துள்ளனரா? என்பதை கண்டறிந்து அதனை பறிமுதல் செய்வது மற்றும் அவர்களை கைது செய்வது போன்ற நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி போலீஸ் டி.ஜி.பி. ஷாலினிசிங் உத்தரவின் பேரில் டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம் தலைமையில் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் அதிகாலை 4 மணி முதல் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த அதிரடி சோதனையில் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ படையினரும் ஈடுபடுத்தப்பட்டனர்.

    ஒரே நேரத்தில் 450-க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீடுகளில் நடத்திய அதிரடி சோதனையில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதில் குற்றப்பின்னணியில் உள்ள ரவுடிகள் 100 பேரை பிடித்து போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் 78 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஒரே நேரத்தில் அதிகாலை வேளையில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தியதால் புதுச்சேரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • இளைஞர்கள் சிலர் கடலில் இறங்கி குளித்தனர்.
    • போலீசாரின் இந்த நூதன தண்டனையை கடற்கரைக்கு வந்தவர்கள் வியந்து பார்த்து சென்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை கடல் மிகவும் ஆபத்தானது ஆகும். இதை அறியாமல் சுற்றுலா பயணிகள் உள்பட பலரும் கடலில் இறங்கி குளிக்கின்றனர்.

    புத்தாண்டு தினத்தன்று கடலில் குளித்த மாணவ-மாணவிகள் 4 பேர் அலையில் சிக்கி பலியானார்கள். அதைத் தொடர்ந்து கடலில் இறங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நாள்தோறும் காலை முதல் மாலை வரை போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து சென்று கடலில் இறங்குவதை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

    பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடற்கரையில் பல இடங்களில் விழிப்புணர்வு வாசகங்களுடன் அறிவிப்பு பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

    இந்தநிலையில் நேற்று இளைஞர்கள் சிலர் கடலில் இறங்கி குளித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை எச்சரிக்கை செய்து வெளியே அழைத்து வந்தனர்.

    அதோடு நிற்காமல், கொளுத்தும் வெயிலில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடற்கரை பகுதியில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பதாகைகளில் எழுதியுள்ள வாசகங்களை வாசிக்க செய்தனர்.

    சுமார் 1½ கி.மீ. தூரத்துக்கு அவர்களை நடத்தியே அழைத்து சென்று அனைத்து விழிப்புணர்வு பதாகைகளிலும் எழுதியுள்ள வாசகங்களை படித்த பின்னரே அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் இந்த நூதன தண்டனையை கடற்கரைக்கு வந்தவர்கள் வியந்து பார்த்து சென்றனர்.

    • தமிழக போலீசார் அவ்வழியாக வந்த ஒருவரை மடக்கி சோதனை செய்தனர்.
    • இரு மாநில போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் மடுகரையில் கலால்துறை அனுமதி பெற்று, ஆண்டியர்பாளையத்தை சேர்ந்த ராஜா என்பவர் சாராயக் கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் பட்டாம்பாக்கம்-மடுகரை சாலையில் தென் பெண்ணையாறுசோதனைச் சாவடியில் இருந்த தமிழக போலீசார் அவ்வழியாக வந்த ஒருவரை மடக்கி சோதனை செய்தனர்.

    அவரிடம் இருந்து 10 சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் மடுகரையில் உள்ள சாராயக்கடையில் இருந்து சாராய பாக்கெட்டுகளை வாங்கி வந்ததாக தெரிவித்தார்.

    இதையடுத்து கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் மடுகரை சாராயக்கடைக்கு சென்று அங்கிருந்த 40 லிட்டர் சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து எடுத்து செல்ல முயன்றனர்.

    இதுகுறித்து தகவலறிந்த புதுச்சேரி நெட்டப்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன், மடுகரை சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தமிழக போலீசாரை முற்றுகையிட்டு சாராயக் கடையில் இருந்து எந்த பொருளையும் எடுத்துச் செல்லக்கூடாது என காரை மறித்து தடுத்து நிறுத்தினர்.

    இதனால் இரு மாநில போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார், தமிழக பகுதியில் பாக்கெட் சாராயம் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழக பகுதியில் பாக்கெட் சாராயம் பிடிப்பட்டால் அது எங்கிருந்து வருகிறது என்பதை கண்டுபிடித்து, தடை செய்வதற்கு எங்களுக்கு அதிகாரம் உள்ளது என்றார். அதற்கு புதுச்சேரி போலீசார் எங்களது அனுமதியில்லாமல் எப்படி சாராய கடையில் இருந்து சாராய பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்து எடுத்து செல்லலாம் என கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தமிழக போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    இதுகுறித்து புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்ட போது, புதுச்சேரி போலீசாரை உரிய அனுமதியில்லாமல் தமிழக போலீசார் அத்துமீறி புதுச்சேரி கலால்துறை அனுமதியுடன் நடத்தி வரும் சாராயக் கடையில் புகுந்து சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்ய முயன்றது தவறு என்று தெரிவித்தார்.

    ×