search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்த மேலும் 2 பேருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கேரளாவில் தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்த மேலும் 2 பேருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி

    • திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் ஆகிய 5 மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு.
    • நோய் பாதித்தவர் பயணம் செய்த 5 மாவட்டங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

    திருவனந்தபுரம்:

    வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 55 நாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதையடுத்து குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வருவோரை கண்காணிக்க மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த நபர் ஒருவருக்கு நோய் அறிகுறி இருப்பது தெரியவந்தது.

    சுகாதார துறையினர் அவரது ரத்த மாதிரிகளை சேகரித்து பூனாவில் உள்ள தேசிய ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து நோய் பாதித்தவர் பயணம் செய்த விமானத்தில் அவருடன் சேர்ந்து பயணித்தவர்கள், குறிப்பாக அவரது அருகில் இருந்தவர்கள் மற்றும் அவர் கேரளா வந்த பின்பு அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என 11 பேர் கண்டறியப்பட்டனர்.

    அவர்கள் அனைவரும் உடனடியாக தனிமைபடுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த 2 பேருக்கு நோய் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

    இதுபற்றி கேரள சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் கூறும்போது, குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கு உள்ளான நபர் பயணம் செய்த பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம். சுகாதார ஊழியர்கள் இங்கு வீடு வீடாக ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய 5 மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களிலும் சுகாதார துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

    கேரளாவில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதியானதால் அங்கு மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய சுகாதார துறையின் அதிகாரிகள் சென்றுள்ளனர்.

    மத்திய சுகாதார துறையின் ஆலோசகர் ரவீந்திரன் மற்றும் டாக்டர்கள் சங்கேத் குல்கர்ணி, அரவிந்த் குமார், அகிலேஷ் ஆகியோர் கொண்ட 4 பேர் குழு கேரளாவில் முகாமிட்டு உள்ளது. இவர்கள் நோய் பாதித்தவர் பயணம் செய்த 5 மாவட்டங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அங்கு மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.

    Next Story
    ×