search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பா.ஜ.க. தலைவர்களை கொல்ல சதி- சென்னை வழியாக ஊடுருவிய 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது
    X

    பா.ஜ.க. தலைவர்களை கொல்ல சதி- சென்னை வழியாக ஊடுருவிய 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது

    • அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் குவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டனர்.
    • போலீசார் 4 பயங்கரவாதிகளிடமும் தொடர்ச்சியாக பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    நாடு முழுவதும் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

    அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் செயல்பட்டு வரும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாரும் பயங்கரவாத செயல்களை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் குஜராத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டிருப்பதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாருக்கு கடந்த 18-ந் தேதி அன்று தகவல் கிடைத்தது. ரெயில் அல்லது விமானம் மூலமாக குஜராத்துக்கு வந்து பயங்கரவாதிகள் அதிரடியாக தாக்குதல் நடத்துவதற்கு திட்டம் தீட்டி இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் மேற்கொண்ட ரகசிய விசாரணையில் இலங்கையில் இருந்து சென்னை வழியாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் விமானத்தில் குஜராத்துக்கு வர இருப்பது உறுதியானது.

    இதன்படி நேற்று முன்தினம் அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் குவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டனர். போலீசார் எதிர்பார்த்த படியே இலங்கையில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் குஜராத் செல்வதற்கு டிக்கெட் எடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களது பெயர் முகமது நஸ்ரத், முகமது நப்ரான், முகமது ரஸ்தீன், முகமது பரீஸ் என்பதும் தெரிய வந்தது. அகமதாபாத் விமான நிலையத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேரும் வந்து இறங்கியதும் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    உடனடியாக 4 பேரையும் பலத்த பாதுகாப்புடன் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பில் 4 பேரும் உறுப்பினர்களாக செயல்பட்டு வந்தது உறுதியானது.

    இலங்கையை சேர்ந்த 4 பயங்கரவாதிகளும் தமிழ் மட்டுமே பேசியுள்ளனர். வேறு மொழிகள் எதுவும் தெரியவில்லை. இதையடுத்து தமிழ் தெரிந்த போலீசாரை வைத்து 4 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேரும் குஜராத்தில் மிகப்பெரிய தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியது அம்பலமானது.

    ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவராக திகழும் அபுபக்கர் அல் பாக்தாதி என்பவரோடு இவர்கள் நெருங்கிய தொடர்பில் இருந்ததும், குஜராத்தில் தாக்குதல் நடத்துவதற்கு அவரது கட்டளைக்காக காத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 4 பேரும் போலீசாரிடம் இதனை வாக்கு மூலமாக அளித்துள்ளனர்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் 4 பயங்கரவாதிகளிடமும் தொடர்ச்சியாக பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    ஐ.எஸ்.பயங்கரவாதிகள் 4 பேரும் குஜராத்தில் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியுள்ளனர். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரான அபுபக்கர் இது தொடர்பாக சில திட்டங்களை தீட்டி வைத்திருந்ததாகவும், 4 பேரும் கூறியுள்ளனர். குறிப்பிட்ட சில தலைவர்கள் மீது எப்போது எங்கு வைத்து தாக்குதல் நடத்த வேண்டும் என்பதை நீங்கள் குஜராத்துக்கு சென்று தங்கிய பிறகு சொல்கிறேன். அதுவரை காத்திருங்கள் என்றும் ஐ.எஸ். தலைவர் அபுபக்கர் 4 பேரிடமும் கூறி அனுப்பி வைத்து உள்ளார். ஆனால் அதற்குள் பயங்கரவாதிகள் 4 பேரும் போலீசில் சிக்கிக் கொண்டனர். பயங்கரவாத சதித் திட்டமும் முறியடிக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து 4 பேரிடமும் குஜராத்தில் ஆயுதங்கள் ஏதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக அவர்கள் அளித்த தகவலின் பேரில் அகமதாபாத்தில் நானா சிலோடா நகரில் ரகசிய இடத்தில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அங்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். இதில் 3 துப்பாக்கிகள், 20 தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவைகள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை என்று குஜராத் டி.ஜி.பி. விகாஸ் சகாய் தெரிவித்துள்ளார்.

    துப்பாக்கி மற்றும் தோட்டாக்களில் பாகிஸ்தான் பழங்குடியினரின் முத்திரை உள்ளது. இதன் மூலம் இந்த தாக்குதல் சதி திட்டத்தின் பின்னணியில் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பு பற்றியும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தலைவரான அபுபக்கரோடு இ-மெயில் மூலமாக 4 பேரும் உரையாடிய தகவல்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் தாக்குதலுக்கான நேரம் பற்றி பின்னர் தெரிவிக்கப்படும் என்பது பற்றிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன. குஜராத்தில் பா.ஜனதா தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களிலோ அல்லது அவர்கள் காரில் செல்லும்போதோ 4 பேரும் மனித வெடிகுண்டுகளாக மாறி நாட்டையே அச்சுறுத்தும் வகையில் மிகப்பெரிய தாக்குதலை அரங்கேற்றவும் சதித் திட்டம் தீட்டி செயல்பட்டுள்ளது அம்பலமாகி உள்ளது.

    குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள முகமது நஸ்ரத், முகமது நப்ரான், முகமது ரஸ்தீன், முகமது பரீஸ் ஆகிய 4 பேரும் இலங்கையில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பு ஒன்றில் இணைந்தே முதலில் செயல்பட்டுள்ளனர்.

    2019-ம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து 4 பேரும் கடந்த பிப்ரவரி மாதம் ஐ.எஸ். பயங்கரவாத தலைவரான அபுபக்கரை சந்தித்து ஐ.எஸ்.அமைப்பில் உறுப்பினராக சேர்ந்து உள்ளனர்.

    குஜராத்தில் நாச வேலையில் ஈடுபடுவதற்காக அபுபக்கர் ரூ.4 லட்சம் பணத்தையும் அனுப்பி வைத்துள்ளார். இது முன் பணமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கைதான 4 பேரில் முகமது நஸ்ரத்திடம் பாகிஸ்தான் விசா இருந்துள்ளது. அதையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். இந்த விசாவை வைத்து நஸ்ரத் பாகிஸ்தான் சென்று வர திட்டமிட்டதும் தெரிய வந்துள்ளது.

    4 பயங்கரவாதிகள் மீதும் கூட்டு சதி, நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தல், ஆயுத தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். பாராளுமன்றத் தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதற்குள் 4 பேர் நாச வேலைக்கு திட்டம் தீட்டியதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இதை தொடர்ந்து கடைசி கட்டத் தேர்தல் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.


    Next Story
    ×