search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேவநந்தா
    X
    தேவநந்தா

    கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டு மாணவி பலியான விவகாரம் குறித்து ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை

    ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலியான விவகாரம் குறித்த விசாரணையை கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரிக்க தொடங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம், கரிவள்ளூர் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் கடந்த வாரம் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டது.

    பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் காஞ்சாங்காடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி தேவநந்தா என்ற 16 வயது சிறுமி பலியானார்.

    இதையடுத்து அந்த உணவகத்துக்கு சென்ற சுகாதாரத்துறையினர் அங்கிருந்த உணவு பொருள்களை பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பினர். மேலும் கடைக்கு சீல் வைத்ததோடு, உணவக மானேஜர் மற்றும் ஊழியரை கைது செய்தனர். இந்த சம்பவம் கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. நீதிபதிகள் தேவன் ராமச்சந்திரன், பி.ஜி. அஜித்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இந்த விசாரணை நடந்தது. அப்போது நீதிபதிகள், மாநிலத்தில் உணவு பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் கடுமையாக இருக்கும் நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் எவ்வாறு நிகழ்ந்தது என்பது அதிர்ச்சியாக உள்ளது.

    மாணவி இறந்த விவகாரம் துரதிர்ஷ்டவசமானது. எனவே தான் இந்த விவகாரம் குறித்து கோர்ட்டு விசாரிக்கிறது, என்றனர்.

    இதையடுத்து கேரள உணவு பாதுகாப்பு துறை மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் நாளை விளக்கம் அளிக்க வேண்டும் என்று அறிவித்தனர்.

    அதோடு வழக்கின் விசாரணையை நாளை (6ந் தேதிக்கு) தள்ளி வைத்தனர். ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலியான விவகாரம் குறித்த விசாரணையை கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரிக்க தொடங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×