search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி கோவில்
    X
    திருப்பதி கோவில்

    திருப்பதி கோவிலுக்கு வரும் வெளிநாட்டு நன்கொடைகள் நிறுத்தம்

    வெளிநாட்டு பக்தர்களின் நன்கொடை தேவஸ்தானத்திற்கு வந்தால் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தற்போதைய நிதிநிலையை ஓரளவு சரி செய்ய முடியும் என காங்கிரஸ் மூத்த நிர்வாகி தெரிவித்துள்ளார்.
    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் உண்டியலில் தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

    வெளிநாடுகளில் வாழும் ஏழுமலையான் பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு ஆன்லைன் மூலம் நன்கொடை வழங்கி வருகின்றனர்.

    இந்த நிலையில் வெளிநாட்டு நிதியை பெறுவதற்கான உரிமத்தை புதுப்பிக்காததால் வெளிநாட்டில் இருந்து வரும் நன்கொடை நிறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருப்பதியை சேர்ந்த காங்கிரஸ் மூத்த நிர்வாகி நவீன்குமார் ரெட்டி கூறியிருப்பதாவது:-

    வெளிநாடுகளில் உள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் மதம் சார்ந்த அறக்கட்டளைகளுக்கு நிதி வழங்குவதற்காக உள்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் உரிமம் வழங்கி வருகிறது.

    அவ்வாறு திருப்பதி தேவஸ்தானத்திற்கு வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் உரிமம் டிசம்பர் 2020 காலாவதியானது.

    இதனைப் புதுப்பிக்க வேண்டும் என 2020-ம் ஆண்டில் தேவஸ்தானம் முயற்சி எடுத்தாலும் மத்திய அரசு அதனை புதுப்பிக்காமல் உள்ளது.

    உள்துறை அமைச்சகம் அதனை புதுப்பிக்காததால் ஏழுமலையான் கோவிலுக்கு வெளிநாட்டு பக்தர்கள் அளிக்கும் நன்கொடை நிறுத்தப்பட்டுள்ளன.

    இதனை மீண்டும் புதுப்பிக்க தேவஸ்தான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் டெல்லியில் உள்ள உள்ளூர் ஆலோசனை குழுவினர் மத்திய உள்துறை அமைச்சகத்தில் அழுத்தம் கொடுத்து வெளிநாட்டு நிதி பெறுவதில் உள்ள சிக்கலை தீர்க்க வேண்டும்.

    மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. தலைவர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய பலர் திருப்பதி வருகின்றனர். அவர்களுக்கு நெருக்கமாக இருந்து ஏற்பாடு செய்து வரும் உள்ளூர் பா.ஜ.க தலைவர்களும் வெளிநாட்டு பக்தர்களும் நன்கொடையை பெறுவதற்கான உரிமைத்தை உடனடியாக புதுப்பிக்க வேண்டும்.

    வெளிநாட்டு பக்தர்களின் நன்கொடை தேவஸ்தானத்திற்கு வந்தால் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தற்போதைய நிதிநிலையை ஓரளவு சரி செய்ய முடியும்.

    வெளிநாட்டு பக்தர்களிடம் இருந்து வரும் நன்கொடையை தாமதப்படுத்துவதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×