search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஹெலிகாப்டர் விபத்து
    X
    ஹெலிகாப்டர் விபத்து

    ஹெலிகாப்டர் விபத்து- முப்படை விசாரணை அறிக்கை ராஜ்நாத்சிங்கிடம் தாக்கல்

    ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான முப்படைகளின் விசாரணை அறிக்கை மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத்சிங்கிடம் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
    புதுடெல்லி:

    கோவை மாவட்டம் சூலூரில் இருந்து, நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ கல்லூரியில் நடக்க இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் கடந்த 8-ந் தேதி குன்னூரில் விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் அதே நாளில் உயிரிழந்தனர். பலத்த தீ காயம் அடைந்த விமானப்படை குரூப் கேப்டன் வருண்சிங் ஊட்டியில் உள்ள வெலிங்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    பின்னர் பெங்களூரில் உள்ள விமானப்படையின் கமேண்ட் மருத்துவமனையில் கடந்த 9-ந் தேதி சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 15-ந் தேதி அவர் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய விமானப்படை தளபதி மானவேந்திரா சிங் தலைமையிலான முப்படை அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    இந்தக்குழு சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தது. விமானியின் குரல் பதிவுகள் அடங்கிய கருப்புப் பெட்டியை சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றியது.

    ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய  3 பேர் கொண்ட முப்படையின் விசாரணை அறிக்கை கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது.

    மோசமான வானிலையை கணிக்க தவறிய விமானியின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று  விசாரணையில் தெரியவந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

    இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான முப்படைகளின் விசாரணை அறிக்கை மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத்சிங்கிடம் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

    விபத்துக்கான காரணம் தொடர்பான விசாரணை அறிக்கை விவரங்களை அவர் வெளியிடுவார் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. விபத்துக்கான காரணம், இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றிய பரிந்துரை ஆகியவை விசாரணை அறிக்கையில் இடம் பெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
    Next Story
    ×