search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்து உள்ளிட்ட தலைவர்களை போலீசார் வாகனத்தில் ஏற்றும் காட்சி
    X
    சித்து உள்ளிட்ட தலைவர்களை போலீசார் வாகனத்தில் ஏற்றும் காட்சி

    லக்கிம்பூர் நோக்கி பிரமாண்ட ஊர்வலம் நடத்திய சித்து... எல்லையில் தடுத்து நிறுத்திய போலீஸ்

    சித்து தலைமையில் சென்ற காங்கிரஸ் கட்சியினரை தொடர்ந்து முன்னேற விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தி, வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
    சகாரன்பூர்:

    உத்தர பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூரில் கடந்த 3-ந்தேதி பா.ஜ.க.வினர் சென்ற கார், போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது மோதியது. இதில் இரண்டு விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். லக்கிம்பூர் வன்முறை சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. மத்திய மந்திரியின் மகன் மீது நடவடிக்கை எடுக்கும்படி எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில்,  பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தலைமையில் காங்கிரசார் லக்கிம்பூர் நோக்கி ஊர்வலமாக சென்றனர். லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற திட்டமிட்டிருந்தனர். 

    ஆனால், அவர்கள் லக்கிம்பூர் சென்றால் பதற்றம் மேலும் அதிகரிக்கலாம் என்பதால் போலீசார் அரியானாவின் யமுனாநகர்-உத்தர பிரதேசத்தின் சகாரன்பூர் எல்லையில்  தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருடன் சித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 


    ‘மத்திய மந்திரி மற்றும் அவரது மகன் மீது நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டீர்கள், ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்கு செல்லும் எங்களை தடுக்கிறீர்கள்’ என சித்து கடுமையாக பேசினார். 

    எனினும் அவர்களை தொடர்ந்து முன்னேற விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தி, வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக, சித்துவுக்கு மொகாலியில் விவசாயிகள் கருப்புக்கொடி காட்டி கண்டனம் தெரிவித்தனர்.

    லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆஷிஷ் மிஸ்ராவின் ஆதரவாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×