search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உளவு
    X
    உளவு

    ‘பெகாசஸ்’ மூலம் 34 நாடுகளின் தலைவர்களை உளவு பார்த்தனர்

    இந்தியாவில் பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் செல்போன் எண்கள் இலக்காக வைக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
    புதுடெல்லி:

    இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களின் செல்போன்கள் இஸ்ரேல் நாட்டின் உளவு மென்பொருள் மூலம் ஒட்டுக்கேட்டு உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இஸ்ரேலை சேர்ந்த என்.எஸ்.ஓ. என்ற இணைய பாதுகாப்பு நிறுவனம் உருவாக்கி உள்ள ‘பெகாசஸ்’ என்ற உளவு மென்பொருள் மூலம் ஒருவரது செல்போனில் ஊடுருவி தகவல்கள் மற்றும் அவர்களது உரையாடல்களை எடுக்க முடியும்.

    பெகாசஸ் மென்பொருளை பல்வேறு நாடுகள் வாங்கி பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே இந்த உளவு மென்பொருள் மூலம் பல்வேறு நாட்டு தலைவர்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக பிரபல பத்திரிகைகள் மற்றும் இணையதளங்கள் செய்தி வெளியிட்டன.

    ‘பெகாசஸ்’ மென்பொருளால் இலக்கு வைக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் செல்போன் எண்கள் ஆம்னஸ்டி அமைப்பிடமும் பாரீஸ் நகர ‘பார்பிட்டன் ஸ்டோரீஸ்’ பத்திரிகை நிறுவனத்திடமும் கசிந்துள்ளன.

    இந்தியாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் உள்பட 300 பேரின் செல்போன் உளவு பார்க்க இலக்கு வைக்கப்பட்டு உள்ளதாக பிரபல இணையதள நிறுவனம் செய்தி வெளியிட்டது.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

    அதேபோல் ‘பெகாசஸ்’ உளவு மென்பொருள் மூலம் உளவு பார்க்க இலக்கு வைக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் 10 நாட்டு பிரதமர்கள் மற்றும் 3 அதிபர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

    பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல், மெக்ரான், ஈராக் அதிபர் பர்ஹாம்சாலி, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் லம்போசா, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், எகிப்து பிரதமர் முஸ்தபா, மொராக்கோ நாட்டு பிரதமர் சாத் எடின் எல்உஷ்மானி, மொராக்கோ மன்னர் ஆறாம் முகம்மது மற்றும் 7 நாடுகளின் முன்னாள் பிரதமர்கள் உளவு பார்க்க இலக்கு வைக்கப்பட்டு இருந்தனர்.

    இந்த 7 நாடுகளின் முன்னாள் பிரதமர்கள் பதவி காலத்தில் இருந்தபோது உளவு பார்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமனின் அகமத் ஒபெய்ட், லெபனானின் சாத்ஹரிரி, உகாண்டாவின் ருகானா, பிரான்சின் பெலிப், பெல்ஜி யத்தின் சார்லஸ் மைக்கேல், கஜகஸ்தானின் சாகிட்டயேல், அல்ஜீரியாவின் பெடேளய் ஆகியோர் பதவியில்இருந்த போது அவர்களை உளவு பார்க்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

    ஈராக் அதிபர் சாலிக் மற்றும் லெபனான் முன்னாள் பிரதமர் ஹரிரி ஆகியோரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா இலக்காக வைத்திருந்ததாகவும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் செல்போன் எண்களை இந்தியா இலக்காக வைத்திருந்ததாகவும் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது.

    மேலும் உலக சுகாதார அமைப்பு தலைவர் அதோனேமின் முன்னாள் ஊழியர் மற்றும் ரஷியாவின் டெலிகிராம் மெசேஜ் ஆப்பிள் நிறுவனரும் கோடீஸ்வரருமான பாவெல் துரோவ் ஆகியோரும் உளவு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த நிலையில் உளவு பார்க்க இலக்கு வைக்கப்பட்டுள்ள பட்டியலில் 34 நாடுகளின் தலைவர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா, சீனா, ஈரான், நேபாளம், கத்தார், சவுதி அரேபியா, மெக்சிகோ, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கஜகஸ்தான், எகிப்து, ஹங்கேரி, ருவாண்டா, பக்ரைன், பூட்டான், ஆப்கானிஸ்தான், ஹாங்கோ உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் குறி வைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் இந்தியாவில் பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் செல்போன் எண்கள் இலக்காக வைக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அரசியல் தலைவர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் உளவு பார்க்கப்பட்ட தகவல்களை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது.

    அதேபோல் பெகாசஸ் மென்பொருளை உருவாக்கிய என்.எஸ்.ஓ. நிறுவனமும் உளவு பார்க்கப்பட்டதாக வந்த செய்திகளை மறுத்துள்ளது.


    Next Story
    ×