search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிக்கு ஒரு வாரத்தில் அனுமதி?

    சைடஸ் கேடிலா நிறுவனம் 3-வது கட்ட பரிசோதனை முடிவுகளை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் சமர்ப்பித்து உள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவேக்சின், அஸ்டா ஜெனகா மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே 12 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு பயன்படுத்தும் வகையில் குஜராத்தை சேர்ந்த சைடஸ் கேடிலா நிறுவனம் தடுப்பூசியை தயாரித்து உள்ளது. இந்த தடுப்பூசியின் 3 கட்ட பரிசோதனைகள் முடிந்து விட்டன. 3-வது கட்டத்தில் 28 ஆயிரம் தன்னார்வலர்கள் மீது பரிசோதிக்கப்பட்டு உள்ளது. 12 வயது மேற்பட்டவர்களுக்கும் பரிசோதிக்கப்பட்டு உள்ளது. 

    இந்த தடுப்பூசியை 12 வயது முதல் 18 வயதுக்குட்பட்டோர்களுக்கு பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. ஜைகோவ்-டி என்ற தடுப்பூசிக்கு அந்த நிறுவனம் ஏற்கனவே இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம்  அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்து இருந்தது. 2 கட்ட பரிசோதனை முடிவுகளை சமர்பித்து இருந்தது.

    இந்தநிலையில் சைடஸ் கேடிலா நிறுவனம் 3-வது கட்ட பரிசோதனை முடிவுகளை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் சமர்ப்பித்து உள்ளது.
    12 வயதுக்கு மேற்பட்டோருக்கு பயன்படுத்தப்படும் இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒரு வாரத்தில் அனுமதி வழங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அவசர கால பயன்பாட்டுக்காக 12 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு ஜைகோவ்-டி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

    கோப்புபடம்

    அப்படி ஒப்புதல் கொடுக்கும் பட்சத்தில் இந்த தடுப்பூசி ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சைடஸ் கேடிலா நிறுவன தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டால் இந்தியாவில் பயன்படுத்தப்படும் 5-வது தடுப்பூசியாக இது அமையும். ஸ்புட்னிக்-வி, மாடர்னா ஆகிய தடுப்பூசிகளுக்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஜைகோவ்-டி தடுப்பூசியை 3 தவணையாக செலுத்த வேண்டும் என்று சைடஸ் கேடிலா நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    இதேபோல கோவேக்சின் தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்துவதற்கான அனுமதியும் செப்டம்பரில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    Next Story
    ×