search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு: நான்கு மாணவர்களை கைது செய்து டெல்லி போலீசார் விசாரணை

    இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக இதுவரை துப்பு துலங்காத நிலையில் இன்று 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    மத்திய டெல்லி அப்துல் கலாம் சாலையில் அமைந்துள்ளது இஸ்ரேல் தூதரகம். கடந்த ஜனவரி 29-ம் தேதி மாலை 5 மணியளவில் இந்த தூதரகத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் வெடிகுண்டு வெடித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாரும் சிக்கவில்லை. மூன்று கார்களின் கண்ணாடிகள் மட்டும் சேதமடைந்தன.

    இந்தியா- இஸ்ரேல் இடையிலான தூதரக உறவின் 29-வது ஆண்டு விழா இஸ்ரேல் தூதரகத்தில் நடைபெற்ற வேளையில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தனர்.

    இதற்கிடையே வெடிகுண்டு சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் என அறிவித்த மத்திய அரசு விசாரணையை தேசிய புலனாய்வு பிரிவிடம் வழங்கியது. விசாரணையில் மிதமான சக்திக்கொண்ட ஐ.இ.டி. வெடிகுண்டு, நடைபாதை பகுதியில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    விசாரணை அதிகாரிகள் தொடர்ச்சியாக அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர். இதற்கிடையே குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஜெய்ஷ்-உல்-ஹிந்த் என்ற புதிய அமைப்பு பொறுப்பு ஏற்றது.

    குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட கடிதத்தில், ஈரான் ராணுவ தளபதி சுலைமானி, ஈரான் அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே ஆகியோரின் கொலைக்கு பழிவாங்க இஸ்ரேல் தூதரகம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து விசாரணை தீவிரமடைந்த நிலையில், ஈரான் சதிசெயலில் ஈடுபட்டுள்ளதாக, இஸ்ரேல் குற்றம் சாட்டியது.

    குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்படுவோர் வீடியோவை தேசிய புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ளது. இவர்கள் குறித்து துப்பு கொடுப்போருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. அவர்களைப் பற்றிய தகவல்களை do.nia@gov.in, info.nia@gov.in ஆகிய இரு இ-மெயில் முகவரி வாயிலாகவும் 011-24368800, 9654447345 என்ற தொலைபேசி எண்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம் எனவும்  தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்திருந்தது.

    கோப்புப்படம்

    இந்த நிலையில் டெல்லி போலீஸின் சிறப்புப்பிரிவு போலீசார் நான்கு மாணவர்களை இஸ்ரேல் தூதரகம் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

    டெல்லி சிறப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்த எப்ஐஆர் அடிப்படையில் விசாரைண மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×