search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிராக் பஸ்வான்
    X
    சிராக் பஸ்வான்

    அடுத்த மாதம் யாத்திரை... பலத்தை நிரூபிக்க தயாராகும் சிராக் பஸ்வான்

    ராம் விலாஸ் பஸ்வானுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    பாட்னா:

    லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் காலமானதைத் தொடர்ந்து அவரது மகன் சிராக் பஸ்வான் அந்த கட்சியின் தேசிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த கட்சிக்கு சிராக் பஸ்வானுடன் 6 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் ஐந்து எம்.பி.க்கள் சிராக் பஸ்வானை ஓரங்கட்டினர். அத்துடன், அவர்கள் பாராளுமன்றத்திற்கான லோக் ஜனசக்தி கட்சியின் தலைவராக அவரது சித்தப்பா பசுபதிகுமார் பராசை தேர்ந்தெடுத்தனர். இது தொடர்பாக மக்களவை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி, தங்களை தனி குழுவாக அங்கீகரிக்கும்படி கேட்டுக்கொண்டனர். 

    பின்னர், 
    சிராக் பஸ்வான்
     தேசிய தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், விரைவில் தேசிய தலைவரை நியமிக்க தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவித்தனர். 

    இதற்கு பதிலடி கொடுத்த சிராக் பஸ்வான், கட்சியின் மாநில தலைவராக ராஜூ திவாரியை நியமித்தார். மேலும், தனக்கு எதிராக செயல்பட்ட 5 எம்பிக்களை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாகவும், பசுபதிகுமார் பராசை, மக்களவை கட்சி தலைவராக நியமித்தது கட்சி விதிகளுக்கு முரணானது என்றும் கூறி கடிதம் எழுதினார். நேரில் சந்தித்தும் பேசினார். 

    பசுபதிகுமார் பராஸ்

    கட்சி பிளவுபட்டுள்ள நிலையில், அதிருப்தி அணிக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தவும், தனது செல்வாக்கை நிரூபிக்கவும் சிராக் பஸ்வான் தயாராகிவிட்டார். அதன் ஒரு பகுதியாக கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தை இன்று கூட்டினார். இக்கூட்டத்திற்கு பிறகு பேசிய 
    சிராக் பஸ்வான்
    , தனது தந்தை ராம்விலாஸ் பஸ்வானின் பிறந்தநாளையொட்டி அடுத்த மாதம் பேரணி நடத்தப்படும் என அறிவித்தார். 

    ‘என் தந்தையின் பிறந்தநாள் ஜூலை 5ம் தேதி வருகிறது. தற்போது என் தந்தை மற்றும் சித்தப்பா என்னுடன் இல்லை.  எனவே ஜூலை 5ம் தேதி முதல் ஹாஜிப்பூரிலிருந்து ஒரு ஆசீர்வாத யாத்திரை நடத்த முடிவு செய்துள்ளோம். பீகாரின் அனைத்து மாவட்டங்களிலும் யாத்திரை செல்லும். மக்களின் அதிக அன்பும் ஆசீர்வாதமும் எங்களுக்குத் தேவை’ என சிராக் பஸ்வான் கூறினார். இந்த பேரணி, அதிருப்தி அணிக்கு மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    மேலும் தேசிய செயற்குழுவின் 90 சதவீத உறுப்பினர்கள் தன்னுடன் இருப்பதாகவும், டெல்லி, ஜம்மு காஷ்மீர் தவிர பிற மாநில தலைவர்களும் தனக்கு ஆதரவாக இருப்பதாகவும் சிராக் பஸ்வான் குறிப்பிட்டார். 

    ராம் விலாஸ் பஸ்வானுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும், பீகாரில் அவருக்கு பெரிய சிலை அமைக்க வேண்டும் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அதிருப்தி அணியின் தலைவரான பசுபதிகுமார் பராசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 
    Next Story
    ×