search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கோவேக்சின் தடுப்பூசியில் கன்றுக்குட்டியின் ரத்தமா?

    கோவேக்சின் தடுப்பூசியில் புதிதாய் பிறந்த கன்றுக்குட்டியின் சீரம் என்கிற குருதித்தெளியம் இருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவில் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசிதான் கோவேக்சின் தடுப்பூசி.

    இந்த தடுப்பூசி மருந்தில் புதிதாக பிறந்த கன்றுக்குட்டியின் ரத்தம் (அதாவது சீரம் என்று அழைக்கப்படுகிற குருதித்தெளியம்-ரத்தத்தில் உள்ள ரத்த அணுக்கள் மற்றும் ரத்தம் உறைதலின் காரணியான நாரீனி தவிர்த்த பகுதிதான் இந்த குருதித்தெளியம் ஆகும்) அடங்கி இருப்பதாக சில சமூக ஊடக பதிவுகளில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து மத்திய அரசின் சார்பில் மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று விளக்கம் அளித்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * புதிதாக பிறந்த கன்றுக்குட்டியின் சீரம், வெரோ செல்களை தயாரிப்பதற்கும் வளர்ப்பதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எருது போன்ற போவின் மற்றும் பிற விலங்குகளிடம் இருந்து வரும் சீரம், வெரோ செல் வளர்ச்சிக்கு உலக அளவில் பயன்படுத்தப்படுகிற நிலையான செறிவூட்டல் மூலப்பொருள் ஆகும்.

    * தடுப்பூசிகளின் உற்பத்திக்கு உதவும் செல்வாழ்க்கையை உருவாக்குவதற்கு வெரோ செல்கள் பயன்படுத்தப்படுகின்றன. போலியோ, வெறிநாய்கடி மற்றும் இன்புளூவென்றா ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்குவதில் இந்த தொழில்நுட்பம் வெகுகாலமாக பயன்படுத்தப்படுகிறது.

    * வளர்ந்த பின்னர் வெரோ செல்கள் தண்ணீரிலும், ரசாயன திரவங்களிலும் கழுவப்படுகின்றன. கன்றுக்குட்டியின் சீரத்தில் இருந்து விடுபடுவதற்காக இது செய்யப்படுகிறது. பின்னர் வைரஸ் வளர்ச்சிக்காக வெரோ செல்கள், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றன.

    * வைரஸ் வளர்ச்சியின்போது, வெரோ செல்கள் முழுமையாய் அழிக்கப்படுகின்றன. அதன்பிறகு வளர்ந்த வைரசும் கொல்லப்பட்டு (செயலிழக்கம் செய்யப்பட்டு) சுத்திகரிக்கப்படுகிறது.

    * அதன்பின்னர் கொல்லப்பட்ட அதாவது செயலிழந்த வைரஸ் பின்னர் இறுதியான தடுப்பூசி தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

    * எனவே கோவேக்சின் தடுப்பூசியில் புதிதாக பிறந்த கன்றுக்குட்டியின் சீரம் இல்லை. இறுதித் தடுப்பூசியின் மூலப்பொருளாகவும் சீரம் இல்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×