search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிராமத்தினரை விசாரிக்கும் அதிகாரி
    X
    கிராமத்தினரை விசாரிக்கும் அதிகாரி

    உ.பி.யில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு

    உத்தர பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் பலியான சம்பவத்தில் 2 கமிஷனர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் மதுபானம் அருந்திய பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, லோதா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்சுவா, அண்ட்லா கிராமங்கள், ஜவான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேரத் கிராமத்தைச் சேர்ந்த பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

    தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழப்பு ஏற்படுகிறது. வியாழக்கிழமை முதல் இன்று வரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளச்சாராய தொழில் நடத்தி வரும் 5 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான முக்கிய குற்றவாளிகள் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.

    இந்நிலையில், உ.பி.யில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் பலியான சம்பவத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இந்த சம்பவத்தில் கலால் வரி கமிஷனர்கள் 2 பேர் உள்பட கலால் வரித்துறையை சேர்ந்த 7 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கமிஷனர்கள் உள்பட 7 பேரும் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    மேலும், கள்ளச்சாராய விற்பனையில் தொடர்புடைய கிராமத்தினர் 17 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
    Next Story
    ×