search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கிய உத்தரபிரதேசத்தை சேர்ந்த 64 பேரின் கதி என்ன?

    உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கிய உத்தரபிரதேசத்தை சேர்ந்த 64 பேரின் கதி என்ன? என்பது தெரியாமல் அவர்களது உறவினர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
    லக்னோ:

    உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் ஜோஷிமடம் அருகே நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி கடந்த 7-ந்தேதி திடீரென உடைந்தது. இதனால் பெரும் பனிச்சரிவும், அலெக்நந்தா நதியில் பெரும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.

    இந்த திடீர் பேரிடரில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோரை இன்னும் காணவில்லை. அவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

    இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களில் உத்தரகாண்டை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தை சேர்ந்த பல தொழிலாளர்களும் அடங்குவர். இந்த மாநிலத்தை சேர்ந்த 5 பேர் இறந்துள்ளதாக இதுவரை தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேநேரம் இன்னும் 60-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

    இது குறித்து உத்தரபிரதேச பேரிடர் நிவாரண கமிஷனர் சஞ்சய் கோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உத்தரகாண்டின் ஜோஷிமடத்தில் ஏற்பட்ட பனிப்பாறை உடைப்பு மற்றும் வெள்ளப்பெருக்கில் 13-ந்தேதி (நேற்று) நிலவரப்படி உத்தரபிரதேசத்தை சேர்ந்த 5 பேர் இறந்துள்ளனர். இன்னும் 64 பேரை காணவில்லை. அதேநேரம் 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த 64 பேரின் கதி என்ன? என்பது தெரியாமல் அவர்களது உறவினர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
    Next Story
    ×