search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீட்புப் படையில் வீரர்கள்
    X
    மீட்புப் படையில் வீரர்கள்

    உத்தரகாண்ட் பனிச்சரிவு: 36 உடல்கள் மீட்பு - 200 பேரை தேடும் பணி தீவிரம்

    உத்தரகாண்ட் பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் 36 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென ஏற்பட்ட பனிச்சரிவால் உருகிய பனிக்கட்டிகள் நீராக பெருக்கெடுத்து அருகேயுள்ள தவுளிகங்கா மற்றும் அலக்நந்தா ஆற்றில் கலந்தது.  உடனடியாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் அதனை சுற்றியிருந்த வீடுகள் மற்றும் அருகேயிருந்த ரிஷிகங்கா மின்நிலையம் ஆகியவை பாதிப்படைந்தன.  மின்நிலையத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர்.  ஏறக்குறைய 100 முதல் 150 பேர் பலியாகி இருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    இதனை தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 3 குழுக்கள், மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை, இந்திய ராணுவ வீரர்கள் 600 பேர் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்திய விமான படையின் இரண்டு மி-17 ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏ.எல்.எச். துருவ் ஹெலிகாப்டர் ஒன்று என மொத்தம் 3 ஹெலிகாப்டர்கள் டேராடூன் மற்றும் அதனை அடுத்துள்ள பகுதிகளில் மீட்பு பணிகளுக்காக கொண்டு செல்லப்பட்டன.  தேவைக்கேற்றாற்போல் கூடுதல் ஹெலிகாப்டர்கள் கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தின் தபோவன் பகுதியில் ரேனி கிராமத்தில் ராணுவ வீரர்கள், 2 மருத்துவ குழுக்கள் மற்றும் பொறியியல் அதிரடி படை ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டன.  ராணுவ ஹெலிகாப்டர்களும் சென்றன.

    தபோவன் அணையில் சிக்கியிருந்த 16 பேரை முதலில் போலீசார் மீட்டு பாதுகாப்பு பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர்.  இந்தோ-திபெத் எல்லை போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டது.

    உத்தரகாண்ட் முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத், சமோலி மாவட்டத்தின் தபோவன் பகுதியில் ரேனி கிராமம் அருகே சென்று நிலைமையை கண்காணித்து சென்றார்.

    கடந்த 8-ம் தேதி இரவு 8 மணிவரையில் 26 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. 171 பேரை இன்னும் காணவில்லை.  மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன என உத்தரகாண்ட் டி.ஜி.பி. அசோக் குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.

    எனினும், உத்தரகாண்ட் பேரிடர் மேலாண் மையம் வெளியிட்டுள்ள செய்தியில் 197 பேரை காணவில்லை என தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், உத்தரகாண்ட் அரசு வெளியிட்டுள்ள தகவலில், பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் 36 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. அவர்களில் 10 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.  மற்ற 24 பேரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இதுதவிர 204 பேரை இன்னும் காணவில்லை.  அவர்களை தேடும் பணியும் நடந்து வருகிறது என தெரிவித்துள்ளது.
    Next Story
    ×