search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம்
    X
    முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம்

    பொருளாதாரத்தை மீட்டெடுக்க என்ன வழி? - மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் பரிந்துரை

    பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான பரிந்துரைகளை மத்திய பா.ஜ.க. அரசுக்கு ப.சிதம்பரம் வழங்கி உள்ளார்.
    புதுடெல்லி:

    பட்ஜெட் கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. இதையொட்டி முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 2020-21 பட்ஜெட்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளை அலங்கரித்து நிதி மந்திரி முன்வைப்பார் என்று பயப்படுகிறோம். இது தவறான எண்களை (மதிப்பீடுகளை) கொண்டிருக்கும். எனவே 2021-22 பட்ஜெட் மதிப்பீடுகள், மந்திரவாதியின் மாயையாக இருக்கும்.

    2020-21 பட்ஜெட் நேரத்தில்கூட, பட்ஜெட்டின் பின்னால் உள்ள கணிப்புகள் தவறானவை, அவை நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய முடியாது என்பதை காங்கிரஸ் கட்சி சுட்டிக்காட்டியது.

    கொரோனா வைரஸ் இன்றியே கூட, பொருளாதாரம் 2018-19-ம் ஆண்டின் முதல் காலாண்டு தொடங்கி, தொடர்ந்து 8 காலாண்டுகளில் சரிவுப்பாதையில்தான் பயணித்திருக்கும்.

    கொரோனா பெருந்தொற்று, பொருளாதாரத்தை படுகுழியில் தள்ளி விட்டது. 2020-21 ஆண்டின் முதல் காலாண்டில் பொருளாதாரம் மைனஸ் 23.9 சதவீதம், இரண்டாவது காலாண்டில் பொருளாதாரம் மைனஸ் 7.5 சதவீதம் என வளர்ச்சியில் சரிவையே சந்தித்து இருக்கிறது.

    தற்போதைய நிதி மந்திரிக்கு 4 தசாப்தங்களின் (40 ஆண்டுகளின்) முதல் பொருளாதார மந்த நிலைக்கு தலைமை தாங்கும் பெருமை வாய்த்து இருக்கிறது.

    2020-21 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் நேரத்தை வீணடிப்பதில் அர்த்தம் இல்லை.

    சர்வதேச நிதியம், உலக வங்கி தரவுகளின் அடிப்படையிலான புரூக்கிங்ஸ் ஆய்வு முடிவு, அவமானகரமானது. ஆனால் அது அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கவும் இல்லை. இந்தியாவில் வறுமை மிக அதிகமாக இருக்கும். நைஜீரியாவை இந்தியா பின்னுக்கு தள்ளும். ஏராளமான ஏழை மக்களைக் கொண்ட நாடாக இந்தியா ஆகி விடும். 7 ஆண்டுகளின் முடிவில் இதுதான் மோடி அரசின் பங்களிப்பாக இருக்கும்.

    பொருளாதார மீட்டெடுப்பு என்பது மெதுவாக, வேதனையானதாக, இன்னும் லட்சோப லட்சம் மக்களை வாழ்வதற்கு போராடுகிற நிலையை ஏற்படுத்தி விடும். இதன் முடிவில் சமத்துவமற்ற நிலை அதிகரிக்கும். பின்தங்கிய நிலையில் இருப்போர், இன்னும் பின்னால் தள்ளப்படுவார்கள்.

    பொருளாதார மீட்டெடுப்புக்கான பரிந்துரைகள் என்று பார்த்தால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மூடலை திறக்கவும், வேலை இழந்தோர் வேலை பெறவும், மிதமான கல்வி மற்றும் திறன்களை கொண்டவர்களுக்கு புதிய வேலைகளை உருவாக்கவும் திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும். வரி விகிதங்களை குறிப்பாக சரக்கு, சேவை வரி விகிதங்களையும், பிற மறைமுக வரி விகிதங்களையும் (உதாரணத்துக்கு பெட்ரோல் மற்றும் டீசல் மீதானது) குறைக்க வேண்டும். மூலதன செலவினங்களை அதிகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×